காலைக்குறிப்புகள் -17 கடைசி மனிதன்

800 முதல் 600 B C வரையிலான பண்டைய சீன பாடல்களின் தொகுப்பு The Book of Songs. இந்த நூலை வாசிக்கையில் சீனாவில் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பாடல்களும் இசையும் கலந்திருப்பதை அறிய முடிகிறது. தமிழின் சங்க கவிதைகளைப் போலவே இயற்கையைப் புகழ்ந்துபாடும் இந்தக் கவிதைகள் சீனப்பண்பாட்டின் பொக்கிஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

தமிழ்க் கவிதைகளைப் போலவே சீனக் கவிதைகளுக்கும் ஒரு நீண்ட மரபிருக்கிறது. டாங் மன்னரின் வம்சம் ஆட்சி செய்த காலமே சீனக் கவிதையின் பொற்காலமென்கிறார்கள். துஃபு, லீ பெய் ஆகிய இரண்டு முக்கியக் கவிஞர்களும் இந்தக் காலத்தைச் சேர்ந்தவர்களே.

நம் ஊரிலும் ஒரு காலத்தில் எல்லாவற்றிற்கும் பாடலிருந்தது. பிறப்பு, இறப்பு, திருமணம், வேலை, வழிபாடு. மீன்பிடித்தல். மாடு மேய்த்தல், விளையாட்டு எனப் பாடல் இல்லாத இடமேயில்லை. இன்றைக்குக் கிராமங்களில் பாடுகிறவர்களே கிடையாது.

மதுரைக்கு அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு நண்பரின் தோட்டத்திற்குச் சென்றபோது தென்னை மரங்களில் ஸ்பீக்கர் கட்டியிருந்தார்கள். வேலை செய்கிறவர்கள் சினிமா பாட்டுக் கேட்டபடிதான் வேலை செய்வார்கள். அதற்காக இந்த ஏற்பாடு என்றார். வயலில் வேலை செய்பவர்களின் நாவு அசைந்து பாடுவது நின்று பல காலமாகிவிட்டது.

அபூர்வமான கிராமத்துக் குரல்கள் யாவும் மறைந்துபோய்விட்டன. தானாகப் பாடல் புனைந்து பாடும் பெண்கள் கிராமத்திலிருந்தார்கள். அவர்களிடம் எதைப்பற்றிப் பாடச் சொன்னாலும் சில நிமிஷங்களில் பாடி விடுவார்கள். பாட்டு சிறப்பாகவும் இருக்கும்.

தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியாகியுள்ளது. ஆனால் அந்தப்பாடல்களைப் பாடிய குரல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை.

கனடாவிற்குப் போயிருந்த போது இனியூட் எனப்படும் பூர்வ குடி மக்களின் ம்யூசியத்திற்குப் போயிருந்தேன். கனடாவின் துருவப் பகுதியில் Yupik , Inuit. என இரண்டுவிதமான பூர்வகுடிகள் இருக்கிறார்கள், அவர்களுக்கான பொதுச்சொல்லாக இனியூட் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவர்களை எஸ்கிமோ என முன்பு அழைத்தார்கள். அந்தச் சொல் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

இனியூட் ம்யூசியத்தில் அவர்களின் வேட்டைக்கருவிகள், குளிராடைகள், வீடுகளின் அமைப்பு, மற்றும் உணவுப்பாத்திரங்கள், குலக்குறிகள், கைவினைப்பொருள்கள் அவர்களின் குரல் பதிவுகளை அங்கே கேட்க முடிந்தது.

அமெரிக்க எழுத்தாளரான உர்சுலா லெ கவினின் தந்தை, ஆல்ஃபிரட் க்ரோபர் ஒரு மானுடவியல் அறிஞர். அவர் அமெரிக்காவின் பூர்வகுடியான யாஹி மக்களில் கடைசி மனிதராகக் கருதப்பட்ட இஷி என்பவரைக் கண்டறிந்து நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.

