பதவிக்குப் பின்னால்.

‘கே பிளான்’ எனப்படும் “காமராஜர் திட்டம்”இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது நேரு பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினுள் நிறையப் பதவிச் சண்டைகள். போட்டிகள் உருவாகின. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்களும் நீண்ட காலம் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற் திட்டத்தைக் காமராஜர் முன்மொழிந்தார். இந்தத் திட்டம் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் இது பற்றி இன்று வரை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தத் திட்டம் ஒரு அரசியல்வாதியின் மனதை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதைப் பற்றிய சிறப்பான நாவல் ஒன்றை வாசித்தேன்.

அற்றது பற்று என்ற ஜைனேந்திர குமார் எழுதிய இந்தி நாவலை சாகித்திய அகாதமி வெளியிட்டிருக்கிறது.

பொதுவாக இந்திய அரசியல் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் குறைவே. அதிலும் இப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மனப்போராட்டத்தை முதன்மைப்படுத்தி நாவல் எழுதியிருப்பது அபூர்வமான விஷயமே.

இந்தி இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளியான ஜைனேந்திர குமார் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஆனந்திலால். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காகப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர். பிரேம்சந்தின் நெருக்கமான நண்பராக இருந்தவர்.. காந்திஜி தலைமையில் பிரேம்சந்துடன் இணைந்து ‘பாரதிய சாகித்திய பரிஷத்’ என்ற அமைப்பை நிறுவியவர். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். பத்மபூஷண் உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

1930-ல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது, டால்ஸ்டாயின் கதைகள், உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற சர்வதேச சிறுகதைகளை இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார்

‘முக்திபோத்’ என்ற நாவலுக்காக 1966-ல் சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது. அந்த நாவலின் தமிழாக்கம் தான் அற்றது பற்று. இதனை பேராசிரியர் என். ஸ்ரீதரன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

54 வயதான ஸஹாய் காமராஜரின் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலிலிருந்து விலகி பொதுச்சேவையில் ஈடுபட முடிவெடுக்கிறார். ஆனால் அதைக் குடும்பத்தினர் ஏற்க மறுக்கிறார்கள். மனக்குழப்பத்தோடு இரவு விழித்தபடியே தனது நிலையைப் பரிசீலனை செய்கிறார். அங்கு தான் நாவல் ஆரம்பம் கொள்கிறது.

அவருடைய மனைவி ராஜஶ்ரீ அரசியலில் பின்வாங்குவது கோழைத்தனம். விரும்பி ஏன் தோற்றுப்போக வேண்டும் என்று வாதிடுகிறாள். அத்தோடு கடந்த காலத்தில் படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறாள். ஸஹாய் இந்த வாழ்க்கை போலியானது. காந்தியை வெறும் உதட்டளவில் மட்டுமே பேசுகிறோம். அவரைப் போலத் துணிச்சலாக, எளிய வாழ்க்கையை வாழ யாரும் தயாராகயில்லை. இனிமேலும் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்க விரும்பவில்லை. கிராமத்தில் போய் விவசாயம் செய்யப்போகிறேன் என்கிறார் . அவரை எப்படியாவது சமாதானம் செய்துவிட முயல்கிறாள் ராஜஶ்ரீ

அவர்கள் வீட்டிற்கு வருகை தரும் எம்எல்ஏ டாகுர் ஸஹாயின் வளர்ச்சிக்காக நிறையப் பாடுபட்டவர். முரட்டு மனிதர். அவரது பொறுப்பில் தான் ஸஹாயின் மகன் வீரேஸ்வர் இருக்கிறான். தலைமையின் விருப்பத்தை ஏற்று ஸஹாய் மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

ஆனால் ஸஹாய் தனக்கு அதில் விருப்பமில்லை. தான் பதவி விலகி சேவை செய்யப்போவதாகச் சொல்கிறார். அவர்களுக்குள் நடைபெறும் வாக்குவாதம் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

ஸஹாயின் மகள் ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். அவளும் அப்பா மந்திரி ஆக வேண்டும். அது தங்களின் எதிர்காலத்திற்கு முக்கியம் என்கிறாள். அவளுடனும் ஸஹாய் சண்டைபோடுகிறார்

ஸஹாயின் மகன் வீரேஸ்வர் வீட்டில் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவன். அவன் ஒரு உதவாக்கரை எனக் கருதி அவனை டாகுர் பொறுப்பில் விவசாய வேலைகளைக் கவனித்து வரச் செய்கிறார் ஸஹாய். அது வீரேஸ்வருக்குப் பிடிக்கவில்லை. அவன் தங்கை கணவருடன் இணைந்து பேக்டரி வேலையில் ஈடுபட நினைக்கிறான். அதற்கும் அப்பா மந்திரி ஆவது முக்கியமானது.

