ரிவேரா வளாகம்.

கனடா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் அதிகம் நான் பார்வையிட்டது  அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களையே, குறிப்பாக பிகாசோவின் நூற்றுக்கும் மேற்பட்ட ஒவியங்கள், ரெம்பிராண்ட், வான்கோ,  டாலி,  கோயா, பிரைடா காலோ, மடீசி,  வெர்மர், ரெனார், பால்காகின், ரூசோ, பிளேக், எட்கர் டீகாஸ், புரூகேல், வில்லியம் பிளேக், மிரோ, காடீன்ஸ்கி, முன்ச், கிளிம்ட், எட்வர்ட் ஹாபர், மார்சல் டச்ஹாம், பால் செசான், மார்க் செகால், மோடில்யானி, கமிலோ பிசாரோ, டூரர் போன்ற ஒவியமேதைகளின் படைப்புகளைக் கண்டது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம்,

டெட்ராய்ட் நகரில் உள்ள Detroit Institute of Arts ல் மெக்சிக ஒவியரான டியாகோ ரிவேரா (Diego Rivera) வரைந்த பிரஸ்கோ ஒவியங்களைக் காண்பதற்காக நானும் பாஸ்கரும் ஹரியும் மூர்த்தியும் சென்றிருந்தோம்,  இந்த கலைக்கூடம் ஹென்றி போர்ட்டின் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்ட ஒன்று, ஆகவே இதில் பல அரிய ஒவியங்கள் சேகரம் செய்யப்பட்டுள்ளன,

ரிவேரா நவீன ஸ்பானிய ஒவியமரபில் முக்கியமானவர், நீண்ட சுவரோவியங்களை வரைவதில் தேர்ந்தவர், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்ட ரிவேரா மெக்சிகப் பண்பாட்டு அடையாளங்களை, வரலாற்றை, தொன்மங்களை ஒவியங்களாக வரைந்தவர்,

மரபான சுவரோவியங்கள் பைபிள் சம்பவங்களை முதன்மைப்படுத்தி வரையப்படுபவை, இதற்கு எதிராக, நாத்திகரான ரிவேரா  நவீன இயந்திரங்களையும், தொழிற்கூடங்களையும்  யுத்தகால வாழ்வின் அடையாளங்களையும் ஒவியமாக வரைந்தார், இன்று ரிவேராவின் பிரஸ்கோ ஒவியங்கள் மெக்சிகோவின் தேசிய அடையாளங்களாக கொண்டாடப்படுகின்றன

மூன்று திருமணங்கள், நிறையக் காதலிகள், மிதமிஞ்சிய குடி மற்றும் கேளிக்கைகள் என்று வாழ்வை உற்சாகமாகக் கொண்டாடிய ரிவேராவை ஒரு கலக்காரனாகவே அடையாளப்படுத்துகிறார்கள், தன்னிடம் ஒவியம் கற்க வந்த இளம் மாணவியான பிரைடா காலோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார், பிரைடா இவரை விடவும் அதிகம் புகழ்பெற்ற ஒவியராக வளர்ந்த போது அவரோடு சண்டையிட்டு பிரிந்து வேறு பெண்ணுடன் வாழ்ந்தார், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரைடாவின் மீதான காதல் துளிர்க்கவே அவரோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தார், ரிவேராவின் ஒவியங்கள் எந்த நகரில் எல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவருக்கு கள்ளஉறவில் பிறந்த பிள்ளைகளும் இருப்பார்கள் என்று மெக்சிகர்கள் கேலி செய்யுமளவு வாழ்ந்தவர்,

ரிவேரா வரையும் உருவங்களும், தேர்வு செய்யும் வண்ணங்களும் தனித்துவமானவை, அகஉணர்ச்சிகளுக்கும், குறீயீட்டுத் தோற்றங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரும் இந்த ஒவியங்களில் அழிந்து வரும் இயற்கையே மையப்படிமமாக உள்ளது, அதன் குறியீடுகளாக பூக்களும் மரங்களும், கனிகளும் காட்சிபடுத்தப்படுகின்றன.

