கப்பல் முதலாளியைத் தற்செயலாக அவன் பாலக்காடு ரயில் நிலையத்தில் சந்தித்தான். தட்டில் இட்லி பொட்டலம் வைத்து விற்றுக் கொண்டு வந்தார். அவரை இப்படிக் காணுவது அதிர்ச்சியாக இருந்தது.
ஆள் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சாந்தமான முகம். பரிசுத்தமான கண்கள். கொக்கின் வெண்மையிலிருந்த தலைமயிர், அடர்ந்த தாடி. ரப்பர் செருப்பு. ஒரு காலத்தில் கப்பல் முதலாளி வருகிறார் என்றால் அவர் போட்டிருக்கும் வாசனைத்திரவியத்தின் மணத்திலே தெரிந்துவிடும். ஆள் நல்ல அழகன். பர்மா சில்க் தான் எப்போதும் அணிவார். கையில் தங்கக் காப்பு. சிவப்புக்கல் மோதிரம். பர்மாவில் போய் சம்பாதித்த காரணத்தால் அவருக்கு கப்பல் முதலாளி என்ற பெயர் வந்திருந்தது.
அப்பா இறந்து போன பிறகு குடும்பக் கடனை அடைக்க வேண்டி அவரது மரடிப்போவில் தான் சில காலம் வேலை செய்தான். கேரளாவிலிருந்து வரும் தடிகளைக் கணக்கிட்டுச் சைஸ் பிரித்து வெளியூர் வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டியது அவனது வேலை. சம்பளம் குறைவு. இரவில் லாரி போகும் வரை டிப்போவில் இருக்க வேண்டும் சில நாட்கள் கேரளா போய் வரவும் செய்ய வேண்டும்.
மரடிப்போவில் பத்து வருஷம் வேலை செய்தாலும் அப்பாவின் கடனை அடைக்க முடியாது என உணர்ந்த ரகு ஒரு நாள் கடையிலிருந்த ஆறாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒடிவிட்டான். கப்பல் முதலாளி அவன் மீது போலீஸில் புகார் தரவில்லை. வீட்டிற்கு ஆள் அனுப்பித் தேடவில்லை. அப்படியே விட்டுவிட்டார்
ஊருக்கு இரண்டு மாதம் மூன்று மாதமென இந்தியா முழுவதும் அலைந்து பல்வேறு வேலைகள் செய்தும் அவனால் நிலைபெற முடியவில்லை. வருஷங்கள் தான் கடந்து போயின.
பாலக்காட்டில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் சுற்றும் வேலைக்காக வந்திருந்தான். வேலை முடிந்து கிளம்பும் நாளில் தான் ரயில் நிலையத்தில் கப்பல் முதலாளியைப் பார்த்தான்.. அவன் மனதில் குற்றவுணர்ச்சி மேலோங்கியது. தயக்கத்துடன் அவரைத் தேடிப் போய்ப் பேசினான்.
“முதலாளி என்னைத் தெரியுதா“..
அவர் வியப்போடு “எத்தனை வருசமாச்சி.. உன்னைப்பாத்து, நல்லா இருக்கியா“ எனக்கேட்டார். லேசாகத் தலையாட்டினான்.
அவர் சலனமற்ற குரலில் சொன்னார்
“என்ன பாக்குறே. வீடு வாசல் எல்லாம் போயாச்சி. உன்னை மாதிரியே நானும் கடன்காரன் ஆகிட்டேன். ஊர் பக்கமே போகமுடியாது. நம்புனவங்க மோசம் பண்ணிட்டாங்க. ஒரு மனுசனை ஏமாத்துறதுக்கு இத்தனை பேர் ஒண்ணு சேருவாங்கன்னு தெரியாம போச்சு.. ஆத்துல ஒடுற தண்ணிய அள்ளிட்டுப் போனது மாதிரி யார் யாரோ கொண்டு போயிட்டாங்க. மகளும் நோவுல கிடந்து வேதனைப்பட்டுச் செத்துப்போயிட்டா.. கடனுக்குப் பயந்து இங்கே வந்துட்டேன். உசிரு பிழைக்கணும்லே.. அதான் இட்லி விக்குகிறேன்.. இன்னைக்கு வரைக்கும் ஒருத்தன் கிட்டயும் பத்து ரூபா யாசகம் கேட்டு நிக்கலை“ என்றபடியே அவன் கையைப் பிடித்துக் கொண்டார்
அவரது முகத்தில் தோற்றுப் போனதன் அடையாளமேயில்லை. அதே சாந்தம். அதே தூய கண்கள். குரலில் தான் தோல்வியின் வேதனை வெளிப்பட்டது. தோற்றவர்களின் குரல் ஒன்று போலவே இருக்கிறது.
“உங்க காசை தூக்கிட்டு ஒடிப்போயிட்டேன், மன்னிச்சிருங்க முதலாளி. “ என்றான்
“அதை விடுப்பா.. நடந்ததைப் பேசி என்ன ஆகப்போகுது.. இப்போ என்ன வேலை பாக்குறே. கல்யாணம் பண்ணிகிட்டயா. புள்ளைகுட்டி இருக்கா. “
“உருப்படியா ஒரு வேலையும் செய்ய முடியலை. தோத்துப்போயி ஒத்தை ஆளா கிடக்கேன். ஊருக்கு தான் போகவே முடியலை“
“கடன்காரனுக்கு ஏதுப்பா சொந்த ஊர். கடன்காரன் பொழப்பு எப்படியிருக்கும்னு நானும் வாழ்ந்து பார்த்துட்டேன்ல.. இப்போ நானும் கடன்காரன், நீயும் கடன்காரன். ரெண்டு பேரும் சமமாக ஆகிட்டோம்“ எனச் சொல்லி சிரித்தார்
அவனும் சிரித்து வைத்தான்
சிரிப்பு எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியிலிருந்து மட்டும் பிறப்பதில்லை என்பதை இவரும் அப்போது உணர்ந்திருந்தார்கள்.
கப்பல் முதலாளி அவன் கையில் ஒரு இட்லி பொட்டலத்தைக் கொடுத்தபடியே சொன்னார்
“யாரு கிட்டயும் என்னை இப்படிப் பார்த்ததைச் சொல்லாதே. இதைச் சாப்பிடு. உனக்குக் கொடுக்க இது தான்பா இருக்கு. “
இட்லி பொட்டலத்தை வாங்கிய போது அவனது கை நடுங்கியது.
கப்பல் முதலாளி பிளாட்பாரத்தில் இருட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.
ஆனால் அவரைச் சுற்றிலும் தூய ஒளி பிரகாசிப்பது போல அவனுக்கு மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது.
••
