குறுங்கதை-47 26ம் பக்கம்

அந்த நாவலின் 26ம் பக்கம் தனியே வீதியில் கிடந்தது. எப்படி நாவலிலிருந்து வெளியேறி வந்தோம் என அதற்குத் தெரியவில்லை. ஒரு நாவலை விட்டு வெளியேறிய பிறகு தனது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்றும் அதற்குத் தெரியவில்லை.

நாவலின் பகுதியாக இருந்தவரை அதற்குப் பெரிய பொறுப்புகள் எதுவுமில்லை. 26ம் பக்கத்தில் ஒரேயொரு வீடும் அதில் வசிக்கும் பெண்ணும் மட்டுமே இருந்தார்கள். அந்தப் பெண் நாள் முழுவதும் தனித்தே இருந்தாள். எப்போதாவது அவளுக்கு ஒரு கடிதம் வரும். வெளிநாட்டிலிருந்த அவளது கணவன் எழுதிய கடிதமது. அவ்வளவு தான் 26ம் பக்கத்தின் வாழ்க்கை.

ஆனால் நாவலிலிருந்து வெளியேறிய பிறகு அதற்குத் திகைப்பாகவும் பயமாகவும் இருந்தது. தான் இப்போது யார் என்று குழப்பமாக வந்தது. 26ம் பக்கத்திலிருந்த பெண்ணும் தன்னைப் போலவே இனி என்ன ஆகும் என்று குழம்பித் தானே போயிருப்பாள்.

ஒரு நாவலின் பகுதியாக இருப்பது என்பது குடும்பத்தில் ஒருவராக இருப்பதைப் போன்றது. ஆனால் விடுபட்டு வெளியேறிய பிறகு வாழ்க்கை திகைப்பூட்டுவதாக மாறிவிடுகிறது.

தன் நாவலுக்கு எப்படியாவது திரும்பி விட வேண்டும் என 26ம் பக்கம் ஆசைப்பட்டது. அது எளிதானதில்லை. நாடு இழந்த அகதியின் துயரம் போல 26ம் பக்கம் தனது நிர்க்கதியை நினைத்து வருந்தியது.

நிச்சயம் இந்தப் பிரிவிற்குத் தான் காரணமில்லை என்று புலம்பியது. யார் காரணமாக இருந்தாலும் மீண்டும் தன்னிடம் சேருவது எளிதில்லை என்பதை அது புரிந்து கொண்டது.

தன்னைப் போலவே அந்த நாவலிலிருந்து பிரிந்து போன இன்னொரு பக்கத்தைக் கண்டால் கூடப் போதும் என ஏங்கியது.

யாரோ ஒருவன் கீழே கிடந்த 26ம் பக்கத்தைக் கையில் எடுத்துப் படித்துப் பார்த்துவிட்டு வேஸ்ட் பேப்பர் என்றபடியே கசக்கி வீசினான். 26ம் பக்கம் ஆற்றாமையோடு நான் வேஸ்ட் பேப்பரில்லை. ஒரு நாவலின் பக்கம். அதுவும் முக்கியமான பக்கம் என்று சப்தமிட்டது.

வாழ்விடத்தை இழந்துவிட்டவர்களின் குரலை எப்படி உலகம் பொருட்படுத்தாதோ, அப்படியே 26ம் பக்கத்தின் குரலையும் எவரும் பொருட்படுத்தவில்லை.

பாவம் அந்த 26ம் பக்கம் தவிப்பும் பயமுமாகத் தன் சொந்த இடத்திற்குப் போய்விட முடியாதா என ஏங்கிக் கொண்டேயிருக்கிறது

••

0Shares
0