நன்றி வெங்கட்

நான் வெயில்காலத்தில் பிறந்தவன், வெயிலேறிய கிராமத்தில் வளர்ந்தவன், ஆகவே ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலமும் எனக்கு ஒவ்வாதவை, அதைக் கடந்து செல்வதற்காக நிறைய முன்தயாரிப்புகள், பிரயாசைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது

குறிப்பாகக் குளிர் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை, பின்னிரவுகளில் விழித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு எப்போது சூரியன் உதயமாகும் எனக் கதகதப்பிற்குக் காத்துக் கொண்டிருப்பது விநோதமான அனுபவம்,

இந்தக் குளிர்காலமும் அப்படித்தான் துவங்கியிருக்கிறது, இரண்டு முறை மருத்துவரிடம் சென்று குளிர்காய்ச்சலுக்கான மருந்துகளைப் பெற்றுவந்துவிட்டேன், காய்ச்சல் குறைந்துவிட்டது ஆனால் மனநிலை பிடிப்பற்று மிதந்து கொண்டிருக்கிறது,

குளிர்காலம் அதிகம் நினைவுகளைக் கிளறக்கூடியதாக இருக்கிறது, ஏதேதோ நினைவுகள், கடந்து போன மனிதர்களைப் பற்றிய எண்ணங்கள், பகிர்ந்து கொண்ட சந்தோஷம், வலியெனக் கொப்பளித்துக் கொண்டேயிருக்கிறது,

குளிர்காலத்தின் ஊடாக எனக்கிருக்கும் நம்பிக்கை புதிய புத்தகங்களின் வெளியீடுகள் மட்டுமே, எனது புத்தகங்கள், மற்றும் நான் விரும்பி படிக்கும் சக எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களின் புத்தகங்களின் எனக் குளிர்காலம் பல்வேறு புதிய புத்தகங்களுடன் தான் துவங்குகிறது

வருடம் தோறும் எனது புதிய புத்தகங்கள் வெளியாகின்றன என்றாலும் ஒவ்வொரு வெளியீடும் என்னளவில் முக்கியமானதே, அதை வெறும் புத்தகவெளியீட்டு விழாவாக நான் கருதுவதில்லை,

என்னோடு என் எழுத்தோடு சேர்ந்து பயணிப்பவர்கள், நண்பர்கள், அக்கறை கொண்டவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாகவே காண்கிறேன்,

ஆதரவுடன் நீளும் வாசகர்களின் கரங்கள் தரும் வெம்மைக்கு ஈடு வேறு எதுவுமில்லை,

இந்த ஆண்டு எனது முதல்புத்தகம் வெளியில் ஒருவன் மறுபதிப்புக் காணுகிறது, நற்றிணை பதிப்பகம் முக்கிய எழுத்தாளர்கள் பலரின் முதல்புத்தகத்தை மறுபிரசுரம் செய்யும் முயற்சியை எடுத்திருக்கிறது, நீண்ட காலத்தின் பிறகு எனது முதல்புத்தகத்தை மறுபடி அச்சில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அதுபோலவே வருகிற ஜனவரி 5 மாலை ரஷ்யன் கல்சர் சென்டரில் எனது புதிய நாவல் நிமித்தம் உயிர்மை வெளியீடாக வெளியாக உள்ளது,

திருச்சியில் நடைபெற்ற எனது புத்தக வெளியீட்டுவிழாவிற்காகக் கோவையில் இருந்து பகல் நேர ரயிலில் வந்த போது உடல்நலக்குறைவோடு தான் இருந்தேன், ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே எனது வழித்துணை, உலர்ந்த உதடுகளும், சோர்ந்து கிறங்கிய கண்களுமாகப் பயணிக்கும் போது ஏன் இப்படி அலைந்து கொண்டிருக்கிறோம், எழுதி என்ன கிடைத்துவிட்டது எனச் சலிப்பாக வந்தது, மனச்சோர்வு அழுத்த துவங்க அசதியோடு உட்கார்ந்திருந்தேன்,

எதிர்பாராமல் கரூரில் ஏறிய ஒரு வாசகர் என்னை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து அமர்ந்தார், ஐம்பது வயதிருக்கும், மெலிவான தோற்றத்திலிருந்தார்,

என்ன பேசுவது என அவருக்குத் தெரியவில்லை, எனக்கோ பேசும் மனநிலையே இல்லை, ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்தபடியே அமர்ந்திருந்தோம், தேநீர் விற்பவன் வந்த போது அவர் தேநீர் வாங்கி என்னோடு பகிர்ந்து கொண்டார்

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக்கேட்டேன்

என் பெயர் வெங்கட், பெட்ரோல் பங்கு ஒன்றில் மேனேஜராகப் பணியாற்றுகிறேன், இரவு பணியில் படிக்கக் கொஞ்சம் நேரம் கிடைக்கும் இருபது ஆண்டுகளாக உங்களைத் தொடர்ந்து வாசித்திருக்கிறேன், என்னிடம் நிறைய மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன அதற்கு உங்கள் எழுத்துகள் தான் முக்கியக் காரணம், என்றார்

அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன், பயணத் தூரம் முழுவதும் அவர் எனது கதைகள் கட்டுரைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார், பலகதைகள் எனக்கே நினைவில் இல்லை, அவற்றின் ஒவ்வொரு வரியும் அவர் நினைவில் இருந்து கேட்கும் போது ஆச்சரியமாக இருந்தது

இவரைப்போல பலரை எதிர்பாராமல் சந்தித்து இருக்கிறேன் என்றாலும் இவரது சந்திப்பு அபூர்வமானதாகவே இருந்தது

