பத்து பதினைந்து வருடத்தின் முன்புள்ள பழைய கணையாழி இதழ் ஒன்றில் வெளியான ஜெயகாந்தனின் நேர்காணல் இது. வெளிப்படையான பேச்சும் திறந்த விமர்சனமும் கொண்ட இதை புதிய வாசகர்களின் கவனத்திற்காக இங்கே பதிவு செய்கிறேன்.
**
கணையாழி: சினிமா துறைக்கு வந்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.
ஜெயகாந்தன்: ஆமாம். நானாக வலியவரவில்லை. நண்பர்களோடு ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுடன் படத்தின் தரம்பற்றி விவாதம் செய்ததுண்டு. இவ்வளவு பேசறியே, நீதான் ஒரு படம் நீ சொல்ற மாதிரி எடுத்துக்காட்டு என்றார்கள். `சரி` என்று இறங்கிவிட்டேன்.
கணையாழி: உங்களுக்கு-உங்கள் கருத்துகளுக்குப் படவுலகில் வரவேற்பு இருந்ததா?
ஜெயகாந்தன்:என்னை யாரும் எதிர்க்கவில்லை. ஒரு பெரிய மனிதர் என்னை நம்பி முதல் போடவும் முன்வந்தார். ஆனால் நான் எழுதின ஸ்கிரிப்ட்டைப் பார்த்ததும் பின் வாங்கிவிட்டார்.
கணையாழி: ஏன் அப்படி?
ஜெயகாந்தன்: அவர் பயந்துவிட்டார். “சோறா திங்கிறதையும் பீடி குடிக்கிறதையும் காமிச்சுக்கிட்டிருந்தா படம் ஓடுமா?” எனக்கேட்டார்.
கணையாழி: அதையெல்லாம் ஸ்கிரிப்ட்டில் எழுதியிருதீங்களா?
ஜெயகாந்தன்: ஆமாம். தமிழ்த்திரையில் நான் சொல்லுகின்ற ஸ்கிரிப்ட் என்றால் என்னவென்று பலருக்குத் தெரியாது. அது அவசியம்னு நினைக்கும் ஒரு டைரக்டரை நான் இன்னும் பார்க்கவில்லை.
கணையாழி: அது அவ்வளவு அவசியமா?
ஜெயகாந்தன்: மிக அவசியம்னு நான் சொல்லுவேன். காட்சி காட்சியா விவரமா இந்த இடத்தில் இது வரணும், செட் எப்படி இருக்கணும், காமிரா எங்க இருக்கணும்னு முன்கூட்டியே எழுதி வெச்சிடறது “ஸ்கிரிப்ட்”. அது இல்லாம படம் எடுப்பதால்தான் எட்டு லட்சம் பத்து லட்சம்னு பணம் விரயமாகிறது.
கணையாழி: பண விரயத்திற்கு “ஸ்கிரிப்ட்” இல்லாதது மட்டுமா காரணம்? நட்சத்திர நடிகர்களுக்கே நிறையப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதே…
ஜெயகாந்தன்: ஏன் கொடுக்கணும்னு கேக்கறேன்? அவங்களா டிமாண்ட் பண்றாங்க? இவங்களாப் போயில்ல பணத்தைத் திணிக்கிறாங்க…
கணையாழி: திணிக்கிறார்களா……..?
ஜெயகாந்தன்: ஆமாம். சாதாரணமா இப்பப் படம் எடுப்பவங்களில் பல பேருக்கு குதிரைப் பந்தயத்துக்கும் சினிமாவுக்கும் வித்தியாசம் கிடையாது. எல்லாம் ஒரே “காம்ப்ளிங்”தான். அவங்களுக்கு இப்ப என்ன குதிரை நல்லா ஓடிக்கிட்டிருக்கு? சிவாஜி குதிரையா? கட்டு அதுமேல மூணு லட்சம், எட்டு லட்சம் லாபம் வந்திடலாம்னு போடறவங்கதான் அதிகம்.
