காலைக்குறிப்புகள் 5 எழுத்தில் பறப்பது.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி தனது நேர்காணல் ஒன்றில் அறிவியல் புனைவுகளுக்குத் தத்துவமே அடிப்படையானது. பிளேட்டோ தான் உலகின் முதல் அறிவியல் புனைவு எழுத்தாளர். மனிதர்களின் லட்சிய வாழ்க்கையைப் பற்றி அவர் கண்ட கனவு தான் இன்றும் அறிவியல் புனைவின் அடிப்படையாக உள்ளது. உண்மையில் பதின்வயதில் நாம் கற்பனையில் சஞ்சரிக்கத் துவங்குகிறோம். அந்தக் கற்பனையான பறத்தலிலிருந்தே படைப்பு மனநிலை பிறக்கிறது. எழுத்தாளன் சொற்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதில்லை. விண்ணிலிருந்து பெய்யும் மழை போல அது ஒரு அற்புதமாக எழுதும் நேரம் நடக்கிறது என்கிறார்

பிராட்பரியின் பாரன்ஹீட் 451 நாவலின் நாயகன் மாண்ட்டெக் புத்தகங்களைக் காப்பாற்றப் போராடுகிறான். அது தன்னுடைய மனசாட்சியின் உருவம். நாம் ஒரு பக்கம் புத்தகங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகிறோம். மறுபக்கம் புத்தகங்களைத் தடை செய்கிறோம். அழித்து ஒழிக்கிறோம். புத்தகங்களே இல்லாத உலகை உருவாக்க நினைக்கிறோம். அதற்கு எதிராகவே மாண்ட்டெக் செயல்படுகிறான் என்றும் பிராட்பரி குறிப்பிடுகிறார்

ரே பிராட்பரிக்குக் கார் ஒட்டத் தெரியாது. அத்தோடு அவர் ஒரு முறை கூட விமானத்தில் பயணம் செய்தது கிடையாது. விமானப்பயணம் மீது பெரும் அச்சம் கொண்டவர். விமானம் என்றில்லை. உயரமான எந்த இடத்திற்குச் சென்றாலும் மயக்கம் வந்துவிடும் என்றே குறிப்பிடுகிறார். விமானத்தில் பறக்கவே பறக்காத பிராட்பரி தான் விண்வெளி பயணம் பற்றி ஏராளமான கதைகள் எழுதியிருக்கிறார். செவ்வாய்க்கிரகத்தின் வாழ்க்கை பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறார். ஒருவரது சொந்த பயத்திற்கும் எழுத்தில் பறப்பதற்கும் இடையில் வித்தியாசமிருக்கிறது. ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகவே பிராட்பரியின் கதையில் விண்வெளிக்கு மனிதர்கள் போய் வந்துவிட்டார்கள். ஒரு மனிதன் எப்படிப் பறப்பதைக் கற்பனை செய்ய முடியும் என்று சிலர் கேட்கக் கூடும். அது தான் எழுத்தின் வல்லமை. எழுத்தாளன் தான் அறிந்த விஷயங்களை மட்டுமே எழுத முடியும் என்றால் பிராட்பரியால் எப்படி விமானத்தில் பறப்பதை, விண்வெளி பயணத்தை எழுத முடிந்தது.

நூற்றுக்கணக்கான அறிவியல் புனைகதைகளை எழுதிய ஐசக் ஐசிமோவிற்குக் கம்ப்யூட்டரை உபயோகிக்கத் தெரியாது. அவரது நண்பர் ஒருமுறை கணினி ஒன்றைப் பரிசாகக் கொடுத்த போது அதை மேஜையின் ஓரமாக வைத்துவிட்டு தனது டைப்ரைட்டர் மெஷினில் தான் அசிமோவ் எழுதினார். ரோபோக்களை எழுத்தில் உருவாக்க முடிந்த ஒரு எழுத்தாளனுக்கு வாழ்க்கையில் ஒரு கணினியை உபயோகிக்க தெரியவில்லை என்பது தான் நிஜம்.

பிராட்பரி சிறுவனாக இருந்த போது டார்ஜன் கதைகளை விரும்பி படித்தார். டார்ஜன் கதைகளில் வருவது போலக் காட்டில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவேயில்லை. அறியாத உலகில் ஒருவன் சாகசங்களைக் கொண்ட வாழ்க்கையை முன்னெடுப்பது என்ற பிராட்பரியின் கதைகளுக்கு டார்ஜன் தான் ஆதாரம் என்கிறார். அத்தோடு ஷேக்ஸ்பியர் வில்லியம் பாக்னர், ஹெமிங்வே எனப் படிக்கும் ஒருவர் எப்படி டார்ஜன் கதைகளையும் ஆசையோடு படிக்க முடியும் என்ற கேள்விக்கு இரண்டும் ஒருவருக்குத் தேவையே. டார்ஜன் கதைகளிலிருந்து தான் ஷேக்ஸ்பியரை நோக்கி வந்தேன். ஆகவே என் நூலகத்தில் இரண்டும் அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்.

எழுத்தாளர்கள் சொந்த வாழ்க்கையை மட்டும் எழுத வேண்டும் என்றால் அவர் பிறந்த வருஷத்திற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒருவரியை எழுத முடியாது. எழுத்தாளனின் அனுபவம் என்பது ஒரு பங்கு மட்டுமே. அவனது கற்பனையும் பார்த்த கேட்ட அறிந்த அனுபவங்களும் ஒன்று தான் படைப்பாகின்றன.

ஹாலிவுட்டில் மோபிடிக் திரைப்படம் உருவாக்கப்பட்டபோது அதற்குப் பிராட்பரி தான் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

Remember that pianist who said that if he did not practice every day he would know, if he did not practice for two days, the critics would know, after three days, his audiences would know. A variation of this is true for writers என்கிறார் ரே பிராட்பரி.

தன்னை மேம்படுத்திக் கொள்ளாத, தனது படைப்பாற்றலைச் செழுமைப்படுத்திக் கொள்ளாத எழுத்தாளன் உடனடியாக வாசகனால் கண்டறியப்பட்டு விடுவான். அந்த வாசகன் எழுத்தாளனைக் கண்டிக்கமாட்டான். விமர்சனம் செய்யமாட்டான். ஆனால் கைவிட்டு வேறு படைப்பாளியை நோக்கிப் போய்விடுவான் என்பதே நிஜம்.

எழுத்தாளராகத் தான் நிறையத் தேடித்தேடிப் படித்தேன். குறிப்பாகச் சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களை விரும்பி வாசித்தேன். பலநேரங்களில் பெரிய நாவல்கள் தரமுடியாத மன எழுச்சியைச் சிறார் கதைகள் தந்திருக்கின்றன. ஆகவே எந்த நூலகத்திற்குச் சென்றாலும் சிறார் நூல்களைத் தேடிப்படிப்பேன் என்கிறார் பிராட்பரி

சார்லஸ் டிக்கன்ஸ், மார்க் ட்வைன், என்ற இரண்டு இலக்கியத் தந்தைகளே என்னை உருவாக்கினார்கள் என்கிறார் பிராட்பரி.

படிக்கும் பழக்கம் எழுத்தாளர்களிடம் மிகவும் குறைந்துவருகிறது. அதுவும் சிறார் கதைகள் என்றால் அது தன் உலகமில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். இந்த விஷயத்தில் பிராட்பரி சொல்வதே சரியான வழிகாட்டுதல்.

•••

0Shares
0