ரிவேரா வரையும் ஆண், பெண்களின் உருவம் இயல்பான உடல் அமைப்பு கொண்டிருப்பதில்லை, மிகையானது போலத் தோற்றம் தரும் உடலமைப்பையே இவர் வரைகிறார், காரணம் காண் உலகை அப்படியே வரைவதில்லை கலை, தனது ஒவியங்கள் தான் உலகை எப்படிப் பார்க்கிறேன், புரிந்து கொண்டிருக்கிறேன் என்பதில் இருந்தே உருவாக்கபட்டிருக்கிறது, செயல்களுக்கு ஏற்ப உடலின் இயல்பு மாறிவிடுகிறது, உறங்கும் போது நம் உடல் அடையும் நெகிழ்வு ஏன் நடக்கும் போது உணரப்படுவதில்லை, ஆகவே தான் உடல்களை அதன் நெகிழ்வு மற்றும் இறுக்கமான நிலைகளில் வரைவதையே விரும்புவதாக கூறுகிறார் ரிவேரா, அவர் நிர்வாண உடல்களை வரையும் போது கூட அவற்றில் ஒரு விதமான கனவுத்தன்மையே காணப்படுகிறது,

அக்டோபர் புரட்சியின் பத்தாம் ஆண்டினைக் கொண்டாடும் வகையில் மாஸ்கோவிற்கு சென்று தங்கி ஒவியங்கள் வரைந்தவர் ரிவேரா, மெக்சிகோவில் 1929ம் ஆண்டு இவர் ஸ்டாலினியக் கொடுமைகளை சித்தரிக்கும் ஒவியம் ஒன்றை வரைந்த காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டார், ரிவேராவின் ம்யூரல்கள் புகழ்பெறத்துவங்கியதை ஒட்டி அவரை அமெரிக்க கலைக்கூடங்கள் தங்களுக்கான பிரத்யேகப் பணிக்காக அழைக்கத்துவங்கின,  எர்ன்ஸ்டே இவான்ஸ் எழுதிய ரிவேராவின் சுவரோவியங்கள் என்ற ஆங்கிலப்புத்தகம் அவரை அமெரிக்க கலைஉலகிற்கு அறிமுகம் செய்து புகழ்பெற வைத்தது,

சான்பிரான்ஸ்சிஸ்கோவிற்கு வந்து தங்கி ஒவியம் வரையும் பணி ஒன்றிற்கு ரிவேரா அழைக்கப்பட்டார், அந்த வருஷத்தில் தான் அவர் பிரைடா காலோவைத் திருமணம் செய்து கொண்டிருந்தார், ஆகவே ஒவியத்தம்பதிகள் இருவரும் அமெரிக்கா வந்து தங்கி சுவரோவியங்களை உருவாக்கினார்கள்,

1931ம் ஆண்டு நியூயார்க் ம்யூசியத்தில் நடைபெற்ற ரிவேராவின் ஒவியக்கண்காட்சி அவரை அமெரிக்காவின் மிகப்புகழ்பெற்ற ஒவியராக்கியது, இதனைத்தொடர்ந்து ஹென்றி போர்ட்டின் மகனான எட்சல் போர்ட் ரிவேராவை டெட்ராய்டின் கார் தொழிற்சாலையை மையப்பொருளாக கொண்டு ஒரு பெரிய சுவரோவியம் ஒன்றினை உருவாக்கும் பணிக்காக அழைத்தார், ஒரு ஆண்டுகாலம் டெட்ராயிட்டில் தங்கிக் கொண்டு ரிவேரா இந்தப் பணியை மேற்கொண்டார்

ரிவேராவின் பிரஸ்கோ ஒவியங்களில் இது முதன்மையான ஒன்று, ரிவேரா வளாகம் என்ற தனிக்கூடம் ஒன்றின் நான்கு சுவர்களில் இந்த ஒவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன,

பிரஸ்கோ ஒவியங்களைக் காண்பது நவீன கவிதையைப் புரிந்து கொள்வதைப் போன்ற ஒன்றே, நேரடியாக, அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது, கவிதை தரும் அனுபவம் போல அதன் குறியீட்டுத் தளமும் சொற்களுக்குள் உள்ள இணைவும் அதன் உள்ளார்ந்த பொருளும், கற்பனையும் ஒவியத்தைக் காண்பதற்கும் முக்கியமானது, 

உருவங்களின் வழியே அர்த்தமாகும் ஒரு தளமும், குறியீடுகளின் அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டிய மறுதளமும், வரலாற்றையும் பண்பாட்டையும் அரசியலையும் அறிந்து கொண்டு ஒவியத்தைக் காண்கையில் வெளிப்படும் உள்ளார்ந்த அர்த்தம் இன்னொரு விதத்திலும், தேவாலயங்களில் வரையப்பட்ட பிரஸ்கோ ஒவியங்களில் இருந்து எவையெல்லாம் மாற்றம் கொண்டிருக்கின்றன என்று ஒப்பிட்டு ஆராயும் போது ஏற்படும் அதிசயம் பிறகொரு தளத்திலுமாக, எண்ணிக்கையற்ற உள் அடுக்குகளை கொண்டவை இந்த வகை ஒவியங்கள், ஆகவே இவற்றைப் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்ற பொது ரசனைக்குள் அடக்கமுடியாது

