அமெரிக்க எழுத்தாளரான ஜாக் லண்டனின் (Jack London) ஒயிட் பேங்க் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட ஹாலிவுட் படத்தை நேற்றுப் பார்த்தேன்
ஜாக் லண்டனின் கானகத்தின் குரல் (The Call of the Wild) என்ற நாவல் மிகவும் பிரபலமானது, அந்த நாவலின் தொடர்ச்சியைப் போல அமைந்துள்ளது ஒயிட் பேங்
கானகத்தின் குரல் நாவலில் பழக்கபடுத்தப்பட்ட நாயின் உள்ளே மறைந்திருக்கும் உக்கிரமான மனநிலையை, இயல்பான மூர்க்கத்திற்குத் திரும்ப முற்படும் ஆசையை எழுதிய ஜாக் லண்டன், அதற்கு நேர்எதிரான தளத்தில் பழக்கபடுத்தபடுவதன் வழியே ஒநாய் கூட மனிதனை நேசிப்பதாக மாறிவிடும் என்பதை ஒயிட்பேங்கில் (White Fang ) வெளிப்படுத்துகிறார்
பனிப்பிரதேசம் தான் அவர் கதைகளின் பொதுக்களம், பனியை அவர் வெள்ளை நிசப்தம் என்றே சொல்கிறார்
பனிப்பிரதேசத்தில் இயற்கை தண்ணீரைக்கூட ஒட அனுமதிக்காமல் உறைய வைத்து பனியாக்கி விடுகிறது, அவ்வளவு வலிமையான இயற்கையை எதிர்த்து உக்கிரத்துடன் மனிதன் பயணம் மேற்கொள்ளும் போது அவனுக்கும் இயற்கையுமான சமர் துவங்கிவிடுகிறது, அந்த அரூபயுத்தத்தின் ஒரு பகுதியே ஒநாய்களும் கரடிகளும், அவை பனியின் தனிமைவெளியைக் கலைக்கும் மனிதனை துரத்தமுற்படுகின்றன, சாவு என்பதும் பனியைப் போல மனிதனை உறையச்செய்யும் வேலையே, இயற்கையே மனிதனை உருமாற்றுகிறது, அவன் தனது விருப்பங்களை இயற்கை அனுமதிக்காமல் முன்னெடுத்துப் போகவே முடியாது, இதைத்தான் ஜாக் லண்டன் படைப்புகள் வலியுறுத்திச் சொல்கின்றன
ஒநாய் ஒன்றுக்கும் மனிதனுக்குமான அன்பைப் பற்றிய கதையே ஒயிட் பேங்,
அலாஸ்காவின் பனிப்பிரதேசத்தினுள் பிரவேசித்து, நாய்களின் இழுவை வண்டியில் பயணம் செய்து, கடுங்குளிரில் பசியோடு நடுநடுங்கி, ஒநாய்களின் ஊளைச்சப்தம் கேட்டு மிரண்டபடி, நெருப்பில் குளிர்காய்ந்துவந்தது போல, இன்னொரு உலகிற்குள் சில மணிநேரம் வாழ்ந்து வந்த அனுபவம் தரும் படமிது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள அலாஸ்காவில் தங்கத்துகள்கள் கிடைக்கிறது என்று உலகின் பலபகுதிகளில் இருந்து மக்கள் சென்றார்கள்.
