வளரும் புத்தகங்கள்

மூன்று நாட்களுக்கு முன்பு என் கனவில் இரண்டாம் வகுப்பில் நான் படித்த பாடல் ஒன்று அப்படியே வரிமாறாமல் நினைவிற்கு வந்தது. அதைப் பாடிய டீச்சர் முகமும் குரலும் கூட எனக்கு துல்லியமாக கேட்டது. விடிந்து எழுந்து உட்கார்ந்தவுடன் அந்தப் பாடலை கடகடவென கணிணியில் அடித்துவிட்டேன்.

நம்பவே முடியவில்லை. எத்தனை வருசங்களாகிவிட்டது. எப்படி இந்தப் பாடல் மனதில் பசுமையாக இருக்கிறது. அதைப் பாடும்போது எங்கே கை அசைக்க வேண்டும் என்பது கூட நன்றாக நினைவிருக்கிறது. மறுபடி மறுபடி அதைப் படித்து பார்த்தபடியே இருந்தேன் சரியான வரிகள் தானா என்று ஒப்பிட்டுப் பார்க்க புத்தகம் எதுவும் இப்போது என்னிடமில்லை.

சிங்கம் ஒரு நாள் இரை தனைத்

தேடித்திரியும் வேளையில்

அந்த வழியில் ஒரு முயல்

அயர்ந்து தூங்க கண்டது

இந்த முயலைக் கொல்லுவோம்

என்று சிங்கம் எண்ணுகையில்

அந்த வழியில் வந்தவோர்

அழகு மானைக் கண்டது.

துள்ளியோடும் மானையே

துரத்தி கொல்வோம் முதலிலே என்று சிங்கம் எண்ணியே

திடுதிடுவென்று ஒடவே

சப்தம் கேட்டு முயலுமே சட்டென்று விழித்தது

செத்துப் பிழைத்தோம் என்றது

சென்று எங்கோ மறைந்தது

பள்ளம் மேடு யாவிலும்

பாய்ந்து சிங்கம் ஒடியும்

துள்ளியோடும் மானையே

துரத்தி பிடிக்கவில்லையே

தோற்றுப் போன சிங்கமோ

தொங்கிப் போன முகத்துடன்

கையில் கிடைத்த பொருளினை

காற்றில் பறக்கவிட்டேனே

அய்யோ இரண்டும் போயின

அதிக ஆசை கெடுத்ததே.

**

சிறுவயதில் படித்த புத்தகங்களை தற்போது கையில் எடுத்து பார்க்கும் போது குள்ளர்களை போல சுருங்கிப் போய் ரொம்பவும் சின்னதாக விட்டதாக தோன்றுகிறது. பத்து வயதில் ஒரு புத்தகத்தை பகலில் படிக்கத் துவங்கி அரைமணி படிப்பது பிறகு விளையாட்டு என்று ஒருவாரம் வரை வைத்து படிப்பேன்.

புத்தகத்தின் கடைசிப் பக்கங்களை நெருங்கி வரும்போதே மனது குதூகலிக்க துவங்கிவிடும். படித்த புத்தகத்தைப் பற்றி உடனே யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருக்கும். தேடிச் சென்று உடன்படிக்கும் மாணவர்களை அழைத்தால் எவருக்கும் புத்தங்களைப் பற்றி பேச விருப்பமிருக்காது. கதை சொல்லும் போது கூட இது புத்தகக் கதையா, இல்லை நீயாகச் சொல்கிறாயா என்று கேட்பார்கள். படித்த கதை என்றால் அது வேண்டாம் என்று சொல்லி நாமாக கதை பேசலாம் என்பார்கள்.

புத்தகங்களைப் படித்து விட்டு மௌனமாக இருப்பது பெரிய கொடுமை. அதை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும். வழியில்லாமல் கிணற்றின் படியில் உட்கார்ந்து கொண்டு வெறித்து பார்க்கும் தவளையிடம் படித்த புத்தகங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். சில வேளைகளில் மேயும் கோழிகளிடம் கதை சொல்லியிருக்கிறேன். கட்டிப்போடப்பட்ட ஆட்டின் முன்னால் கிடந்த ஆட்டுஉரலில் உட்கார்ந்து கொண்டு அதனிடம் மாய இளவரசியைப் பற்றி பேசியிருக்கிறேன். தானே பேசிக் கொள்ளும் குழந்தைகள் கற்பனையானவர்கள்.

ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்வதற்கு  அந்த வயதில் அதன் அட்டையே காரணமாக இருக்கிறது. அதிலும் மந்திரவாதிகள், மாயமான உலகம், அல்லது பயமுறுத்தும் பேய்கள், கொலைகள், ரத்தம் படிந்த கத்தி அல்லது ஒற்றை கண் கொண்ட அரக்கன் என்ற சித்திரங்களை கண்டால் உடனே  படிக்க கையில் எடுப்பேன்.

முகப்பு சித்திரங்களுக்கும் கதைக்கும் பெரும்பாலும் தொடர்பேயிருக்காது. பாண்டிபஜார் படுகொலை என்ற புத்தகத்தின் அட்டையில் ஒரு கத்தி  மனிதனின் முதுகில் குத்தியிருக்க அவன் கிழே விழுந்து கிடக்கும் சித்திரம் இன்றும் நினைவில் இருக்கிறது. கதை மறந்து போய்விட்டது. எங்கே படித்தேன் என்பது கூட நினைவில் இல்லை. அன்று முப்பத்தி ரெண்டு பக்கம் உள்ள புத்தகம் ஒன்றை படித்து முடிப்பதை பெரிய சாதனையாக நினைத்திருந்தேன். பெட்டிக்கடைகளில் காமிக்ஸ் வாசிக்க கிடைக்கும். அங்கேயே உட்கார்ந்து வாசிக்க வேண்டும். ஒரு புத்தகம் வாசிக்க பத்து பைசா. அதற்காக ஒரு மர ஸ்டுல் போட்டிருப்பார்கள். அவசர அவசரமாக காமிக்ûஸ வாசித்துமுடிப்பேன். காகிதங்களின் வழியே படங்கள் ஒடும் அதிசயமது.

.ஒரு நாளைக்கு ஐந்து காமிக்ஸ் புத்தகங்கள் படித்திருக்கிறேன். அன்று ஆசையாக தேடிப்படித்த புத்தகங்களை மறுபடி பாக்கும் போது இது தானா அது என சந்தேகமாக இருக்கின்றது. இன்று பார்ப்பதைப் விட மிகப்பெரியதாக இருந்தது போலவே தோன்றுகிறது.

ஒரு வேளை நான் வளர துவங்கிய போது நான் படித்த புத்தங்கள் சுருங்க துவங்கிவிட்டதா என்ன? சிறுவயதின் புத்தங்களை இன்று வாசிக்கையில்  மனம் அதிகம் கிளர்ச்சி அடையவில்லை. அதை வாசித்த பரபரப்பு இன்று உருமாறி விட்டிருக்கிறது.

பள்ளிவயதில் நூலகங்களில் இருந்து சிறுவர்கள் புத்தகங்களை இரவல் எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அதற்காக யாராவது ஒரு பெரிய ஆளை அழைத்துக் கொண்டு போக வேண்டும்.  நாமாக உறுப்பினராகவும் முடியாது. தனியே சிறுவர்ளுக்கு என்று நூலகமும் கிடையாது. எரிச்சலாக இருக்க கூடிய செயலது.

காரணமில்லாமல் நூலகர் புத்தகம் தர மறுப்பதோடு சிறுவர்கள் புத்தகங்களைத் தொலைத்துவிடுவார்கள் என்று கோபபடுவார். உண்மையில் சிறுவர்கள் புத்தகங்களைத் தொலைப்பதில்லை. மாறாக திருடிக் கொள்ளவோ, தனக்கானது என்று ஒளித்து வைத்துக் கொள்ளவோ தான் ஆசைப்படுகிறார்கள். அதை நேரடியாகச் சொல்ல முடியாது என்பதால் தொலைத்துவிட்டதாக பொய் சொல்லுவார்கள். அதை ஏன் பெரியவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்று அந்த நாட்களில் ஆத்திரமாக வரும்

நூலகங்களில் சிரிக்க கூடாது என்ற விசித்திரமான அறிவிப்பு பலகை தொங்குவதை கண்டிருக்கிறேன். சிரிக்க கூடாத இடம் என்று தனித்து அடையாளப்படுத்தபட்ட ஒன்றை அப்போது தான் கண்டேன். கோவில்களில் சிரிக்கலாம் பள்ளிக்கூடங்களில் சிரிக்கலாம், வீதியில் சிரிக்கலாம், ஏன் மருத்துவ மனையில் கூட சிரிக்கலாம் ஆனால் ஏன் நூலகத்தில் மட்டும் சிரிக்க கூடாது. சிரிக்காமல் எப்படி படிப்பது.  கிராம நூலகத்தில் சிறுவர்கள் படிப்பதற்கு என்று தனிஇடமோ இருக்கைகளோ கிடையாது. அந்த மேஜைகளில் அலுப்பும் சலிப்பும் படிந்து கிடந்தன.

