மலையாளக் கவிஞர் எம்.என்.பாலூரின் வாழ்க்கை வரலாற்று நூலான கதை இல்லாதவனின் கதையை வாசித்தேன். வியப்பூட்டும் வாழ்க்கை . இந்நூலைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது.
ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படித் துவங்கி எங்கே சென்று எப்படி நிலை கொள்ளும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. பாலூரின் வாழ்க்கை அப்படியானதே.
ஒரு நாவலுக்கும் சுயசரிதைக்குமான வேறுபாடாக எதை நினைக்கிறீர்கள் என்று கவிஞர் தேவதச்சன் ஒருமுறை என்னிடம் கேட்டார். நாவலில் வரும் கதாபாத்திரங்களின் போக்கினை, விதியை வாசகனால் ஓரளவு ஊகித்து அறிந்துவிட முடிகிறது. அபூர்வமாகவே கதாபாத்திரம் முற்றிலும் திருப்பமான முடிவை அடைகிறது. ஆனால் வாழ்க்கையில் அப்படிக் கண்டறியவே முடியாது. சுயசரிதை என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களும் அதிர்ச்சிகளும் மாற்றங்களும் கொண்டது.
சுயசரிதை படிக்கும் வாசகன் அதன் நாயகனை நம்புவது மட்டுமின்றி அதன் அகபுறச்சூழல்களையும் முழுமையாக நம்புகிறான். ஆனால் நாவலில் கதாபாத்திரங்களை நம்புகிறவன் அதன் புறச்சூழலைக் கற்பனை என்றே நினைக்கிறான். இப்படியும் நடக்கக் கூடுமா என்று ஐயம் கொள்கிறான். உண்மையில் நாவலும் சுயசரிதையும் ஒன்றிணையும் இடங்கள் இருக்கின்றன. விலகிப் போகும் இடங்களும் இருக்கின்றன என்றேன்
பாலூரின் சுயசரிதையைப் படிப்பதற்கு முன்பு வரை அவர் எப்படியிருப்பார் என்று தெரியாது. புத்தகத்தின் வழியே தான் அவரது உருவமும் குரலும் அறிமுகமானது. படித்து முடித்துப் பிரமிப்பில் அவரது புகைப்படத்தை இணையத்தில் தேடிப் பார்த்தேன். எழுத்தில் கண்ட பாலூருக்கும் புகைப்படத்திற்கும் நிறைய இடைவெளி இருப்பதை அறிந்தேன். அது தான் எழுத்தின் பலம்.
1932 ஜூன் 22 அன்று எர்ணாகுளத்தின் பரவூரில் ஏழை நம்பூதிரி குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தவர் பாலூர். வீட்டோரின் கட்டாயத்திற்காக வேதம் பயிலுகிறார். அவரது ஆசை, கனவு எல்லாமும் கதகளி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. இதைப் புரிந்து கொண்ட அவரது சிற்றப்பா கதகளி பயிலுவதற்காகப் பட்டிக்காந்தோடி ராவுன்னி மேனன் என்ற புகழ்பெற்ற ஆசானைத் தேடிப் போக ஒரு கடிதம் தருகிறார்.
கையில் ஒரு கடிதத்துடன் ஊரைவிட்டுக் கிளம்பும் பாலூரின் சித்திரம் கண்முன்னே வந்து போகிறது. ரயிலில் சென்று இறங்கி அங்கிருந்து பேருந்து பிடித்துச் சிற்றூரில் இறங்கி நடந்து அவர் பட்டிக்காந்தோடி இடத்திற்குப் போய்ச் சேருகிறார். கடிதத்தைப் படித்த ஆசான் அவரைக் கதகளி கற்றுக் கொள்ளச் சேர்த்துக் கொள்கிறார்.
மூன்று ஆண்டுகள் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முடிவில் சிறுசிறு வேஷங்கள் போடுகிறார். பெண் வேஷத்திற்குப் பொருத்தமான ஆள் என்று கண்டறிந்து பெண் வேஷமாகக் கொடுக்கிறார்கள். சிறப்பாக நடிக்கிறார். பாராட்டும் பெயரும் வருகிறது. தன் சொந்த ஊரில் கதகளி ஆடப்போகிறார். வீட்டோர் முன்னிலையில் நடிக்கிறார். அவர்கள் வியந்து பாராட்டுகிறார்கள். தனது ஆசான் பட்டிக்காந்தோடிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே கேரள கலாமண்டலத்தில் சேர்ந்து கதகளி பயிலுகிறார். அதன்பிறகு நிறைய நிகழ்ச்சிகள் செய்கிறார். நூலின் நூறு பக்கங்களுக்கும் மேலாகக் கதகளி நடனத்திற்கான பயிற்சி முறைகள். கலைஞர்களின் தினசரி வாழ்க்கை நிகழ்ச்சி நடத்தப்படும் ஊர்கள் எனத் துல்லியமாக எழுதியிருக்கிறார் பாலூர்
தனது ஆசான் பட்டிக்காந்தோடி இறந்தவுடன் தனது கதகளி நடனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார் பாலூர். பிழைப்பிற்காகக் கார் ஒட்டக் கற்றுக் கொண்டு திருவனந்தபுரத்தில் ஒரு பணக்கார வீட்டில் கார் டிரைவராக வேலைக்குச் சேருகிறார். வசதியான வீடு. நல்ல சம்பளம். சாப்பாடு. நிம்மதியான வாழ்க்கை . ஆனால் அந்தப் பணக்காரரின் மனைவி அவர் மீது ஆசை கொள்கிறாள். நெருக்கமாகப் பழகுகிறாள். என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த வேலையிலிருந்து விலகி வேறு வேலை தேடுகிறார். அங்கும் பிரச்சனை. பின்பு வேலை தேடி மும்பை போகிறார்
சின்னஞ்சிறு வேலைகள் செய்கிறார். இருப்பிடம் இன்றிக் கஷ்டப்படுகிறார். ஆனால் ஒரு போதும் தான் ஒரு கதகளி கலைஞன் என்று சொல்லிக் கொள்ளவேயில்லை. அந்த நாட்களில் கவிதைகள் எழுத ஆரம்பிக்கிறார். ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்கிறார்.
