நண்பர்கள், வாசகர்கள், அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த ஆண்டு உங்களுக்கு பெரிய வெற்றிகளையும் நல்ல ஆரோக்கியத்தையும், மேன்மையான எண்ணங்களையும், சந்தோஷமான உறவுகளையும் தருவதற்கு வாழ்த்துகிறேன்.
**
புது வருசத்தை கவிதையோடு துவங்குவோம்
ஒரம்போகியாரின் ஐங்குறுநூற்று கவிதையிது
புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை
மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள் இவள்
பாணர் நரம்பினும் இன் கிளவியளே.
நீராடும் பெண்கள் குளிப்பதற்கு முன்பாக தன்னுடைய அணிகலன்களை கழட்டிக் கரையில் உள்ள மணலில் புதைத்து வைப்பார்கள். காற்று வீசுவதால் அந்த இடத்தில் மணல் மேடுகள் உருவாகிவிடும், அலைந்து கொண்டிருக்கும் எருமைகள் தன் கொம்பால் மணலைக் கிண்டி உள்ளே மறைந்திருக்கும் நகைகளை வெளிப்படுத்தும். அத்தகைய வளமான ஊர் தலைவனின் மகள் இவள். அவளுடைய சொற்கள் பாணனின் யாழிசையை விட இனிமையானது
இக்கவிதையின் ஊடே மின்னல் வெட்டு போல ஒரு அழகான காட்சி தோன்றி மறைகிறது
எருமை தன் கொம்பால் கிளறி மணலில் ஒளித்து வைத்த நகை வெளிப்படுவது என்ற தருணம் கவிதையைப் புரட்டிப்போடுகிறது
குளிக்கச் செல்லும் பெண்கள் விளையாட்டுசிறுமிகளைப் போல மணலில் அணிகலன்களை ஒளித்து வைக்கிறார்கள், அது என்ன அணிகலன், ஏன் அப்படி ஒளிக்கிறார்கள், அது அவர்களின் விளையாட்டு மனதின் வெளிப்பாடு தானா
இப்பாடலின் ஊடாக குழந்தைதனமும் இனிமையான குரலும் கொண்டவளாக என் தலைவி இருக்கிறாள், அதை ஏன் நீ புரிந்து கொள்ளவேயில்லை என்ற தோழியின் ஆதங்கக் குரல் ஒலிக்கிறது,
நேசம் புறக்கணிக்கப்பட்ட பெண்களின் தவிப்பை, காத்திருத்தலை, பொதுமகளிரைத் தேடி சென்ற ஆண்களைப் பற்றிய ஆதங்கத்தை ஐங்குறுநூறு முழுவதும் காணமுடிகிறது.
புறக்கணிக்கப்பட்ட அன்பு காட்டுநெருப்பைப் போல பரவி மரம்செடிகொடிகள், நீர்நிலைகள், நாரைகள், கொக்குகள், மலர்கள், காற்று, நிலவு, எருமைகள், நண்டு, ஆமை என்று நீண்டு நீண்டு உலகம் யாவையும் பற்றிக் கொண்டுவிடுகிறது.
காதலின் தவிப்பை, காத்திருப்பின் வலியை அடையாளப்படுத்தும் காதல்பாடல்களுக்காக ஐங்குறுநூறைத் தேனைச்சுவைப்பதை போல துளித்துளியாக அனுபவித்து வாசிக்க வேண்டும்
••