நெருப்பைத்தேடி

நெருப்பை பெண்கள் அளவிற்கு ஆண்கள் நுட்பமாக அறிந்திருக்கவில்லை, ஆணிற்கு நெருப்பு என்பது வியப்பான ஒரு பொருள், அல்லது வெறும்பயன்பாட்டு பொருள் .யாகத்தின் போது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் முன்னமர்ந்து மந்திரஉச்சாடனம் பொங்கி வழிய ஆண் நெருப்பை ஆராதனை செய்கிறான்,

பெண்களோ நெருப்பை ஸ்நேகப்பூர்வமாகப் பார்க்கிறார்கள், பலவேளைகளில் நெருப்போடு பேசுகிறார்கள், சமையலுக்கு கை கொடுக்கச்சொல்லி கூப்பிடுகிறார்கள், நெருப்பு வராமல் புகை மட்டுமே எழும்போது திட்டுகிறார்கள்.  விளக்கில் எரியும் நெருப்பிற்கும் அடுப்பில் எரியும் நெருப்பிற்கும் உள்ள பேதம் அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது, நெருப்பின் குரலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், அவர்கள் குரலை நெருப்பும் அறிந்திருக்கிறது.

வீட்டில் ஒரு விளக்கில் எரியும் சுடரளவாவது நெருப்பு வேண்டும் என்று நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள், அது வாழ்வின் ஆதாரம் போலிருக்கிறது .வடலூரில் உள்ள வள்ளலார் திருச்சபையின் அன்னதானம் செய்யும் அடுப்பு இன்று வரை அணையவேயில்லை, நெருப்பு பல்லாயிரம் மனிதர்களின் பசியாற்றிக் கொண்டேயிருக்கிறது

மனிதர்களுக்கும் நெருப்பிற்குமான உறவு மிக நீண்டது, பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியது, மனிதன் கைவசப்படுத்திய உலகின் விந்தையான பொருள் நெருப்பே,

கிரேக்க புராணீகத்தில் வரும் பிராமீதியஸ் தொன்மம் மனிதர்களுக்கு வானுலகில் இருந்து நெருப்பைத் திருடி வந்த கதையைச் சொல்கிறது, அதை வாசித்த பிறகு எங்கே நெருப்பைப் பார்த்தாலும் திருட்டு பொருள்போலவே என் கண்ணுக்குத் தெரிந்தது, அதைத் திருப்ப ஒப்படைத்துவிடலாமே என்று கூட நினைத்திருக்கிறேன்,

ஆனால் இந்தியப்  புராணீகத்தில் நெருப்பு தானே உருவானது, அதை உருவாக்கும் சொற்கள், கடைக்கோல்கள் இருந்தன, நெருப்பு  ரூபம் அரூபம் என்ற இரண்டு நிலைகளை கொண்டிருப்பது இந்தியாவில் தான்,

நெருப்பை பயன்படுத்த துவங்கியதே மனிதவளர்ச்சியின் முக்கிய அம்சம், இன்றும் நெருப்பு தான் மனிதனின் அன்றாடத் தோழன், குளிர்கால இரவுகளில் எங்காவது நெருப்பு மூட்டி அமர்ந்து குளிர்காய்கின்றவர்களைப் பார்க்கும் போது சட்டென காலத்தின் பின்னால் போய் குகைமனிதர்களின் நாட்கள் நினைவில் வந்து போவதுண்டு,

எவ்வளவு ஆண்டுகாலம் இப்படி நெருப்பைப் பாதுகாத்திருப்பார்கள், நெருப்பை எப்படி உண்டாக்குவது என்று தெரியாத இனக்குழுக்கள் அதைக் கைப்பற்ற எவ்வளவு முயற்சி எடுத்திருப்பார்கள் என்று தோன்றும், நெருப்பிற்காக ஆதி இனக்குழுக்கள் அடித்துக் கொண்ட சண்டைகள் குறித்து நிறையக் கதைகள் இருக்கின்றன, நெருப்பை உண்டாக்கும் கல்லை கண்டறிதலும், அதன் பிறகு நெருப்பை பாதுகாக்கும் முறைகளை அறிந்து கொண்டதுமே மனித நாகரீகத்தின் தோற்றுவாய்கள்,

சமீபத்தில் Quest for fire என்ற திரைப்படத்தை பார்த்தேன், நியான்டர்தால் மனிதர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றியது, ஒரு இனக்குழுவிடமிருந்து இன்னொரு இனக்குழு நெருப்பைத் திருடுவதற்காக எப்படி முயன்றது, நெருப்பைத் தேடி அலைந்த குகைமனிதர்களின் வாழ்க்கைபாடுகளே படத்தின் ஆதாரக்கதை, மிக முக்கியமான படமது, படத்தில் வசனங்கள் அதிகமில்லை, இயற்கையான ஒலிகள், விசித்திரமான ஒசைகள், இவையே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன,

