ராஜஸ்தானின் சித்தோர்கரை பூர்வீகமாகக் கொண்ட காடியா லோஹர் சமூகத்தினர் நாடோடிகளாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆயுதங்கள் செய்வதில் திறமை பெற்ற கொல்லர்களான இவர்கள் மாட்டுவண்டிகளில் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் பயணித்தபடி இருக்கிறார்கள்.

இரும்பு மற்றும் பித்தளையில் கலைப்பொருட்கள் மற்றும் கருவிகள் செய்வது இவர்களின் வேலையாகும். நிரந்தர வசிப்பிடமில்லாத இவர்கள் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். அடையாள அட்டைகளோ, எவ்விதமான அரசு உதவிகளோ கிடைக்காத இவர்களின் வாழ்க்கையை India’s Forgotten People ஆவணப்படம் விவரிக்கிறது
நாடோடிகளாக வாழ்பவர்கள் என்பதால் இவர்கள் குறித்த அச்சமும் தவறான தகவல்களும் பொதுவெளியில் பரவியுள்ளன. அப்படித் தான் நடிகை டீனா உப்பலும் இவர்களைப் பற்றிக் கேள்விபடுகிறார். ஆனால் அவர்களை நெருங்கிச் சென்று ஆய்வு செய்த போது அவர்களின் வரலாற்றையும் வாழ்க்கை அவலத்தையும் உண்மையாக அறிந்து கொள்கிறார். அவர்களுக்காக தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு முனைகிறார். அதில் சந்திக்கும் பிரச்சனைகளை நிஜமாகப் பதிவு செய்திருக்கிறார்.
காடியா லோஹர் சமூகத்தினர் ராஜஸ்தான் அரசர்களுக்கு ஆயுதம் தயாரித்து கொடுத்தவர்கள். போரில் தோற்ற மன்னர் ராணாவிற்குச் செய்து கொடுத்த சத்தியம் காரணமாக இன்றும் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு காட்சியில் குறிப்பிடுகிறார்கள். என்றோ செய்து கொடுத்த சத்தியத்தை இன்றைக்கும் மீறக்கூடாது என்பதற்காகவே நாடோடிகளாக வாழ்கிறார்கள்.
இவர்களின் பிள்ளைகள் பள்ளியில் படிக்க இயலாத சூழல். கூடார வாழ்க்கையில் இவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், கட்டாய வெளியேற்றம் குறித்தும் ஆவணப்படம் விளக்குகிறது

ஆவணப்படத்தில் அவர்கள் கூட்டமாக மாட்டுவண்டியில் பயணம் செய்கிறார்கள். தற்காலிக இருப்பிடத்திற்காக கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் பராம்பரிய திருமண நிகழ்வு ஒன்றும் காட்சிப்படுத்தபட்டுள்ளது. இரும்பு பொருட்களை உலையில் உருக்கித் தயார் செய்வது, அவற்றைச் சந்தையில் விற்பனை செய்வது, குடிநீருக்காக அலைந்து திரிவது, தங்கள் நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளைக் கைவிடாமல் தொடருவது என காடியா லோஹர் வாழ்வின் பல்வேறு முகங்களை டீனா பதிவு செய்துள்ளார். இவர்கள் சனிக்கிழமையில் இரும்பை வாங்குவதோ விற்பதோ கிடையாது. அது விலக்கபட்ட நாள் என்று ஒருவர் குறிப்பிடுகிறார்.
“நாங்கள் நடைபாதையில் வாழ்கிறோம். தூசியில் உறங்குகிறோம், தூசியை உண்கிறோம்… தூசியே எங்கள் தலைவிதி.” என்று ஒருவர் ஆவணப்படத்தில் ஆதங்கப்படுகிறார்.
அதிநவீன வாழ்க்கையைக் கொண்ட இந்தியா ஒரு புறம் என்றால் அதன் மறுபுறத்தில் இப்படி அடிப்படை வாழ்வாதாரங்கள் கூட இல்லாத. கல்வி மறுக்கபட்ட நாடோடி சமூகமும் வாழ்கிறார்கள் என்பதை ஆவணப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது