குறுங்கதை 40 அந்த மனிதன்

அடர்ந்த காட்டினுள் அமைக்கப்பட்டிருந்த காவல் கோபுரத்தில் அந்த மனிதன் வேலை செய்தான். காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கு வருபவர்களைத் தடுப்பதும், எதிர்பாராமல் காட்டு தீ ஏற்பட்டால் அதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்வதுமே அவனது வேலை. அந்த மனிதனுக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது.

அக்காவல் கோபுரத்தில் சிறியதொரு மரப்பெட்டி, உயரமான நாற்காலி. துப்பாக்கி பைனாக்குலர் டார்ச் லைட் தொலைத்தொடர்பு சாதனங்கள், குடிநீர் மற்றும் தேவையான உணவுப்பொருட்கள் இருந்தன.

இவற்றோடு கூடவே ஒரு புத்தகமும் வைத்திருந்தான். ஜெனிசன் தொகுத்த ஏழு தேவதைகள் என்ற கதைத் தொகுப்பு. பள்ளி நாட்களில் வாங்கிய புத்தகம். ஆனால் அதை இன்றுவரை இடைவிடாமல் படித்துக் கொண்டேயிருந்தான். உண்மையில் அந்தப் புத்தகம் அவனுடன் தானும் வளர்ந்து கொண்டேயிருந்தது.

இரவில் காடு உருமாறிவிடுகிறது. பகலைப் போலவே இரவில் நடமாடும் விலங்குகள் உண்டு. மரங்களின் அமைதியும் பூச்சிகளின் சங்கீதமும் இரவிற்கு விசித்திர தோற்றம் தந்தன. இரவில் காடு சிறியதாகிவிடுகிறது. காட்டிலிருந்து காணும் நட்சத்திரத்தின் அழகினை ஒரு போதும் நகரத்திலிருந்து அறிய முடியாது.

மிகவும் பிடித்தமான உணவைச் சாப்பிடுகிறவனைப் போல அவன் ஆசையாக ஏழு தேவதைகள் கதையைப் புரட்டுவான். அழகான சித்திரங்கள் கொண்ட புத்தகமது. உலகில் தேவதைகள் வசிக்கிறார்களா எனத் தெரியாது. ஆனால் அவர்கள் கதைகளில் வசிக்கிறார்கள். கதை தான் தேவதைகளின் வீடு. மாயக்கம்பளத்தில் ஏறி பறந்து செல்வது போலச் சொற்களின் வழியே கதைகளுக்குள் பயணிக்க ஆரம்பிப்பான்.

எளியவர்களின் முன்னால் தான் எப்போதும் தேவதைகள் தோன்றுகிறார்கள். அதுவும் தேவதைகள் குறைவாகவே பேசுகிறார்கள். நடனமும் இசையும் குதூகலமும் தான் அவர்களின் இயல்பு.

ஏழை தச்சன் ஒருவனுக்கு அந்தத் தேவதைகள் உதவி செய்யும் கதை தான் அவனுக்கு மிகவும் பிடித்தமானது. அந்தத் தச்சனின் குடிசையின் வாசலில் கட்டிப்போடப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டியின் கழுத்தில் கட்டிய மணி எழுப்பும் ஓசை கூட அந்த மனிதனுக்குக் கேட்கும்.

ஆழ்ந்த உறக்கத்தின் பின்பு ஒரு மனிதன் அடையும் புத்துணர்வை அவன் கதைவழியாகவே அடைந்துவிடுவான்.

விருப்பமான ஒரு கதையிருந்தால் போதும் உலகில் எந்தத் தனிமையும் கடந்துவிடலாம் என அவன் உறுதியாக நம்பினான்.

ஏழு தேவதைகளைத் தொகுத்த ஜெனிசன் தனது முன்னுரையில் கதைகளுடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்களைக் கைவிடுவதேயில்லை என்று சொல்லியிருந்தார். அதை முழுமையாக அந்த மனிதன் நம்பினான். கடைப்பிடித்தான்.

விடிகாலை வரை அவன் கதைகளின் உலகில் சஞ்சரித்துவிட்டு முதல் வெளிச்சம் பூமியைத் தொடும் போது விழிப்புணர்வு அடைவான். நாளை சந்திப்போம் தேவதைகளே என அன்போடு விடை தருவான். ஒரு புத்தகம் திறக்கப்படுவதும் மூடப்படுவதும் எளிமையான விஷயமில்லை. பகல் துவங்கியதும் அவன் உறங்க ஆரம்பித்துவிடுவான்.

யாரோ, என்றோ, யாருக்கோ சொன்ன கதைகள் நூற்றாண்டுகள் கடந்து எங்கோ காட்டில் வாழும் அந்த மனிதனைச் சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தன.

அவனுக்குத் தெரியும் கதைகளுக்கு ஒரு போதும் வயதாவதேயில்லை.

••

0Shares
0