தஸ்தாயெவ்ஸ்கியோடு அலைந்த நாட்கள்.

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியை (Fyodor Dostoyevsky)பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பாக நண்பர் சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில்  எழுதியிருந்ததை வாசித்தேன். டெல்லியின் குளிர்நிரம்பிய சாலையில் கையில் வோட்காவுடன் அவர் தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடியதை வாசித்த போது  தஸ்தாயெவ்ஸ்கி குறித்த எனது நினைவுகளும் பீறிடத்துவங்கின.  சாரு இப்போது தஸ்தாயெவ்ஸ்கியின் மீதான மயக்கத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். என்னால் அப்படி வரமுடியவில்லை. நான் இன்றைக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் தீராத ரசிகனே.



என் இருபத்தைந்து வயதில் எனக்கிருந்த ஒரே தோழன் தஸ்தாயெவ்ஸ்கி மட்டுமே.   அந்தரங்கமான வலிகளை, சந்தோஷத்தை, உலகின் மீதான கேள்விகளை அவனோடு மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்தது. தஸ்தாயெவ்ஸ்கி எப்போதுமே இளைஞர்களோடு பேசகூடியவன். நெருக்கமான தோழமை தரக்கூடியவன். இவனைப்போல இளைஞர்களை ஆறுதல் படுத்தும் எழுத்தாளர்கள் வெகு குறைவே.


டால்ஸ்டாயின் எழுத்து பாசமிக்க  தாத்தாவின் கரங்களைப் போன்று நெருக்கமும் வலிமையும் கொண்டது. அந்தக் கரங்கள் மண்ணோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவை. உலகின் மீது அதீத நம்பிக்கை கொண்டவை. அவரைக் கட்டிக் கொள்ளவும், அவரது அனுபவங்களை கற்று கொள்ளவும் முடியும். ஆனால் டால்ஸ்டாயை தோளில் கைபோடும் நண்பனாக ஒரு போதும் என்னால் கொள்ள இயலவில்லை.


இதற்கு நேர்மாறாக தஸ்தாயெவ்ஸ்கியிருந்தார். அவரது கதைகளைப் படிக்க துவங்கியதும் அவர் உரிமையுடன் தோளில் கைபோட்டுக் கொண்டு அக்கறையோடும். ஆதங்கத்துடனும் தனது இயலாமையை, புறக்கணிப்பை. அதன் ஊடாகவும் வாழ்வில் தான் கண்டு மகிழ்ந்த சின்னஞ்சிறு சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்வார். கனவுகளைப் பற்றி பேசுவார்.  வலிகளை ஏற்றுக் கொள்ளச் சொல்வார். உலகம் அழகான பெண்களின் காதலுக்காக மட்டுமே இயங்குகிறது என்று உற்சாகம் கொள்ள செய்வார்.


தஸ்தாயெவ்ஸ்கியின் பெண்கள் அற்புதமானவர்கள். அவர்கள் ஏமாற்றங்களுடன் வாழப்பழகியவர்கள். வாழ்வின் மீதான நம்பிக்கைக்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் அதிகம் பேசுவதில்லை. ஆனால் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு தூண்டுதலாக இருக்கிறார்கள். அல்லது சாத்தியப்படுத்துகிறார்கள்.


தஸ்தாயெவ்ஸ்கி நம்பிக்கையுடன் உலகை எதிர்கொண்டவனில்லை தனிமையில் உருவான குழப்பங்கள், எந்த உறவிலும் சாய்ந்து கொள்ள முடியாத தடுமாற்றம். அதே நேரம் யாவும் தாண்டிய தூய அன்பு, நிர்கதியையும் அவமதிப்பையும் பற்றி பேசிப்பேசி ஒய்ந்து போன உதடுகள் இவை தான் தஸ்தாயெஸ்கியின் ஆதாரபுள்ளிகள்.


தன்னை அழுத்தும் கொடுந்தனிமையை அவன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறான். உலகில் தன்னை ஒரேயொரு பெண் கூட நேசிக்கவில்லை என்று வெண்ணிற இரவுகளில் வரும் கனவுலகவாசி குறிப்பிடுவது இருபது வயதை கடந்த எந்த இளைஞனுக்கும் பொருந்தக்கூடியதே.


தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகன் அதை தனது தீராத பிரச்சனையாக எடுத்துக் கொள்கிறான். தற்செயலாக ஒரு இரவில் சந்திக்க நேரும் பெண்ணிடம் தன்மீது நட்பாக இருக்க இயலுமா என்று யாசிக்கிறான். முணுமுணுப்பும் கேவலும், அதே நேரம் தன்னை நேசிக்கவும் பெண் இருக்கிறாளே என்ற அக சந்தோஷமும் ஒன்று கலந்த குரல் தஸ்தாயெவ்ஸ்கியுடையது.


லூயி புனுவல் இயக்கிய நஸரின் (Nasarin) படத்தை பார்த்திருக்கிறீர்களா?  அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்து அவர்களுடன் அன்றாட உணவை பகிர்ந்து  கொள்ளும் ஒரு மதகுருவை பற்றியது அப்படம். அந்த மத குரு இயேசு நாதரின் மறுவடிவம் போலவே இருப்பான். அவனிடம் ஒரு வேசை மதுவிடுதியில் சண்டையிட்டு  கத்திகுத்துபட்ட காயத்துடன் அடைக்கலமாகிறாள். அவளை சுகப்படுத்துதற்காக தன்னுடைய இடத்தில் ஒளித்து வைக்கிறான். அது பலரது அவதூறுகளுக்கும் காரணமாகிறது.


குற்றசாட்டுகளைக் கண்டு கொள்ளாமல் அவளுக்கு உதவி செய்கிறான். வேசை தன் மீது எவரும் இத்தனை அன்பு செலுத்தியதில்லை என்று அழுகிறாள். மதகுரு அவள் நலமானதும் அவளை வெளியே அனுப்பிவிட்டு கிளம்புகிறான். அந்தபெண் அவனை பின்தொடர்ந்து வருகிறாள். அவனை தேவதூதன் என்று புகழ்ந்து சொல்கிறான். அவனோ மனித துயரங்களுக்கு மனிதர்களே காரணம் என்கிறான். அவன் பின்னாடியே செல்லும் வேசை அவனிடம் ஒரு தெய்வதன்மை இருப்பதை உணர்கிறாள். அவன் தீவிரமாக அதை மறுக்கிறான். எதிராக செயல்படுகிறான். முடிவில் அவனும் குற்றவாளியாக பிடிபடுகிறான்.


புனுவல் உருவாக்கிய நஸரின் தஸ்தாயெவ்ஸ்கியின் மனிதனே.  தஸ்தாயெவ்ஸ்கியின் கதாநாயகன் எப்படியிருப்பான் என்பதற்கான திரை வடிவ உதாரணமது .


பலரையும் போலவே எனது  வேலை தேடிய நாட்களின் பகல்களும் மிக நீண்டது. வெயிலேறிய தெருக்களில் அமர்ந்தபடியே நான் தஸ்தாயெவ்ஸ்கியின் பீட்டர்ஸ்பெர்க்கின் வெண்ணிறஇரவில் வீழ்த்து கிடந்தேன். இடியட் நாவலில் வரும் மிஷ்கினோடு ஒன்றாக அலைந்தேன். கரசோவ் சகோதரர்களில் ஒருவனாக இருந்த அல்யோஷாவுடன் பேசிக் கொண்டிருந்தேன்.


ஒவ்வொரு குடும்பமும் ஒருவனை தஸ்தாயெவ்ஸ்கியாக்குகிறது என்று நம்பினேன். எந்த ஒரு மனிதனும் சில தருணங்களில் தன்னை தஸ்தாயெவ்ஸ்கியான நிச்சயம் உணர்வான் என்று கருதினேன். அது போலவே தஸ்தாயெவ்ஸ்கியை தவிர வேறு ஒருவனால் காரணமில்லாத வெறுப்பை , அன்பை புரிந்து கொள்ள முடியாது என்றும் உணர்ந்தேன். வேப்பிலையை வாயிலிட்டு மெல்வதை போன்று கசப்பும் மருந்தும் கொண்ட எழுத்து தஸ்தாயெவ்ஸ்கி.


தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துகளை தேடித்தேடி படித்தேன். சில புத்தகங்கள்  கிடைக்காமல் திருவனந்தபுரம் நூலகத்தில் சென்று படித்து வந்தேன். குறிப்பாக  The Idiot, The Insulted and Humiliated, Poor Folk, The Gambler, The Raw Youth, Brothers Karamazov, The House of the Dead, The Double, White Nights, The Dream of a Ridiculous Man   என்று அவரது முக்கிய படைப்புகளை வாசித்த போது தஸ்தாயெவ்கி எழுத்தில் உருவாக்கிய உலகம் மாபெரும் சாதனை என்றே தோன்றியது.



தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் நிறைய கேள்விகள் இடம் பெறுகின்றன. அந்த கேள்விகளுக்கான பதில்களை மாறி மாறி ஒவ்வொருவரும் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்துகிறார்கள். பதிலில் திருப்தி அடையாமல் மௌனமாகிவிடுகிறார்கள். பதிலை விட கேள்விகள் அவசியமானவை என்று உணர்கிறார்கள்


தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்விகள் எளிமையானவை. குடும்பம் எதன் அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. பெண்கள் ஏன் ஆண்களை நம்புகிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதன் உண்மையான காரணத்தை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா? அடுத்த மனிதன் ஏன் எப்போதுமே நம்மை புரிந்து கொள்ள மறுக்கிறான்?. காரணமில்லாமல் ஒரு மனிதன் மற்றவனை ஏன் காயப்படுத்துகிறான்.? காதல் என்பதை எப்படி புரிந்து கொள்வது ? அவமானப்படுத்துவதில் மனிதர்கள் ஏன் சந்தோஷம் கொள்கிறார்கள். வறுமையும் நெருக்கடியும் மனிதனின் சுபாவத்தை மாற்றிவிடுமா? குற்றமும் தண்டனையும் மனித உடலின் மீதே ஏன் தன் கவனத்தை செலுத்துகிறது என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்விகள் வாழ்விலிருந்து உருவானவை.


அந்த கேள்விக்கான விடைகளின் வழியே அவர் வாழ்வுகுறித்த சில அடிப்படை பார்வைகளை முன்வைக்கிறார். அது மதமோ, இறையியலோ, விஞ்ஞானமோ தரும் நம்பிக்கைகளை விடவும் ஆழமாக மனிதர்களுக்கு வாழ்வை புரிந்து கொள்ளவும் முன்செல்லவும் வழிகாட்டுகிறது .தஸ்தாயெவ்ஸ்கி தத்துவாதியின் சிந்தனை முதிர்ச்சியும் கவிஞனின் கற்பனையும், விஞ்ஞானியின் உளவயில் பார்வையும், துறவியின் தனிமையும், குழந்தையின் வியப்பும் கொண்டிருக்கிறார்.


இதுவரை நான் வாசித்த புத்தகங்களில்  மிகச்சிறந்த காதல்கதையாக தோன்றுவது மூன்று கதைகள் மட்டுமே. மூன்றுமே ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதியது . அதில் முதலிடம் தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள். இரண்டாவது இவான் துர்கனேவின் ஆஸ்யா. மூன்றாவது ஆன்டன் செகாவின் நாய்க்கார சீமாட்டி.


இதில் வெண்ணிற இரவுகளை எப்படியும் நூறு முறைக்கும் மேலாக வாசித்திருப்பேன். அதில் வரும் பீட்டர்ஸ்பெர்க்கின் சூரியன் வராத வீதியும் இரவுகளும் மனதில் அப்படியே இருக்கின்றன.


அதில் வரும் நாஸ்தென்கா அந்த இளைஞனிடம் உனக்கென்று எதுவும் கதையில்லையா என்று கேட்பாள். அவன்  கதை இல்லாமலே தான் இத்தனை வருசமாக வாழ்ந்துவருகிறேன் என்று வருத்தபடுவான். அவளிடம் உன் பெயர் என்னவென்று கேட்டதும் நாஸ்தென்கா என்று சொல்வாள். உடனே அவ்வளவு தானா என்று கேட்பான்.  அதற்கு அவள் அது போதாதா என்று கேட்டபடியே சிரிப்பாள்.


