பின்னோக்கிப் பறக்கும் பறவை

ரஷ்யத் திரைப்பட இயக்குநரும் ஆர்மீனிய வம்சாவளியைச் சேர்ந்த கலைஞருமான செர்ஜி பராஜனோவ் (Sergei Parajanov) வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்த்தேன். Parajanov படத்தை இயக்கியிருப்பவர் செர்ஜ் அவெடிக்கியன் மற்றும் ஓலெனா ஃபெடிசோவா.

Shadows of Forgotten Ancestors, Ashik Kerib,The Color of Pomegranates போன்ற திரைப்படங்களை உருவாக்கியதன் மூலம் பராஜனோவ் உலகச் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநராகக் கொண்டாடப்படுகிறார்.

பராஜனோவ்வின் வாழ்க்கை மற்றும் அவரது தோற்றம் எப்போது இருவரை நினைவு படுத்தக்கூடியது. ஒன்று இயக்குனர் ஃபெடரிகோ ஃபெலினி. மற்றவர் சர்ரியலிச ஒவியர் டாலி. இந்த இரண்டு கலைஞர்களின் கலவை போலவே இருந்தார் பராஜனோவ்.

1924 இல், ஜார்ஜியாவின் திபிலிசியில், ஒரு ஆர்மீனிய குடும்பத்தில் பராஜனோவ் பிறந்தார். ஓவியம் மற்றும் நுண்கலைகளில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு தந்தை வழியே உருவானது. பராஜனோவ்வின் தந்தை அரிய கலைப்பொருட்களைச் சேகரிப்பவர். ஆகவே சிறுவயது முதலே கலையின் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்த பராஜனோவ் ஒவியக்கலையில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார்.

இந்த ஆர்வமே அவரைத் திரைக்கலை பயிலுவதற்காக மாஸ்கோ திரைப்படப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு சென்றது. அங்கே பிரபல ரஷ்ய இயக்குநரான அலெக்சாண்டர் டவ்ஷென்கோவின் மாணவராகத் திரைக்கலையைப் பயின்றார். .

படிப்பை முடித்த பிறகு கியேவில் உள்ள டவ்ஷென்கோ ஸ்டுடியோவில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஆவணப்படங்களையும் குறும்படங்களை இயக்கத் துவங்கி 1954 ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானார்,

,1964 ஆம் ஆண்டில் அவர் உக்ரேனிய நாட்டுப்புற கலாச்சாரத்தின் அடையாளமாக Shadows of Forgotten Ancestors திரைப்படத்தை உருவாக்கினார். 1968 இல் அவர் தனது தலைசிறந்த படைப்பான “சயாத் நோவா”வை இயக்கினார்.  சயாத் நோவாவை சோவியத் அதிகாரிகள் தடைசெய்தனர், பல்வேறு தணிக்கைகளைத் தாண்டி பின்பு இப்படம் The Color of Pomegranates என்ற பெயரில் வெளியானது.

சுதந்திர சிந்தனை கொண்ட கலைஞராக விளங்கிய பராஜனோவ் ரஷ்ய அரசிற்கு எதிராகப் பேசவும் செயல்படவும் துவங்கினார். இதனால் இரகசிய போலீஸ் அதிகாரிகளின் கண்காணிப்பிற்கு உள்ளானார்.. ஒரினச்சேர்க்கையைளராக அறியப்பட்ட இவரை 1973 டிசம்பரில், சோவியத் அரசாங்கம் கைது செய்து ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து உலகப் புகழ்பெற்ற திரைக்கலைஞர்கள்,  தயாரிப்பாளர்கள் அடங்கிய குழு கண்டக்குரலை எழுப்பியது. சர்வதேச அளவில் ஏற்பட்ட கண்டனம் காரணமாகப் பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பராஜனோவ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

விடுதலையான பிறகு மாஸ்கோ, கியேவ், லெனின்கிராட் மற்றும் யெரெவன் ஆகிய இடங்களில் அவர் வசிக்கத் தடை விதிக்கப்பட்டது, எனவே தனது சொந்த ஊரான திபிலிசிக்குத் திரும்பினார்

