நட்பின் மறுபக்கம்.

சமீபத்தில் பார்த்த சிறந்த படம். The Banshees of Inisherin. படத்தை இயக்கியிருப்பவர் Martin McDonagh

அயர்லாந்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள தீவு ஒன்றில் கதை நிகழுகிறது. இரண்டு நண்பர்களுக்குள் ஏற்படும் பிரிவையும் அதன் விளைவுகளையும் பேசும் இப்படம் நட்பின் நிலைகுலைவை அழுத்தமாகச் சித்தரிக்கிறது

இசைக்கலைஞரான கோல்ம் டோஹெர்டி எளிய விவசாயியான பாட்ரைக் உடன் நீண்டகாலமாக நட்புடன் பழகுகிறார். இருவரும் ஒன்றாகக் கூடிக் குடிக்கிறவர்கள். சகல விஷயங்களையும் பற்றி அரட்டை அடிக்கக் கூடியவர்கள்.

திடீரென ஒரு நாள் காரணமில்லாமல் கோல்ம் தனது நண்பரை விட்டு விலக ஆரம்பிக்கிறார். இதைப் பாட்ரைக்கால் ஏற்க முடியவில்லை. தன் மீது ஏதாவது தவறு இருக்கிறதா எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்.

அதற்குக் கோல்ம் தவறு ஒன்றுமில்லை. ஆனால் வீணாக உன்னுடன் பழகுவது பிடிக்கவில்லை. நீ ஒரு மந்த புத்திக்காரன். உன்னோடு செலவிடும் நேரத்தை உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன் என்கிறார் கோல்ம்.

இத்தனை வருஷங்களாக இதே மந்தபுத்தியோடு தானே இருந்தேன். அப்போது நன்றாகப் பழகினாயே என்று கேட்கிறார் பாட்ரைக்.

ஆமாம். இப்போது வேண்டாம் என்று தோன்றுகிறது. நட்பை நீடிக்கவிரும்பவில்லை. விலகிப் போய்விடு என்கிறார் கோல்ம்.

இதனைப் பாட்ரைக்கால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது தங்கள் நட்பை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதங்களில் முயலுகிறார். இதைத் தொந்தரவாகக் கருதும் கோல்ம் கோபம் கொண்டு சண்டையிடுகிறார். தனது மீதமிருக்கும் வாழ்க்கையில் இசை அமைப்பாளராக உருவாக வேண்டும் என்று கோல்ம் ஆசைப்படுகிறார்

இத்தனை ஆண்டுகளாகப் பழகிய நண்பன் தன்னை வெறுத்து ஒதுக்குவதைப் பாட்ரைக்கால் ஏற்கமுடியவில்லை. எப்படியாவது நட்பைத் தொடர போராடுகிறார். இதற்காகச் சகோதரி மூலமும் பாதிரியார் மூலமும் முயலுகிறார்.

இதில் ஆத்திரமான கோல்ம் நீ இது போலத் தொந்தரவு செய்தால் அதற்குத் தண்டனையாக எனது கைவிரல்களில் ஒன்றை வெட்டிக் கொள்வேன் என்று எச்சரிக்கிறார். இது விளையாட்டுத்தனமான எச்சரிக்கை என நினைத்த பாட்ரைக் மீண்டும் நெருங்கிப் பழக முயற்சிக்கவே தனது ஒரு விரலை வெட்டி அவரிடமே தருகிறார் கோல்ம்.

நட்பின் மறுபக்கம் உக்கிரமான நிகழ்வுகளாக விரிவு கொள்ள ஆரம்பிக்கிறது.

எந்த நாளில் எதற்காக ஒருவரின் நட்பு சலித்துப் போகிறது. ஏன் திடீரென ஒருவன் தனது நேரத்தை நினைவில் நிற்கும் விஷயங்களைச் செய்வதிலும் செலவிட விரும்புகிறான் என்பதையே படம் மையம் கொள்கிறது.