அதில் உட்கார்ந்தவுடனே தானே தூக்கம் கவ்வி பிடித்துகொண்டுவிடுமோ என்று பயமாக இருக்கும். காரணம் அப்படியான சிலர் நூலகத்திற்கு தினமும் வருவார்கள். அவர்கள் தடியான புத்தகம் ஒன்றை பிரித்து வைத்துக் கொண்டு விழித்தபடியே தூங்குவார்கள். மீன்கள் தான் அப்படி தூங்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன். மனிதர்களும் கண்திறந்தபடியே தூங்குவதை நூலகத்தில் தான் கண்டேன். ஒரு நாள் கூட அவர்கள் அயர்ந்து தடுமாறி சரிந்தது கிடையாது. உறக்கத்தை கூட கட்டுப்படுத்தி வழிநடத்தும் மனிதர்கள் அவர்கள்.

அந்த வரிசை தாண்டினால் லாட்டரி சீட்டின் ரிசெல்ட் பார்க்க நூலகம் வந்தவர்கள். அவர்கள் தங்கள் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளதா என்று நூறு முறை திரும்ப திரும்ப நாளிதழை புரட்டிபார்ப்பார்கள். நூலகத்திற்கு வந்து புத்தகம் எடுக்கும் பெண்கள் குறைவு. ஆகவே அப்படி யாராவது வரும்போது நூலகம் சற்று விழிப்பு நிலைக்கு வரும்

பெரியவர்கள் ஒன்றாக அமர்ந்து படிக்க நீளமான ஒற்றை மேஜை போடப்பட்டிருக்கும். அங்கே  அமர்ந்து படிக்க துவங்கினால் நம்மை யாரோ பார்த்து கொண்டேயிருக்கிறார்கள் என்ற குறுகுறுப்பு வந்துவிடும். ஆகவே அவர்கள் அறியாமல் படிக்க இடம் தேட வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் மட்டுமே படிக்க தரப்படும் என்று வேறு நூலகர் எச்சரிக்கை செய்வார். எந்தப் புத்தகத்தைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் தலைப்பை வைத்து நூலை நானாக கற்பனை செய்து கொள்வேன். அப்படி தான் ஒருநாள் இவான்கோவை கையில் எடுத்தேன்.

வால்டர் ஸ்காட் பற்றியோ, அந்த நூலைப் பற்றியே எதுவுமே தெரியாது. ஆனால் அந்த பெயர் வசீகரமாக இருந்தது. இரண்டு பக்கத்தை புரட்டினேன்.  ஒருவரியை படிக்க முடியவில்லை. பின்மண்டையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலிக்க துவங்கியது. வெறுமனே புத்தகத்தை மேலும் கீழுமாக புரட்டியபடியே இருந்தேன். இதை எப்படி எழுதியிருப்பார் என்று நானே கற்பனை செய்து கொண்டேன். அந்தப் புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை கண்ணை மூடிக்கொண்டு மனதில் ஒரு எண்ணை நினைத்து கொண்டு திறப்பேன். நான் நினைத்த எண்ணும் பக்கமும் சமமாக வந்தால் நான் வெற்றி பெற்றதாக அர்த்தம். இந்த விளையாட்டினை நூலகர் கண்டுபிடித்துவிட்டார்.

ஒரு வாரம் என்னை நூலகத்திற்குள் அனுமதிக்கவேயில்லை. வீட்டில் இருந்த புத்தகங்களை மறுபடி வாசிக்க ஆரம்பித்தேன். சின்ட்ரெல்லா எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். ஏன் தேவதை சிறுமிகளுக்கு மட்டுமே உதவுகிறாள் என்று கோபமாக இருக்கும். சின்ட்ரெல்லாவை போல மாயக்காலணிகள் அணிந்து கொண்டு பறந்து சென்று வந்தால் எப்படியிருக்கும் என்று நானாக ஒரு கதையை மனதில் உருவாக்கத் துவங்குவேன். என் ஊரின் மீது சின்ட்ரெல்லா போல பறப்பது வேடிக்கையாக இருக்கும். என் கதையில் ஊரிலிருந்த கழுதை, நாய்கள், பசுக்கள் யாவும் பறக்க தெரிந்திருந்தன. ஒன்றோடு ஒன்று போட்டியிட்டன. மனது கனவின் தறியை நெய்தபடியே இருந்த நாட்கள் அது.

