ஷரீபின் வரிகள்

கர்நாடகத்தில் வாழ்ந்த ஞானியான ஷரீஃப் பற்றி பாவண்ணன் மிகச்சிறப்பான ஒரு கட்டுரையை திண்ணை இணைய இதழில் எழுதியிருக்கிறார், நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மகத்தான ஞானி ஷரீஃப்.

கர்நாடகாவின் சிறுநகரம் ஒன்றில் தான் ஷரீஃப்பின் பாடல்களைக் கேட்ட அனுபவத்தை அற்புதமாக விவரித்திருக்கிறார், அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பாடலிது,

இதை வாசித்த நேரத்தில் இருந்து குரங்கைக் கோழி விழுங்கியதே என்ற வரிகள் மனதில் ஒலித்தபடியே இருக்கின்றன,

சாத்தியமற்ற ஒன்றைச் சொல்வதன் வழியே மின்னல்வெட்டென ஒரு அகதரிசனத்தை உருவாக்குகிறது இப்பாடல், ஷரீபின் வரிகள் கபீரின் ஞானப்பாடல்களை போன்றே இருக்கின்றன,

எளிமையும் குழந்தைமனமும் ஆழ்ந்த ஞானமும் கொண்ட இப் பாடலை தமிழாக்கம் செய்தமைக்கு பாவண்ணனுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்

••

குரங்கைக் கோழி விழுங்கியதே

பாரம்மா தங்கையே

குரங்கைக் கோழி விழுங்கியதே

ஆடு யானையை விழுங்கியதே

சுவர் சுண்ணாம்பை விழுங்கியதே

ஆட வந்த நாட்டியக்காரியை மத்தளம் விழுங்கியதே

உரல் உலக்கையை விழுங்கியதே

எந்திரம் அச்சை விழுங்கியதே

அரைக்கவந்த கிழவியை அரிசி விழுங்கியதே

கயிறு தறியை விழுங்கியதே

தறியை இழைகள் விழுங்கியதே

தறியில் நீளும் இழைகளை

நூல்கண்டு விழுங்கியதே

எருதை நுகத்தடி விழுங்கியதே

தானியம் தொம்பையை விழுங்கியதே

குன்று குகையை விழுங்கியதே

குகையை எறும்பு விழுங்கியதே

கோவிந்த குருவின் பாதம் என்னையே விழுங்கியதே –தங்கையே

குரங்கைக் கோழி விழுங்கியதே

**

நன்றி :  திண்ணை

0Shares
0