ஹெமிங்வேயின் மூன்று நாவல்களும் பதினைந்து சிறுகதைகளும் தமிழில் வெளியாகியுள்ளன. அவரது Death in the Afternoon A Moveable Feast கட்டுரைத் தொகுப்பு மற்றும் The Sun Also Rises. Green Hills of Africa போன்ற நாவல்கள் இதுவரை தமிழில் வெளியாகவில்லை. ஐம்பதுகளில் ஹெமிங்வே பற்றிய கவனமும் உரையாடலும் தமிழ் இலக்கிய வெளியில் அதிகமிருந்தது. சி.சு.செல்லப்பா தோற்காதவன் என்ற ஹெமிங்வே குறுநாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இன்றைய தமிழ்ச் சூழலில் ஹெமிங்வேயை நினைவு கொள்பவர்கள் குறைவு. ஆனால் சர்வதேச அளவில் இன்றும் அவர் ஒரு மாஸ்டராகவே கொண்டாடப்படுகிறார். ஆண்டுத் தோறும் புதிய பதிப்புகள் வெளியாகின்றன. அவரது கதைகளைப் பல்வேறு மொழிகளில் திரைப்படமாக எடுக்கிறார்கள். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், லோசா, முரகாமி உள்ளிட்ட பலரும் தங்களின் ஆசான் என்று கொண்டாடுகிறார்கள்.

சமீபத்தில் ஹெமிங்வே பற்றிய ஆவணப்படத்தொடரைப் பார்த்தேன். கென் பர்ன்ஸ் மற்றும் லின் நோவிக் இணைந்து இயக்கிய ஆவணப்படமான ஹெமிங்வே மூன்று பகுதிகள் கொண்டது., ஆறு மணி நேரம் ஓடக்கூடியது. ஒரு எழுத்தாளரை எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்தப்படம். இதற்கு முன்பாக ஹெமிங்வே பற்றிய சில ஆவணப்படங்களையும் முழுநீள திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரைப் போல அவரது வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்த படம் கிடையாது
ஏன் தலைமுறைகளைக் கடந்து மீண்டும் மீண்டும் ஹெமிங்வே பேசப்படுகிறார். அவரது எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன என்பதற்கான பதிலாகவே இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது. ஹெமிங்வேயின் காலம் துவங்கி இன்று வரை அவரது எழுத்தின் பாதிப்பில்லாத படைப்பாளிகளை அமெரிக்காவில் காணமுடியாது என்கிறார் விமர்சகர் எட்மண்ட். அமெரிக்கச் சிறுகதையின் வடிவத்தையும் சொல் முறையினையும் மாற்றியதில் ஹெமிங்வேயிற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

சிறிய நிகழ்ச்சிகளின் வழியே தான் அவர் கதையை எழுதுகிறார். மரச்சிற்பம் செய்வது போல மொழியைச் செதுக்கிச் செதுக்கி கதையை உருவாக்குகிறார். அவரது கையெழுத்துப் பிரதிகளைக் காட்டுகிறார். எவ்வளவு திருத்தங்கள். பெரும்பான்மை கதைகளில் மதுவிடுதி இடம்பெறுகிறது. குடிக்கிறார்கள். பேசுகிறார்கள். காத்திருக்கிறார்கள். அல்லது வேட்டையாடுகிறார்கள். அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையை அவரது கதைகளில் காணமுடியாது. மாறாக அவர் சாகசக்காரனின் வாழ்க்கையைத் தான் விவரிக்கிறது. இந்தச் சாகசம் வேட்டையாக இருக்கலாம் அல்லது காதலாகவும் இருக்கலாம்.
அவரது சிறுகதைகளில் உள்ள கச்சிதம் மற்றும் தேர்ந்த உரையாடல்கள் கதையை மிகச் சிறந்த அனுபவமாக மாற்றுகின்றன. தன் சொந்தவாழ்க்கையின் நிகழ்வுகளிலிருந்தே ஹெமிங்வே அதிகக் கதைகளை எழுதியிருக்கிறார். அவருக்கு விருப்பமான ஓவியரான செசான் போலவே ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப முனைந்திருக்கிறார். செசானின் இயற்கைக் காட்சிகள் மற்றும் பழங்களின் சித்திரங்கள் ஒரு காட்சியை வேறுவேறு கோணத்தில் அணுகுகின்றன. அது தான் எனது எழுத்தின் அடிப்படை என்கிறார் ஹெமிங்வே.