அவன் நான் பகலின் வெளிச்சத்திலிருந்து பதுங்குகின்றவன் என்று சொல்லியபடி என் கனவுகள் கூட துயரமூட்டுபவை என்பான். அவளது காதலுக்காக தன்னை வருத்திக் கொள்வான். முடிவில் ஒரு கணத்தில் அனுபவிக்கும் இன்பம் ஒரு வாழ்க்கைக்கு போதுமானது என்று சுயமான ஆறுதல் அடைந்து கொள்வான். காதல் பனி போல பொழிந்து குளிரச்செய்து அவன் கண்முன்னே உருகியும் போய்விடுகிறது.


தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரபுள்ளிகளை தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்தபோதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் கடவுள் இல்லாமல் இருந்தால் எல்லாமும் அனுமதிக்கபட்டுவிடும் என்று ஒருவரியிருக்கிறது. நவீன நாவல் ஒன்றின் வழியே மனித துயரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தபட்டிருப்பது தான் இந்த நாவலின் உயர்சிறப்பம்சம்.


உலகின் தலை சிறந்த நாவல்களில் ஒன்றாக கரமசோவ் சகோதரர்கள் நாவலை எப்போதுமே சொல்வேன். இதை நானும் எழுத்தாளர் சி.மோகனும், மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் மூவருமாக இணைந்து மொழியாக்கம் செய்வது என்று கல்குதிரை இதழில் விளம்பரம் செய்தோம். நான் மிக ஆர்வமாக ஐம்பது பக்கங்கள் மொழியாக்கம் செய்திருந்தேன். அப்போது எழுத்தாளர் சச்சிதானந்தம் அதை முழுமையான மொழியாக்கம் செய்திருக்கிறார் என்ற தகவல் வரவே அப்படியே அநத முயற்சி கைவிடப்பட்டது.


இன்றும் கரமசோவ் சகோதரர்கள் மொழியாக்கம் தனிநூலாக வரவில்லை.  இப்போது இடியட் நாவலின் மொழியாக்கம் வெளிவர உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. தமிழில் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துகள் முழுமையாக வெளியாக வேண்டும்.


நான் கரமசோவ் நாவலை மொழியாக்கம் செய்ய விருப்பபட்டதற்கு காரணம் தஸ்தாயெவ்ஸ்கியை வரிவரியாக தமிழில் எழுதி பார்க்க வேண்டும் என்ற ஆசையே. அது நிறைவேறாமல் போனது. ஆனால் கரமசோவ் சகோதரர்கள் நாவலை நாலு முறை முழுமையாக வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது எழுப்பும் அதிர்வுகள் ஆழமானவை.


கல்குதிரை இதழ் வழியாக தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு சிறப்பிதழ் கொண்டுவருவது என்று நானும் கோணங்கியும் தமிழகம் எங்கும் சுற்றியலைந்து கட்டுரைகள், மொழியாக்கம் செய்து வாங்கினோம். அந்த இதழை கவிஞர் சுகுமாரன் எடிட்டராக இருந்து கொண்டுவந்தார். அந்த நாட்களில்  கையில் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகத்தை படித்தபடிய ஊர் ஊராக பேருந்தில் பயணம் செய்வதும் ஆங்காங்கே நின்று தேநீர் அருந்தியபடியே விவாதம் செய்வதுமாக ஆறு மாதங்கள் அலைந்தோம்


அந்த இதழில் தேவதச்சன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு கடிதம் என்று ஒரு கட்டுரை எழுதி தந்தார். குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்லோநிகோவிற்கு தேவதச்சன் எழுதிய கடிதமது. நான் அறிந்தவரை ஒரு நாவலின் நாயகனுக்கு வாசகன் எழுதிய ஒரே கடிதம் அதுவே, மிக சிறப்பான கடிதம் அது. தஸ்தாயெவ்ஸ்கி ஒரு இளைஞனின் மன உலகை எப்படி மாற்றி அமைக்கிறான் என்பதை அந்த கடிதம் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது.


அந்த இதழுக்காக முனைவர் முத்துமோகன் அவர்கள் ரஷ்ய மொழியில் இருந்து நேரடியாக தஸ்தாயெவ்ஸ்கி  எழுத்தை மொழியாக்கம் செய்திருந்தார். ரஷ்ய எழுத்தாளர்களில் தஸ்தாயெவ்ஸ்கிக்கு மட்டும் தான் அப்படியொரு சிறப்பிதழ் தமிழில் வெளியாகி உள்ளது.