நாவலின் முக்கியமான கதாபாத்திரம் நீலிமா. ஸஹாய்க்கு பழக்கமான பணக்காரப் பெண். அவர்களுக்குள் நெருக்கமான உறவு இருப்பது ஸஹாய் மனைவிக்குத் தெரியும். ஆனாலும் அவள் ஸஹாயை அனுமதிக்கிறாள். காரணம் நீலிமா மோசமான பெண்ணில்லை. அவளது அறிவும் ஆலோசனையும் ஸஹாயிற்குத் தேவை என்பதை உணர்ந்திருக்கிறாள். இந்த இரண்டு பெண்களுக்குள் இருக்கும் புரிதல் அபாரமாக எழுதப்பட்டிருக்கிறது.

அரசியல் வாழ்க்கையினை விட்டு விலகி ஸஹாய் ஆன்மீக வழியில் வாழுவேண்டும் என்று விரும்புகிறார். நேர்மையற்ற அரசியலில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம் என்று நினைக்கிறார்.

ஆனால் உலகம் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் அப்படி நடந்து கொள்கிறார். அவரது வேஷம் உண்மையானதில்லை என்று நீலிமா குற்றம் சாட்டுகிறாள். அத்தோடு உங்களைப் பற்றி மட்டுமே ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் குடும்பம், நண்பர்கள் நலமடைய வேண்டும் என்ற எண்ணமே கிடையாதா என்று நேரடியாகக் கேட்கிறாள். அவள் சொல்வது உண்மை என்று ஸஹாய் உணருகிறார். ஆனால் தேடிச் சென்று பதவி கேட்டுப் பெறுவதில் அவருக்கு விருப்பமில்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசமான விஷயம் எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். அதை அறிந்த நீலிமா உங்களால் நல்லது செய்யமுடியாது என எப்படி நினைக்கிறீர்கள். பொதுவாழ்வில் ஒரு போதும் நீங்கள் பின்னால் திரும்பிப் போக முடியாது. அரசியல் என்பது ஒருவழிப்பாதை என்று உண்மையை உணரவைக்கிறாள்.

கிராமத்தில் வந்து விவசாயியாக வாழுவதற்கு உங்களால் ஒரு போதும் இயலாது என்று டாகுரும் சொல்கிறார். காந்தியின் வழியில் எளிமையாக வாழுவதற்கு எதற்கு இத்தனை முட்டுக்கட்டைகள் தடைகள் என்று குழம்பிப் போகிறார் ஸஹாய்

இதற்கிடையில் அவரைப் பற்றி அவதூறு செய்தி ஒன்று பத்திரிக்கையில் வெளியாகிறது. அதைப் பற்றி விவாதிக்க ஓவியரான தமாரா ஸஹாய் மருமகனுடன் வருகிறாள். தமாராவும் நீலிமாவும் இரண்டு புள்ளிகள். அவர்களே நாவலின் மையத்தை இயங்கச் செய்கிறார்கள். ஹோட்டல் அறையில் நடைபெறும் அவர்களின் சந்திப்பு நாவலின் முக்கியமான தருணம்.

வீரேஸ்வர் தனது தந்தையை எதிர்த்து வாதிட்டு அவரைக் குற்றம் சொல்லும் போது நீலிமா கைநீட்டி அடித்துவிடுவதும். அவன் தன் தவற்றை உணர்ந்து தந்தையிடம் பேசுவதும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

ஸஹாயின் மனப்போராட்டத்தை நாவல் மிக ஆழமாக விளக்குகிறது. இப்படி மனசாட்சிக்குப் பயந்த அரசியல்வாதிகள் இன்று குறைவே. ஜைனேந்திர குமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல்வாதியைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அரசியல் பதவி என்பதையெல்லாம் நீக்கிவிட்டாலும் ஒருவரின் வெற்றி தோல்வியை அவரது மனைவி பிள்ளைகள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள். மனைவியின் துணை எப்படி ஒருவரை வெற்றி அடைய வைக்கிறது. குடும்பத்திற்காக ஒருவன் எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது சரியா தவறா என்பதை நாவல் விரிவாக விவாதிக்கிறது .

