நீரின் நிழல்

சினிமா என்பது முழுமையாகக் காட்சிமொழியின் ஊடகம். நாவலைப் போல அதற்கு நிறையக் கதை தேவையில்லை. கதையின் ஒற்றைப்புள்ளியிலிருந்து அது ஆழத்தை நோக்கியதாக நகர்வு கொண்டுவிடும். மிகச்சிறந்த கலைப்படங்களில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையும் உணர்வுகளும் குறைவான காட்சிகளின் வழியே பார்வையாளனுக்கு முற்றிலும் கடத்தப்பட்டுவிடும். அந்த மாயம் தான் சினிமாவின் தனித்துவம்.

அப்படி ஒரு படமாகத் தான் சனல்குமார் சசிதரனின் Chola என்ற மலையாளப் படத்தைக் கருதுகிறேன். Chola கேரள அரசின் நான்கு முக்கியத் திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும் இத் திரைப்படம் சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றுவருகிறது.

‘Chola’, தமிழில் ‘அல்லி’ என்னும் பெயரில் வெளியாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இதனை வெளியிடுகிறார். அவரது இந்த முயற்சிக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

மலைப்பிரதேசம் ஒன்றில் பள்ளி மாணவி ஜானகி சீருடை அணிந்தவளாகப் பனிமூட்டத்தினுள் தயங்கித் தயங்கி நடந்து வந்து தனது காதலனைச் சந்திக்கிறாள். அவர்கள் சாலையோரம் காத்திருக்கும் ஜீப்பில் பயணிக்கிறார்கள். ஒரு காதல் ஜோடி, ஜீப்பினை ஒட்டுகிறவன் என மூன்றே கதாபாத்திரங்கள்.  மழை மற்றும் மூடுபனி வழியாகப் பயணிப்பது கவித்துவமான அனுபவத்தைத் தருவதாகவுள்ளது.

வான்வழி காட்சிகளாகக் காட்டப்படும் மலைப்பிரதேசமும் சாலைகளும் வியக்க வைக்கின்றன. அஜித் ஆச்சார்யாவின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாகவுள்ளது. செர்ஜி செரெமிசினோவின் இசையும் மிக நேர்த்தியான படத்தொகுப்பும் வெகு சிறப்பு.

ஜீப் ஹெட்லைட் வெளிச்சம் மூடுபனியின் ஊடாகத் துளைத்துக் கொண்டு வருவது நூரி பில்ஜ் சிலானின் Once Upon a Time in Anatolia  வை நினைவூட்டியது.

அவர்கள் செல்லும் மலைப்பாதையெங்கும் மழை பெய்கிறது. இத்தனை நிஜமாக, அழகாக மழையை யாரும் திரையில் பதிவு செய்ததில்லை. ஒரு இடத்தில் இறங்கி அந்தப் பெண் மழைக்குள்ளாகவே தகரமடித்த கழிப்பறைக்குப் போகிறாள். டீக்கடையில் அவளது முதலாளி நிதானமாக மீன் சாப்பிடுகிறான். டீக்கடையில் காத்திருப்பவர்களின் முகங்களில் கள்ளத்தனம் வெளிப்படுகிறது. அந்தப் பெண்ணின் காதலன் பதற்றத்துடன் காத்திருக்கிறான். சரியாக மூடப்படாத கழிப்பறையின் ஒற்றைக்கதவு, பெண்ணின் பயந்த விழிகள் எனப் படத்தின் மறக்கமுடியாத காட்சியது.

முதலாளி என அழைக்கப்படும் ஜீப்பினை ஒட்டுகிறவன் அந்த இளம் ஜோடியை அலட்சியமாக நடத்துகிறான். அவர்கள் கொச்சியை நோக்கிப் பயணிப்பது பின்பு தான் தெரிய வருகிறது. மழை பெய்து கொண்டிருக்கும் மலைப்பாங்கான பகுதியிலிருந்து கொச்சி நகரை நோக்கி அவர்கள் ஜீப்பில் வருவதும், காங்கிரீட் வனம் போன்ற கொச்சியின் கட்டிடங்களும் சிக்னல்களும் அவர்கள் இயற்கையிலிருந்து துண்டித்த நகரவாழ்விற்குள் செல்கிறார்கள் என்பதை அழகாகப் புரிய வைக்கிறது..

பயணம் முழுவதிலும் ஜானகி அமைதியற்றவளாக இருக்கிறாள். காதலனுடன் செல்கிறோம் என்ற போதும் காரணமற்ற பயமும் தயக்கமும் அவளை ஆட்டுவிக்கின்றன. கதையின் பிற்பகுதியினை முன்னறிவிப்பது போலவே அவளது பயம் தொடர்ந்து வெளிப்படுகிறது.

இயற்கையின் இருவேறு நிலைகளின் அடையாளம் போலவே ஜானு சித்தரிக்கப்படுகிறாள்.

மோசமான விடுதி ஒன்றில் தங்குவதற்காக அவளைக் காதலன் அழைத்துச் செல்லும் போது ஊருக்குப் போய்விடுவோம் என அவள் மன்றாடுகிறாள். காமத்தின் கறை படிந்த அந்தச் சிறிய அறை. மஞ்சள் வெளிச்சம். கடந்து செல்லும் பாதையில் இருந்தவர்களின் கண்களில் வெளிப்படும் இச்சை. முதலாளியின் கோபம் மற்றும் மூர்க்கம். குளியல் அறையிலிருந்து ஈரத்துடன் வெளிப்படும் ஜானுவின் தோற்றம். மது வாங்குவதற்காக இரவில் அலையும் காதலனின் பதற்றம். படத்தின் பிற்பகுதி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மிக நுட்பமாக, மிகவும் யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார்கள். நாம் ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வேயில்லை. நாமே நடக்கும் நிகழ்வுகளின் சாட்சியமாகிவிடுகிறோம். இதைச் சாத்தியப்படுத்தியதே சனல்குமாரின் வெற்றி.

ஆசையும் பயமும் இயலாமையும் கொண்டவளாகவே ஜானகி இருக்கிறாள். அவள் நகரிலும், ஊர் திரும்பிய வழியிலும் மிக மோசமாக நடத்தப்படுகிறாள். அவளது போராட்டமும் சந்திக்கும் வன்முறையும் நம்மைக் கலங்கச் செய்து விடுகிறது.

சீறிப்பாயும் நதி படத்தில் ஒரு குறியீடு போலவே இடம்பெறுகிறது. ஜானகியாக மிகச்சிறப்பாக நடித்திருப்பவர் நிமிஷா . ஆசானாக நடித்துள்ள ஜோஜு ஜார்ஜ், மற்றும் காதலனாக நடித்துள்ளவர் என மூவரும் வியக்கத்தக்க நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

Chola திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் நடந்த சூர்ய நெல்லி கொலைவழக்கினை மையமாகக் கொண்டது.

சனல்குமாரின் மூன்று திரைப்படங்களும் ஆண்களின் உலகில் அகப்பட்டுக் கொள்ளும் பெண்ணின் கதையைத் தான் சொல்கின்றன. மற்ற இரண்டு படங்களை விடவும் இது கலை நேர்த்தியுடன் அழுத்தமாகப் பெண்ணின் துயரைப் பேசுகிறது.

சிறியதொரு கதையை எத்தனை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள் என்று கைதட்டிப் பாராட்டத் தோன்றுகிறது

••

0Shares
0