பாபுராஜ் என்ற அந்தக் கிழவருக்கு வயது எண்பத்திரெண்டாகிறது. அவரது மனைவி சாந்தினிக்கு அவரை விடவும் நான்கு வயது குறைவு. அவர்கள் இருவரும் நகரை விட்டு விலகிய புறநகர்ப் பகுதியில் வசித்தார்கள். அவர்கள் வீடு கட்டத்துவங்கும் போது அந்தப் பகுதியில் நான்கே வீடுகள் இருந்தன. இப்போது ஐநூறுக்கும் மேலாக வீடுகள் வந்துவிட்டன.
கிழவர் தன் மனைவியின் மீது தீராத அன்பு கொண்டிருந்தார். கிழவியும் அப்படியே. அவர்கள் இருவரும் விளையாட்டுச் சிறுவர்கள் போலவே நடந்து கொள்வார்கள்..
இருவரும் ஒன்றாக நடைப்பயிற்சிக்குப் போவார்கள். வழியில் வேண்டுமென்றே தெரியாத பெண்ணுடன் நடப்பது போல அவர் ஒதுங்கிக் கொள்வார் ,அவளும் அப்படிச் செய்வாள். இருவரும் முன்னறியாதவர்கள் போல வேறுவேறு வீதிகளில் நடந்து போவார்கள். வீடு வந்து சேர்ந்தவுடன் அவர் மனைவிக்காக ஆசையாக நன்னாரி சர்பத் தயாரித்துத் தருவார்.
அவள் அதைக் குடித்தபடியே, உங்களைப் போல ஒரு ஆளைச் சாலையில் பார்த்தேன் என்று கேலி செய்வாள். அவன் மிக மோசமானவன். உன்னைப் பின்தொடர்ந்து வீட்டிற்கே வந்துவிடுவான் என்று அவரும் நடிப்பார்.
கிழவி குளித்துவிட்டுத் திரும்பியதும் கிழவர் அவளின் பின்னால் சென்று கட்டிக் கொண்டு அவள் தோளில் சோப்பின் வாசனை வருகிறதா என்று முகருவார். கிழவி செல்லமாக அவர் தலையில் அடிப்பாள். கிழவர் கண்ணாடியில் தலை சீவும் போது கிழவி வேண்டுமென்றே அவரது தலையில் பவுடர் போட்டுவிடுவாள். கிழவர் சிரித்துக் கொள்வார்
அதன் பிறகு இவரும் சாப்பிட உட்காருவார்கள். கிழவி இட்லிக்குள் செர்ரி பழத்தையோ, முந்திரியோ ஒளித்து வைத்திருப்பாள். அதைக் கண்டுபிடித்துச் சுவைக்கும் போது கிழவர் சந்தோஷப்படுவார். பிறகு இருவரும் ஆளுக்கு ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொள்வார்கள்.
அன்றைய செய்தித் தாளில் மத்திய அமைச்சர் அமெரிக்கா சென்றார் என்று வந்திருப்பதைக் கிழவர் வேண்டுமென்றே, மத்திய அமைச்சர் சாந்தினி அமெரிக்கா சென்றார் என்றோ, விம்பிள்டன் போட்டியில் சாந்தினி வெற்றி பெற்றார் என்றோ சப்தமாகப் படிப்பார்.
இதற்குப் பதிலடியாகக் கிழவி, டில்லியில் கொலைகாரன் பாபுராஜ் கைது என்றோ, மோசடி செய்த வங்கி அதிகாரி பாபுராஜ் தேடப்படுகிறார் என்றோ வாசிப்பாள். இருவரும் சிரித்துக் கொள்வார்கள்.
அவள் மதிய உணவு தயாரிப்பதற்குக் கிழவர் காய்கறிகள் வெட்டி தருவார். அதற்குப் பரிசாக அவள் ஒரு தேங்காய் துண்டு தருவாள். மதிய உணவின் போது அவளுக்காக ஒரு உருண்டை சோறு பிடித்துத் தருவார் கிழவர். கிழவி அவருக்குத் தன் தட்டிலிருந்து கை அள்ளி ஊட்டி விடுவாள். சில நாள் அவள் தட்டிலிருந்த அப்பளத்தைத் தாத்தா திருடிக் கொள்வதும் உண்டு. உணவின் பின்பு கிழவர் உறங்கிவிடுவார். கிழவி உறங்கமாட்டாள். ஏதாவது படித்துக் கொண்டிருப்பாள். அல்லது பூக்கட்டுவாள்.
தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் போது செடிகளிடம் கிழவி தான் அவர்களின் அம்மா என்று சொல்லுவார். அவள் செடிகளிடம் அவர் தான் உங்கள் அப்பா என்று சொல்லுவாள். அவர்கள் தாவரங்களின் தாயும் தந்தையாக மாறுவார்கள்.
பின்பு கொடியில் காயும் துணிகளை மடிக்கும் போது அவளது உடைகளைக் கிழவர் மடிப்பார். அவரது உடைகளைக் கிழவி மடிப்பாள். அது தான் வழக்கம்.
ஆறுமணியளவில் இருவரும் ஒரு விளையாட்டினை விளையாடுவார்கள் அதாவது திருமண நாளின் போது விடிகாலை எத்தனை மணிக்கு அவள் விழித்துக் கொண்டாள். என்ன சாப்பிட்டாள் என அவர் கேட்பார். முதல்முறை அவர்கள் சினிமா பார்க்கப் போன போது அவர் என்ன நிறத்தில் சட்டை அணிந்திருந்தார் என அவள் கேட்பாள். இப்படியாகப் பழைய நினைவுகளைக் கலைத்துப் போட்டு விளையாடுவார்கள். சிலநேரம் அவரது பலவீனங்களை சொல்லி அவள் கேலி செய்வாள். அது போலவே அவளது பயத்தை சொல்லி அவர் கேலி செய்வார்.
இரவில் கிழவி கதை சொல்லுவாள். கிழவர் ஒரு சிறுவனைப் போலக் கேட்டுக் கொண்டிருப்பார். கதை சொல்லி முடித்தவுடன் கிழவி கதை எப்படியிருந்தது என்று கேட்பாள். உன்னைப் போலவே நன்றாக இருந்தது என்பார் கிழவர். செல்லமாக அவர் தலையைக் கோதிவிடுவாள்.
கிழவரும் கிழவியும் படுக்கைக்குச் செல்வார்கள். கிழவர் உன்னால் தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று மெதுவான குரலில் சொல்லுவார். கிழவி உங்களால் தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லுவாள். ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்வார்கள். சில நிமிஷத்தில் உறங்கிவிடுவார்கள். அவ்வளவு சிறியது தான் அவர்கள் வாழ்க்கை. ஒரே தொட்டிக்குள் வாழும் தங்க நிற மீன்கள் இப்படித் தான் வாழுமில்லையா.
••