அறிந்த அவசரம்

நம் நூற்றாண்டின் தீர்க்கமுடியாத நோய்களில் ஒன்று அவசரம். வீடு, பணியிடம் பேருந்து, மின்சாரரயில், வணிகவளாகம் பள்ளி, கோவில், வங்கி, மருத்துவமனை, தியேட்டர் என எங்கும் அவசரம் பொங்கி வழிகிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்று பேதமில்லாமல் இந்த நோய்க்கு நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம்.


எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒரு போதும் நம்மை நாமே கேட்டுக் கொண்டதில்லை. அவசரம் வைரஸ் கிருமிகளை  விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிசம் கைகால்கள் தானே உதற துவங்கிவிடுகின்றன. முகம் சிவந்துவிடுகிறது. உடல் நடுங்க துவங்குகிறது. கோபம் ஆத்திரம் கவலை என்று உணர்ச்சிகளின் தடுமாற்றத்திற்கு மூலகாரணமாக இருப்பது அவசரம் தான்.


வாழ்க்கையின் வேகம் அதிகமாகிவிட்டது என்று ஒரு சாராரும், நிம்மதியை தொலைத்துவிட்டு  பணம் சம்பாதித்து  கொண்டிருக்கிறோம் என்று மறுசாராரும் அவசரம் பற்றி கருத்துக்கள்  கொண்டிருந்த போது இதற்கான முக்கிய காரணம் சகமனிதன் மீது நம்பிக்கை இல்லாமல் போனதும், திட்டமிடப்படாத வாழ்வும் எதையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்ற ஆசையுமே.


அன்றாடம் நடக்கும் சாலை விபத்துகளையும் இளவயதில் ஏற்படும் துர்மரணங்களையும் பெயர் தெரியாத நோய்களையும் காணும் போது மனதில் மின்னல் என தோன்றி மறைகிறது இந்தகேள்வி


எதற்காக இவ்வளவு அவசரம். ?


கரும்பை சுவைப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக கடித்து சுவைத்து சாப்பிட வேண்டிய வாழ்க்கையை லேகியம் விழுங்குவது போல நாவில் படாமலே ஏன் விழுங்கி கொண்டிருக்கிறோம்.


தினசரி வாழ்வு நமக்கு ருசிகரமாகயில்லை. நெருக்கடியும் பரபரப்பும் காரணமில்லாத பயமும் நம்மீது தொற்றிக் கொண்டிருக்கின்றன. எல்லா வீடுகளிலும் காலைநேரம் ஒன்று போலவே இருக்கிறது.


பள்ளிக்கு நேரமாச்சி என்று ஒரு பக்கம் பிள்ளைகளும் அலுவலகத்திற்கு போவதற்காக பஸ்ஸோ ரயிலோ பிடிக்க வேண்டும் என்று ஆண் பெண்களும் கிடைத்ததை சாப்பிட்டு ஈரத்தலையோடும் அப்பிக் கிடக்கும் பாதி துக்கத்தோடும் அவரச அவசரமாக சாலையை கடந்து பேருந்தில் இடிபட்டு வலியை தாங்கி கொண்டு செல்கிறார்கள்


கிடைத்த இடைவெளியில் எடுத்து சென்ற சாப்பாட்டை வழியில்லாமல் தின்றுவிட்டுவிட்டு அலுப்பும் சலிப்புமாக வேலை செய்து வீடு திரும்பி ஒன்பது மணிக்குள் உறங்காவிட்டால் மறுநாள் வேலைக்கு போகமுடியாதே என்ற ஆதங்கத்துடன் கனவுகள் அற்று உறங்கி விழித்து இயந்திர பொம்மைகளை போல வாழும் நமது அவசர வாழ்வின் பொருள் தான் என்ன? என்ன அடைவதற்காக இவ்வளவு இழந்து கொண்டிருக்கிறோம்.


சில நாட்களுக்கு முன்பு மின்சார ரயிலில் முப்பது வயதைக்கடந்த ஒரு பெண்ணை பார்த்தேன். அலுவலகத்திற்கு செல்லும் காலை நேர கூட்டத்தின் நெருக்கடிக்குள்ளாகவே தனது ஈரத்தலையை சிறிய கர்சீப்பால் துடைத்தபடியே நின்று கொண்டிருந்தாள். யாராவது கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் என்பது போல அவளது முகபாவத்தில் வலி தோன்றி மறைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு ஸ்டேஷன் வருவதற்கு முன்பும் உட்கார்ந்திருப்பவர்களின் முகத்தை அவள் பார்த்து கொண்டிருப்பாள். எதிலும் எந்த சலனமும் இருக்காது.