ஒரு காலகட்டத்தின் குரலாக இதை எடுத்துக் கொண்டாலும் இன்றும் ஐம்பது வயதை அடைந்த ஆணுக்கு இது போன்ற மனதடுமாற்றங்கள் உருவாகவே செய்கிறது. அந்த வகையில் அரசியலுக்கு அப்பாலும் இந்த நாவல் விவாதிக்கும் விஷயங்கள் முக்கியமானதே.

நாவலின் ஒரு இடத்தில் ஸஹாய் தன் மனைவியின் தாய்மை தன்னையும் சேர்த்து அரவணைத்துக் கொள்வதை உணருகிறார். தனக்காக மனைவியும் பிள்ளைகளும் எவ்வளவு சிரமங்களை அனுபவித்துள்ளார்கள் என்பதை நன்றாகப் புரிந்து கொள்கிறார். டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களை நாடி வரும் அழைப்புகள் உதவிகள் தேநீர் சந்திப்புகளை ஜைனேந்திர குமார் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்

அரசியலில் ஒருவன் அடையும் வெற்றிக்குள்ளும் சுயநலமே மிச்சமிருக்கிறது. பொதுநலம் என்ற பெயரில் ஒருவன் சுயவளர்ச்சி அடைவது அவனுக்கு மட்டுமே லாபம் தருகிறது. அவனால் ஆதாயம் அடைந்தவர்கள் அவனைப் பதவி விலக விடமாட்டார்கள். அது போலவே அவன் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் அவனை மட்டுமில்லை அவன் குடும்பத்தையும் வீழ்ச்சி அடையச் செய்ய முயல்வார்கள் என்ற உண்மையை நாவல் தெளிவாகச் சொல்கிறது

ஸஹாயின் மனைவி ராஜஸ்ரீ அவரது வளர்ச்சிக்காக நிழல் போலத் தன்னை மறைத்துக் கொண்டு உதவி செய்கிறாள். குறிப்பாக டாகுரை அவள் வீட்டில் தங்க வைத்து உபசரிப்பதிலும் அவரை ரயில் ஏற்றிவிடச் செல்வதிலும் நீலிமாவைப் புரிந்து கொண்டு அவளுடன் இரவு விருந்து சாப்பிடக் கணவனை அனுப்பி வைப்பதிலும் அழகாக வெளிப்படுகிறது

160 பக்கங்களே உள்ள சிறிய நாவல். ஆனால் இந்திய அரசியல்வாதி ஒருவனின் தனிப்பட்ட மனப்போராட்டத்தைத் துல்லியமாக விவரித்திருக்கும் விதத்தில் முக்கியமான நாவலாகிறது..

நாவலின் பலம் அதன் உரையாடல்கள். குறிப்பாக நீலிமாவும் ஸஹாயும் பேசிக் கொள்ளும் இடங்கள் மற்றும் ஸஹாய் ராஜஸ்ரீ இருவருக்குள் ஏற்படும் உரையாடல்கள் மறக்கமுடியாதவை.

லட்சியவாதம் பேசுவது சரியானதில்லை. அரசியலில் அது போன்ற பேச்சிற்கு இன்று இடமில்லை. காந்திய யுகம் முடிந்துவிட்டது. இப்போது பணமே பிரதானம். அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதே முக்கியம். ஒருவேளை தியாகியைப் போல வாழ்ந்தால் ஒருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். என்கிறார் ஜைனேந்திர குமார்

தன் மகனைப் பற்றி ஸஹாய்க் கவலைப்படும் விதமும் ராஜஸ்ரீ கவலைப்படும் விதமும் வேறானது. அவள் தன் மகனைப் புரிந்து கொண்டிருக்கிறாள். அவனது வளர்ச்சிக்கு உதவி செய்ய நினைக்கிறாள். ஆனால் லட்சியவாதம் பேசும் ஸஹாய் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உலகை மாற்ற நினைக்கும் ஒருவன் தன் வீட்டின் சூழலைப் புரிந்து கொள்ளவில்லை. மகன் தன் மீது குற்றம் சுமத்தும் போது அதை ஸஹாய் நன்றாக உணருகிறார்.

மந்திரி பதவிக்காகச் சண்டைபோட்டுக் கொள்ளும் இன்றைய சூழலில் தனக்குக் கிடைக்கப் போகும் பதவியை வேண்டாம் என நினைக்கும் ஒருவரின் அகப்போராட்டத்தை எழுதியிருப்பது முக்கியமானது. அந்த வகையில் இந்த நாவல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றிருப்பது தகுதியானதே.

•••

0Shares
0