கணையாழி: எல்லாரும் சூதாட்டம் என்றா சினிமாவில் இறங்குகிறார்கள்?
ஜெயகாந்தன்: ஆமா.. அவங்க வெளியே சம்பாதிச்ச பணத்தை இதில் போட்டு வியாபாரம்ன்ற முறையில படம் எடுக்கிறாங்க. அதில் ஒரு ஒழுங்கு இருக்கணும். ரொம்ப பேரு அது மாதிரி படம் எடுக்கிறதில்லை.
கணையாழி: எப்படி எடுக்கிறாங்க?
ஜெயகாந்தன்: பொதுவா சொல்றேன். உதாரணமா தம்பி வீரமணின்னு பேர் வச்சுக்குங்க. அவர்
சினிமா எடுக்கணும்னு திடீர்னு தீர்மானிச்சுக்குவார். முதல்போட அவரிடம் ஒரு நயா பைசா கிடையாது. வாயிலே பேச்சு இருக்கு. அதுபோதும். அவரா ஒரு கதைப் ப்ளாட் யோசிச்சுக்குவார். ஒரு தகப்பன், ஒரு பெண், ஒரு பணக்காரன், அவன் முதலாளி, ஒரு பிள்ளை, ஒரு வில்லன், இப்படி கேரக்டர்கள்…. கதாநயாகன் குதிரை மேலேவரான்… பெண் கிணத்தண்டை பாடுது. காதல் சீன்… அப்புறம் குழந்தை ஒண்ணு வரும். அது ரயில்லே ஆப்டுக்கப் பாக்கும். வில்லன் வருவான், ஹீரோ வருவான்…. சண்டை சீன். வெள்ளம் வர சீன்…. இப்படிக் கதம்பமா ஒரு கதை யோசிச்சுக்குவார். அப்புறம் நேரே அண்ணன் கிட்டப் போவார்.
கணையாழி: அது யார் “அண்ணன்”?
ஜெயகாந்தன்: முன்னணி நடிகர் எல்லாரும் அவருக்கு அண்ணன்தான். அவங்க யாராவது ஒருத்தரிடம் போய் கதையை காது மூக்கு வச்சுச் சொல்லி, இம்ப்ரஸ் பண்ணிடுவார். நடிகரும் நமக்கு இந்த ரோல் கிடைச்சா இப்படிப் பேசி, அப்படி நடிச்சுப் பேர் வாங்கிடலாம்னு யோசிப்பார். `சரி தம்பி, நம்ம பேரைப் போட்டுக்கோ பார்க்கலாம்` அப்படின்னு வாக்குத் தருவார். அடுத்த நாள் பத்திரிகையெல்லாம் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் வந்திடும். சினிமா வேந்தன் நடிக்கும் `சிங்காரப்பூங்கா`ன்னு..
கணையாழி: இப்படி எடுக்கிற படம் வெற்றியாகுமா?
ஜெயகாந்தன்: காம்ப்ளிங்க்தானே.. சில சமயம் பெரிய வெற்றியாக்கூட கிடைக்கும். பாட்டுக்காரர், காமிராக்காரர் சாமர்த்தியத்திலே படம் ஓடலாம். வீரமணிக்கு அப்புறம் தலை நிக்காது. மறுபடியும் இதே மாதிரி பணத்தையும் போட்டு இதே மாதிரி இன்னொரு படம் எடுக்க முனைவார்.
கணையாழி: படம் தோல்வியானால்…?
ஜெயகாந்தன்: கிளாஸ் படம்னு சொல்லிடுவார். தனது எதிரிகள் எல்லாம் சூழ்ச்சி செஞ்சிட்டாங்கன்னு அறிக்கை விடுவார். பத்திரிகைக்காரங்க கிட்டே அழுவார். இத்தனை மாசமா ஸ்டார்ஸங்க மத்தியிலே சில்க் சட்டை, சரிகை வேட்டி, பியட் கார் வெச்சிக்கிட்டுத் தர்பார் நடத்தினாரே அதுவரைக்கும் லாபம்னு உள்ளூர நெனைச்சுக்குவாரோ என்னமோ?
