1953ல் The Paris Review இதழ் துவக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக எழுத்தாளர்களின் நேர்காணல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நேர்காணல்கள் The Paris Review Interviews என 9 தொகுதிகளாக இதுவரை வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பலரின் நேர்காணல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளனின் அகத்தை விரிவாக வெளிப்படுத்தும் இந்த நேர்காணல்கள் செறிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நேர்காணல்கள் தொகுதி வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பைபிள் என்று சொல்கிறார்கள். அது வெறும் வார்த்தையில்லை. உண்மை.
எழுதும் முறை மற்றும் நேரம், விருப்பமான படைப்பாளிகள். வாசிக்கும் முறை, பயண அனுபவம். தினசரி வாழ்க்கை சார்ந்த அனுபவம். கலை இலக்கியம் சமூகம் குறித்த எண்ணங்கள்.எனப் பதினைந்து முதல் இருபது பக்க அளவில் இந்த நேர்காணல்கள் எழுத்தாளனின் உலகை மிகச்சரியாக முன்வைக்கின்றன. நேர்காணலுடன் கதைகளின் கையெழுத்துப்பிரதி ஒன்றையும் வெளியிடுகிறார்கள்.
எழுத்தாளர்களை நேர்காணல் செய்ய விரும்பும் பத்திரிக்கையாளர்கள் இந்தத் தொகுதிகளை அவசியம் வாசிக்க வேண்டும். கேள்விகளை எவ்வளவு சிறியதாக, கச்சிதமாகக் கேட்டிருக்கிறார்கள் என்பது புரியும். ஒரு கேள்வி கூட ஐந்தாறு வரிகள் கிடையாது. அதே சமயம் எழுத்தாளரின் பதில் அரைப்பக்கம், ஒரு பக்கம் என நீளும் போது கூட அதை எடிட் செய்யாமலே வெளியிட்டிருக்கிறார்கள்.
The Paris Review Interviews 4வது தொகுதியை இன்று வாசித்தேன். அதில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வி. எஸ். நைப்பால் (V. S. Naipaul) நேர்காணல் இடம் பெற்றுள்ளது. தன்னைக் கேள்வி கேட்க வந்த பத்திரிக்கையாளரை எவ்வளவு படுத்தி எடுத்திருக்கிறார் நைப்பால் என்பது அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் முன்வைக்கும் அனுமானங்கள், விமர்சனங்களை முகத்திற்கு எதிராகக் கண்டிக்கிறார். மறுக்கிறார். கோபம் கொள்கிறார். பல நேரங்களில் எதையும் படிக்காமல் கேள்வி கேட்காதீர்கள் என்று திட்டுகிறார். ஆனால் பத்திரிக்கையாளர் மிகப்பொறுமையாக அவரிடம் தனது எண்ணங்களை, அவதானிப்புகளை முன்வைக்கிறார்.
இந்த நேர்காணலின் முடிவில் தனக்கு இது போன்று நேர்காணல் செய்வது பிடிக்காது. அறிவை வீணடிக்கக் கூடாது என்று வி. எஸ். நைப்பால் சொல்கிறார். வேறு பத்திரிக்கையாக இருந்தால் எதிர்மறையான விஷயங்களை நீக்கிவிடுவார்கள். ஆனால் The Paris Review அப்படியே எழுத்தாளரின் நேர்காணலை ஒரு வார்த்தை மாறாமல் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதே தொகுதியில் முரகாமியின் நேர்காணல் உள்ளது. அது ஒரு சிறப்பான நேர்காணல். அதில் தனக்கு வேறு எந்த ஜப்பானிய எழுத்தாளருடனும் நட்பு கிடையாது. ஆரம்பம் முதலே நான் தனியாக இருக்கிறேன். என்று கூறுகிறார், அத்தோடு ஜப்பானியர்கள் விரும்பி படிக்கும் மாங்கா காமிக்ஸ் தனக்குப் பிடிக்காது என்றும் சொல்கிறார். காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி எனத் தனது ஆதர்சங்களைக் கூறும் முரகாமி அதே வரிசையில் துப்பறியும் கதைகளை எழுதிய ரேமண்ட் சாண்ட்லர் (Raymond Chandler) யும் வைக்கிறார். தனது எழுத்துகளில் ரேமண்ட் சாண்ட்லர் பாதிப்பு அதிகமிருப்பதாக ஒத்துக் கொள்கிறார்.
••
