குறுங்கதை -46 உறவென்பது.

அவனது பெரியப்பாவின் வீடு அதே தெருவில் தானிருந்தது. ஆனால் இந்த முப்பத்தைந்து வருசத்தில் ஒருமுறை கூட அவன் பெரியப்பா வீட்டிற்குப் போனதேயில்லை

அப்பா இறந்தபிறகு அம்மாவும் பாட்டியும் தான் அவனை வளர்த்தார்கள். மிகவும் கஷ்டமான குடும்பச் சூழல். வறுமை. அப்போதும் கூடப் பெரியப்பா ஒருவேளை சோறு போட்டதேயில்லை. எப்போதாவது அவர்கள் வீட்டினைக் கடந்து போகையில் அவனைக் கண்டதும் பெரியப்பா முகத்தைத் திருப்பிக் கொண்டுவிடுவார்.

அப்பா இறக்கும் முன்பாகவே பெரியப்பாவிற்கும் அவருக்கும் சண்டை. அதுவும் பூர்வீக சொத்தைப் பெரியப்பா ஏமாற்றி வாங்கிக் கொண்டுவிட்டார் என்று அப்பா சண்டையிட்ட பிறகு பெரியப்பாவோடு உறவு முறிந்துவிட்டது.

பெரியப்பா என்றில்லை அவரது பிள்ளைகள். பெரியம்மா, அந்த வீட்டு வேலையாட்கள் கூட அவனை வெறுத்தார்கள். அவன் நிழல் கூட அந்த வீட்டுபடியில் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

பாட்டி செத்துப்போய்விட்டால் அவனும் அம்மாவும் அந்த ஊரில் பிச்சை தான் எடுக்க வேண்டும் எனப் பெரியப்பா பலமுறை பேசியிருக்கிறார்.

வெறுப்பு ஒரு மனிதனுக்குள் நிரம்பிவிட்டால் அவனது கண் பார்வை கூட விஷமாகதானிருக்கும்.

அவன் பத்தாம் வகுப்பில் பெயிலாகிப் போனான். அன்று பெரியப்பா வீட்டில் பால் பாயாசம் செய்தார்கள் என்றாள் பாட்டி.

அம்மா ஒரு முறை தெருவில் பூ வாங்கிக் கொண்டிருக்கும் போது பெரியம்மா “எவன் கூடப் போறதுக்குடீ பூ வாங்குறே“ எனக் காதுபடக் கேட்டாளாம். அம்மா அதன்பிறகு சாமிபடத்திற்குக் கூடப் பூ போடுவதில்லை.

பெரியப்பாவின் வெறுப்பிற்குப் பயந்து அம்மா வேறு ஊருக்குப் போய்விடலாம் என்ற போதெல்லாம் பாட்டி போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அவன் கண்முன்னால் நாம வாழ்ந்து காட்டணும் என்றாள்.

அந்த வைரக்கியம் தான் அவனைக் கமிஷன் கடையில் வேலைக்குச் சேர வைத்தது. சில ஆண்டுகளில் சொந்தமாகக் காண்டிராக்ட் எடுக்க வைத்தது. கிடைத்த பணத்தில் பழைய வீட்டினை இடித்து அப்பா பெயரிலே புதிய வீடு கட்ட வைத்தது. வசதி வாய்ப்புகளை உருவாக்கியது

பெரியப்பா வாதநோயால் கைகால்கள் வராமல் முடங்கிப்போனார். அவரது பிள்ளைகள் ஆளுக்கு ஒரு ஊராக வெளியேறிப் போனார்கள். எப்போதும் அந்த வீட்டுக்கதவு அடைத்தே இருந்தது.

ஒருநாள் பெரியப்பா வீட்டிலிருந்து அவரது இளையமகன் தேடிவந்திருந்தான். பெரியப்பா சதா உன்னை நினைத்துக் கண்ணீர் விடுகிறார். நடந்த தவறுகளுக்காக வருந்துகிறார். ஒருவேளை அவர் வீட்டில் சாப்பிட வர வேண்டும் என்று மன்றாடுகிறார் என்று அழைத்தான். அம்மா போகக்கூடாது என்றாள். பாட்டி அந்த வீட்டில் கை நனைக்கக் கூடாது என்று ஆத்திரப்பட்டாள். அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.

ஆனால் மாறிமாறி ஆள் வந்து அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். கோவிலில் வைத்து ஒரு நாள் பெரியம்மா கண்ணீர் விட்டு அழைத்தாள். மறுக்கவே முடியாத நிலையில் ஒருவேளை சாப்பிட்டு அவர் மீதான வெறுப்பை நீக்கிவிடலாம் என அவர்கள் வீட்டுபடியேறினான்.

அழுக்கடைந்து போன தரையில் ஒரேயொரு இலை. அதில் கொஞ்சம் காய்கறிகள். அப்பளம்.. இலை நிறையச் சாதம் போட்டு சாம்பார் போட்டாள் பெரியம்மா. சாப்பிட மனமேயில்லாமல் சாப்பிட்டான். பரிமாறும் போது ஒரு வார்த்தை பெரியம்மா பேசவில்லை. அவனே இலையை எடுத்துக் கொண்டு பின்வாசலில் போட்டுவந்தான்.

கிளம்பும் போது கட்டிலில் கிடந்த பெரியப்பாவை பார்த்தான். உருக்குலைந்த உடம்பு. அவர் கையெடுத்து கும்பிட்டார். அவனும் வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான். அம்மாவும் பாட்டியும் கோவித்துக் கொண்டார்கள். அவர்களால் பெரியப்பாவை மன்னிக்க முடியவேயில்லை.

சரி போகட்டும். எத்தனை நாளுக்கு இந்த வெறுப்பைப் வைத்துக் கொண்டேயிருப்பது என அவர்களிடம் வாதிட்டான். அவர்கள் உனக்கு ஒன்றும் தெரியாது என எரிச்சல்பட்டார்கள்.

அவன் சாப்பிட்டு திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு பாட்டி சொன்னாள்

“எவனோ ஒரு ஜோசியக்காரன் சொன்னானாம். பகையாளியை கூப்பிட்டு ஒருவேளை சோறு போட்டா உயிர் பிழைச்சிக்கிடும்னு. அதான் உன் பெரியப்பா உன்னைக் கூப்பிட்டு சோறு போட்டிருக்கான். நீயும் அதைத் தின்னுட்டு வந்துருக்கே. அது சோறு இல்லடா மலம்.“

கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. வெறுப்பு மாறவே மாறாதா.? ஒரு மனிதர் திருந்திவிட்டார் என்பது பொய்தானா. ? பெரியப்பா தனது வெறுப்பின் உச்சமாகத் தான் ஒருவேளை சோறு போட்டிருக்கிறாரா?

மூன்று நாட்களுக்கு முன்பு சாப்பிட்டதை வாந்தி எடுக்க அவன் ஒங்கரித்துக் கொண்டிருந்தான்.

பாட்டி ஆங்காரத்துடன் சொன்னாள்

“பட்டாலும் புத்தி வரலையே, இப்ப்டி முட்டாப்பயலா இருக்கியே.. உன் பெரியப்பன் செத்தாலும் அந்தப் பொணம் கூட உன்னை அவமானப்படுத்தும்டா.. உடைந்த பானையும் விலகிப்போன உறவும் ஒட்டவே ஒட்டாதுடா..“

உலகைப் புரிந்து கொள்ள முடிந்த அவனால் உறவுகளைப் புரிந்து கொள்ள முடியவேயில்லை.

••

0Shares
0