உலாம் என்ற இனக்குழுவைச்சேர்ந்த Naoh,  Amoukar,  Gaw ஆகிய மூவரை நெருப்பைத்தேடி கண்டுபிடித்துவர அனுப்பிவைக்கிறார்கள், நெருப்பைத்தேடிய அவர்களின் முடிவற்ற பயணமே படத்தின் ஆதாரப்புள்ளி

நெருப்பை திருடிச்செல்பவன், அது தண்ணீரில் நனைந்து அணைந்துபோன உடன் கருகிய கட்டையை முகர்ந்து பார்த்து அழும் ஒருகாட்சியிருக்கிறது, அது  நம் முன்னோர்களின் அழுகைக்குரல், அடிவயிற்றில் இருந்து எழும் ஒலம்,

நெருப்பைத் திருடி செல்வதற்காக செல்லும் ஒருகூட்டம் ஒரு இடத்தில் தற்செயலாக ஒரு பெண்ணைப் பார்த்துவிடுகிறார்கள், உடனே தனது வேலையை மறந்து அவளை வன்புணர்ச்சி செய்கிறார்கள், சகலநெருக்கடிகளுக்குள்ளும் உடலின் தேவை முக்கியமானது என்பதை அந்தக்காட்சி உறுதி செய்கிறது

அது போலவே பசியோடு அலையும் குகைவாசி தொலைவில் மான்கள் மேய்வதைக் கண்டதும் தன்னை அறியாமல் எச்சில் ஒழுக வாயை அசைக்கிறான், மனதில் மான் இறைச்சியின் ருசி உருவாகிறது, சாக்லெட்டைப் பார்க்கும் குழந்தை போல இருக்கிறது அவனது முகம், மான்கள் ஒடத்துவங்குகின்றன, அவன் அதைத் துரத்துகிறான், பசியோடு வெறியோடு அவனது ஒட்டம் விநோதமாக இருக்கிறது

இன்னொரு இடத்தில் சிறுத்தையிடம் தப்பி மரத்தில் ஏறி ஒளிந்துகொள்கிறார்கள் மூன்று குகைவாசிகள், சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை, மரத்தின் இலைகளை கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கி சாப்பிடத்துவங்கி மரமே மொட்டையாகிவிடுகிறது, சிறுத்தை காலடியில் இரவில் அழகான நிலவும் நட்சத்திரங்களும் இருக்கின்றன, பயத்தோடு அதை ரசிக்கிறார்கள்

ஒரு இடத்தில் புகைவருவதைக்கண்டு அங்கே நெருப்பு கிடைக்குமெனப் போகிறார்கள், அங்கே சாம்பல் மட்டுமே குவிந்திருக்கிறது, அச்சாம்பலில் புரண்டு உடல் முழுவதும் பூசிக் கொண்டு அவர்கள் ஆடும் களியாட்டத்தைப் பார்த்த பிறகு தான் சாம்பல் எவ்வளவு முக்கியமானது என்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது

அதிலும் நரமாமிசம் உண்ணும் குழுவினருக்கும் நரமாமிசம் உண்பதை தவறு என்று விலக்கும் குழுவிற்குமான போராட்டமும். வழித்துணையாக கிடைத்த பெண்ணை அடைய முயலும் வெறியும், அதே பெண்ணிற்காக ஒருவன் கொள்ளும் பரிவும், முடிவில் அவள் கர்ப்பிணியாவது என்று படத்தின் ஊடாக ஆதிமனிதன் பெண்ணை வென்ற கதையும் இருக்கிறது

காட்சிபடுத்தபட்ட விதமும் ,ஆதிமனிதர்களின் மனநிலையை சித்தரிக்கும் முறைகளும், உணர்ச்சி வெளிப்பாடும் அபாரமான கலைத்திறனுடன் வெளிப்பட்டிருக்கிறது

1911ல் பெல்ஜியத்தில் வெளியான நாவலை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கபட்டிருக்கிறது, படத்தை இயக்கியிருப்பவர் Jean-Jacques Annaud, இவர் உம்பர்தோ ஈகோவின் The Name of the Rose நாவலைத் திரைப்படமாக்கியவர், இந்த படம் சிறந்த அயல்மொழித்திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறது

எண்பதாயிரம் வருசங்களுக்கு முன்னால் மனிதகுலம் நெருப்பைக் கைவசப்படுத்த மேற்கொண்ட போராட்டத்தின் கதையை இத்தனை சுவாரஸ்யமாக சொல்ல முடிந்திருப்பது படத்தின் வெற்றி

படம் பார்க்கையில் ஏனோ ராகுல்ஜியின் வால்காவிலிருந்து கங்கைவரை நினைவில் வந்தபடியே இருந்தது, அந்தப் புத்தகம் படித்த நாட்களில் இது போன்று நானாக கற்பனை செய்து பார்த்திருக்கிறேன், அந்த கற்பனையின் நிஜவடிவம் போலவே இப்படம் இருந்தது

நியான்டர்தால் மனிதர்களின் இயல்புகள், வாழ்க்கைச்சிக்கல்கள். மற்றும் மனிதன் நாகரீகமடைந்த வரலாற்றை அறிந்து  கொள்ள விரும்புகின்றவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமிது

••

0Shares
0