ஓவியர் வின்சென்ட் வான்கோ வீடு திரும்பும் போது இரவாகியிருந்தது. இன்றும் அவரால் நினைத்தபடியே ஓவியம் தீட்டமுடியவில்லை. கோதுமை வயலினைக் கடந்து செல்லும் காற்றை வரைய அவர் போராடிக் கொண்டிருந்தார். நினைத்தபடி படம் வரவில்லை. ஆகவே சோர்ந்து போய் வீடு திரும்பியிருந்தார். வீட்டின் கணப்பு அடுப்பிற்கு விறகுகள் இல்லை. சமைத்து உண்பதற்கு உருளைக்கிழங்குகள் கிடையாது. பசி . தாங்க முடியாத பசி அவரை வாட்டியது. பனிக்காலத்தின் இரவுகள் தனிமையை அதிகம் உணர்த்தக்கூடியவை. குளிர் உடலை விடவும் மனதை அதிகம் வதைக்கக்கூடியது. தனது தீராத வறுமையைப் பற்றிச் சகோதரன் தியோவிற்குக் கடிதம் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டார்.
திடீரென இந்த உலகில் தனக்கென யாருமில்லை என்பது போல உணர்ந்தார். தனது ஓவியங்களை ஏன் யாரும் விலைக்கு வாங்கவில்லை. தன்னை ஏன் ஒருவருக்கும் பிடிக்கவில்லை. தனது ஓவியங்கள் எல்லாம் வீண் முயற்சிகள் தானா எனக் குழப்பமாக வந்தது.
யாரோ அவரது வீட்டுக்கதவைத் தட்டும் ஓசை கேட்டது. அவரைத் தேடி யார் வரப்போகிறார்கள் என்ற குழப்பத்தோடு கதவைத் திறந்தார்.
வெளியே அழகான இளம் பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அவளது அடர் வண்ண உடையும் விதவிதமான மலர்கள் சூடிய கேச அலங்காரமும் சிற்பம் போன்றிருந்த உடற்கட்டும் வசீகரமாக இருந்தது.
மிக நீண்டகாலம் பழகியவள் போல அவள் இனிமையான குரலில் எப்படியிருக்கிறீர்கள் வான்கோ எனக்கேட்டாள்.
“நீங்கள் யார் எனத் தெரியவில்லையே“ எனக் குழப்பத்துடன் கேட்டார் வான்கோ
“நான் வண்ணங்களின் தாய். நீங்கள் பயன்படுத்தும் நீலமும் மஞ்சளும் பச்சையும் சிவப்பும் ஆரஞ்சும் என் பிள்ளைகள் தான். அவர்களை நீங்கள் பெருமைப்படுத்திவிட்டீர்கள். அதற்காக நன்றி சொல்ல வந்தேன்“ என்றாள் அந்த இளம்பெண்.
“நிறங்களின் தாய் என்றா சொன்னீர்கள்“ எனத் தயக்கமாகக் கேட்டார் வான்கோ
“ஆமாம். நான் நிறங்களின் அன்னை. என்றும் இளமையானவள். என் தோற்றத்தைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே. இந்த உலகிலுள்ள ஓராயிரம் நிறங்களும் என் பிள்ளைகள் தான்.“
“நான் நிறங்களுடன் சண்டையிடுகிறவன். குதிரையைப் பழக்குவது போலப் பழக்குபவன். என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் எந்த நிறத்தையும் அப்படியே பயன்படுத்த இயலாது“
“நான் அறிவேன் வான்கோ. மொசார்ட் வயலினை மீட்டுவதைப் போல நீங்கள் வண்ணங்களை மீட்டுகிறவர். .இந்த மஞ்சள் வண்ணம் இருக்கிறாளே. அவள் மிகவும் அடக்க ஒடுக்கமானவள். அவளை நீங்கள் பாலே நடனக்காரியை போலச் சுழல வைத்துவிட்டீர்கள். பச்சை நிறம் சாந்தமானது. அவளை நீங்கள் உன்மத்தம் கொண்ட குடிகாரனைப் போல மாற்றிவிட்டீர்கள்.. நீங்கள் செய்த பெரிய விஷயம், நீலநிறத்தை மலரச் செய்தது தான். எப்போதும் சோகமான, ஆழ்ந்த துக்கம் கொண்டிருந்த அவளை நீங்கள் சண்டையிடும் வாள் வீரனைப் போல வேகமும் தெறிப்புமாக மாற்றிவிட்டீர்கள். நீங்கள் ஒரு சாகசக்காரர் வான்கோ. தூரிகையால் சண்டையிடுகிறீர்கள். உண்மையில் இந்த நிறங்கள் யார் பேச்சையும் கேட்காதவை. அவற்றை நீங்கள் நாய்க்குட்டி போல உங்கள் பின்னால் வரச் செய்துவிட்டீர்கள். தாய்மை அடைந்த பெண்ணின் மகிழ்ச்சியைப் போல நிறங்கள் இப்போது தன்னை முழுமையாக உணர்ந்து கொண்டுவிட்டன. அதற்காக நன்றி தெரிவித்துப் போகவே வந்திருக்கிறேன் .“
கையில் விழுந்த ஒரு சொட்டுத் தேனை ருசிக்கும் சிறுவனின் முகத்தைப் போல மகிழ்ச்சியும் வியப்புமாக வான்கோ அவளது பாராட்டினைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“இந்த உலகம் உங்களைப் புரிந்து கொள்ளாமல் புறம் ஒதுக்குகிறது. நீங்கள் மகத்தான ஓவியர். வண்ணங்களின் தாயாகிய நான் உங்களை வணங்குகிறேன். அன்பின் மிகுதியால் உங்களை முத்தமிட விரும்புகிறேன்“ என அவள் தன் இரண்டு கரங்களையும் விரித்து அவரைக் கட்டிக் கொள்ளத் தயாராகயிருந்தாள். வான்கோ அவளை ஆரத்தழுவிக் கட்டிக் கொண்டார். காதலிக்குத் தருவது போல அழுத்தமான முத்தம் கொடுத்தார்.
அவள் விடைபெறும் போது சொன்னாள்
“நன்றி வான்கோ. இனி வண்ணங்களுக்கு அழிவேயில்லை. உலகம் உள்ளவரை அந்த நீலமும் மஞ்சளும் பச்சையும் உங்கள் பெயரோடு சேர்ந்தே அறியப்படும்.“
வான்கோ அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட விரும்பினார். ஆனால் அவரிடம் ஒற்றை நாணயம் கூடக் கைவசமில்லை.
••
