யானையின் பல்


தேக்கடியில் உள்ள வனஉயிர் காட்சியகம் ஒன்றில் யானையின் பல்லை முதன்முறையாக பார்த்தேன்.


சிறு வயதில்  பல்தேய்க்க மறுக்கும் சிறார்களை கேலி செய்வதற்காக வீட்டில் யானை எல்லாம் என்ன பல்லா தேய்கிறது என்பார்கள்.


அந்த நாளில் யானைக்கு எத்தனை பல் இருக்கிறது என்ற கேள்வி எனக்குள் எழும். ஆனால் யாரிடம் கேட்டாலும் அதற்கு பதில் இருக்காது. ஆகவே அக்கேள்வி அப்படியே புதையுண்டு போயிருந்தது


வேறுவேறு அடர்ந்த காடுகளில் பிறகு பலமுறை யானைக்கூட்டங்களை  கண்டிருக்கிறேன். யானையில் ஏறி கானக உலா சென்றிருக்கிறேன். அப்போதும் கூட யானையின் கம்பீரம் ஏற்படுத்திய மயக்கத்தில் அதன் பல்லை அறிவது மறந்து போயீருந்தது.


இந்த முறை வனஉயிர் பாதுகாவலர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் யானையின் பல்லை தான் காட்டுவதாக சொல்லி இறந்து போன யானை ஒன்றின் பல்லை கொண்டு வந்து என் கையில் தந்து இது தான் யானையின் பல் பாருங்கள் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. மூன்று கிலோ எடைக்கும் மேலாக இருக்கும். செதுக்கு கல் போன்ற வடிவில் இருந்தது.


ஒரு நாளும் நம் எவராலும் கையில் தொட முடியாத யானையின் பல்லை சுமந்தபடியே நின்றிருந்தேன். என்றோ இறந்து போன அந்த யானை ஆணா பெண்ணா? எந்த வயதில் இறந்தது. இறந்த பிறகும் அது இருந்து கொண்டேயிருக்கிறதே என்று ஏதோ யோசனைகள் உருவாவதும் அழிவதுமாக இருந்தன .


யானையின் பல் மிக ஆச்சரியமாக இருந்தது. தேர்ந்த அரை இயந்திரம் ஒன்றின் உதிரிபாகம் போல தோணியது. அந்த பற்கள் எவ்வளவு கரும்புகள், மரங்கள் தழைகள் அரைத்திருக்கும். பல்லை கையில் தடவிப்பார்த்தேன். கடற்குச்சியில் காணப்படும் சொரசொரப்பும் உறுதியும் இருந்தது.



யானைக்கு மொத்தம் நாலு பற்கள்.  மேலே இரண்டு கீழ்தாடையில் இரண்டு. ஆனால் ஆறு முறை பல் விழுந்து முளைக்க கூடியது.  ஆகவே ஒரு யானை தன் வாழ்நாளில் மொத்தம் 24 பற்கள் கொண்டிருக்கும். டன் கணக்கில் அரைத்துக் கொண்டே இருக்க கூடியவை என்பதால் பற்கள் வேகமாக தேய்ந்து விடக்கூடியவை. யானையின்  பற்கள் மேலும் கீழுமாக அசைந்து அரைக்ககூடியவை என்று விளக்கி கொண்டிருந்தார் வனஉயிர்காவலர்


என் கையில் உள்ள யானையின் பல் எப்போது எடுக்கபட்டது என்று கேட்டேன். நிச்சயம்  முப்பது வருடங்களுக்கு முன்பாக இருக்ககூடும் என்றபடியே காட்டில் இறந்து போன யானையின் உடல் எலும்புகள் இவை என  மற்ற எலும்புகளை காட்டினார். ஒரு குவியாக அந்த எலும்புகள் காட்சிக்கு வைக்கபட்டிருந்தன. அப்படியொரு யானையை நான் ஒரு போதும் பார்த்தில்லை. யானை என்பது இத்தனை எலும்புகள் ஒன்று சேர்ந்த ஒன்றா என்று மறுபடியும் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.


யானையின் பல்லை எளிதாக அகற்ற முடியாது. யானைக்கு பல்லில் ஏதாவது வலி உருவானால் அது மூர்க்கம் கொண்டுவிடும். அறுவை சிகிட்சை செய்து குணப்படுத்துவது கூட சிரமமான செயலே என்றார்.


நாயை தவிர வேறு மிருகங்கள் தன் பல்லை தொடுவதற்கு நம்மை விடுவதில்லை. உடனே மூர்க்கம் கொண்டுவிடுகின்றன.


உயிருள்ளது போது யாராலும் தொடப்படாத அந்த யானையின் பல் ஏனோ மிக வசீகரம் தருவதாகவே இருந்தது.


காடு அதிர நடந்த யானையின் பாத தோல்கள் உலர்ந்த தாமரை இலை போல கிடந்தது. அதன் நகங்களில் படிந்த செம்மண் இன்றும் அப்படியே இருந்தது.



எலும்புகளில் இருந்து ஒரு யானையை என் மனதில் உருவாக்கிக் கொண்டிருந்தேன். அது நிசப்தமாக அந்த நாள் முழுவதும் நான் கானகத்தில் அலைவுற்ற போது எனக்குள்ளே நடந்து கொண்டேயிருந்தது.


***


 

0Shares
0