விருதுநகரின் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்தேன். தார் உருகியோடுவது போன்ற வெயில். ஒதுங்குவதற்கு நிழல் அற்ற நகரம். அருகாமை கிராமத்தின் சாலைகள் நன்றாக போடப்பட்டிருக்கின்றன. ஆனால் நகரின் உள்ளே பழுதடைந்து போன சாலைகள் . நடமாடவே முடியவில்லை.
நான் சென்ற நாளில் 109 டிகிரி வெயில் என்றார்கள். உள்ளுர்வாசிகளுக்கு அது பழகிப்போன ஒன்று. அந்த வெயிலில் ஒரு ஆள் சாவகாசமாக நின்றபடியே சினிமா போஸ்டரில் உள்ள பெயர்களை வாசித்து கொண்டிருந்தார். காலத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கிறதோ எனும்படி உள்ளது நகரின் வளர்ச்சி.
என் சிறுவயதில் பார்த்த பழரசம் விற்கும் தள்ளுவண்டிகாரன் அப்படியே அதே இடத்தில் நிற்கிறான். அதே கிராமத்து முகங்கள். யாவர் தலைமீதும் ஊர்ந்து கொண்டிருக்கும் சூரியன்.
நான் பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கிடந்த குப்பை வெக்கையில் பற்றி எரிந்தது. வெயிலை மறந்து வெள்ளரிக்காய் விற்கும் பெண்கள் தலைமுக்காடு கூட இன்றி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். பறவைகளே தென்படவில்லை. மரங்கள் காற்றில்லாமல் ஒடுங்கி நின்றன. குடிதண்ணீரினுள் வெயில் கரைந்திருக்கிறது
வீதியெங்கும் வெயிலின் ப்ரகாசம் கண்கொள்ளமுடியாமல் இருக்கிறது. நான் இறங்கி தெருவில் நடக்கதுவங்கினேன். வீதி வழியாக மழை வழிந்து செல்வது போல வெயில் ஒடிக்கொண்டிருந்தது. வீடுகளின் படிக்கட்டில் எவருமில்லை. சிமெண்ட் சாலைகள் கொதிக்கின்றன.
வேப்பிலை காய்ந்து சருகாக பறக்கிறது. ஒரு சிறுமி குச்சிஐஸ் தின்றபடியே வீதியில் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். அருவியில் குளித்துவிட்டு வருகின்றவர்களை போல வெயிலில் வியர்ந்து வழிந்து ஆட்கள் கடந்து போகிறார்கள். பாதி நேரம் மின்சார தட்டுபாடு. இந்த வெக்கையின் ஊடாக தேர்தல் கரவொலிகள். கூச்சல்கள்.
நகரவெயில் பிசின் போல கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. கோடை இந்த நகரை முழுமையாக ஆள்கிறது. அதனால் தானோ என்னவோ ஊரின் தெய்வம் கூட வெயில் உகந்த அம்மன் தான்.
நகரில் குடை பிடித்த மனிதர்கள் ஒருவரையும் பார்க்கமுடியவில்லை. வெயில் அதிகமில்லை என்றார் ஒரு ரிக்ஷகாரர். கேட்க சந்தோஷமாக இருந்தது.
**