நிக் ஆடம்ஸ் கதைகள் யாவும் ஹெமிங்வேயின் சொந்த அனுபவங்கள். தனது தந்தை பற்றிய நினைவுகளைச் சில கதைகளில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஹெமிங்வேயின் தந்தை கண்டிப்பானவர். மனநலப்பிரச்சனை கொண்டவர். அவரது மனநிலை எப்போது உக்கிரமாகும் என்று தெரியாது. ஆகவே அது போன்ற நேரத்தில் பிள்ளைகளைக் கடுமையாக அடிப்பார். கோவித்துக் கொள்வார். அம்மா தான் அவரது ஒரே ஆதரவு.
அவரையும் அவரது சகோதரியினையும் ஒன்று போல உடை உடுத்தி ஒன்று போல விளையாடச் செய்திருக்கிறார் அம்மா. பழைய புகைப்படங்களில் இருவரும் ஒன்று போலவே தோன்றுகிறார்கள். சிறுவயதிலே வேட்டையாடுவதற்காகத் துப்பாக்கியுடன் நிற்கிறார் ஹெமிங்வே. அவருக்கு எதைப்பற்றியும் ஒரு போதும் பயம் கிடையாது. சிறுவயது முதலே அப்படித் தான் இருந்தார் என்கிறார்கள்.
பால்ய வயதில் நீங்கள் எப்படி உருவாகிறீர்கள் என்பது படைப்பாளிக்கு முக்கியமானது. ஹெமிங்வேயின் ஆளுமை உருவாக்கத்தில் அவரது பால்யம் மிக முக்கியப் பங்கினை வகித்திருக்கிறது.

படத்தில் ஹெமிங்வேயின் அம்மா, சகோதரிகள். அவரது பால்ய கால அடையாளங்கள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. . ஹெமிங்வேயின் சிரித்த முகமுள்ள புகைப்படங்களில் கூட அவர் எதையோ மறைத்துக் கொண்டிருப்பது போலவே இருக்கிறது.
குடி, வேட்டை. பெண்கள் இந்த மூன்றும் தான் ஹெமிங்வேயின் உலகம். இந்த மூன்றும் அவரை எப்படித் தீவிரமாக ஆட்கொண்டன என்பதைப் படத்தில் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
இளமையில் ராணுவத்தில் சேர விரும்பிய ஹெமிங்வே ரெட் கிராஸ் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இத்தாலியப் போர்முனையில் காயம் பட்டவர்களை மீட்கும் பணியது. அப்படி ஒரு நாள் போர்க்களத்தில் இருந்தபோது குண்டுவெடிப்பிற்கு உள்ளாக்கி பலத்த காயம் அடைந்தார்.
அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையில் ஹெமிங்வே சிகிட்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஆறு மாதங்கள் கழித்தார் அங்கே பணியாற்றிய ஆக்னஸ் என்ற நர்ஸைக் காதலித்தார். அவளும் ஹெமிங்வேயை விரும்பினார். அந்தக் காதலே அவரது போரே நீ போ நாவலின் மையம்.