அலாஸ்காவின் யூக்கான் பிரதேசத்தின் தட்பவெப்பநிலை மிகவும் மோசமானது. ஆண்டில் ஏழு மாதங்கள் கடுங்குளிர் நிலவும் பிரதேசமது . கடுமையான பனிபொழிவு இருக்கும்
தங்கம் தேடிச் செல்பவர்கள் பனிப்பிரதேசத்தினுள் செல்வதற்கு வசதியாக நாய்களால் இழுத்து செல்லும் சறுக்கு வண்டிகளுக்கு பயங்கர கிராக்கி உருவானது, மேலும் தங்கதுகள்களை சலிக்கும் சல்லடைகள், சுரங்கம் தோண்டுவதற்கான வெடிமருந்துகள், அடிப்படைக் கருவிகள் என பெரிய சுமைகளை தூக்கிக் கொண்டு தங்கவேட்டைகாரர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்
தங்கம் தேடிச் செல்பவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவாக யூக்கான் பகுதியில் ஆங்காங்கே கூடாரம் அமைத்துத் தங்கிக் கொண்டார்கள், மனவலிமையும் துணிச்சலும் தான் அவர்களின் துணை
பனிமலையின் மேலுள்ள சிறிய நகரங்களில் இவர்களுக்கான அங்காடிகள், மதுவிடுதிகள் இருந்தன, அங்கே நாய்களுக்குள் சண்டையிடும் போட்டி சூதாட்டம் போல நடந்து கொண்டிருந்தது, இதற்காக நாய்களைப் பழக்கியதுடன், சண்டையிடும் நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கவும் போட்டியிருந்தது
தங்கம் தேடிச்சென்றவர்களில் பலர் பனியில் மாட்டிக் கொண்டு இறந்து போனார்கள், சிலர் கொள்ளையர்களால் வழியில் கொல்லப்பட்டார்கள், ஆனாலும் அலாஸ்காவில் கப்பல் கப்பலாக தங்கம் தேடுபவர்கள் வந்து இறங்கிக் கொண்டேயிருந்தார்கள்
அப்படி தங்கம் தேடி அலைந்தவர் தான் ஜாக் லண்டன், தனது 21 வயதில் தங்கை கணவரோடு இணைந்து கொண்டு தங்கவேட்டைக்குக் கிளம்பினார், கடுமையான போராட்டத்தின் பின்பும் தங்கம் கிடைக்கவேயில்லை, சொற்பத் தங்க துகள்களுடன் வீடு திரும்பிய ஜாக் எழுதிப் பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்தார்
அவரது சாகசப்பயண அனுபவங்களை முதன்மைபடுத்தி எழுதிய கதைகள் பிரபலமாகின, தனித்த இலக்கிய வகையாகவே அவை உருக் கொண்டன, தினமும் ஒரு கதை எழுதக்கூடியவர் ஜாக் லண்டன், ஆகவே தனது அனுபவங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.
நாய்களின் அன்பைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட இலக்கியப்பிரதிகளில் முதன்மையானது ஜாக் லண்டனின் படைப்புகளே, நாய்களும் ஒநாய்களுமே அவரது முக்கியக் கதாபாத்திரங்கள்
பனிப்பிரதேசத்தில் ஒரு இறந்த மனிதனின் உடலைத் தூக்கிக் கொண்டு நாட்கணக்கில் பயணம் செய்த விசித்திர அனுபவத்தை எழுதிச் செல்லும் ஜாக்லண்டன், பசியோடு தன்னை தாக்கிய ஒநாயோடு ஏற்பட்ட உயிர் போராட்டத்தையும் விளக்கி எழுதியிருக்கிறார்.
தபால் வண்டிகளை இழுத்துப்போகவும், தங்கம் தேடிச் செல்பவர்களின் சுமைகளை கொண்டு செல்லவும் ஏராளமான நாய்கள் தேவைப்பட்டன. அதனால் நாய் வணிகம் பரபரப்பாக நடைபெற்றது.
படத்தின் துவக்கத்தில் ஜாக் அலாஸ்காவின் யூக்கான் பகுதிக்குத் தங்கம் தேடி வந்து சேர்கிறார், அவரது அப்பாவின் நண்பர்களைத் தேடிக்கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து தங்கவேட்டைக்கு செல்வதற்கு எடுக்கும் முயற்சிகள் தான் படத்தின் பிரதான சம்பவங்கள்.
நாய்க்கும் ஒநாய்க்கும் பிறந்த ஒயிட் பேங் படத்தின் முக்கியக் கதாபாத்திரம், அது குட்டியாகப் பசியில் பனிப்பிரதேசத்தில் உணவு தேடி அலையத் துவங்கியதில் இருந்து வளர்ந்து சண்டை நாயாக உருமாறுகிறது , ஒரு சந்தர்ப்பத்தில் ஜாக்கை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றி அவனது உயிர்த்துணையாக மாறுகிறது, அவர்கள் இருவருக்குமான ஆழ்ந்த அன்பையே படம் விவரிக்கிறது
படத்தின் துவக்கத்தில் ஒநாய்கள் மனிதர்களை வேட்டையாடக் காத்திருக்கின்றன, தனது துப்பாக்கியால் ஒநாய்களை வென்றுவிடலாம் என்று தங்கவேட்டைகாரர்கள் முயற்சிக்கிறார்கள், நெருப்பை வைத்து ஒநாய்களை விரட்டி அடிக்கிறார்கள், ஒநாய்கள் போய்விட்டன என்று நிம்மதியாக உறங்குகிறார்கள், அவர்கள் விழித்தெழும் போது ஒநாய்கள் அவர்கள் முன் காத்திருக்கின்றன, அவை உறங்குவதேயில்லை, சந்தர்பத்திற்காக காத்துக் கொண்டேயிருக்கின்றன, ஒநாய்களிடம் சிக்கி கொண்டவர்களை மற்ற குழுவினர் வந்து மீட்கிறார்கள்,
ஒரு ஒநாய் மரத்தின் பின்னால் ஒளிந்தபடியே தங்கவேட்டைகாரர்களை முறைத்து பார்த்தபடியே நிற்கிறது, அதன் கண்களில் வன்மமும் பெருங்கோபமும் ஒளிர்கிறது, இப்படி இயற்கையோடு போராடியபடி தான் ஒவ்வொரு அடியும் முன்னெடுத்து வைக்கமுடிந்தது என ஜாக் விவரிக்கிறார்
நமக்கு தொடர்பில்லாத ஒரு உலகினை நாம் கைப்பற்ற முயன்றால் இயற்கை எளிதாக அனுமதித்துவிடாது, அது ஒரு உயிர் போராட்டமாகவே அமைந்துவிடும், இந்த எண்ணம் தான் ஒயிட் பாங்கின் உள்ளேயும் கேட்கிறது
பனிப்பிரதேசம் என்பது கருணையற்ற இயற்கையின் உறைநிலை, அங்கே மனிதன் துன்புறுத்தபடவே செய்வான், அவனை இயற்கை வாட்டி எடுத்துப் பின்பு தான் கடந்து செல்ல அனுமதிக்கும், வலியதே வாழும் என்ற டார்வினின் கோட்பாடு தான் பனிப்பிரதேசத்தின் ஒரே விதி, அதனால் தான் நாவலின் துவக்கத்திலே ஒயிட்பாங்கின் அப்பாவான ஒற்றைகண் ஒநாய் பசியில் எதையாவது வேட்டையாட அலைகிறது,
நாயின் பாய்ச்சலை போலவே ஜாக் லண்டன் மொழியை வேகமாக்கி எழுதிப்போகிறார், ஒருவகையில் இவரது எழுத்து ஹெமிங்வேயின் மொழியைப் போன்றது, எளிய சொற்கள், துடிப்புமிக்க சிறிய வரிகள், உணர்ச்சிகளை பிரதானமாக்கிச் சொல்லும் கதைமுறை, எழுத்தாளனின் உருவம் மறைந்து போய் கதை தானே எழுதிப்போவது போன்ற பிரம்மையை உருவாக்கும் கலைப்பாங்கு இது தான் ஜாக் லண்டனின் பாணி.