அவரால் தொடர்ந்து திரைத்துறையில் இயங்க முடியவில்லை.ஆகவே அவர் ஓவியம் மற்றும் சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவராகத் தனிமையில் வாழ்ந்து வந்தார். 1984 ஆம் ஆண்டில், அரசியல் நிலைமைகள் மாறத் தொடங்கின, ஜார்ஜிய திரைக்கலைஞர்களின் உதவியோடு 15 ஆண்டுகளுக்குப் பிறகு The Legend of Suram Fortress படத்தை உருவாக்கினார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் மிகுந்த பாராட்டினைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய எழுத்தாளர் லெர்மன்தேவின் கதையை அடிப்படையாகக் கொண்டு Ashik Kerib திரைப்படத்தை உருவாக்கினார்

இப்படம் அவரது நண்பரும் ரஷ்ய சினிமாவின் மகத்தான இயக்குநருமான தார்கோவ்ஸ்கிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது

தார்கோவெஸ்கியின் படங்களைப் போலவே தனித்துவமிக்க அழகியலுடன் கவித்துவமான வெளிப்பாட்டு முறையுடன் பராஜனோவ் தனது திரைப்படங்களை உருவாக்கினார். திரைப்படத்தின் வழியே கதை சொல்வதை விடவும்ஒன்றுக்கு மேற்பட்ட காட்சித்துண்டுகளை ஒன்றிணைத்துக் கொலாஜ் போன்ற முறையினை திரையில் உருவாக்கவே பராஜனோவ் முயன்றார்.

உக்ரேனிய மற்றும் ஆர்மீனியப் பண்பாட்டின் அடையாளங்கள், குறியீடுகள். அழகியல் இவற்றைத் தனது திரைப்படங்களில் புதுமையான முறையில் வெளிப்படுத்தினார்.

எளிய சினிமா பார்வையாளனுக்கு இந்தப் படங்கள் அர்த்தமற்ற ஒன்றாகத் தோன்றக்கூடும் . ஆனால் கலையின் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்குப் இப்படங்கள் சர்ரியலிச ஒவியங்களைப் போல  தனித்துவமிக்க அழகியலைக் கொண்டிருக்கிறது என்பது புரியும்..

தனது படைப்புகளைப் போலவே பராஜனோவ்  சிதறுண்ட மனம் கொண்டிருந்தார். குடும்ப வாழ்வில் சிக்கல். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். ஒரினச்சேர்க்கையாளராக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டார். அவரது சர்ச்சைக்குரிய வாழ்க்கை முறை மற்றும் நடத்தை காரணமாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்

அசலான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகச் சோவியத் அதிகாரத்துடனும் தன்னோடு பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுடனும் ஓயாமல் சண்டையிட்டார்.

இந்தப் படத்திலே அப்படி ஒரு காட்சியிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் உன்னைப் போன்ற பைத்தியக்காரனுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாது. எனக்கிருக்கும் கோபத்தில் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று எச்சரிக்கச் செய்கிறார்.

அதைக் கேட்ட பராஜனோவ் தானும் அவரைக் கொல்ல தயார் எனச் சண்டைக்கு நாள் குறிக்கிறார். மறுநாள் காலை ஆறுமணிக்கு இருவரும் நேருக்கு நேராகத் துப்பாக்கி சண்டையிட்டு யார் சாவது என முடிவு செய்யலாம் என்று சவால் விடுகிறான் ஒளிப்பதிவாளர். அதற்குச் சம்மதிக்கிறார். ஆனால் இரவிற்குள் அந்தச் சண்டை அர்த்தமற்றது என்று உணருகிறார். ஆனால் அவரது கனவில் அந்தச் சண்டை நடக்கிறது. பின்பு அதே ஒளிப்பதிவாளருடன் இணைந்து சிறந்த படத்தை உருவாக்குகிறார்.