ஆனால் அக் காதல் கைகூடவில்லை. அவரை விலக்கி ஆக்னஸ் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஏமாற்றம் அவரைப் பெருங்குடிகாரராக மாற்றியது. தோற்றுப் போன காதலின் விளைவு அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அவர் நான்கு திருமணங்கள் செய்து கொண்ட போதும் எந்த உறவிலும் முழுமையான பற்று ஏற்படவில்லை. தனது உடல் இச்சைக்காகவே அவர் பெண்களை நாடினார் காதலித்தார். அவசரமாகத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள்.
இந்த ஆவணப்படத்தில் அமெரிக்காவின் முக்கிய எழுத்தாளர்களான டோபியாஸ் வுல்ஃப் உள்ளிட்ட பலரும் ஹெமிங்வே பற்றிய மதிப்பீடுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
ஹெமிங்வே தன்னைப் பற்றிய பிம்பத்தைத் தானே உருவாக்கினார். அந்தக் கட்டுக்கதைகள் மதுக்கூடங்களில் புகழ் பெறத்துவங்கின. ஒரு கட்டத்தில் அக்கதைகளை அவரே நம்ப ஆரம்பித்தார். அது போலவே நடக்கவும் செய்தார். இந்தப் பிம்ப உருவாக்கம் தன்னை மறைத்துக் கொள்ளச் செய்த தந்திரம். ஊடகங்களின் முன்பு அவர் நடித்தார். தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பெருக்கிக் கொள்ளும் எல்லா வழிகளையும் அவர் நன்றாக அறிந்திருந்தார். அவரது படைப்புகளில் வெளிப்படும் ஹெமிங்வே வேறு அவர் உருவாக்கிய பிம்பம் வேறு. இந்தப் பிம்ப உருவாக்கம் அவரை நிகரற்ற நாயகன் போல உருக்கொள்ளச் செய்தது. அதை வலிந்து அவரே உருவாக்கிக் கொண்டார்

ஏராளமான பணமும் பெயரும் புகழும் கிடைத்த போதும் அதை அவர் தனது பிம்பத்தைக் கைவிடவில்லை. இந்தக் கட்டுக் கதைகள் முழுவதும் பொய்யானவையில்லை. நிஜமாகவே சிங்க வேட்டைக்குப் போவதும் திமிங்கல வேட்டைக்குப் போவதுமாக இருந்த ஹெமிங்வே தன் கதைகளைப் போல விசித்திரமான நிகழ்வுகளைச் சொந்த வாழ்க்கையிலே நிகழ்த்தினார் அவரைப் போல விபத்துகளைச் சந்தித்த மனிதரில்லை.
அவரது காதல் திருமணங்களைப் பற்றியும் நண்பர்கள் மற்றும் பிள்ளைகளுடன் அவர் நடந்து கொண்ட விதம் பற்றியும் இந்த ஆவணப்படம் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது.
யுத்தகாலத்தில் அவர் களத்தில் எவ்வாறு பணியாற்றினார். போர் முடிந்த போது அவர் எப்படி வெற்றி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் என்பதையும் காட்டுகிறார்கள்
இது போலவே காளைச் சண்டையில் அவருக்கு இருந்த ஈடுபாடு. குத்துச்சண்டையில் உருவான ஆர்வம். சிங்க வேட்டையில் காட்டிய வேகம் போன்றவற்றையும் குறிப்பிட்டுப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவரது காதலும் திருமணங்களும் விசித்திரமானவை. அவசரமான காதல் அவசரமான திருமணம், எதிர்பார்த்த விவாகரத்து என்கிறார் ஆண்டர்சன். அது உண்மையே.

சிகாகோவில் ஹாட்லி ரிச்சர்ட்சனை சந்தித்த முதல் நாளிலே அவரைத் தீவிரமாகக் காதலிக்கத் துவங்கிவிட்டார். ஹாட்லி ஹெமிங்வேயை விட எட்டு வயது மூத்தவர். அவரைப் போலவே தந்தையின் குணமூர்க்கத்தால் பாதிக்கப்பட்டவர். வசதி படைத்த ஹாட்லியை ஹெமிங்வே தொடர்ந்து பேசி சம்மதிக்க வைத்துத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கலைஞர்களாக வாழ்வதற்காகப் பாரிஸுற்கு சென்றார்கள்.

