நிழலின் நடனம்

அகிரா குரசேவாவின் Kagemusha திரைப்படம் மன்னரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட திருடன் ஒருவனைப் பிடித்து மன்னருக்குப் பதிலாக எப்படி நடிக்க வைக்கிறார்கள் என்பதை அழகாகப் பதிவு செய்திருந்தது. இதே கதையின் மற்றொரு வடிவம் போன்ற திரைப்படமே Zhang Yimou இயக்கத்தில் வெளியாகியுள்ள Shadow.

House of Flying Daggers, Hero போன்ற தற்காப்புக்கலை சார்ந்த வரலாற்றுப் படங்களை இயக்கிய ஜாங் யிமோ இப்படத்தில் Martial arts திரைப்படங்களின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.

சீன ஒவியங்களிலிருந்த பூக்களையும் நிலக்காட்சி தோற்றங்களையும் கொண்ட உடைகளையே படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் அணிகிறார்கள், old Chinese ink painting போன்று கறுப்பு வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் படத்திற்குத் தனியான அழகினை உருவாக்குகிறது. நேர்த்தியான அரங்க அமைப்பு. உடைகள் என இந்தப் படத்தின் கலை உருவாக்கம் மிகுந்த பாராட்டிற்குரியது. ஒளிப்பதிவு திரையில் நிகழ்த்தும் மாயம் வியப்பானது.

மன்னரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவன் நாட்டைக் காப்பதற்காக எப்படித் தனது போர்த்திறனைப் பயன்படுத்தி வெற்றியடைகிறான் என்பதே கதை. இழந்த நாட்டை மீட்பதற்காக எதிரிக்குத் தனது தங்கையைத் திருமணம் செய்து வைக்க மன்னர் முயற்சி செய்வதும். எதிரி அந்தப் பெண்ணை அவமானப்படுத்தி அனுப்பி வைப்பதும் தமிழ் கதையைப் போலவே இருக்கிறது.

சண்டைக் காட்சிகள் அழகிய நடனம் போலவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மறைவிடம் ஒன்றில் யின் மற்றும் யாங் சின்னத்தின் அடையாளமாக உள்ள தரையில் அவர்களின் சண்டை நடைபெறுவது மிகவும் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

கத்திகளாக விரியும் குடையை வைத்துக் கொண்டு நடைபெறும் சண்டையும். எதிரிகளின் இடத்திற்கே சென்று UMBRELLA BATTALION சண்டையிடும் விதமும் வெகு நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன.

பண்டைய சீன தத்துவத்தில், யின் மற்றும் யாங் முறையே ஆண் மற்றும் பெண் சக்திகளின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இரண்டும் சம அளவில் இருக்கின்றன. இணைந்து செயல்படும் போது மட்டுமே அது முழுப் பலத்தை அடைகிறது என்கிறார்கள். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் சார்ந்து இயங்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். யின் மற்றும் யாங்கின் சுழற்சி காரணமாகவே உயிர்கள் உருவாகிறது. இந்த இருமையைச் சீன அறிவியல் மற்றும் தத்துவம் விரிவாக விளக்குகிறது.

இதை மையப்பொருளாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே இயக்குனர் ஜாங் யீமோவின் விருப்பம். அதற்கான களமாகவே இப்படி ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சண்டையிடுவதும் போர்க்கலையின் ரகசியத்தை அறிவதையும் படம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஜாங் யிமோ ஒரு ஓவியர் என்பதால் சீன ஒவியங்களின் அழகியலை அப்படியே திரையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார். பொழுதுபோக்கு சினிமாவினுள்ளே இத்தனை அதியசங்களை நிகழ்த்திக் காட்டுகிறார் என்பது தான் ஜாங் யிமோவின் தனித்துவம்.

••

0Shares
0