ஒரு கூண்டிற்குள் இரும்பு சங்கிலியால் கட்டிப்போடப்பட்டு சண்டைநாயாக வளரும் ஒயிட்பாங்கின் முன்பாக அதன் உரிமையாளன் ஒரு இரவு வந்து நிற்கிறான், அவன் குடித்திருக்கிறான், கையில் ஒரு இறைச்சியோடு உள்ள எலும்புத் துண்டிருக்கிறது, அதை போட்டியில் வெற்றி பெற்றதற்கு பரிசாக ஒயிட்பாங்கிற்கு அளிக்க விரும்புகிறான்
எலும்புத்துண்டை பார்த்த ஒயிட்பாங்கின் வாயில் எச்சில் வடிக்கிறது, அவன் ஒநாயின் கண்களில் உள்ள பசியை அறிந்து கொள்கிறான், கூண்டிற்கு வெளியே நாய் எட்டி எடுக்கமுடியாதபடி எலும்புதுண்டை போட்டுவிட்டு சொல்கிறான்
நீ என்னை வெறுக்க வேண்டும், அப்போது தான் உக்கிரமாக சண்டையிடுவாய், இந்த எலும்புத்துண்டை பார்த்துக் கொண்டேயிரு, அப்போது தான் அது கிடைக்க நீ ஆவேசத்துடன் சண்டையிடுவாய்.
அந்த காட்சியில் தன்முன்னே உள்ள எலும்புத்துண்டை நிராசையோடு பார்க்கிறது ஒயிட்பாங், அதன் கண்களில் வன்மமும் ஏக்கமும் ஒன்று கலந்திருக்கிறது, மனிதர்கள் தங்களது சுயநலத்திற்காக எவ்வளவு தூரம் செயல்படுவார்கள் என்பதற்கு அந்தக் காட்சி ஒரு சாட்சி போலிருக்கிறது, அதே நேரம் சண்டையிடுவதற்கு அடிநாதமாக வெறுப்பு வேண்டும், இல்லாவிட்டால் வெறியோடு சண்டையிட முடியாது என்ற அனுபவமும் சேர்ந்திருக்கிறது
கட்டிப்போடப்பட்டு அடித்தே வளர்க்கபடும் ஒயிட்பேங்கினைத் தொட்டுத் தடவ முற்படும் ஜாக் அதன் தலையைத் தயங்கித் தயங்கி தொடுகிறான், அது கைகளை எச்சில் பண்ணுகிறது, அவன் பரிவோடு தலையைத் தடவிக் கொடுத்தபடியே சொல்கிறான்
ஒயிட் பாங் நேசிப்பதை விரும்புகிறது, அன்பு செலுத்த மறுப்பவர்களை தான் கடிக்கிறது, நாயை கட்டிப்போடுவதற்கு சங்கிலி தேவையில்லை, அன்பு போதுமானது என்று அதன் வாயில் தன் கையை நுழைக்கிறான், வெறிகொண்டதாக அறியப்படும் ஒயிட்பாங் அவனைக் கடிப்பதேயில்லை, ஒரு சிறுவனைப் போல அவனோடு சேர்ந்து விளையாடுகிறது, அவனது அன்பிற்காக ஏங்குகிறது
பழக்கபடுத்த பட்ட ஒநாயை போல தான் மனித மனம் எப்போதும் நடந்து கொள்கிறது, அதைத் தான் தனது கதையில் எழுதியிருக்கிறேன் என்கிறார் ஜாக் லண்டன்,
இன்னொரு காட்சியில் மிருகவேட்டைக்காக மாட்டி வைக்கபட்ட சுருக்கு கயிறில் ஒயிட் பேங் மாட்டிக் கொள்கிறது, அதை பூர்வகுடி இந்தியர்கள் பிடித்து தங்கள் வசமாக்கி பழக்குகிறார்கள், ஒழுங்குபடுத்தபட்ட வாழ்க்கை என்பது அது போன்ற ஒரு சுருக்குகயிறு தான், அதன் வழியே தான் மனிதமனம் தன்னை உருவாக்கி கொள்கிறது, அதை ஒயிட்பேங் வாசிப்பவர்களால் நன்றாகவே உணர முடிகிறது என்கிறார் விமர்சகர் ஏர்ல் வில்காக்ஸ்