இஷியை தன் வீட்டிற்கு அழைத்து வந்த போது அவர் யாருடனும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் மட்டுமே இருந்தார் என்கிறார் க்ரோபர். இதைப்பற்றிக் கேட்டதற்குத் தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூடப் பேசக்கூடாது. நாக்கை நம் கட்டுக்குள்ளே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று இஷி பதில் சொன்னாராம்

அமெரிக்காவில் “கடைசிப் பூர்வகுடி இந்தியர்” என்று பரவலாக அறியப்பட்ட இஷியின் குரலில் ஒரு கதையைப் பதிவு செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார் உர்சுலாவின் தந்தை. சிறுவயதில் இஷியை நேரில் காணும் போது ஏற்படாத நெருக்கம் அவரது குரலை இப்போது கேட்கையில் ஏற்படுகிறது. கண்கலங்கிவிட்டேன் என்கிறார் உர்சுலா.

காரணம் அவரது குரலில் தான் கடைசி மனிதன் என்ற ஏக்கம் ஒலிக்கிறது. அவரது இனமே அழிக்கபட்டுவிட்டது. தான் ஒரு காட்சிப் பொருள் போல நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு அவருக்கு இருந்தது என்கிறார் உர்சுலா.

இஷி என்பதற்கு மனிதன் என்று பொருள். அவர் தனக்கென ஒரு பெயரைக் கூட வைத்துக் கொள்ளவில்லை என்கிறார் உர்சுலா

1908 இஷியின் பூர்வகுடி இனம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அதிலிருந்து தப்பி மூன்று ஆண்டுகள் காட்டிற்குள் தனியே வாழ்ந்திருக்கிறார். இந்த நாட்களில் பசியும் பட்டினியுமாக அவதிப்பட்டிருக்கிறார். 1911 இல், இஷி கண்டுபிடிக்கபட்டார். அவரை உள்ளூர் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கடைசிப் பூர்வகுடி மனிதன் என்பதால் வனவிலங்கைக் காணுவது போல அவரை வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டார்கள்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை பேராசிரியர்கள், அவரைச் சந்தித்து அழைத்து வந்து அருங்காட்சியகத்தின் ஒரு குடியிருப்பில் தங்க வைத்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

இஷி தனது சொந்த மொழியான யானா குறித்து அரிய தகவல்களை வழங்கினார். அத்தோடு பழங்குடி இனத்தின் பண்பாடுகள். சடங்குகள் குறித்தும் நிறையத் தகவல்களைத் தெரிவித்தார். மார்ச் 25, 1916 இல் இஷி காசநோயால் இறந்தார். . நீங்கள் இருங்கள், நான் செல்கிறேன்” என்பதே அவரது கடைசி வார்த்தைகள்

இஷியை கண்டுபிடித்து அவருடன் நெருக்கமாக இருந்த உர்சுலாவின் தந்தை க்ரோபரிடம் இஷியை பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொன்னபோது அது தன்னால் இயலாது என மறுத்துவிட்டார். ஆனால் இஷியினைப் பற்றிய ஒரு புத்தகத்தை உர்சுலாவின் அம்மா எழுதியிருக்கிறார். தன் வீட்டிற்கு இஷி வந்த போது ஏற்பட்ட அறிமுகத்தை வைத்துக் கொண்டு அவர் தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து சிறப்பாக அந்த நூலை எழுதியிருக்கிறார்.

எப்படி அது சாத்தியமானது என உர்சுலாவின் அம்மாவைக் கேட்டதற்கு எனக்கு இஷியின் மௌனத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. பெண்களால் மௌனத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்றாராம்.

மௌனம் என்பது கடவுளின் மொழி. பிற பாஷைகள் யாவும் மனிதர்கள் உண்டாக்கி கொண்டது என்று ஆப்பிரிக்காவில் சொல்கிறார்கள். அது உண்மை தான் போலும்

••

Archives
Calendar
October 2020
M T W T F S S
« Sep    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: