குறுங்கதை – 27 காதலுற்ற சிற்பங்கள்

ஒன்றையொன்று காதலித்துக் கொள்ளும் இரண்டு சிற்பங்கள் அந்தக் கோவிலிலிருந்தன. ஒரே பிரகாரத்திலிருந்த அந்தச் சிற்பங்கள் கண்மூடாமல் ஒன்றையொன்று பார்த்தபடியே இருந்தன. ரகசியமாகப் பேசிக் கொண்டன

வட்டமுகமும், பருத்த உதடுகளும், மாதுளை போன்ற மார்பகங்களும், வெண்கலப் பானையின் கழுத்து போல வளைந்த இடையும், பெரிய தொடைகளும், சிறிய பாதங்களும் கொண்டிருந்த அந்தப் பெண் சிற்பம் கையில் ஏந்திய ஆடியில் முகம் காணுவதை போல நின்றிருந்தது.

ஆண் சிற்பமோ கால் உயர்த்தி நின்ற புரவியில், கையில் குத்தீட்டி ஏந்தியபடி வேட்டைக்குச் செல்வது போலிருந்தது.

ஒரக்கண்ணால் பார்த்தபடியே ஆண் சிற்பம் சொன்னது

“பேரழகு கொண்ட பெண்ணாக இருக்கிறாய். உனக்கும் எனக்கும் இடையில் தாவிவிடும் இடைவெளி தான். ஆனால் உறைந்து போயிருக்கிறேன். இடைவெளி தான் காதலை வளர்க்கிறது“.

“குத்தீட்டியை விடவும் கூர்மையானது உங்கள் பார்வை. வேட்டைக்குச் செல்வதென்றால் இது தானா, காதலிக்கும் போது ஆண்கள் மழைத்துளியை எதிர்கொள்ளும் கோவில் மணி போலாகிவிடுகிறார்கள்“ என்றது பெண் சிற்பம்

“கண்ணாடியில் பார்ப்பதை விடவும் என் கண்களில் பார். உன் அழகு முழுமையாகத் தெரியும். காதலிக்கும் போது பெண்கள் பறக்கும் நீர்க்குமிழி போலாகி விடுகிறார்கள்“ என்றது ஆண்சிற்பம்.

“பேச்சை விடவும் மௌனமே காதலை வளர்க்கிறது“ என்றது பெண் சிற்பம்

“மௌனத்தைப் பரிமாறிக் கொள்வது தானே முத்தம்“ என்றது ஆண் சிற்பம்

“காதலென்பது இரண்டு சுடர்கள் ஒன்றாகி விடுவதைப் போன்றது“ எனச் சொன்னது பெண் சிற்பம்

“காதலென்பது இரண்டு கண்ணாடிகள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வது“ என்றது ஆண் சிற்பம்

“உன்னைத் தொடும் காற்று தான் என்னையும் தொடுகிறது. நாம் காற்றால் இணைகிறோம்“ என்றது பெண் சிற்பம்

“உன்னைத் தொடும் ஒளி தான் என்னையும் தொடுகிறது. நாம் வெளிச்சத்தால் அணைத்துக் கொள்கிறோம்“ என்றது ஆண் சிற்பம்

“பகல் நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது“ என்றது பெண் சிற்பம்

“இருள் நம்மை இணைத்துவிடுகிறது“ என்றது ஆண்சிற்பம்

இரண்டும் வெட்கத்தால் க்ளுக் எனச் சிரித்துக் கொண்டன. அந்தச் சிரிப்பு உலகிற்குக் கேட்கவேயில்லை

••

0Shares
0