The aim of life was meat. Life itself was meat. Life lived on life. There were the eaters and the eaten. The law was: EAT OR BE EATEN. He did not formulate the law in clear, set terms and moralize about it. He did not even think the law; he merely lived the law without thinking about it at all
இந்த வரிகள் தான் ஜாக் லண்டனின் ஆதார எண்ணங்கள்
களிமண்ணைப் போல இயற்கை தன்னை உருமாற்றும் வடிவங்களுக்கு எல்லாம் மனிதன் ஒப்புக்கொடுத்துவிடுகிறான், அந்த நெகிழ்வுத்தன்மை தான் மனிதனை பூமியில் இவ்வளவு ஆண்டுகாலம் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ஒருவேளை இயற்கையோடு ஒன்றிணைந்து போக மறுத்திருந்தால் டினோசர் போல மனிதனும் அழிந்து போயிருப்பான், ஆகவே மனிதனை இயற்கை பலஆயிரம் ஆண்டுகளாக உருமாற்றிக் கொண்டே வருகிறது, அது ஒரு நீண்ட பயணம், அதன் ஒரு பகுதியே இன்றைய வாழ்க்கை,
போராட்டம் தான் வாழ்வின் ஆதாரசக்தி, அதுவே மனிதனை மேம்படுத்துகிறது, சந்தர்ப்பம் என்பது உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டியது, காத்திருப்பதன் வழியே அது பலநேரம் கிடைக்காமலும் போய்விடும், ஆகவே துணிச்சலும் போராட்டகுணமும் மிக்க மனிதனே வாழ்வில் வெற்றிகாணுகிறான், இந்த கருத்துகளை ஜாக் லண்டன் தனது படைப்புகளில் ஆழமாக வலியுறுத்துகிறார்
ஜாக் லண்டன் காட்டும் இயற்கை ஒரு போராட்டகளம், அங்கே மனிதர்கள் ஒயாத போர் செய்கிறார்கள், வெற்றி பெற்று வீடு திரும்புகின்றவர்கள் அதில் சிறிய பகுதி, மற்றவர்களை இயற்கை வென்றுவிடுகிறது, முடிவில்லாத இந்த யுத்தமே வாழ்வின் கதி, மனிதமீட்சிக்கான ஒரே வழி அன்பு செலுத்துதல் மட்டுமே.
Human kindness was like a sun shining upon him, and he flourished like a flower planted in good soil
என்ற ஜாக் லண்டனின் கவித்துவமான வரிகள் அவரது எல்லா படைப்புகளுக்கும் பொருந்தக்கூடியதே
தனது நாயை மீட்க ஒநாயோடு சண்டையிடும் செத்துப்போகும் ஒருவன், தான் வாழ்நாள் முழுவதும் வெறுத்துக் கொண்டிருந்த ஒருவன் இறந்து போன பிறகு அவனுக்குச் செய்து தந்த வாக்குறுதியை காப்பாற்ற இறந்த உடலை ஒரு சவப்பெட்டியில் வைத்து பனியில் அலைந்து கொண்டிருக்கும் மற்றொருவன், தங்கம் தேடி வருபவர்களை ஏமாற்றி பிழைக்கும் போக்கிரிகள், நாய்சண்டைகளில் பணம் சம்பாதிக்கும் கனவான், ஒற்றைக்கண் கொண்ட ஒநாய், பூர்வகுடி இந்தியர்கள் என்று நாம் அறியாத விசித்திரமான உலகமாக விரிகிறது திரைப்படம்,
