கூழாங்கல்லின் அளவிலே இருந்தது அந்தத் தவளை. ஆனால் அதன் கோபம் கருநாகத்தின் சீற்றம் போல வெளிப்பட்டது. தன்னைச் சுற்றி நடக்கும் மோசமான செயல்களைக் கண்டு அத்தவளை பெருங்கோபம் கொண்டிருந்தது. எதுவும் சரியாக நடக்கவில்லை. யாரும் சரியானவர்களில்லை என்று சதா புலம்பிக் கொண்டேயிருந்தது. சுயநலம், அப்பட்டமான சுயநலம் என்று மற்ற விலங்குகளைப் பார்த்துக் குற்றம் சாட்டியது.
தவளையின் கோபம் கள்ளப்பார்வையுடன் திரியும் ஓநாய் மீது திரும்பியது
“எவரையும் அடித்துக் கொல்வதிலே குறியாக இருக்கிறாய். உன் புத்தி அற்பமானது. நான் நினைத்தால் உன் வாலைப்பிடித்துத் தூக்கி கல்லில் துவைத்து எடுத்துவிடுவேன் ஜாக்கிரதை“.
ஓநாய் அந்தத் தவளையைப் பார்த்துப் பவ்வியமாக வாயைப் பிளந்துகாட்டிச் சென்றது.
மரக்கிளைகளை முறித்தபடியே செல்லும் யானை மீது தவளையின் கோபம் திரும்பியது.
“பெரிய உருவம் கொண்டிருக்கிறோம் என்ற அலட்சியத்தால் எவ்வளவு இடையூறுகள் செய்கிறாய். இனியும் அதைச் சகித்துக் கொண்டிருக்கமுடியாது. ஒரே அடியில் உன்னை அடித்து விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவேன் பார்த்துக் கொள்“.
அதைக்கேட்ட யானை லேசாகக் கண்சிமிட்டியபடியே சென்றது. தவளையின் கோபம் காட்டுப்பூனையின் பக்கம் கோபம் திரும்பியது
“திருடித்தின்னும் பூனையே.. நீயாக உன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் உன் கண்களைப் பிடுங்கி காட்டில் எறிந்துவிடுவேன் “
பூனை நன்றி என்பது போல வாலை ஆட்டியது . இதைக் கண்ட மரம் ஆஹா. நல்ல கோபம் என்றது.
உடனே தவளையின் கோபம் மரத்தின் மீது திரும்பியது
“தொட முடியாத உயரமாக வளர்ந்துவிட்டதால் நீ பெரிய ஆளா. நாள் எல்லாம் உன் ஓலத்தைக் கேட்டுக் கடுப்பாக இருக்கிறது. வாயை மூடப்பழகிக் கொள். இல்லாவிட்டால் வளைத்து ஒடித்துப் பல்தேய்த்துவிடுவேன் “
“சிறப்பான கோபம்“ எனக் கேலியாகச் சொன்னது மரம்
இப்படியாக அந்தத் தவளை சகலரின் தவறுகளையும் கோபம் கொண்டு திட்டியது. பெருங்கோபத்தின் உச்சத்தில் மழையை, காற்றை, சூரியனை, நிலவை, ஆகாசத்து நட்சத்திரங்களைக் கூடக் கண்டித்தது.
எல்லா உயிரினங்களும் தவளையின் கோபத்தை ரசித்தன. “சுட்டிக்காட்டப்படும் போது தான் தவறு ஒளிர ஆரம்பிக்கிறது. மேலும் தவறு செய்யும் ஆசை உருவாகிறது “என்றன. அத்தோடு “கோபப்படும் போது நீ வளர்ந்து விடுகிறாய், நன்றாகக் கோபப்படு“ என்றன. தவளைக்கு அதைக் கேட்டு எரிச்சலாக வந்தது.
ஏன் இப்படிக் கோபம் கொள்கிறோம் எனத் தவளை வெட்கப்பட்டது. வெட்கப்படத்துவங்கியதும் தவளை மிகச்சிறியதாகவிட்டது போலத் தோன்றியது.
உலகின் குரூர செயல்களைக் கண்டு பின்பு என்ன தான் செய்வது எனத் தவளை குழப்பம் கொண்டது. சிறியவர்களின் கோபத்திற்கு இந்த உலகில் ஒருபோதும் கவனம் கிடைக்காதா என்று ஏங்கியது.
கோபம் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று தன்மீதே அந்தத் தவளைக்குக் கோபம் வந்தது
தன்னைத் தானே திட்டிக் கொண்டது தவளை
அதைக் கண்ட மற்ற விலங்குகள் “இது தான் சரியான வழி“ எனப் பரிகாசம் செய்தன
சிறியோர் விஷயத்தில் உலகம் எப்போதும் அப்படிதான் நடந்து கொள்ளும் என்று பாவம் அந்தக் குட்டித் தவளைக்குப் புரியவில்லை.
••