புறக்கணிப்பின் நிலக்காட்சிகள்

“கடவுள் விடுகிற மூச்சைப்போல் காற்று வீசும் கரிசல்வெளி

வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்

கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்“

எனக் கவிஞர் தேவதச்சனின் கவிதை ஒன்று துவங்குகிறது.

இந்தக் கவிதையில் இடம்பெற்றுள்ள கடவுள் விடுகிற மூச்சைப் போலக் காற்றுவீசும் நிலப்பரப்பைத் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்பிரான்செஸ்கோ ரோஸி. அந்தப்படம் Christ Stopped at Eboli (1979)

இத்தாலிய இயக்குநரான பிரான்செஸ்கோ ரோஸி இயக்கிய Christ Stopped at Eboli (1979), இத்தாலியின் புகழ்பெற்ற எழுத்தாளரான கார்லோ லெவியின் நினைவுக் குறிப்பினை அடிப்படையாகக் கொண்டது, இந்த நூல் 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் வெளியாகி இத்தாலிய இலக்கியத்தின் மகத்தான படைப்பாகக் கொண்டாடப்பட்டது

இத்தனை அழகாக நிலப்பரப்பினை இதுவரை எந்தத் திரைப்படமும் காட்சிப்படுத்தியதில்லை. கதாபாத்திரத்தின் தனிமையும் மனநெருக்கடியும் நிலவெளியாக உருமாறுகின்றன. புறக்கணிக்கப்பட்ட மனிதனும் புறக்கணிக்கப்பட்ட நிலமும் ஒன்று தான் என இந்தத் திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.

படத்தின் துவக்கக் காட்சி மிக அழகானது. லெவியின் நீண்ட பயணம் கிட்டத்தட்ட பதினெட்டு நிமிடங்கள் ஒடுகின்றன: இரண்டு ரயில் சவாரிகள்; பஸ்ஸில் ஒன்று. அதில் அவரோடு ஒரு நாயும் உடன் வருகிறது. அந்தப் பேருந்தில் கோழிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. இறுதியாக ஒரு கார் மூலம் செல்கிறார்கள். தீவிர தனிமை மற்றும் வெளி உலகத்துடனான தொடர்பின்மை ஆகியவற்றை இந்தப் பயணம் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல், பார்வையாளரைப் முற்றிலும் புதிய கதையுலகிற்கு அழைத்துச் செல்வதாக உள்ளது. அந்த நிலப்பரப்பு புதிரும் வசீகரமும் ஒன்றுசேர்ந்தது

1935 மற்றும் 1936 க்கு இடையில், லெவி பாசிச அரசாங்கத்தால் தெற்கு இத்தாலிய மாகாணமான லூகானியாவிற்கு நாடுகடத்தப்பட்டார்

கலைஞர்கள் மற்றும் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக இப்படி உள்நாட்டிற்குள்ளே நாடுகடத்தி முடக்கினார்கள். உண்மையில் இவர்கள் அரசியல் கைதிகள். ஆனால் சிறையில் அடைக்கபடாமல் கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் பொதுவெளியில் வாழ அனுமதிக்கப்பட்டார்கள்.

வசிப்பிடத்தில் அவர்கள் ஒவ்வொரு நாளும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பில் வாழ வேண்டும். அன்றாடம் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும்.

தீவிர அரசியல் செயல்பாட்டிலிருந்து ஒருவனை முடக்குவதற்கு அவனது குடும்பத்திடமிருந்தும் உறவுகள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் அவனை விலக்கி வெகுதூரம் அப்புறப்படுத்தித் தனிமைப்படுத்துவதை நடைமுறையாக வைத்திருந்தது பாசிச அரசு.

மருத்துவரான லெவி அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு பெற்ற காரணத்தால் மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவில்லை. பாசிச எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக நாடுகடத்தப்பட்ட லெவி காக்லியானோவிற்கு வந்து சேர்ந்தபோது அது முற்றிலும் அந்நியமான உலகமாக இருந்தது.

தற்காலிக வசிப்பிடம் ஒன்றில் தங்கிக் கொள்கிறார். அதுவும் ஒரு நிலவறை போலிருக்கிறது. இரண்டு படுக்கைகள் அங்கேயிருக்கின்றன. ஜன்னலை ஒட்டிய காலியான படுக்கையினைத் தேர்வு செய்து கொள்கிறார்.