படத்தின் மைய உணர்வு பனிப்பிரதேசத்தின் தனிமையும் பிரம்மாண்டமுமே, அது திறந்த வாய் கொண்ட ஒரு மிருகத்தைப் போலவே இருக்கிறது, யார் எப்போது இறந்து போவார்கள் என்று தெரியாத பதைபதைப்பும் பயமுமாகவே தங்கம் தேடி அலைகிறார்கள், பனி முணுமுணுக்கிறது, பனி ஒலமிடுகிறது, பனி உற்றுக் நோக்கிக் கொண்டிருக்கிறது, மனிதனின் பேராசை அவனை எந்த அளவு வீழ்ச்சியடைய செய்யும் என்பதை இயற்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போலவே காட்சிகள் கடந்து போகின்றன
படத்தின் இறுதியில் ஜாக் ஒநாயை காட்டிற்குள் தனித்து வாழும்படியாக அனுப்ப முயற்சிக்கிறான், அது விலகிப் போக மறுக்கிறது, அப்போது அவன் உடனிருந்த நண்பன் சொல்கிறான்
ஜாக், இந்த ஒநாய் உன்னையும் ஒரு ஒநாய் என்றே கருதுகிறது, ஆகவே அது எளிதில் உன்னை விட்டுப் போய்விடாது, அதன் அன்பு நம்மால் புரிந்து கொள்ள முடியாதது என்கிறான், அது தான் படத்தின் ஆதாரப்புள்ளி.
ஒநாய்களைப் பற்றிய மனிதர்களின் மனதில் இருந்த பயத்தை அகற்றி அதை அன்பின் வடிவம் போல மாற்றியிருப்பது தான் ஜாக் லண்டன் எழுத்தின் வலிமை, 1906ம் ஆண்டு இந்த நாவல் வெளியானது, நாவலின் பெரும்பகுதிக் காட்சிகள் அதே வசனங்களுடன் அப்படியே படமாக்கப்பட்டிருக்கின்றன. Ethan Hawke ஜாக்காக சிறப்பாக நடித்திருக்கிறார், ஒரு நாயைப் பழக்கி இவ்வளவு சிறப்பாக நடிக்க வைக்கமுடியுமா என்பதற்குச் சான்றாக உள்ளது ஒயிட் பேங்காக நடித்துள்ள நாயின் வெளிப்பாடு,
ஜாக் லண்டனின் பல சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, உயிராசை என்ற அவரது சிறுகதை குறிப்பிடத்தக்கது. The Call of the Wild என்ற அவரது நாவல் கானகத்தின் குரல் என்று தமிழில் வெளியாகி உள்ளது
நாய்களை முதன்மைபடுத்தி ஜாக் எழுதிய கதைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் உருவாகின, அது குறித்து ஜாக் லண்டன் விரிவாக பதில் கட்டுரை எழுதியிருக்கிறார், மிகவும் முக்கியமான கட்டுரையிது
The Other Animals
https://london.sonoma.edu/Writings/Revolution/animals.html
40 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்த ஜாக் லண்டன் கலிபோர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்லான்டில் பிறந்தவர்.
ஹாரிபோட்டரிலும், ஏலியன்ஸ் உலகிலும் மிகையான சாகசத்தை தேடிக்கொண்டிருக்கும் இளையோர் உலகம், இதே சாகசத்தை மனிதர்கள் வாழ்க்கைப் போராட்டமாக தேடிச் சென்று எப்படி அனுபவித்திருக்கிறார்கள் என்ற ஜாக் லண்டனின் புனைகதைகளை அவசியம் வாசிக்க வேண்டும்,
அந்தக் கதைகள் வெறும் சாகசத்தை மட்டும் சொல்லவில்லை, வாழ்வின் ஆதாரமான போராட்டகுணத்தையும் அதன் வழியே கிடைத்த அனுபவ உண்மைகளையும் முன்வைக்கின்றன, அவ்வகையில் ஜாக் லண்டனின் கதைகளை இன்றைக்கும் மிக நெருக்கமாகவே உணர்கிறேன்
••