சிறுவயதில் புத்தகங்களோடு நெருக்கம் கொள்பவர் பின்னாளில் மிகவும் தனிமையாகவே இருக்க விரும்புவார்கள். காரணம் புத்தகம் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாகிவிடும். நூலகத்தில் அமர்ந்து புத்தகம் என்னோடு பேசுவதை கேட்டிருக்கிறேன். அது உலகைப் பற்றிய எண்ணிக்கையற்ற கற்பனைகளை எனக்குள் உருவாக்கியது. உலக வரைபடம் போல வசீகரம் ஊட்டும் ஒன்றை இன்று வரை காணமுடியவில்லை. முழு உலகமும் இவ்வளவு தான் என்பது எவ்வளவு பெரிய விந்தை. ஏதேதோ ஊர்கள், கடல் மலைகள் என்று விரலால் உலகை சுற்றிவருவேன்.

ஒவ்வொரு நாட்டினையும் உற்று கவனித்து அது எப்படியிருக்க கூடும் என்று நானாக ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி கொள்வேன். எனது ஊரோ வீதிகளோ எதுவும் உலக வரைபடத்தில் இல்லை. அது பெரிய வருத்தமாக இருந்தது. எல்லா ஊர்களையும் உள்ளடக்கிய ஒரு வரைபடம் உருவாக்கபட வேண்டும். அப்படி உருவானால் அது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று நினைத்து கொள்வேன்.

பின்னாளில் போர்ஹேயின் ஒரு கதையை படித்த போது அதில் ஒரு சீன அரசன் அப்படியொரு மாபெரும் வரைபடத்தை உருவாக்க முனைந்ததை அறிந்தேன். முடிவற்று அந்த வரைபடம் நீண்டு போய்விடும் என்பது வியப்பாக இருந்தது.

உண்மையில் உலக வரைபடமும் உலக உருண்டையும் ஒவ்வொரு குழந்தையும் வைத்து வைத்து பார்த்துகொண்டேயிருக்க வேண்டும். அப்போது தான் உலகின் விஸ்தாரணம் நமக்கு புரியும். இல்லாவிட்டால் அவை வெறும் சொற்களாக சுருங்கிப் போய்விடும். வரைபடத்தை பார்த்து பழகியதால் பள்ளியில் வரைபடம் குறிப்பது மிக எளிதாக இருக்கும். பள்ளிவரைபடத்தில் கங்கை காவிரி நர்மதா என்று கோடுகள் போடுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு ஆற்றை எப்படி இரண்டு வளைந்த கோடுகளால் அடையாளப்படுத்திவிட முடியும் என்று சண்டையிட்டிருக்கிறேன்.

புத்தகங்கள் கிராமத்து சிறுவனாக இருந்த என்னை உருமாற்றத் துவங்கியது. நூலகங்களால் தான் வளர்க்கபட்டேன். யாரும் கையால் தொட்டுப் பார்க்காத யுனெஸ்கோ கூரியரை தேடிப் படிக்கும் சிறுவனாக என்னை வியப்போடு பார்ப்பார்கள். என்னிடம் ஏதோவொரு பிரச்சனை இருக்கிறது என்று நூலகர் பலமுறை ஆதங்கத்துடன் சொல்லியிருக்கிறார். புத்தகங்களின் மீதான ஈடுபாடு ஒரு மனிதனின் அகத்தை செழுமைப்படுத்தி வளர்க்ககூடியது என்பதே என் அனுபவம்.

அலெக்சாண்டரின் குதிரையைப் பற்றி படித்தபோது அது என் முன்னே ஒடுவது போல இருந்தது. பாபிலோனிய தொங்குதோட்டங்களில் நடந்து திரிவதைப் போல கனவு கண்டிருக்கிறேன். ஸ்டெப்பி புல்வெளியும் ஜிப்சிகளும் கனவில் வந்தார்கள். ருஷ்ய தேவதை கதைகள் மற்றநாடுகளின் சிறார் கதைகளை விட அதிகமான ஈர்ப்பை கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக ருஷ்ய புத்தகங்களில் உள்ள சித்திரங்கள். நீல நிற வானத்தில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பது போன்ற ருஷ்யசித்திரம் ஒன்றை பல வருசம் பாதுகாத்து வைத்திருந்தேன்.