மும்பை அவரை மாற்றுகிறது. ஏர் இந்தியாவில் சிறிய வேலை கிடைக்கிறது. மாத சம்பளம் வருகிறது. கேரளாவில் பெண் தேடி திருமணம் செய்து கொள்கிறார். ஏர் இந்தியாவில் வேலை படிப்படியாக உயருகிறது. மும்பையில் 25 வருஷம் வாழ்க்கையைக் கழிக்கிறார்.
அந்த நாட்களில் அவரது கவிதைகள் மலையாள இதழ்களில் தொடர்ந்துவெளியாகின்றன. முக்கியக் கவியாகக் கொண்டாடப்படுகிறார். ஓய்வு பெறும் காலம் வரை மும்பையில் வசித்துவிட்டு ஓய்விற்குப் பிறகு கேரளா திரும்புகிறார். சொந்த வீட்டில் அவரது முதுமைக்காலம் துவங்குகிறது.
பாலூரின் சுயசரிதை கேரளா வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறது. கடந்த 75 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு மாற்றங்களின் சாட்சியம் போலுள்ளது. குறிப்பாகக் கதகளியின் வரலாற்றையும் மறக்கமுடியாத ஆளுமைகளையும் அடையாளம் காட்டுகிறது.
பாலூர் ஏர் இந்தியாவிலிருந்து ஓய்வு பெறும் நாளை பற்றி மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.
ஒரு மனிதனின் வாழ்க்கை ஏன் இத்தனை திருப்பங்களை, எதிர்பாராத நிகழ்வுகளைக் கொண்டிருக்கிறது என்று நிறைய யோசிக்க வைக்கிறது. செவ்வியல் நாவல்களில் நாம் காணும் விசித்திர அனுபவங்களைத் தனது சொந்த வாழ்க்கையிலிருந்தே பாலூர் அடையாளம் காட்டுகிறார்
கதையில்லாதவன் கதை என்று தலைப்பு வைத்திருப்பது மிகவும் பொருத்தமானது. எளிய மனிதனாகத் துவங்கி முடிவில் அவர் ஒரு கதை நாயகனாக மாறிவிடுகிறார்
பாலூரின் சுயசரிதத்திற்குள் எத்தனையோ அபூர்வமான மனிதர்கள். அதிலும் மறக்கமுடியாத பெண்கள் வந்து போகிறார்கள்.
மும்பை வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப நினைக்கும் போது அதுவரை அவருக்கு வந்த ஆயிரக்கணக்கான கடிதங்களை என்ன செய்வது எனத் திகைத்துப் போகிறார். அந்தக் கடிதங்களில் சில எழுத்தாளர்கள் எழுதியது. சில உறவினர்கள் எழுதியது. மீதம் வாசகர்கள் எழுதியது. அது தான் அவரது இலக்கிய வாழ்வின் சாட்சியம். அதை ஊருக்குக் கொண்டுவந்து என்ன செய்யப்போகிறோம் என்று எரித்துவிடுகிறார். அந்தக் கடிதங்களை எரிக்கும் போது அவர் அடைந்த மனவுணர்வைக் கண்ணீருடன் எழுதியிருக்கிறார்.
மலையாளத்திலிருந்து தமிழுக்குச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் விஷ்ணுகுமாரன்.
ஒரு கவிஞனின் சுயசரிதை என்பதால் வாழ்வின் நெருக்கடிகளைத் தனிநபர் சார்ந்த பிரச்சனையாகக் கருதாமல் பொதுவான ஒன்றாகப் பார்க்கும் கண்ணோட்டம் இருக்கிறது. பாலூர் பதினெட்டு முறை முழு மகாபாரதத்தை வாசித்திருக்கிறார். வாழ்வின் மீதான தனது பற்றுக்கு ஒரே காரணம் மகாபாரதம் தான் என்கிறார். அதற்குப் பல உதாரணங்களையும் காட்டுகிறார்.
எத்தனையோ துயரங்கள் , நெருக்கடிகள் வந்த போதும் அவர் கவிதை எழுதுவதை விடவேயில்லை. அது தான் தன்னை ஆற்றுப்படுத்தியது என்கிறார். இலக்கியம் என்ன செய்யும் எனக் கேட்பவர்களுக்குப் பாலூரின் வாழ்க்கையே சாட்சியமாகவுள்ளது
••