பிரஸ்கோ ஒவியங்களைக் காண்பதற்கு அடிப்படைப் பயிற்சிகள் அவசியமானவை என்றே கருதுகிறேன், இல்லாவிட்டால் அதன் நுட்பங்கள் புரிந்து கொள்ளப்படாமலே கடந்து போய்விடக்கூடும்,

சிம்பொனி இசையில் எப்படி பல்வேறு வாத்தியக்கருவிகள் ஒரே ஒத்திசைவில் ஒன்றாக வாசிக்கப்படுகிறதோ, அது போலவே ஒவியத்திலும் வண்ணங்களும் உருவங்களும் பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் ஒன்று சேருகின்றன, விலகிப்போகின்றன, ஆகவே அவற்றை உள்வாங்கிக் கொள்ள பார்வையாளன் ஆழ்ந்து முயற்சிக்க வேண்டும்  

ரிவேராவின் ஒவியங்களைப் புரிந்து கொள்ள மெக்சிக ஒவியமரபை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம், மெக்சிகோவின் ஒவியமரபில் பூர்வகுடிப் பண்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது, அதே நேரம் மரபாக கைக்கொள்ளப்பட்டு வந்த ஐரோப்பிய ஒவிய உலகின் பாதிப்புகளும் அதிகமுண்டு, இத்தாலிய சுவரோவிய மரபையும் மெக்சிகப் பூர்வகுடி சித்திரங்களின் வண்ணங்கள், கோடுகளையும் ஒன்று கலந்து புதிய கலைவெளிப்பாட்டினை மேற்கொண்டவர் ரிவேரா

ரிவேரா வளாகத்தினுள் நுழைந்தவுடன் நம்மை வியப்பிற்குள்ளாக்குவது 75 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்ட சுவரில் காணப்படும் ஒவியங்களின் பிரம்மாண்டமான உருவங்களும் அதற்கு தேர்வு செய்யப்பட்ட வண்ணங்களுமாகும், நான்கு சுவர்களிலும் தனித்தனிப் பேனல்களாக மொத்தம் 27 ஒவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன

இதில் பிறப்பும் மரணமும்  பற்றிச் சித்தரிக்கும் ஒவியங்கள் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள சுவர்களில் எதிரெதிராக இடம்பெற்றிருக்கின்றன, இந்த இரண்டிற்கும் இடையில் இயந்திரங்களுக்கும் மனிதனுக்குமான உறவை, தொழில்மயமான உலகின் நெருக்கடிகளைச் சித்திரமாக வரைந்திருக்கிறார்,

பிரம்மாண்டமான கார் தொழிற்சாலையின் உற்பத்திச் செயல்பாடு ஒரு சுவர் முழுவதும் வரையப்பட்டிருக்கிறது, அதில் உறைந்து போன நிலையில் உள்ள தொழிலாளர்களின் முகங்களில் காணப்படும் உணர்ச்சிகள் அற்புதமானவை, அவர்கள் வேறுவேறு இனத்தையும் தேசத்தையும் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்க அவர்களின் உடைகளையும், இன அடையாளங்களையும் ரிவேரா வரைந்திருக்கிறார்

விவசாயம் தான் மனிதனின் முதல்தொழில்நுட்பம், அதிலிருந்து இன்றைய நவீன கனரகத் தொழிற்சாலைகள் எப்படி உருவாகியிருக்கின்றன என்பதைக் குறிக்கும் படியாக  ஒரு பேனலின் அடிப்பகுதியில் விவசாயக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன

ஒவியத்தின் மேற்குபகுதியில் யுத்தத்தில் பயன்படுத்த விமானங்களும் விஷவாயுவிற்கான மூகமூடிகளும் வரையப்பட்டுள்ளன, போர்ட் நிறுவனம் தான் யுத்த காலத்தில் விமானங்களை உற்பத்தி செய்து தந்தது என்பதைக் குறிக்க இதை உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள், இந்த ஒவியங்களுடன் ஒரு பக்கம் அமைதிப்புறாவும் மறுபக்கம் வல்லூறு ஒன்றும் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன

