பினோக்கியோவின் மூக்கு.

சிறார் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள் யாவும் பயணத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டவையே. நார்னியா, லார்ட் ஆப் தி ரிங்ஸ், ஆலீஸின் அற்புத உலகம், குட்டி இளவரசன், ஹாரி போட்டர், தி விசர்ட் ஒப் ஒஸ் என யாவும் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் சாகசப்பயணத்தையே முதன்மைப்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறது.

மரப்பொம்மையான பினோக்கியோவின் கதையும்ஒரு  சாகசப்பயணமே. இத்தாலிய எழுத்தாளரான கார்லோ கொலாடி எழுதிய இந்த நூல் 1883ல் வெளியானது. நூற்றாண்டினைக் கடந்து இன்றும் தொடர்ந்து விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. சினிமா, நாடகம். இசை நாடகம், பொம்மலாட்டம், அனிமேஷன், என்று பல்வேறு வடிவங்களில் இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது,

பினோக்கியோ பொய் சொன்னால் அவனது மூக்கு நீளமாகிவிடுகிறது. சிறுவயதில் படித்த போதே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏன் பினோக்கியோவிற்கு மூக்கு நீளமாகிவிடுகிறது. பொய் சொன்ன நாக்கு தானே நீளமாக வேண்டும்.

உண்மையில் மூக்கு என்பது ஒரு அடையாளம். தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதே என்கிறோம். அடுத்தவர் விஷயத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்று கண்டிக்கிறோம். போர் கைதிகளுக்குத் தண்டனையாக மூக்கை அறுத்திருக்கிறார்கள், ராமாயணத்தில் லட்சுமணன் சுர்ப்பனகையின் மூக்கை தான் அறுத்து அனுப்புகிறான். சிற்பம் ஒன்றைச் சிதைக்கவிரும்பினால் அதன் மூக்கை தான் முதலில் உடைப்பார்கள். இப்படி மூக்கு என்பது குறியீடாகவே உள்ளது.

பினோக்கியோ தனக்கு விருப்பமானவர்கள் முன்னால் தான் பொய் சொல்கிறான். உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறான். பொய் சொன்னதும் மூக்கு நீளமாகிக் கொண்டே போகிறது. அதற்காகப் பினோக்கியோ வருத்தமடைவதில்லை. அதை வேடிக்கையாகவே நினைக்கிறான்.

நீளமான நாக்கு கொண்ட விலங்குகள் பொய் சொல்வதில்லை. ஆனால் சிறிய நாக்குக் கொண்டு மனிதன் நிறையப் பொய் சொல்கிறான் என்றொரு ஆப்பிரிக்கப் பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பினோக்கியோ யாரிடமிருந்து பொய் சொல்ல கற்றுக் கொள்கிறான். பொய் எப்படி அறிமுகமாகிறது. வீட்டிலிருந்தவரை பினோக்கியோ பொய் சொல்வதில்லை. வெளியே சென்றபிறகே பொய் சொல்ல ஆரம்பிக்கிறான். உலகம் தான் பொய்யை கற்றுத் தருகிறது. நம்புகிறவர்கள் தான் பொய்யை உண்மையாக்குகிறார்கள்.

தனக்கு தானே பொய் சொல்லிக் கொள்வது ஆபத்தானது. அந்த பொய்யைத் தானே நம்ப ஆரம்பித்துவிட்டால் பிறகு உண்மையை வேறுபடுத்திக் காணவே முடியாது. பொய்களால் மனிதன் தனது மரியாதைகளை இழக்கிறான் என்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி பினோக்கியோ விளையாட்டாகவே  பொய் சொல்கிறான். பெரியவர்களைப் போல ஏமாற்றுவதற்காகப் பொய் சொல்வதில்லை.

பினோக்கியோவின தந்தை கெப்பெட்டோ ஒரு தச்சன். வறுமையில் கஷ்டப்படுகிறவன். அடுத்த வேளை உணவு கூட அவனுக்குக் கிடைப்பதில்லை.