இது போலவே கலை இயக்குநருடன் சண்டை. நடிகர்களுடன் சண்டை, முழுப்படத்தின் காட்சிகளையும் தணிக்கை அதிகாரிகள் பார்த்தபிறகே எடிட் செய்ய வேண்டும் என்ற கட்டளையைக் கேட்டு எடுத்த படச்சுருளை வீசி எறிகிறார். இப்படிக் கலகமனப்பான்மையிலே வாழ்ந்த பராஜனோவ் இன்னொரு பக்கம் அன்பிற்கான ஏக்கத்துடன் கலையின் மீதான ஈடுபாடே வாழ்க்கையை உயிருடன் வைத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் வாழும் மனிதராகவும் இருக்கிறார். இந்த இரு முனைகளுக்குள் ஊசலாடியதே அவரது வாழ்க்கை.

அந்த மனநிலையை இப்படம் மிக அழகாக விவரித்துள்ளது. பராஜனோவ் திரைப்படங்களின் பாணியிலே அவரது வாழ்க்கை வரலாறும் உருவாக்கப்பட்டிருப்பது அவருக்குச் செய்யப்பட்ட சிறந்த அஞ்சலி என்பேன்.

சிறைச்சாலையிலிருந்த நாட்களில் அங்கிருந்த குற்றவாளிகளை ஓவியம் வரைகிறார். அவர் ஒரு திரைப்பட இயக்குநர் என்பதை சிறைவாசிகள்  நம்ப மறுக்கிறார்கள். ஓ வியத்திறமை கொண்ட அவரை நிர்வாண பெண் உடல் கொண்ட சீட்டுக்கட்டினை வரைந்து தரும்படி கேட்கிறான் ஒரு கைதி. தூக்கி எறியப்பட்ட பொருட்களைச் சேகரித்து  அதன் மூலம் கலைப்படைப்புகளை உருவாக்குகிறார் பராஜனோவ்.

இன்னொரு காட்சியில் அவரைத் தேடி பிரெஞ்சு திரைப்பட நடிகரான மார்செல்லோ மாஸ்ட்ரியானி வீட்டிற்கு வருகிறார். அவரைப் பராஜனோவ் வரவேற்கும் விதமும் பக்கத்துவீட்டுப் பெண்ணிற்கு அறிமுகம் செய்து வைக்கும் முறையும் அற்புதம்.

பராஜனோவ் திரைப்படங்களின் சில காட்சிகளை அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

1990 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் பராஜனோவ் இறந்தார், அவரது உடல் யெரெவனின் நகர மையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்குச் செர்ஜி பராஜனோவ்வின் கலைப்பொருட்கள் யாவும் சேகரிக்கப்பட்டு  தற்போது அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது

பராஜனோவ் படங்களில் தார்கோவ்ஸ்கியின் பாதிப்பு நேரடியாக இருந்தது. இசை, நடனம், வண்ணங்கள் மற்றும் நாட்டுப்புறக்கதைகளைக் கையாளுவதில் பராஜனோவ் தனித்துவம் கொண்டிருந்தார் . ஒரு நேர்காணலில் தான் ஒரு பின்னோக்கி பறக்கும் பறவை என்று தன்னைப் பற்றி சொல்கிறார் பராஜனோவ்

சினிமாவின் வழக்கமான விவரிப்பு முறையை நிராகரித்து நிகழ்வுகளின் காரண-விளைவுகளுக்கு எதிராகத் தனித்தனி கூறுகளை ஒன்றாக இணைக்கும் முறையிலான திரைக் கட்டமைப்பினை அவர் முன்னெடுத்தார்.

பராஜனோவின் சிந்தனை மனிதன் தனது பூர்வீக நிலத்துடனான பிணைப்பையும் அவனது மூதாதையர்களுடனான ஆன்மீக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளையும் இழக்கவில்லை என்பதைக் காட்டுவதாக உள்ளது என்கிறார்கள் திரை விமர்சகர்கள் . பராஜனோவ் ஒரு தீவிரமான உருவக சினிமா மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதே அவரது சிறப்பு.

Parajanov திரைப்படமும் அது போன்ற உருவக மொழிதலை முன்னெடுத்திருக்கிறது. வழக்கமான சுயசரிதைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்ற வகையில் பராஜனோவ் தனித்துவமிக்கதாக விளங்குகிறது

•••

0Shares
0