கணையாழி: உங்கள் படத்துக்கு 80000 ரூபாய்தான் செலவாயிற்று என்று கேள்விப்பட்டோம்.
ஜெயகாந்தன்: ஆமா சிக்கனமா எடுத்தேன். நான் பெரிய பெரிய ஸ்டாருங்களைத் தேடிப்போகலை. டிராமாவிலே நடிச்சுக்கிட்டு இருந்தவங்களை இழுத்துப்போட்டேன். பையனா நடிக்கிறானே, உதயன், அவன் ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்தான். “ஒரு மாசம் லீவு போடுடா, அப்புறம் ட்யூசன் வெச்சுப் படிச்சுக்கலாம்னு கூட்டி வந்தேன். ராப்பகலா உழைச்சு 27 நாளுல முடிச்சோம்”
கணையாழி: நடிகர் நடிகைகள் எல்லாம் நன்றாக ஒத்துழைத்திருப்பார்கள்.
ஜெயகாந்தன்: சந்தேகமில்லாமல். நானும் வேலைன்னு வரும்போது கண்டிப்புத்தான். பையனுக்குக்கூட குறை. சிவாஜி பேசும்போது ஒரு புருவத்தைத் தூக்கி இறக்கிப் பேசுவாரே. அதுமாதிரி நான் பேசினா விடமாட்டேங்கிறாரேன்னு. “பூரா படத்திலேயும் ஒரே பழைய புடைவையைக் கட்ட வெச்சிட்டு எடுத்துட்டாரேன்னு” ஹீரோயினுக்குக் குறை. இதெல்லாம் படம் வந்தவுடனே சரியாய்ப் போச்சு.
கணையாழி: இப்போ படத்தின் பெருமையில் அவங்களுக்கும் பங்கு உண்டல்லாவா?
ஜெயகாந்தன்: பூராப் பங்கும் அவங்களுக்குத்தான். படத்தைப் பாத்தவங்க அவங்க நடிப்பை நல்லா பாராட்டுறாங்க.
கணையாழி: வசூல் விஷயத்தில் எப்படி?
ஜெயகாந்தன்: அதை எதிர்பார்த்து நான் படம் எடுக்கவில்லை. இது மாதிரியான படம் ஓடுவது கொஞ்சம் கஷ்டம்னு தெரிஞ்சுதான் எடுத்தேன். அதனாலே ரிலீஸ் பண்றதுக்கு முன்னாலே ஊர் ஊரா ரஸிக்கக்கூடியவங்களுக்கு மட்டும் போட்டுக் காண்பிச்சேன். இப்ப வியாபார ரீதியிலே கூட ரிலீஸ் பண்ணலாம்கிற நம்பிக்கையை ஜனங்கள் குடுத்திருக்காங்க…. என்ன இருந்தாலும் இது மற்றத் தமிழ்ப்படங்கள் மாதிரி ஓடமுடியாது.
கணையாழி: சினிமா பொழுது போக்குக்காகத்தான் இருக்கிறது என்று ஒரு சாரார் சொல்கிறார்களே.
ஜெயகாந்தன்: எப்படிப்பட்ட பொழுதுபோக்கு? அதன் மூலம் ஒரு ஆத்ம வளர்ச்சி ஏற்பட்டால் என்ன கஷ்டம்? அது அபின் மாதிரி மயங்கிடக்கூடாது இல்லையா?
கணையாழி: பாட்டு, நடனம் இருக்கக்கூடாதா?
ஜெயகாந்தன்: இருக்கலாம். அதன்பேராலே அபத்தங்கள் இருக்கக்கூடாது. ஆனா எனக்கு அவை தேவையில்லை. நான் யதார்த்தமா இருக்கணும்னு விரும்பறவன்.
கணையாழி: மேலும் இதுபோல சினிமா எடுக்க உத்தேசம் உண்டா?
ஜெயகாந்தன்: கண்டிப்பாய்.
**