Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit- bible
என்ற பைபிள் வாசகத்தை டால்ஸ்டாய் தனது டயரியில் அடிக்கோடிட்டு குறித்திருக்கிறார், அவருக்கு மிகவும் விருப்பமான வாசகமிது, அதை வாசித்த நிமிஷத்தில் இருந்து அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.
மரணத்திற்குப் பிறகு தன்னை கல்லறையில் புதைக்க கூடாது, கல்லறைவாசகம் எதுவும் எழுதி வைக்ககவும் கூடாது என்று டால்ஸ்டாய் தனது உயிலில் குறிப்பிட்டிருந்தார், அவரது உடல் அவரது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் மரங்களுக்கு இடையே புதைக்கப்பட்டு புல்வளர்ந்து போயிருக்கிறது, இந்த மண்ணில் உருவான ஒரு தானியம் மண்ணிற்குள் அடங்கிவிட்டது என்பதன் அடையாளமாக, எளிமையுடன் உள்ளது அந்தப் புதைமேடு
டால்ஸ்டாய் ஒரு தானியம், ஒரு விதை என்ற படிமம் மனதை விகாசம் கொள்ளச் செய்கிறது, அந்த விதையில் இருந்து உருவான விருட்சங்கள் உலகெங்கும் இருக்கின்றன, ஒரு பழத்திற்குள் எத்தனை விதையிருக்கிறது என்று ஆராய்கிறவன் விஞ்ஞானி, ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் இருக்ககூடும் என கற்பனை செய்பவனே எழுத்தாளன் என்பார்கள்,
டால்ஸ்டாய் ஒரு மகத்தான விதை, மண்ணோடு உள்ள உறவு தான் விதையை முளைக்கச் செய்கிறது, எழுத்தாளனுக்கும் இது பொருந்தக்கூடிய ஒன்றே.
தன்னை ஒரு விதையாக, தானியமணியாக மனிதர்கள் மிக அரிதாகவே உணர்கிறார்கள், அப்படி உணர்ந்து கொள்ளும்போது பூமியும் காற்றும் நீரும், உயிரினங்களுடன் உள்ள உறவும் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும்,
டால்ஸ்டாய் என்ற தானியம் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒன்று, வாழ்க்கை எனும் சூறைக்காற்றிடம் அவர் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார், அது இழுத்துச் செல்லும் திசையெல்லாம் அலைந்து திரிந்தார், ஆனால் மற்ற தானியங்களைப் போல அவர் சலித்துக் கொள்ளவில்லை, சிறகுள்ள ஒரு தானியமாக உருமாறினார், அவருக்குச் சிறகாக அமைந்தது இலக்கியம்.
இந்த பைபிள் வாசகம் எவ்வளவு அழகாக, கவித்துவமாக இருக்கிறது பாருங்கள், இரண்டு முறை Truly என்ற சொல் பயன்படுத்தபட்டிருப்பதன் காரணம் உண்மையை எளிதாக யாரும் நம்பிவிடுவதில்லை, அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதால் தானோ,
இந்த வாசகத்தில் என்னை மிகவும் புரட்டிப் போட்டது it remains alone என்ற சுட்டுதலே,
alone என்ற சொல் மிகவும் அர்த்தப்பூர்வமானது, எவ்வளவோ பெரியது, அதை மிக எளிதாகச் சொல்லிவிடுகிறோம், தனிமை என்பது சில நேரங்களில் அரிய பரிசு போல உள்ளது, பல தருணங்களில் கடுமையான வேதனையாக இருக்கிறது, எழுத்தாளர்கள் பலரும் இந்த தனிமையை உணர்ந்தவர்கள், தனிமை உருவாக்கியவர்கள்,
ஒடிஸி காவியத்தில் 20 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியேறிச் சுற்றியலைந்து திரும்பிய ஒதிசியஸ் பிச்சைகாரனைப் போல வீடு திரும்புகிறான், அவனை அடையாளம் கண்டுகொள்வது அவனது நாய்மட்டுமே, அது தான் வாழ்க்கை,
அந்த இடத்தில் ஒதிசியஸ் தனது ஒட்டுமொத்த வாழ்வின் தனிமை வலியை உணர்கிறான்,
ஒரு மனிதன் தனிமையை உணரும் தருணம் முக்கியமானது, தனிமை உருவாக்கும் வலி மிகவும் அந்தரங்கமானது, அதை எளிதாகப் பகிர்ந்து கொள்ளமுடியாது,
“YOU are the big drop of dew under the lotus leaf, I am the smaller one on its upper side,” said the dewdrop to the lake என்கிறது தாகூரின் கவிதை
தனிமை சில வேளைகளில் துளியாக இருக்கிறது, சில வேளைகளில் குளமாக இருக்கிறது. அரிதாக சில தருணங்களில் குளத்தில் ஒளிரும் நிலவாகவும் இருக்கிறது.
தனிமையின் தூய்மையை, மகத்துவத்தை, சுயத்தை அறிந்து செயல்பட்டவர் டால்ஸ்டாய், அவரது கதாபாத்திரங்களும் தன்னை உணரும் தருணத்தில் புதிய பாதையை தேர்வு செய்கிறார்கள், அன்னாகரீனினா அதன் சிறந்த உதாரணம்
•••