சைக்கிள் கமலத்தின் தங்கை- விமர்சனம்.

MJV

எஸ்.ரா அவர்களின் புத்தகத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பாகவே ஒரு சிறு பரபரப்பு எப்போதும் ஒட்டிக் கொள்வதைத் தடுக்க முடிவதில்லை. அது போன்றதொரு நிலை தான் இந்தச் சைக்கிள் கமலத்தின் தங்கை என்ற சிறுகதை தொகுப்பிற்கும் இருந்தது. சில முறை யோசிப்பதுண்டு, வேகமாக நம்மைத் தன் உலகத்தில் இழுத்து சென்று, இருத்திக் கொள்ளவும் செய்யும் புத்தகங்கள் என்ன வகையாக இருக்கும் என்று! அந்த வரிசையில் இந்தத் தொகுப்பையும் மிக விரைவில் வாசித்து முடித்தாயிற்று.

கோயிந்துவும் திலிப்குமாரும், அருணகிரியும் மகேந்திரக்குமாரும், மகாஸ்ரீயும் ஷ்யாமும் பல்வேறு கோணங்களில் திரைத்துறையின் ஊடே நம்மை அழைத்துச் செல்கின்றனர். நாம் பார்க்கும் நட்சத்திரங்களைத் தாண்டியும் அதற்குக் கீழேயும் ஓர் உலகம் மாபெரும் கனவுகளின் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதை எஸ்.ரா அவர்கள் எழுத்திற்குள் வரைந்து காண்பிக்கிறார். நொறுக்கப்பட்ட கனவுலகம் என்று சொல்வதே சரியானதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கவிஞர் ஞானக்கூத்தனை தேடி அலையும் நாதனின் எண்ணங்கள், அவனின் தவிப்புகள், ஒரு முறை பேச முடியாதா என்ற ஏக்கங்கள் என்று சைக்கிள் கமலத்தின் தங்கை கதை வெவ்வேறு சூழலில் திருவல்லிக்கேணியில் பிராயணப்படுகிறது. உயிர்ப்பான கதை சொல்லல் என்றே எளிதில் கடந்து போக முடியாத ஒரு கதை.

முகந்தெரியாத நபரின் கொலையில் கூடச் சந்துருவம் அவன் மனைவியும் தேடிக்கொள்ள நினைக்கும் நிர்கதி நிலைகளை நிச்சயம் படிக்கையில் அறிந்து கொள்ளுவீர்கள்.

மிகவும் நேர்த்தியாகச் சொல்லப்பட்ட நோரஃபாவின் கல் என்ற பௌத்த துறவியின் கதை. படித்த புத்தகம், படிக்காத புத்தகம் இரண்டுமே வேறு வேறு என்பதை டோஜியின் மகன் விளக்கும் போது, அட சரிதானே என்று தோன்றும் எண்ணங்கள், உலகின் முதல் பூட்டு கல் என்றும் , அதற்கான சாவியும் கல்லே என்று விளக்கும் லோமாங் என்ற விவசாயின் எண்ணங்களும் எஸ்.ரா அவர்களின் வாசிப்பின் ஆழத்தையும் சேர்த்தே காட்டி செல்கிறது. மறைந்து போன ஆற்றின் சாட்சியான கடைசிக் கல்லை நோர்பா என்ன செய்தார்???

கிணற்றின் தவளையை ஒப்பிட்டு பார்க்க செய்யும் சர்க்கஸ் புலி என்ற கதை, பெண்களுக்கும் நீருக்குமான உருக்குத்தை, நெருக்கத்தைக் குற்றால சாரலில் சொல்லும் கதை , இப்படி 20 கதைகள் அடங்கிய அழகிய தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் சலனத்திற்குள்ளாக்கிய கதைகளின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். பாதிக்கோபம், வெண்நுரை, கிளாடியின் மரணம்: சில காரணங்கள், பேரருவி! அவசியம் படித்துப் பாருங்கள்

நன்றி

http://mjvs.blogspot.com/

****
சைக்கிள் கமலத்தின் தங்கை
: எஸ். ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
Rs 160
0Shares
0