நான் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி  இரண்டு கட்டுரைகளும் இரண்டு நாடகங்கள் எழுதியிருக்கிறேன். ஒன்று அவரது நிலவறை குறிப்புகள் என்ற நாவலை மையமாக கொண்டு மரணவீட்டின் குறிப்புகள் என்ற பெயரில் தஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் இருந்த நாட்களை பற்றியதாக நாடகம் எழுதியிருந்தேன்.


 கோணங்கியின் தம்பியும் நவீன நாடக இயக்குனரமான முருகபூபதி அப்போது பாண்டிச்சேரி பல்கலைகழக நாடகப்பள்ளியில் முதுகலை படித்துக் கொண்டிருந்தான். அவனுக்காக இந்த நாடகத்தை எழுதி தந்தேன். அதை பல்கலை கழக அரங்கிலே நாடமாக்கி காட்டினார்கள். மிக சிறப்பாக வந்திருந்தது. பின்பு அந்த நாடகம் வேறு சில இடங்களிலும் நிகழ்த்தபட்டது.


தஸ்தாயெவ்ஸ்கிக்கு அவரது மனைவி அன்னா கிரிகோர்வினாவிற்கும் இடையில் உருவான காதலும் அவர்கள் திருமணமும் பற்றி தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்றொரு நாடகத்தை எழுதினேன். இந்த நாடகத்தை கிருபாகரன் என்ற நண்பர் நாடகமாக நிகழ்த்தினார். ஒருமுறை இந்த நாடகம் ரேடியோவிலும் ஒலிபரப்பானது.


தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், குற்றமும் தண்டனை, இடியட், கரமசோவ் சகோதரர்கள், பலவீனமான இதயம், நிலவறைகுறிப்புகள், சூதாடி போன்றவை திரைப்படமாகவும் வெளியாகி உள்ளன. அவற்றை தேடி பார்த்து  சேகரித்து வைத்திருக்கிறேன். தஸ்தாயெவ்ஸ்கியின் இருபத்தைந்து நாட்கள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் வெளியாகி உள்ளது. அதையும் பார்த்திருக்கிறேன். அவரை பற்றிய இசைநாடகங்கள், குறும்படங்கள் என்று அலைந்து கண்டிருக்கிறேன்


டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் ஒரே காலத்தில் வாழ்ந்த போதும் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தில்லை. ஒரு முறை சந்திக்க ஏற்பாடு ஆனது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் அது நிகழவில்லை. ஆனால் ஒருவர் மீது மற்றவர் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். டால்ஸ்டாயின் எழுத்தை தஸ்தாயெவ்ஸ்கி மிக சிறப்பாக புகழ்ந்தார்.


அது போலவே டால்ஸ்டாய் தனது வாழ்வின் கடைசி நாட்களில் துணையாக தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை கூடவே வைத்திருந்தார். ரயில் நிலையத்தில் டால்ஸ்டாய் மயங்கி விழுந்த போது அவரது பொருட்களுடன் இந்த நாவலும் இருந்தது. தஸ்தாயெவ்ஸ்கியின் மரணச்செய்தியை கேட்டு டால்ஸ்டாய் மிகவும் வருத்தமடைந்தார். தஸ்தாயெவ்ஸ்கியின் இறுதி ஊர்வலத்தில் நாற்பதாயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.


தஸ்தாயெவ்ஸ்கியின் மரணத்திற்கு காரணமாக இருந்த நிகழ்வு என்று ஒரு குறிப்பை சமீபத்தில் வாசித்தேன். ஒரு நாள் இரவில் எழுதிக் கொண்டிருந்த தஸ்தாயெவ்ஸ்கியின் கையிலிருந்து அவரது பேனா நழுவி உருண்டு போனது. பேனாவை குனிந்து எடுப்பதற்காக முனைந்தார். பேனா அருகாமையில் இருந்த அலமாரியின் அடியில் போயிருந்தது. தனி ஆளாக அந்த அலமாரியை நகட்டி வைத்துவிட்டு பேனாவை எடுக்க முயற்சி செய்தார்.


 கனம் தாங்கமுடியாமல் அலமாரி சாய்ந்து அதன் முனை அவரது மார்பில் குத்தியது. வலி தாங்கமுடியாமல் பேனாவை எடுக்காமல் விட்டுவிட்டார். ஆனால் அந்த வலி சில மணி நேரங்களில் அதிகமாகி அவரது ரத்த நாளத்தில் அடைப்பை உருவாக்கியது. அடுத்த இரு தினங்களில் அது நுரையீரலை பாதித்து அவர் மரணம் அடைந்தார்.


கையிலிருந்து நழுவிய பேனாவை தேடிப்போய் தனது மரணத்தை அடைந்தார் தஸ்தாயெவ்ஸ்கி என்பது எத்தனை வேதனையான செயல். ஒரு எழுத்தாளனின் மரணத்திற்கு பேனா காரணமாக இருந்திருக்கிறது என்பது எத்தனை விசித்திரமான முரண்.


சிறுவயதில் தஸ்தாயெவ்ஸ்கியின் அப்பா உள்ளுர் விவசாயிகளுக்கும்  அவருக்கும் ஏற்பட்ட கசப்புணர்வு மற்றும் பகைமை காரணமாக  வாயில் பச்சை சாராயம் ஊற்றி  கொல்லப்பட்டார். அந்த மரணச்செய்தி கேட்டவுடன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு வலிப்பு நோய் உருவாகிறது. கைகால்கள் இழுத்துக் கொள்கின்றது. பல் கட்டிக் கொண்டுவிடுகிறது. தன்னுணர்வு வருவதற்கு நீண்ட நேரமாகி பிறகு இயல்பாகிறார். தன் வாழ்நாள் முழுவதும் காக்காவலிப்பு நோயாளியாக இருந்த தஸ்தாயெவ்ஸ்கி ஒவ்வொரு முறை உணர்ச்சி வசப்படும் போது வலிப்பு வந்து வீதியில் விழுந்து கிடப்பவராகவே இருந்தார். அதுவே அவருக்குள் தாழ்வுணர்ச்சியாக வளர்ந்திருந்தது.


இன்னொரு பக்கம் அரசியல் காரணங்களுக்காக சைபீரிய சிறைக்கு அனுப்பபட்டு மரணதண்டனை விதிக்கபடுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி. துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுவதற்காக வரிசையில் நிறுத்தபடுகிறார். துப்பாக்கி முனை அவரை நோக்கி உயரும் நிமிசத்தில் அவர் விடுவிக்கபடுவதாக ஒரு தகவல் வருகிறது. அதிர்ஷடவசமாக உயிர்பிழைக்கிறார்.


எழுதுவதற்காக மட்டுமே தனக்கு உயிர்வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது என்று கடைசி நாள் வரை நம்பினார் தஸ்தாயெவ்ஸ்கி. நோய்மையும் வறுமையும் நெருக்கடியும் தனிமையும் அவர் கூடவே இருந்தன. அவரை அதிகம் உணர்ச்சிவசப்பட செய்து நோய்மையுற செய்தவர்கள் செய்தவர்கள் அவரோடு கூடவே வசித்த அவரது உறவினர்கள். நண்பர்கள். அவரது பதிப்பாளர்கள். மற்றும் அவரது வளர்ப்புமகன்.  வீட்டில் இருந்த வெள்ளி ஸ்பூன்களை கூட அவரது வளர்ப்பு மகன் திருடி விற்றுவிடுகிறான். அவனை கண்டிக்கமுடியவில்லை. மறுபக்கம் திரும்பவும் கைது செய்யப்பட்டு தனிமை சிறைக்கு அனுப்பபட்டுவிடுவோமோ என்ற பயம் இத்தனை நெருக்கடிகளுக்குள் தான் தஸ்தாயெவ்ஸ்கி எழுதினார்.



ஆனால் அவரது எழுத்தில் சுயபுலம்பல்கள் கிடையாது. தனக்கு இப்படி நடந்துவிட்டதற்கு எவரையும் குற்றம் சாட்டுவதும் இரக்கம் சம்பாதிப்பதும் கிடையாது.மாறாக தாளமுடியாத துயரத்திற்கு பிறகும் அவர் தூய அன்பையும் நட்பையும் பிரதானமாக பேசுகிறார். தனிமையில் எரியும் மெழுகுவர்த்தியில் இறந்து போன அம்மாவின் நினைவுகள் அசைகின்றன என்கிறார்.


தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் உறக்கமில்லாதவனின் இரவுகள் அல்ல. உறங்க மறுப்பவனின் இரவுகள். அவன் இரவை அணைத்துக் கொள்ள விரும்புகிறான். இரவிடமே ஆறுதல் தேடுகிறான்.


தஸ்தாயெவ்ஸ்கி தன் வளர்ப்பு மகனை தேடிச் சென்ற நாட்களை பற்றி பற்றி நோபல் பரிசு எழுத்தாளரான ஜே.எம். கூட்ஸி  The Master of Petersburg  என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். அற்புதமான நாவலது. அதை வாசிக்கையில் இப்படியொரு நாவலை எழுத வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் என்று உள்ளுர கூட்ஸியின் மீது பொறாமையாக இருந்தது.


தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்விகளுக்கு விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் பதில் சொல்லியிருக்கிறார். அப்படியொரு கேள்வி பதில் புத்தகம் வெளியாகி உள்ளது. நான் வாசித்திருக்கிறேன். அற்புதமான பதில்கள் கொண்டது.



தஸ்தாயெவ்ஸ்கி படிப்பதற்காகவே ருஷ்ய மொழி படித்தேன்.  தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகம் ஒன்றைருஷ்ய மொழியிலே படித்துவிட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் வகுப்பு முடிந்தபோது தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக தலைப்புகளை படிக்குமளவு மட்டுமே ரஷ்ய மொழி அறிவு எனக்கிருந்தது. அதுவே பெரிய கிளர்ச்சியை உண்டுபண்ணியது.


டால்ஸ்டாயா? தஸ்தாயெவ்ஸ்கியா யார் சிறந்தவர் என்ற விவாதம் பல ஆண்டுகாலமாகவே நடந்து வருகிறது. என்வரையில் இருவரும் இரண்டு சிகரங்கள்


டால்ஸ்டாய் சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமும் வசதியான வாழ்க்கையும் கொண்டவர். ராணுவத்தில் வேலை செய்தவர். வலிமையான உடலும் மனதும் கொண்டவர். எண்ணிக்கையற்ற காதல்கள். பெரிய கூட்டுகுடும்பம் என்று அவரது வாழ்க்கை மாறுபட்டது. ஒரே நேரத்தில் அவரது கதைகள் ரஷ்யாவில் மட்டுமின்றி பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி வாசக கவனத்தை பெற்றது. நாடு அறிந்த பேச்சாளர். எழுத்தாளர்.


ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி அப்படியில்லை. சிறுவயதில் இருந்தே வறுமையான வாழ்க்கை. தனிமை. வலிப்பு நோய் கொண்ட உடல். கைதியாக சிறையில் வாழ்ந்தவர். மனைவி இறந்து போகிறார்.  தனிமையான வாழ்க்கை. பொருளாதார கஷ்டங்கள். பதிப்பாளர்கள் எழுதியதற்கு பணம் தர மறுக்கிறார்கள். வாசகர்களோ அவரை குழப்பவாதி என்று தூற்றுகிறார்கள். அது தான் அவரது சமகால சூழ்நிலை.


ஆனால் இந்த இருவரும் ரஷ்ய மக்களின் மனதில் ஏற்படுத்திய மாற்றம் மிகப்பெரியது.


தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தின் பாதிப்பு வலியது. காப்காவில் துவங்கி மார்க்வெஸ், வரை பலரும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்போதும் தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்புகளை அவ்வப்போது எடுத்து வாசித்து பார்ப்பேன். அவரது குரல் காதருகே நெருக்கமாக ஒலிப்பது போலிருக்கும். அது அவரது கடந்த காலத்தினை மட்டுமின்றி என் கடந்து போன நாட்களையும் நினைவுபடுத்துகிறது.


விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது என்று புத்தரின் ஒரு வரி உள்ளது. தஸ்தாயெஸ்வ்கி அதன் அடையாளமாக எப்போதுமே இருக்கிறான்.


****
 


 

0Shares
0