திருச்சி வரும் போது வெங்கட் சொன்னார்

உங்களுடன் பயணம் செய்ய நேர்ந்தது எனக்கு அதிர்ஷடம், ரொம்ப நன்றி சார்

இல்லை வெங்கட் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றேன், அவர் புரியாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்

என்னை மீறி சில நேரங்களில் நான் மனச்சோர்வு அடைவதுண்டு, இன்று அப்படியான மனநிலையில் இருந்தேன், ஆனால் உங்களின் ஈடுபாடான உரையாடல் எனது மனதை தேற்றிவிட்டது,

உங்களைப் போன்ற முன்னறியாத வாசகர்களின் அன்பும் ஈடுபாடும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது, நண்பரே, உங்களுடன் இணைந்து பயணம் செய்தது எனது நல்வினை, நீங்கள் தந்த இந்த உத்வேகம் என்னைத் தொடர்ந்து இயங்க செய்யும், நன்றி என்றேன்

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை சார், படிச்சதை உங்க கிட்ட பகிர்ந்து கிட்டேன் அவ்வளவு தான் எனச் சொல்லியபடியே அவர் மௌனமாகிவிட்டார்

எழுத்தாளன் வேண்டுவெதெல்லாம் சிறிது வெளிச்சம் மட்டுமே, அந்த வெளிச்சத்தைத் தர முன்வரும் வாசகர்கள் இருக்கும்வரை அவன் ஒய்வில்லாமல் நடந்து கொண்டேதான் இருப்பான்,

அவரிடம் எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழாவிற்குப் போகிறேன், நாளை விழாவிற்கு வருகிறீர்களா எனக் கேட்டேன், முடிந்தால் வருகிறேன் என்று சொன்னார்,

மறுநாள் வெங்கட் வந்திருக்கிறாரா எனக்கூட்டத்தில் தேடினேன், அவரைக் காணமுடியவில்லை, அவருக்காக ஏங்கினேன் என்பது தான் நிஜம்,

கூட்டம் முடிந்து வெளியே வரும்போது பார்த்தேன், வெங்கட் புதிய புத்தங்களை வாங்கிக் கொண்டு மௌனமாகப் படியிறங்கி சாலையை நோக்கி போய்க் கொண்டிருந்தார்,

என்னைப் பார்க்க வேண்டும் என்றோ, பேச வேண்டும் என்றோ அவருக்குத் தோன்றவேயில்லை, ஒடிப்போய் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு பேச வேண்டும் போல இருந்த்து,

அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்தேன்,

இவர் தான் எனது நம்பிக்கை, இவர் ஒருவரில்லை, இவரைப்போல எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள், அவர்கள் என்னைச் சந்திப்பதையோ, கூடிப்பேசுவதையோ கூட விரும்புவதில்லை, அபூர்வமாக அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் மனம் திறந்து பேசுகிறார்கள், மற்றபடி அவர்களுக்கு ஒரு எழுத்தாளன அவன் புத்தகங்களின் வழியே உரையாடுவதே போதுமானதாகயிருக்கிறது

வெங்கட்டை போல இருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வது ஒரு எழுத்தாளனுக்கு எப்போதாவது கிடைக்கும் பாக்கியம், ஒருவேளை இந்தச் சந்திப்பு நிகழாமல் போயிருந்தால் அது எனக்கு இழப்பு தான்,

உண்மையான வாசகர்களின் கண்கள் மௌனமாக எழுத்தாளனை பார்த்துக் கொண்டேயிருக்கின்றன அவனது ஒவ்வொரு செயலையும் அவை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன,

அந்தக் கண்களை எந்தப் பகட்டும், விளம்பரமும், ஆடம்பரமும், ஆரவாரமும் ஏமாற்றிவிடமுடியாது,

அதே நேரம் வெறும்புகழ்ச்சிக்காக, தற்பெருமைக்காக, பல்வேறு மறைவான காரணங்களுக்காக எழுத்தை, எழுத்தாளனை துதிபாடும், வசைபாடும் கூட்டம் தன்னை வாசகன் என அடையாளப்படுத்திக் கொண்டு அலையவே செய்யும், அவர்கள் தானே காணாமல் போய்விடுவார்கள், அல்லது எழுத்தாளன் மீது விஷம் கக்கும் வசைக்கூட்டமாக மாறிவிடுவார்கள், அவர்களுக்குத் தீனிபோடுவது எழுத்தாளனின் வேலையில்லை,

ஒரு எழுத்தாளனுடன் உண்மையான வாசகன் ஆழமான பிடிப்பை, நம்பிக்கையை மேற்கொள்கிறான், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் பெரும்பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது, நான் அப்படித் தான் நம்புகிறேன், அப்படித்தான் செயல்படுகிறேன்

வெங்கட்டை ரயிலில் சந்தித்து இன்றோடு பதினெட்டு நாட்கள் ஆகிவிட்டன, ஆனால் அவர் தந்த உத்வேகம், ஆறுதல் இன்றும் அதன் கதகதப்புடன் என்னை இயங்க வைத்துக கொண்டிருக்கிறது

வெங்கட்டிற்கும் வெங்கட்டை போல என்னையும் எழுத்தையும் நேசிக்கும் எண்ணிக்கையற்ற வாசகர்கள் அனைவருக்கும் இந்தக் கிறிஸ்துமஸ் இரவில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்

நண்பர்களே, நீங்கள் தான் என்னை இயங்கச் செய்கிறீர்கள், இந்த உறவு கைமாறில்லாதது, அதை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க மாட்டேன்

•••

0Shares
0