அவன் ஒரு நாள் மரப்பாவைகளைக் கொண்டு நடத்தப்படும் பொம்மலாட்டக் குழு தனது ஊருக்கு வருவதைக் காணுகிறான்.. அந்த வண்டியிலிருந்த பொம்மைகள் நிஜமான மனித உருவங்கள் போலவே இருந்தன. தானும் அப்படி ஒரு மரப்பாவையைச் செய்து அதை வைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடத்திச் சம்பாதிக்கலாம் என நினைக்கிறான். கெப்பெட்டோ

இதற்காக ஒரு மரம் வேண்டும் என்று மாஸ்டர் செர்ரியிடம் சென்று வேண்டுகிறான். அவர் மேஜை ஒன்றின் காலுக்காக வைத்திருந்த அபூர்வ மரம் ஒன்றை அவனுக்குத் தருகிறார். அந்த மரம் உயிருள்ளது. அதற்கு இதயமிருக்கிறது. சப்தமாகத் துடிக்கிறது. கெப்பெட்டோ அந்த மரத்தைச் செதுக்க ஆரம்பிக்கும் போது அதன் இதயத்துடிப்பை உணருகிறான். அந்த மரத்தினைக் கொண்டு ஒரு பொம்மையைச் செதுக்குகிறான். அந்தப் பொம்மை பேசத்துவங்குகிறது. மரப்பாவைக்குப் பினோக்கியோ என்று பெயரிடுகிறான். தனது சொந்த மகனைப் போலப் பாசத்துடன் வளர்க்கிறான். முதன்முறையாக தன்னை கண்ணாடியில் பினோக்கியோ பார்த்துக் கொள்ளும் காட்சி அபாரமானது.

நடமாட ஆரம்பித்த பினோக்கியோ வீட்டை விட்டு வெளியே ஒடுகிறான். கணப்பு அடுப்பில் தான் காலை தானே எரித்துக் கொள்கிறான். பினோக்கியோவை பள்ளியில் சேர்க்கத் தனது மேல்கோட்டினை விற்றுவிடுகிறான் கெப்பெட்டோ. ஆசையாகப் பள்ளியில் சேர்க்க பினோக்கியோவை அழைத்துக் கொண்டு போகிறான்.

பினோக்கியோ பள்ளிக்குப் போகாமல் பொம்மலாட்டம் காணக் கிளம்பி விடுகிறான். பொம்மலாட்ட நிகழ்ச்சிக்குக் கட்டணம் என்பதால் தனது பாடப்புத்தகத்தை விற்று அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்கிறான்.

பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடத்தும் மாஸ்டர் அவனைப்பிடித்துக் கொண்டு போய்விடுகிறார். பினோக்கியோவை விறகாக எரிக்க நினைத்த மாஸ்டரிடம் தனது பேச்சுத் திறமையால் மனதை கவர்ந்துத் தப்பிவிடுகிறான். மாஸ்டர் அவன் ஒரு நல்ல மனதுடைய பொம்மை என்று புகழ்ந்து ஐந்து தங்க நாணயங்களைப் பரிசாகத் தருகிறார்

அந்த நாணயங்களுடன் தந்தையைத் தேடிப்புறப்படுகிறான் பினோக்கியோ. அவனை வழியில் ஏமாற்றி நாணயங்களைப் பறிக்க நரியும் பூனையும் முயல்கின்றன. பினோக்கியோ அவர்களிடம் ஏமாந்து போகிறான்.. கொள்ளைக்காரர்களிடம் சிக்க மரத்தில் தூக்கிலிடப்படுகிறான். பினோக்கியோவை ஒரு தேவதை காப்பாற்றிப் புதுவாழ்க்கை தருகிறது.

தந்தையைத் தேடி பினோக்கியோ செல்லும் பயணமே மீதக்கதை. வியப்பூட்டும் சாகசங்களைக் கொண்ட இந்தக் கதையில் கெப்பெட்டோ மறக்கமுடியாத கதாபாத்திரம். அவனுக்கென யாருமேயில்லை. பினோக்கியோ காணாமல் போனவுடன் அவனைத் தேடி கெப்பெட்டோ புறப்படுகிறான். இருவரும் எப்படிச் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதே மீதக்கதை.

கெப்பெட்டோ ஒரு மரப்பாவையை ஏன் தன் மகனைப் போல நேசிக்கிறான். வறுமையான சூழலை விடவும் தனக்கென யாருமில்லை என்பது தான் அவனுக்கு அதிகக் கவலையளிக்கிறது. துடிக்கும் இதயமுள்ள மரத்தை அவன் தொடும் போதே அவனுக்காக உறவு துவங்கிவிடுகிறது. மரம் எப்படி மனிதனைப் போலப் பேசுகிறது என்று கெப்பெட்டோ சந்தேகப்படுவதில்லை. ஆனால் அவனது மாஸ்டர் செர்ரி சந்தேகப்படுகிறார். பயப்படுகிறார். அவருக்கு மரம் என்பது மேஜை செய்யப்பயன்படும் ஒரு பொருள் மட்டுமே.

