ஆனந்த விகடனில் சிறிது வெளிச்சம் என்ற புதிய தொடரை துவங்கியுள்ளேன். துணையெழுத்து கதாவிலாசம், தேசாந்திரி போல இந்த தொடரும் என்னை சுற்றிய நிகழ்வுகள் மனிதர்கள், அவர்களின் அறியப்படாத சிறப்பம்சங்கள் பற்றியதாக இருக்கும்.
சிறிது வெளிச்சம் என்பது குபராவின் சிறுகதை தலைப்பு. அந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. அதற்காக குபராவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
விடிகாலையில் வீட்டின் அடுப்படியில் சிறிய வெளிச்சம் ஒன்றிற்குள் பிறர் தூக்கம் கெட்டுவிடாமல் வேலை செய்யும் அம்மாவை கண்டிருக்கிறேன். பெண்களுக்கு சிறிய வெளிச்சம் போதுமானதாகயிருக்கிறது.
உண்மையில் நம்மை சுற்றி பகலிலும் கண்டு கொள்ளபடாத எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது சிறிது வெளிச்சமாவது பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆனந்த விகடன் வாசகர்கள் பொழுது போக்கினை தாண்டிய அக்கறை கொண்டவர்கள். ஆனந்த விகடன் நிறுவனம் ஜெயகாந்தன் துவங்கி சுஜாதா, ஜெயமோகன், நான் நாஞ்சில் நாடன், வண்ணதாசன், என இன்று வரை இலக்கியத்திற்கும் எளிய வாசகர்களுக்கும் இடையில் எப்போதும் பாலம் அமைத்து தந்திருக்கிறது. அவர்களின் மேலான அன்பிற்கும் ஈடுபாட்டிற்கும் மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
**