ஒரு இலக்கியப்பிரதியைப் போலக் கதை இயல்பாக வளர்ந்து உச்சநிலையை அடைகிறது. குறைவான கதாபாத்திரங்கள். நிஜமான உணர்ச்சி வெளிப்பாடுகள், அபாரமான நடிப்பு, நிறைவான துணை கதாபாத்திரங்கள் என நாடகம் போலவே திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது

பாட்ரைக்கின் சகோதரி சியோபன் மறக்கமுடியாத கதாபாத்திரம். அவள் கோல்ம் முன்பாகக் கோபத்தில் வெடித்துப் பேசுவது அபாரமான காட்சி. நட்பு திரியும் போது எவ்வாறு வெறுப்பாக மாறிவிடுகிறது என்பதைப் படம் நிஜமாகப் பதிவு செய்திருக்கிறது.காலின் ஃபாரெல் மற்றும் க்ளீசனின் நடிப்பு பிரமாதமானது.

கோல்ம் ஏன் தன்னைத் தண்டித்துக் கொள்ள விரும்புகிறார். இத்தனை ஆண்டுகள் பழகியும் தன்னைப் பாட்ரைக் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறார். தனது கோபத்தை அவன் புரிந்து கொள்ளவோ விலகிப்போகவே முயலவில்லை என்பதால் தன்னைத் தண்டித்துக் கொள்வது என்று முடிவு செய்கிறார். இதே கோல்ம் தான் இசையில் நுண்மைகளை வெளிப்படுத்துகிறவராகவும் இருக்கிறார். விரல் துண்டிக்கப்பட்ட நிலையிலும் இசைக்கருவிகளை வாசிக்கிறார். படத்தின் தலைப்பாக இருப்பது ஒரு பாடல். அது முடிவு பெறாத பாடல். அதை உருவாக்கவே கோல்ம் முயற்சிக்கிறார்.,

சிறிய தீவு. அதில் வாழும் மனிதர்கள். அவர்களின் சலிப்பூட்டும் வாழ்க்கை, அதிலிருந்து விடுபடக் கலையால் மட்டுமே முடியும் என நினைக்கும் கோல்ம் எனக் கச்சிதமாகத் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது, பேட்ரைக்கின் அண்டை வீட்டாரில் ஒருவரின் மனநலம் குன்றிய மகனான ஃடொமினிக்கின் வழியே தீவு வாழ்க்கையின் தனிமை, தந்தையின் கண்டிப்பான உலகம் அழகாக வெளிப்படுகிறது.

படம் முடியும் போது நாம் சிலரது நட்பில் கோல்ம் போல நடந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது. சிலர் நம்மைப் பாட்ரைக் போல நடத்தியிருப்பதையும் உணர முடிகிறது. இந்த இருநிலைகளையும் படம் சமமாக விவரிக்கிறது.

கால்மின் நாயைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிட்டு பாட்ரைக் அவரது, வீட்டிற்குத் தீ வைக்கும் காட்சி அதிர்ச்சியூட்டுகிறது ஆனால் வீட்டை அழிப்பதன் மூலம் அவர்களின் சண்டை முடிவுக்கு வந்துவிடவில்லை.

படத்தில் இடம்பெறும் கழுதையும் நாயும் இரண்டு குறியீடுகள் போலவே உணரமுடிகிறது. மேக்பெத்தில் வரும் சூனியக்காரி போலப் படம் முழுவதும் ஒரு வயதான பெண் நிகழ்வுகளை முன்னறிவிப்பு செய்கிறாள். அவளைக் கண்டு பாட்ரைக் பயப்படுகிறான். அவள் வழியே இது தீவின் சாபம் என்பது போல உணர்த்தப்படுகிறது.

அயர்லாந்தின் உள்நாட்டு யுத்தம் பற்றிய நிகழ்வுகளைத் தான் நட்பின் கதையாகச் சொல்லியிருப்பதாக இயக்குநர் தெரிவிக்கிறார்

அந்தக் கோணத்தில் ஆராய்ந்தால் இப்படம் முக்கியமான அரசியல் திரைப்படமாகும்.

.

0Shares
0