போர்ட் கம்பெனி பிரேசிலில் ரப்பர் தோட்டங்களை அமைத்தது அதை நினைவூட்டும் விதமாக ரப்பர் பால் வடிக்கும் ஆளின் தோற்றம் வரையப்பட்டுள்ளது, அது போல வணிக காரணங்களுக்காக அமைக்கப்பட்ட ரயில்பாதைகளும் அதன் வருகையால் ஏற்பட்ட தொழிற்துறையின் மாற்றங்களும் வடக்கு மற்றும் தெற்குச் சுவர்களில் காணப்படுகிறது, நீராவி இயந்திரங்களின் வருகை, மின்மயமாக்கப்படல், தொழிலாளர்களை நிர்வாகம் செய்யும் உயரதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அதைப் பார்வையிடும்  எட்சல் போர்ட் ஆகியோரும் இச் சுவர்களில் இடம்பெற்றுள்ளனர்,

இவ்வளவு பெரிய பிரஸ்கோவில் மிகக் குறைவாகவே பெண் உருவங்கள் வரையப்பட்டுள்ளன, அதிலும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும்  பெண்கள் ஒரு புறமும், புதிய ரகக் கார் உருவாக்கப்படுவதை வேடிக்கை பார்க்க வந்துள்ள பெண்களின் தோற்றம் மறுபக்கமும் காணப்படுகிறது

அஸ்டெக்குகளின் கடவுள் உருவமான Coatlicueவின் சித்திரம்  ஒரு சுவரில் வரையப்பட்டுள்ளது, அதற்கு மாற்றாக நவீன யுகத்தின் கடவுள் என்பது இயந்திரங்களே, இவை மனித உழைப்பைக் காவு வாங்குகின்றன என்று குறிப்பதற்காக இயந்திரங்கள் புராதன கடவுளின் தோற்றத்திற்கு இணையாக வரையப்பட்டிருக்கிறது

மருத்துவதுறையின் முன்னேற்றம் அது சார்ந்த மருந்தியல் துறையை டெட்ராயிட்டில் வளர்ச்சி பெறச் செய்த்து, அதைக் குறிப்பதற்காகவே மருந்தாளுனர்கள், மற்றும் மருந்து தயாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன

இந்த  ஒவியத்தொகுதியில் அமெரிக்காவின் தொழில்துறை வளர்ச்சியின் சாதக பாதகங்கள் இரண்டுமே வரையப்பட்டுள்ளன,  இவ்வோவியத்தில் கிறிஸ்துவ மரபின் புனிதக் குறியீடுகள் கேலி செய்யப்பட்டுள்ளன, இது மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கண்டனக்குரல்கள் எழுந்தன, அது போலவே ரிவேரா ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் ஒவியம்  அவரது இடதுசாரி நிலைப்பாட்டின் வெளிப்பாடாக உள்ளது, அமெரிக்காவிற்கு எதிராக வரையப்பட்ட ஒவியமிது என்றும் மறுப்புக்குரல்கள் எழுந்தன,

இந்த ஒவிய உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த எட்சல் போர்ட்க்கும் ரிவேராவின் ஒவியங்கள் குறித்து மாற்றுக் கருத்துகள் இருந்தன, ஆனாலும் அவர் அந்த ஒவியத்தொகுதி அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் அதன் கலை மேன்மைக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார், இன்றும் அது தொடரப்படுகிறது.

இன்று டெட்ராயிட் நகரம் கடுமையான பொருளாதாரப் பின்னடைவில் சிக்கியுள்ளது, இந்தச் சூழலில் இவ்வோவியத்தின் முக்கியத்துவம் கூடுதலாக உள்ளது, காரணம் டெட்ராயிட்டின் வளமையான கடந்த காலம் எப்படியிருந்தது என்பதற்கு இதுவே சாட்சி,

ரிவேரா இயந்திரங்களின் சிக்கலான ஒருங்கிணைப்பை ஒரு அடர்ந்த புதிர்பின்னல் போல வரைந்திருக்கிறார், தொழில்கூடமென்பது இரும்பினால் உருவாக்கபட்ட கானகம், அதற்குள் வேலை செய்யும் தொழிலாளர்களின் முகத்தில் வெளிப்படும் தன்னை மறந்த ஈடுபாடும், வேலையின் ஒத்திசைவும் அபராமான அழகோடு வெளிப்படுகிறது

சார்லி சாப்ளினின் மார்டன் டைம்ஸ் படத்தில் ஒரு தொழிற்சாலை காட்டப்படுகிறது, அதில் சாப்ளின் ஒரு தொழிலாளராக வேலை செய்து கொண்டிருப்பார், ஒரு முறை அவர் எதிர்பாராமல் இயந்திரத்திற்குள் மாட்டிக் கொண்டுவிடவே அவரையும் ஒரு திருகாணியாகக் கருதி மற்றொரு தொழிலாளர் அதை முடுக்கிக் கொண்டிருப்பார், அந்தக் காட்சி ஒரே நேரத்தில் வேடிக்கையான மனநிலை ஒன்றையும், தொழிற்சாலைகளுக்கு மனிதன், இயந்திரம் என்ற பேதமில்லை என்பதையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்