வளர்ச்சியடையாத, தனிமைப்படுத்தப்பட்ட, விசித்திரமான அந்த ஊரும் அதன் புறவெளியும் நம்மை வசீகரிக்கின்றன. கனவில் நாம் காணும் மாயநிலம் போலவே அந்த நிலப்பரப்புக் காணப்படுகிறது. விவசாயிகள். தொழிலாளர்கள் வாழும் அந்த ஊர் வேறு ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. லெவியைப் போலவே நாடுகடத்தப்பட்ட சிலர் அங்கே இருக்கிறார்கள். அவர்களையும் லெவி சந்திக்கிறார்.

அந்த நகரை ஒரு திறந்தவெளிச் சிறை போலவே லெவி ஆரம்பத்தில் நினைக்கிறார். அவர் எங்கே சென்றாலும் காவலர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து போகக் கூடாது என்று தடைவிதிக்கிறார்கள்.

லெவி சுற்றியலைந்து காணும் காட்சிகளின் வழியே அந்த ஊரில் மிகக் குறைவானவர்களே வசிப்பது நமக்குத் தெரிகிறது. அந்த ஊரிலிருந்த தேவாலயமும் அதன் பாதிரியும் அவரைக்கேலி செய்யும் சிறுவர்களும் கண்ணில்படுகிறார்கள். விசித்திரமான நம்பிக்கைகள் கொண்ட அந்த ஊர் மக்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த நிலம் கிறிஸ்துவின் வருகைக்கு முந்திய உலகமாகத் தோற்றம் தருகிறது. மலேரியா மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ய வேண்டிய கட்டாயம் லெவிக்கு ஏற்படுகிறது.

தான் மருத்துவம் படித்திருந்தாலும் மருத்துவராக வேலை செய்யவில்லை என்று அவர் மறுக்கிறார். ஆனால் மக்கள் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. மெல்ல அவர் மருத்துவம் செய்ய ஆரம்பிக்கிறார்.

மருத்துவப்பரிசோதனைக்காக அவர் ஒரு வீட்டிற்குச் செல்லும் காட்சியும் நெற்றியில் நாணயத்தை வைத்து தன் மனைவியைக் குணமாக்க முயலும் ஒருவரின் வாழ்க்கையும் விசித்திரமாக உள்ளது.

அந்த ஊரிலிருந்த இரண்டு மருத்துவர்களும் திறமையற்றவர்கள். காசு பறிக்கக்கூடியவர்கள் என்று மக்கள் கருதுகிறார்கள். அவர்களை விடத் தங்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் லெவியை அவர்கள் நேசிக்கிறார்கள். காரணம் அவர் மருத்துவத்திற்காகக் கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை

படம் முழுவதிலும் நாம் கேட்கும் நேர்த்தியான இசை நம்முடைய மனதில் ஆழமான ஏக்க உணர்வை உருவாக்குகிறது கடந்த கால நினைவுகளை விவரிப்பதன் வழியே தான் படம் துவங்குகிறது. லெவியின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுகள் பாசிச அரசின் கெடுபிடி எப்படி எங்கோ ஒரு மூலை வரை பரவியிருந்தது என்பதை அடையாளப்படுத்துகிறது.

மூன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடிய இந்தப் படம் பிரான்செஸ்கோ ரோஸியின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்வேன். கியான் மரியா வோலோன்டே முக்கியக் கதாபாத்திரமான லெவியாக நடித்திருக்கிறார். அவரது முகத்தில் வெளிப்படும் உணர்வுகள் மிகத் துல்லியமானவை. அபாரமான நடிப்பு.

காக்லியானோவின் மேயரான டான் லூய்கி மாகலோனுடன் லெவி நெருக்கமாகப் பழகுகிறார். அவரும் லெவியைப் புரிந்து கொள்கிறார். டூரினில் உள்ள தனது குடும்பத்தினருக்கு லெவி எழுதும் கடிதங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வ தணிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் படிக்கிறார்.