பாரீஸில் வசித்த நாட்களில் அங்கே இருந்த முக்கிய ஓவியர்கள். கலைஞர்கள். எழுத்தாளர்களுடன் நட்பு கொண்டார். வூடி ஆலனின் மிட் நைட் இன் பாரீஸ் திரைப்படம் பாருங்கள். அதில் இந்த நண்பர்கள் வட்டம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
.எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ், ஓவியர் பிகாசோ போன்றவர்களின் நட்பு அப்போது தான் உருவானது.
1927 இல் ஹாட்லியை விவாகரத்து செய்த ஹெமிங்வே மே மாதத்தில் பவுலின் பிஃபரை மணந்தார். அவரும் ஒரு பத்திரிக்கையாளரே,
ஹெமிங்வேயின் எழுதும் முறையைப் பற்றிச் சொல்லும் அவரது மகன் அவர் எழுத்தாளர்களுக்காகச் சொன்ன ஆலோசனை எதையும் பின்பற்றியதில்லை. பல நாட்கள் தூங்கி எழுந்தவுடன் எழுத துவங்கிவிடுவார். நிறைய நாட்கள் காலை துவங்கி இரவு வரை குடித்துக் கொண்டேயிருப்பார். அவருக்குச் சொந்தமாக ஒரு படகு இருந்தது. அதில் நண்பர்களுடன் கடலுக்குள் சென்று நாள் முழுவதும் குடித்துக் கொண்டேயிருப்பார். தனது பழைய நினைவுகளால் தான் அவர் வழிநடத்தப்பட்டார். அவரது கதைகள் யாவும் நினைவின் வெளிப்பாடே என்கிறார்
1939 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கியூபா சென்ற ஹெமிங்வே ஒரு விடுதியில் தங்கி எழுதி வந்தார். இந்த நாட்களில் மார்தா கெல்ஹோனுடன் காதல் உருவானது. இருவரும் ஒன்றாகக் காதல் வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அவர்கள் ஹவானாவிலிருந்து பதினைந்து மைல் தொலைவிலிருந்த “ஃபின்கா விகா” என்ற மாளிகைக்குக் குடிபெயர்ந்தார்கள். மிக அழகான வசிப்பிடம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே ஹெமிங்வே வசித்திருக்கிறார்.
இரண்டாம் உலக யுத்த செய்தியாளராக ஹெமிங்வே லண்டனுக்கு வந்தபோது, டைம் பத்திரிகை நிருபர் மேரி வெல்ஷை சந்தித்தார், அவருடன் புதிய காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாகச் செய்தி சேகரித்தார்கள். பயணம் செய்தார்கள். கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையிலிருந்த ஹெமிங்வேயை உடனிருந்து கவனித்துக் கொண்டார் மேரி.
இத்தனை காதல் திருமணங்கள் நடந்த போதும் அவர் வாழ்க்கையில் வெறுமையைத் தான் அதிகம் உணர்ந்தார். அவரது முக்கிய நாவல்கள் யாவும் திரைப்படமாக்கப்பட்டன. நிறையப் பணம் கிடைத்தது. நோபல் பரிசு உள்ளிட்ட அத்தனை கௌரவங்களும் கிடைத்தன. ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் நிம்மதியை அடையவில்லை. தீராத மனக்கொந்தளிப்புடன் இருந்தார். விரக்தியும் அலைக்கழிப்பும் குடியை அதிகப்படுத்தியது. இதற்காக மனநலச்சிகிட்சை எடுத்துக் கொண்டார். ஏப்ரல் 1961 இல் ஹெமிங்வே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கதைகளைப் போல எதிர்பாராத முடிவது.
தனது இறுதி ஆண்டுகளில் ஹெமிங்வேயின் செயல்பாடுகள் யாவும் அவரது தந்தையைப் போலவே இருந்தன என்கிறார்கள். தந்தையும் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்து போனார்.

இந்த ஆவணப்படத்தின் வழியே நாம் ஹெமிங்வேயின் தனித்துவத்தை, பலவீனங்களை, திறமையை, தீவிர செயல்பாட்டினை, உல்லாசத்தை, வீழ்ச்சியை அறிந்து கொள்கிறோம்.
ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையை இவ்வளவு விரிவாக ஆவணப்படுத்தும் போது தான் நம்மால் அவரது ஆளுமையை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது
கிழவனும் கடலும் நாவலில் வரும் மீனவன் சாண்டியாகோ மீன்பாடுகள் கிடைக்காத போது பொறுமையாகக் காத்திருக்கிறான். ஆனால் அவனைப் போல ஹெமிங்வே ஒரு போதும் வாழ்க்கையில் எதற்காகவும் காத்திருந்ததில்லை. அவர் மோபிடிக்கை தேடிச் செல்லும் கேப்டன் அஹாப் போலவே தானிருந்தார். சில நேரங்களில் அவரே மோபிடிக் எனும் திமிங்கிலமாகவும் இருந்தார். அதுவே அவரது தனிச்சிறப்பு
••