பெரிய புத்தகங்களைப் படிப்பதால் அறிவாளியாகிவிட முடியும் என்ற தவறான கற்பனை எப்போதுமேயிருக்கிறது. அது எனக்கும் இருந்தது. இதற்காகவே  அப்படியான  ஆயிரம் பக்க புத்தகங்களைத் தேடி எடுத்து வருவேன். ஆனால் பெரிய புத்தகங்கள் மலைகளைப் போன்றவை. அவற்றை கண்ணால் பார்க்க தான் முடியும். படிக்க வேண்டும் என்றால் மலையேற்றம் போல நாம் அதிக முயற்சி செய்தாக வேண்டும்.

புத்தகத்திற்கு நிறைய வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசகனும் ஒரு வழியாகவே அதற்குள் நுழைகிறான். ஒரு வழியாகவே வெளியேறுகிறான். கதையின் துவக்கம் என்பது நுழை வாயில் அல்ல. மாறாக அங்கிருந்து நடக்கத் துவங்கினால் ஏதாவது புள்ளியில் கதையின் நுழைவாயில் தென்படும். அப்படி தான் கதை முடியும் இடமும். கடைசி வரி என்பது ஒரு தற்காலி நிறுத்தம் மட்டுமே. ஈடுபாடு கொண்ட வாசகன் கதையை நீட்டிக் கொண்டேயிருப்பான். எனக்குப் பிடித்தமான நிறைய புத்தகங்களுக்கு நான் கூடுதலாக சில பக்கங்கள் எழுதிப் பார்த்திருக்கிறேன். அந்த முடிவு என்னுடையது. வாசகன் அடையும் முக்கிய சுதந்திரம் இதுவே.

புத்தகங்களைப் படிப்பதற்கு எந்த குறுக்குவழிகளும் கிடையாது. அதன்வசம் நம்மை ஒப்படைப்பதைத் தவிர. புத்தகம் நம்மை அழைத்து செல்லும் வழிகள் விசித்திரமானவை. சொற்களை நம்பி நாம் முன்னேறிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு இசைக்கருவியைப் போன்றது. அதிலிருந்து ஒரு  தனித்துவமான இசை பீறிடுகிறது. நம் கண்கள் சொற்களின் மீது நகர்ந்து போவதால் அந்த இசை உருவாக்கபடுகிறது. புத்தகங்களின் இசையைக் கேட்டு பழகிவிட்டால் அதன் மயக்கம் நம்மைப் பற்றிக் கொண்டுவிடும். அந்த சந்தோஷத்திற்கு இணையாக வேறு எதையும் என்னால்  சொல்ல முடியவில்லை.

பள்ளிவயதில் படிக்க நினைத்து கிடைக்காத புத்தகங்களை இப்போது கடைகளில் பார்க்கும் போதும் அந்த ஏக்கம் தொடரவே செய்கிறது. ஆனால் அதை வாங்க மனதில்லை. இனி எதற்காக என்று மனம் அதைப் புறந்தள்ளிவிடுகிறது.

சிறுவர் புத்தகங்கள் சிலவற்றை மீண்டும் வாசித்து பார்த்தேன். அன்று எது மயக்கியதோ அது இன்று எளிமையாக இருக்கிறது. அன்று எது எளிமையாக இருந்ததோ அது இன்று மயக்குகிறது. அதே புத்தகம் தான் ஆனால் நான் தான் மாறிக் கொண்டேயிருக்கிறேன்.

சிறுவயதில் படித்த படக்கதை ஒன்று.

ஒரு பூனை ஒன்று நூல்கண்டை உருட்டிக் கொண்டிருக்கிறது. நூல் உருண்டு உருண்டு போகிறது. பூனை நூலின் பின்னாலே விரட்டி போகிறது. முடிவில் நூல் முடிந்துவிடுகிறது. பூனை நூல் எங்கே போனது என்று புரியாமல் திகைத்து போய் நிற்கிறது. அந்த திகைப்பு அற்புதமானது.இந்த சித்திரக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. எட்டே வண்ணச்சித்திரங்கள்.  வெறுமையை புரிந்து கொள்ள முடியாத பூனை தான் வாசகனின் மனது.

புத்தகம் என்பது வெறும் சொல் அல்ல அது ஒரு முடிவற்ற பயணம். நமது விருப்பமும் தேடுதலுமே அதற்கு முக்கியம். கடல்மாலுமிகளுக்கு மட்டும் தேவதைகளின் குரல் கேட்கும் என்பார்கள். அப்படி விருப்பமான வாசகர்களுக்கு கேட்க கூடியது புத்தகங்களின் பாடல்.

**

0Shares
0