ஒரு கட்டத்தில், அவர் ஒரு குறிப்பிட்ட கடிதத்தை அனுப்ப வேண்டாம் என்று லெவிக்கு அறிவுறுத்துகிறார், இது தண்டனையை அதிகப்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார்.இதைப் பற்றி விவாதிக்கும் போது அவர்கள் பாசிச அரசின் இயல்பு பற்றி உரையாடுகிறார்கள்.,

காக்லியானோவின் விவசாயிகள் பாசிச அரசால் பாதிக்கப்படுகிறார்கள். நேரடி அரசியலில் ஈடுபடாத அந்த மக்களும் கூட உள்ளுற அச்சம் கொண்டிருக்கிறார்கள். மரங்களைப் பாதுகாக்கும் வழிமுறையாக ஆடுகளுக்கு வரி விதிக்க அரசு முடிவு செய்கிறது இது அவர்களுக்கு முட்டாள்தனமான யோசனையாக உள்ளது. அதை எதிர்க்கிறார்கள்.

My name is Barone. May he who finds me care for me எனக் கழுத்தில் அட்டையுடன் கைவிடப்பட்ட ஒரு நாயைப் படத்தின் துவக்ககாட்சியில் லெவி காணுகிறார். அது அவரின் மாற்று நிலையைப் போலவே உணர்த்தப்படுகிறது. அந்த நாயை தன்னோடு அழைத்துக் கொள்கிறார். கைவிடப்பட்ட மனிதர்களுக்குக் கைவிடப்பட்ட ஒருவரே துணையாக இருப்பார் என்ற படத்தின் மையக்கதை இந்த உறவின் வழியாக அழகாகச் சுட்டப்படுகிறது

லெவி அந்த ஊரைச்சுற்றிப் பார்க்கும் போது பாதைகள் வளைந்து வளைந்து செல்வதைக் காணுகிறார். எந்தப் பாதையும் வெளியேறிப் போகும் வழியில்லை. அது சுழல்வழி போலப் புதிரானது என்பதை உணருகிறார். இன்னொரு காட்சியில் கைவிடப்பட்ட தேவாலயம் பற்றிப் பாதிரியார் அவரிடம் பேசுகிறார். பாதிரியார் மீது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்தப் பாதிரியாரைக் காணும் போது செல்மா லாகெர்லாவ் எழுதிய மதகுரு நாவலில் வரும் கெஸ்டா பெர்லிங் பாதிரி நினைவிற்கு வந்து போனார். ஒரே வார்ப்பில் உள்ள இரண்டு கதாபாத்திரங்கள்

இன்னொரு காட்சியில் லெவி மயானத்திலிருந்த ஒரு குழியில் போய்ப் படுத்துக் கொள்கிறார். அது தான் தொந்தரவு இல்லாத இடம் என்கிறார். அங்கேயும் காவலர்கள் அவரைப் பின்தொடருகிறார்கள்.

வரி வசூல் செய்யும் ஆளின் வருகையும் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றிப் பேசுவதும் லெவிற்கு உதவி செய்ய முற்படுவதும் அழகானதொரு காட்சி.

லெவியின் சகோதரி லூயிசா பல மாதங்களுக்குப் பிறகு அவரைப் பார்க்க வருகை தருகிறாள். அவளும் ஒரு மருத்துவரே. அவள் தங்கியிருந்த சில நாட்களில் அவள் வழியாக அந்த ஊரிலுள்ள பெண்களின் நிலை மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. உண்மையில் அவளது வருகையும் அவளது ஆலோசனைகளுமே லெவியை மாற்றுகின்றன.

இதற்கிடையில் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போர் குறித்த பாசிச பிரச்சாரத்தின் குரல்கள் ரேடியோக்கள் மற்றும் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கின்றன. அந்த அச்சம் மக்கள் கண்களில் பிரதிபலிக்கிறது

அந்த ஊரில் ஒரேயொருவர் மட்டுமே கார் வைத்திருக்கிறார். அவரது உதவியால் மட்டுமே வெளியூர்களுக்குப் போய்வர முடியும். அதை வைத்து அவர் சம்பாதிக்கிறார். அந்தக் காரில் தான் லெவி ஆரம்பத்தில் வருகை தருகிறார். அந்தக் கார் ஒரு குறியீடு. நெருக்கடிகளை வைத்தும் சம்பாதிக்க முடியும் என்பதன் அடையாளம்.

லெவி படத்தின் முடிவில் ஊரைவிட்டு வெளியேறும் போது அந்த மக்களை நன்றாகப் புரிந்து கொள்கிறார். அவர்களும் அன்போடு விடை தருகிறார்கள். படம் முழுவதும் லெவி தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். யோசனை செய்தபடியே இருக்கிறார். நினைவிலிருந்த மனிதர்களை ஓவியமாக வரைகிறார்.

தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் கடந்தகால நினைவுகளுக்கும் எதிர்காலக் குழப்பங்களுக்கும் இடையில் சஞ்சரிக்கக் கூடியவர்கள். அதுவும் இது போன்ற தண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவனுக்குத் தனது தண்டனைக்காலம் எப்போது முடியும் என்று தான் யோசனையாக இருக்கும். லெவியும் அப்படித்தானிருக்கிறார்.

ஆனால் பெரிய அலையொன்று உள்ளே இழுத்துக் கொள்வது போல அங்குள்ள வாழ்க்கை அவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது. பங்குபெற வைக்கிறது. கைதியாக உள்ள அவர் மருத்துவம் பார்க்க நகரின் மேயர் அனுமதி தருகிறார். உண்மையில் அது ஒரு சலுகை. சட்டப்பூர்வமாக அதை அனுமதிக்க முடியாது என்றே மேயர் சொல்கிறார்.

காக்லியானோவில் காலம் உறைந்து போயிருக்கிறது. யுவான் ரூல்போவின் பெத்ரோ பரோமா நாவலில் வரும் அழிந்து போன ஊரேயே இந்த நிலவெளி ஞாபகப்படுத்துகிறது. இறந்தவர்கள் வாழும் நகரம் போன்றது தான் காக்லியானோ. அங்கே மனிதர்கள் மிகக்குறைவாகப் பேசுகிறார்கள். வீட்டுக்கதவுகள் மூடியே இருக்கின்றன. சிதிலமடைந்து போன குடியிருப்புகள். பசுமையே இல்லாத புறவெளி. அந்த ஊரில் தங்கள் பிள்ளைகளுக்கு யாரும் ஞானஸ்தானம் கூடச் செய்வதில்லை. மதகுருவோ ஒரு குடிகாரர். முதியவர்கள் கண்களில் விவரிக்கமுடியாத துயரம் பீறிடுகிறது.

கைவிடப்பட்ட மனிதர்களின் துயரவாழ்க்கையை இறுதியில் லெவி புரிந்து கொள்கிறார். தன் வாழ்க்கை நெருக்கடிகளை விடவும் அவர்களின் துயரம் அதிகமானது என்பதை நன்றாக உணருகிறார். தன்னுடைய அகத்தில் லெவி மேற்கொள்ளும் பயணமும் மீட்சியுமே படத்தின் தனித்துவம் என்பேன்.

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நிறைய long takes உள்ளன. அது கதையை நகர்த்திச் செல்ல மிகச் சிறப்பாக உதவி செய்திருக்கிறது. மிகத்தேர்ந்த ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பும் சிறந்த கலை அனுபவத்தை உருவாக்குகின்றன.

அரசியல் கைதியாகச் சைபீரியாவிற்கு நாடுகடத்தபட்டு முகாமில் தங்கிய அனுபவத்தைத் தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதியிருக்கிறார். அந்தக் குறிப்புகளில் காணப்படும் அதே உக்கிரமான அனுபவத்தைத் திரையின் வழியே உணர வைக்கிறார் ரோசி. அந்த வகையில் இப்படம் ஒரு மகத்தான கலைப்படைப்பு.

ஒரு படத்தில் எத்தனை லேயர்கள் என்று வியப்பாக இருக்கிறது. ஒவியங்கள் வழியே தனது நினைவுகளை மீட்கும் லெவியின் முயற்சி ஒரு தளம். கைவிடப்பட்ட நகரம் அங்கு வாழும் மக்களின் உலகம் ஒரு தளம். லெவி மருத்துவராகப் பணியாற்றும் அனுபவம் அவரது நோயாளிகள் இன்னொரு தளம். நகரத்தின் மேயர் அவரது சொந்தவாழ்க்கை, அரசியல் நெருக்கடிகள் இன்னொரு தளம். ஊரின் விசித்திரமான நம்பிக்கைகள். தேவாலயம் பாதிரி சிறார்கள் இன்னொரு தளம். லெவி தங்கியுள்ள வீடு. அவருக்கு உணவும் உறைவிடமும் தந்த பெண். அவருடன் தங்கும் பயணி இன்னொரு தளம். இப்படி லேயர் லேயராகக் கதாபாத்திரங்கள் பின்னப்பட்டிருக்கிறார்கள். அத்தனையும் கச்சிதமாக, நுட்பமாக உருவாக்கப்பட்டிருப்பதே பிரான்செஸ்கோ ரோஸியின் வெற்றி என்பேன்

••

0Shares
0