சிப்பிபாறை என்ற ஊரைக்கடந்து சென்று கொண்டிருந்தேன். உச்சிவெயில் நேரம். பாதி சிதைந்து போன சிறியமலையொன்று கண்ணில் பட்டது. காரை விட்டு இறங்கி அந்த மலையை பார்த்தபடியே இருந்தேன்.
வெயில் வடிந்து கொண்டிருந்தது. அப்படி அரித்து போன மலையை அருகில் கண்டதேயில்லை. அருகில் யாருமில்லை. தனியே நடந்து மலையின் மீதேறினேன்.
வெயில் கொதித்து கொண்டிருந்ததால் பாறையில் நடக்க முடியவில்லை. அந்த ஊர் வேட்டை நாய்களுக்கு பிரசித்திபெற்றது. வெயில் தாங்க முடியாமல் ஊரே அடங்கியிருந்தது.
ஏதோ காரணம் தெரியாத ஈர்ப்பு அந்த மலையின் மீது இருந்தது. அதிலிருந்து விலகி வரவேமுடியவில்லை. மலையை விட்டு இறங்கி சாலைக்கு வந்த போது புளியமரம் ஒன்றின் நிழலில் ஒரு வயதான பெண்ணை பார்த்தேன்.
எண்பது வயதை கடந்தது போன்ற தோற்றம். தோல் சுருங்கி காது வளைந்து போயிருந்தது. அழுக்கடைந்து போன சேலை கட்டியிருந்தாள். தலைமயிர் தூசியடைந்து போயிருந்தது. புளிய இலையொன்று உதிர்ந்து கிடப்பதை போன்றே இருந்தாள். அவளது கையில் ஒரு கோல் இருந்தது.
தொலைவில் ஆடுகள் வெயிலில் அலைந்து கொண்டிருந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்த்தபடியே இருந்தேன். ஆடுகள் சப்தமிடும் போது தலையை நிமிர்ந்து பார்ப்பாள் மற்றநேரங்களில் பெருமூச்சுடன் தொலைவை பார்த்தபடி இருந்தாள். என்ன பாதுகாப்பை அவளால் தர முடியும். ஆனாலும் அவள் கையில் ஒரு கோலிருந்தது.
இத்தனை வயதிற்கு பிறகும் அவளால் வீடு தங்க முடியவில்லை. ஆடு மேய்த்தால் மட்டுமே அவளுக்கு கஞ்சி குடிக்க கிடைக்கும் என்பது அவளது முகதோற்றத்திலே தெரிந்தது கோடையின் உச்சிநேரத்தில் அவளும் புளியமரங்களும் மட்டுமே இருந்தார்கள். நான் அருகில் சென்று கடந்த போது அவள் ஏறிட்டு பார்த்தாள்.
பிறகு சைகையால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். தண்ணீர் பாட்டிலை தந்தேன். அவள் பாட்டிலை பார்த்துவிட்டு வேண்டாம் என்று தலை குனிந்து கொண்டாள்.
தண்ணீரை பாட்டிலில் தந்தது அவளுக்கு பிடிக்கவில்லை போலும். என்னிடம் வேறு தண்ணீர் இல்லை. அவள் மலையை பார்த்து திரும்பி உட்கார்ந்து கொண்டாள். வெயிலில் என்ன பார்க்கிறாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை
வெயில் கொப்பளித்து கொண்டிருந்தது. சாலை என் முன்னே நீண்டு கிடந்தது.
கோடையின் காட்சிகள் எளிதில் கடந்து போகக்கூடியதில்லை என்பதை இந்த நாளும் நினைவூட்டியது.
**