மலைகள் ஒன்றையொன்று “சகோதரா“ என அழைத்துக் கொண்டன.
நீர்வீழ்ச்சி பாறைகளைப் பார்த்து “என் அன்பே“ எனச் செல்லமாகக் கூப்பிட்டது.
மரங்களோ சீறிப்பாய்ந்தோடும் ஆற்றினை “நண்பனே“ என்று அழைத்தன. ஆறு தன்னில் நீந்திவிளையாடும் மீன்களை “என் செல்வங்களே“ என்றது.
மீன்களோ ஆமைகளைப் பார்த்து “அண்ணா“ என்று அழைத்தன.
ஆமைகள் பாதிக் கண்களைத் திறந்தபடியே முதலையைப் “பெரியப்பா சுகம் தானா“ என்று கேட்டன.
முதலை கசிந்த கண்களுடன் ஆற்றின் கரையிலிருந்த யானையைப் பார்த்து “சௌக்கியமா மாமா“ என்றது.
யானையோ வானில் ஒளிரும் சூரியனைப் பார்த்து “தாத்தா எப்படியிருக்கிறீர்கள்“ எனக்கேட்டது.
சூரியன் மண்ணில் ஊர்ந்து செல்லும் எறும்பைப் பார்த்து “என் சொந்தமே ஏன் வாடியிருக்கிறாய்“ என்று கேட்டது.
எறும்பு பூமியைப் பார்த்துக் கேட்டது
“தாயே நலம் தானா. “
உயிர்கள் ஒன்றோடு ஒன்று அன்பு செலுத்துவதையும், இயற்கை தன் அங்கங்களை உறவு சொல்லிக் கொண்டாடுவதையும் கண்ட பூமி மகிழ்ச்சியோடு மனிதர்களிடம் கேட்டது.
“புதல்வர்களே எப்படியிருக்கிறீர்கள்“.
மனிதன் பெருமிதமாகச் சொன்னான்.
“நானே புவியின் அதிபதி. இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமேயானது“.
“அய்யோ பாவம்“ என்றொரு குரல் கேட்டது.
அதை எழுப்பியது யார் என்று தான் தெரிந்து கொள்ளமுடியவில்லை.
••