கெப்பெட்டோ கால்கள் எரிந்து போன பினோக்கியோவை காணும் போது பதைபதைப்புக் கொள்கிறான். வீட்டிலிருந்து ஓடினால் காணாமல் போய்விடுவான் என்று பயப்படுகிறான். அவனுக்குப் பினோக்கியோ பொம்மையில்லை.

பினோக்கியோ ஏன் வெட்டுக்கிளி சொல்வதைக் கேட்க மறுக்கிறான். கோபப்படுகிறான்.

ஒரே இடத்தில் வேரூன்றிய மரமாக இருந்த அவன் இப்போது மொத்த உலகையும் காண ஓடுகிறான். மனிதர்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள், மோசம் செய்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவேயில்லை.

பினோக்கியோவிற்குத் தன்னை ஒத்த பாவைகள் யாரோ ஒருவனின் ஆட்டுவித்தலுக்கு ஆடும் பொம்மைகளாக இருப்பதைக் கண்டு திகைத்துப் போகிறான். இது பொம்மைகளின் வாழ்க்கை கதை மட்டுமில்லையே. சுதந்திரமான சிறார்களுக்கும் அடக்குமுறைக்கு உள்ளான சிறுவர்களுக்குமான வேறுபாடும் அது தானே

தன்னை எரித்துக் கொல்லப்போவதாகச் சொல்லும் பொம்மலாட்டக்காரனிடம் மற்றவர்களுக்காகப் பினோக்கியோ மன்றாடுகிறான். நல்லெண்ணங்கள் அவனுக்குள் இயல்பாக இருக்கின்றன. பினோக்கியோவை உலகம் தான் பொய் சொல்ல வைக்கிறது. ஏமாற்றுகிறது. அவன் பள்ளிக்கு போகிறான். ஆனால் ஆசிரியர்கள் அவனை மிகவும் மோசமாக நடத்துகிறார்கள். அவன் வயதை ஒத்த சிறுவர்கள் அவனை துன்புறுத்துகிறார்கள்.  பினோக்கியோவை யாரும் நேசிப்பதில்லை. அதை அவன் நன்றாக உணர்ந்திருக்கிறான்.

பினோக்கியோ கழுதையாக உருமாறிய போதும் அவன் நட்பைக் கைவிடுவதில்லை. தந்தையின் பசியைப் போக்குவதற்காக ஆட்டுப்பால் கேட்கச் சென்ற பினோக்கியோ வேலை செய்து சம்பாதித்தால் தான் பால் கிடைக்கும் என்பதற்காகக் கடினமான வேலைகளைச் செய்கிறான். ஆடு மேய்கிறான். தந்தையைப் போலவே அவனும் தொழிலாளியாக மாறுகிறான்

பினோக்கியோ உயிருள்ள சிறுவனாக மாறுவது அவனது நற்காரியங்களின் விளைவே. பினோக்கியோவை நேசிக்கும் தேவதை அவனைக் காப்பாற்றுகிறது. அது பினோக்கியோவின் தாயைப் போலவே நடந்து கொள்கிறது.

வாழ்க்கை நெருக்கடி மனிதர்களை மரம் போலாக்கிவிடும் சூழலில் ஒரு மரப்பாவை மனிதனாக மாறுவது என்பது முக்கியமானதே. இந்தக் கதை சிறார்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் நிராகரிக்கபட்ட மனிதனின் அன்பை பேசுவதால் பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகமாகிறது.

2019 வெளியான Pinocchio என்ற இத்தாலியத் திரைப்படத்தைப் பார்த்தேன். இதில் ராபர்ட்டோ பெனிக்னி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மிகச்சிறந்த ஒளிப்பதிவு சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு. அரங்க அமைப்பு உடைகள் சிறந்த விஷ்வல் எபெக்ட்ஸ் என அத்தனையும் நேர்த்தியாக இணைந்துள்ளன.

குறிப்பாக ஓவியங்களைப் போலவே காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நிலவெளி ஒவியங்களைக் காணுவது போலவே பல காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.

பினோக்கியோவை நேசிக்கும் கெப்பெட்டோவாக நடித்துள்ள பெனிக்னி சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டு மணி நேரம் நாம் இன்னொரு உலகில் சஞ்சரித்துத் திரும்புவது போன்ற மகிழ்ச்சியான அனுபவத்தைத் தருகிறது இப்படம். மேட்டியோ கரோன் படத்தை இயக்கியிருக்கிறார்

பெரும் காவியங்களை வாசிக்கும் போது நாம் உணரும் உண்மைகளை, அற்புத அனுபவத்தை சிறார் நூல்களும் தருகின்றன என்பதே நிஜம். அந்த வகையில் பினோக்கியோவும் ஒரு இதிகாசமே.

••

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: