அவர் சிறுவயதிலிருந்தே புகழ்பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை கொண்டிருந்தார். இதற்காகவே இசை கற்றுக்கொண்டார். நடனம் பயின்றார். நாடகங்களில் நடிக்கவும் செய்தார். அவரது பெயரையும் புகைப்படத்தையும் சுவரொட்டியில் பார்க்கும் போது மேகக்கூட்டத்தில் மிதப்பது போலச் சந்தோஷம் கொண்டார்.
சினிமாவில் கதாநாயகனாக நடித்துப் பணமும் மரியாதையும் வசதிகளும் அடைந்த போது புகழ் அவரது வளர்ப்பு நாய் போலக் கூடவே சென்றது. அந்த மகிழ்ச்சியில் தனது வீட்டின் எதிரில் தன்னுடைய உருவச்சிலை ஒன்றை நிறுவச் செய்திருந்தார். ஒவ்வொரு நாளும் அந்தச் சிலையைப் பலரும் வணங்கினார்கள். மலர் தூவி மரியாதை செய்தார்கள்.
உணவில்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் புகழ் இல்லாமல் வாழமுடியாது என அவர் உறுதியாக நம்பினார். ஆனால் காலம் அப்படி நினைக்கவில்லை.
அடுத்த சில ஆண்டுகளில் அவரது வாழ்க்கை தடம் புரண்டது. திடீரென அவர் நடிக்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தினார். ஒவர் ஆக்டிங் என இயக்குநர் கடிந்து கொண்ட போதும் அவரால் விசும்பலைக் கட்டுப்படுத்த இயலவில்லை. வசனங்களைச் சொல்லும் போது அவரது முகத்தில் வேறு ஏதோ யோசனைகள் தோன்றி மறைந்தபடியே இருந்தன. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டிலே அடைந்து கிடந்தார். ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என ஒருவருக்கும் புரியவில்லை
அந்த நடிகரின் மூன்று பிள்ளைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை மங்கிக் கொண்டே வந்தது. மூத்தமகனுக்குப் பனிரெண்டு வயதிற்குள் பார்வை முற்றிலும் பறி போயிருந்தது. அடுத்த மகள், அடுத்த மகன் என இருவருக்கும் பார்வை மங்கிக் கொண்டேவந்தது. ஏதோ மரபணு பிரச்சனை என்றார்கள்.
இவ்வளவு பணம், புகழ், பெயர் இருந்தும் தன்னால் பிள்ளைகளின் பார்வை இழப்பை நிறுத்த முடியவில்லையே என அவர் வருந்தினார். அவரது மனைவி கோவில் கோவிலாகப் பிரார்த்தனைகள் செய்தார். தானங்கள் கொடுத்தார். நடிகரும் வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்துச் சிகிச்சை அளித்துக் கூடப் பார்த்தார். எந்த மருத்துவராலும் அவரது பிள்ளைகளைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த நிர்கதியை அவர்கள் எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
சில மாதங்களில் மூன்று பிள்ளைகளுக்கும் பார்வை முற்றிலும் போயிருந்தது. புகழின் உச்சியிலிருந்த நடிகர் அத்தோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார். வீட்டை காலி செய்து எங்கோ மறைந்துவிட்டார். அதன்பிறகு அவரை யாரும் காணவேயில்லை.
சில வருஷங்களில் சினிமா உலகம் அவரை மறந்து போனது. அடுத்த தலைமுறையின் நினைவில் அவரது பெயர் கூட நிலைக்கவில்லை. பாதி எரிந்த தீக்குச்சி போலானது அவரது வாழ்க்கை.
வாழ்க்கை ஏன் அவரை ஒரு காலை முன்னே வைத்தும் ஒரு காலை பின்னே வைத்தும் நடக்கச் செய்தது என ஒருவருக்கும் புரியவேயில்லை.
••
14.3.20