ரிவேராவின் இந்த ஒவியத்தொகுதியைக் காணும் போதும் அத்தகைய மனநிலையே ஏற்பட்டது. அமெரிக்க தொழில்துறை வளர்ச்சியின் மீதான விமர்சனமும் வியப்பும் ஒன்றுகலந்து இவ்வோவியத்தில் காணப்படுகிறது என்பதே உண்மை

ரிவேரா இந்த ஒவியங்களை வரைந்து கொண்டிருந்த காலத்தில் தான் பிரைடா காலோவிற்கு கர்ப்பச்சிதைவு ஏற்பட்டது, அதனால் மனவருத்தம் அடைந்த  ரிவேரா, பிறக்காமல் போன தனது குழந்தையின் ஏக்கத்தையும் இந்த ஒவியத்தில் ஒரு காட்சியாக உருவாக்கியிருக்கிறார்

ஒவியங்களை வரைவதற்கு முன்பாக போர்ட் கார் தொழிற்சாலையை நேரடியாகப் பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்ட ரிவேரா அந்தக் காட்சிகளை துல்லியமாக தனது ஒவிய உலகிற்குள் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்.

இரும்பு, நிலக்கரி, சுண்ணாம்புக்கல், மற்றும் மணல் ஆகிய நான்கு இயற்கையான பொருள்களைக் கையில் ஏந்திய நான்கு கைகள் இந்த ஒவியத்தில் காணப்படுகின்றன, இவை நான்கு வேறுபட்ட இனங்கள், வேறுபட்ட தொழில்களை மேற்கொண்டன என்பதைக் குறிக்கவே பயன்படுத்தியிருக்கிறார் ரிவேரா என்கிறார்கள்

டெட்ராய்ட் அருங்காட்சியகம் ஒரு வாரம் முழுவதும் பார்த்தாலும் பார்த்து முடிக்கமுடியாத ஒன்று, அவ்வளவு முக்கியமான ஒவியங்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பல நீண்ட பகல்கொண்ட நாட்கள் இப்போது என்பதால் இரவு ஒன்பது மணி வரை கூட பகல்வெளிச்சம் பிரகாசமாக இருக்கிறது, அன்றும் ரிவேரா வளாகத்தை பார்த்து விட்டு வெளியே வந்து ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்பில் அமர்ந்தபடியே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துவரும் டெட்ராயிட் நகரின் வீதிகளில் போகின்ற வருகின்றவர்களை நிறுத்தி காசு கேட்கும் போதையடிமைகள்  பலரையும் காணமுடிந்தது.

கடுமையான வேலைநிறுத்தம், வறுமை காரணமாக ஊரில் கால்வாசிப்பேர் இடம்பெயர்ந்து போய்விட்டார்கள் என்றார்கள், ஒரு காலத்தில் உலகப்புகழ்பெற்ற நகரமாக இருந்த டெட்ராயிட் இன்று ஒரு புதைமேடு போலதானிருக்கிறது என்றார் ஹரி, இவர் டெட்ராயிட் நகரின் நிர்வாகப்பணியில் பணியாற்றுகிறார், நகரம் எப்படி தனது கடன்சுமையில் இருந்து எப்படி மீட்கப் போராடுகிறது என்பதை விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார் ஹரி, அவர் குறிப்பிட்ட அத்தனை பிரச்சனைகளின் வேரையும் ரிவேரா தனது ஒவியத்தில் காட்சிப்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தேன்.

ரிவேராவின் ஒவியங்களைக் காண்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக டொரன்டோவில் நடைபெற்ற பிகாசோவின் ஒவியக்கண்காட்சியை ஒன்டாரியோ கலைக்கூடத்தில் கண்டிருந்தேன், ஆகவே அவர்கள் இருவருக்குமான ஒற்றுமைகள், மற்றும் ஒவியங்களின் இணைநிலை குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன், I’ve never believed in God, but I believe in Picasso. என ரிவேரா ஒரு முறை சொன்னது நினைவில் வந்து போனது.

வீழ்ச்சியடைந்த நகரங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன, அவற்றின் வீதிகள் சாம்பல் படிந்தவை, நகரவாசிகள் கடந்தகாலத்தின் சங்கீதத்தை துயரத்தோடு தங்களது மனதிற்குள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்ற பெட்ரோல்ட் பிரெக்டின் வரிகள் மனதில் தோன்றி மறைந்தன.

•••

0Shares
0