ஒரு வழியாக ரயில் மாம்பலத்திற்கு வந்த போது அவளுக்கு சீட்டு கிடைத்தது. நுனியில் உட்கார்ந்தபடியே அவசரமாக அவள் தனது டிபன் பாக்ஸை ஹேண்ட்பேக்கில் இருந்து எடுத்து பிரித்து சாப்பிட முயற்சித்தாள். டிபன் பாக்ஸ் திறந்து கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நகத்தை கொடுத்து திறக்க பார்த்தாள். அப்படியும் திறக்கவில்லை. சில நிமிசம் தன் வலு அத்தனையும் கொடுத்து போராடி பார்த்தாள். நகம் வலித்ததை தவிர டிபன்பாக்ஸ் திறந்து கொள்ளவில்லை.


அவள் டிபன் பாக்ஸை திறக்க போராடுவதை அந்த கம்பார்ட்மெண்டே பார்த்து கொண்டிருந்தது. ஆனால் யாரும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளும் நிமிர்ந்து பார்க்க கூச்சப்பட்டவள் போல தலைகவிழ்ந்தபடியே உதட்டை கடித்து கொண்டு டிபன்பாக்ஸை வேகமாக திறந்தாள். மூடி திறந்து உள்ளிருந்த சாப்பாடு முழுவதும் அப்படியே  அவள் காலடியில் கொட்டியது. 


சாம்பார் சாதத்தின் வாசனை அந்த இடம் முழுவதும் பரவியது. வெள்ளை பூசணிதுண்டுகளும் பூண்டு ஊறுகாயும் அவள் செருப்பில்  ஒட்டி கொண்டன. முகம் வெளிறி போனவளாக  அவள் அவசர அவசரமாக குனிந்து கிழே கொட்டிய சாதம் முழுவதையும் அள்ளி ஒடும் ரயிலின் ஜன்னலுக்கு வெளியே போட்டாள். பயணிகள் இது வழக்கமாக நடக்கின்ற செயல் என்பது போல பேப்பர் படித்தபடியும், செல்போன் பேசியபடியுமிருந்தார்கள்.


அவள் முகத்தில் பசி அப்பிக்கிடந்தது. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது இனி வழியில் கூட சாப்பிட முடியாது என்ற வேதனை பீறிட்டு கொண்டிருந்தது. தன்னை மீறி வரும் அழுகையை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பவள் போல அவள் ஜன்னலின் இரும்பு கம்பிகளை வெறித்து பார்த்தபடியே வந்தாள்.


அவள் காலடியில் சிந்தி கிடந்த பருக்கைகள் என் மனதில் சொல்லமுடியாத வலியும் துக்கமும் உருவானது. எதற்காக இந்த பெண் சாப்பிட கூட நேரமில்லாமல் வேலைக்கு ஒடிக் கொண்டிருக்கிறாள். என்ன அவசரம் இது. எதை சாதிப்பதற்காக இப்படி பரபரப்பாக அலைகிறாள். பசிபூசிய அவள் முகத்தை ஏன் மற்றவர்கள் கவனம் கொள்ள மறுக்கிறார்கள்.


ரோடு ரோலர்களின் அடியில் சிக்கி கொண்ட நாணயம் சாலையில் பதிந்து போய் எடுக்கமுடியாமல் ஆகிவிடுவது போல நமது வாழ்க்கையும் ஏதோ ஒரு பற்சக்கரத்தின் கீழ் சிக்கி நசுங்கி கொண்டு விட்டதா?


ரயில் பார்க் ஸ்டேஷனில் வந்து இறங்கியதும் விடுவிடுவென அவள் வெளியேறி கூட்டத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். கடந்து செல்லும் மனிதமுகங்களின் ஆற்றில் தானும் கலந்துவிட்டவள் போல  அவள் போவதை பார்க்கும் போது நகர வாழ்வின் கசப்பு முகத்தில் அடித்தது.


சாலையோர சப்வேயின் படிக்கட்டில் உட்கார்ந்து கையேந்தும் பிச்சைக்காரன் கூட இதை விட அமைதியாகவும் அவசரமின்றியும் தனது நாட்களை கழித்து கொண்டிருக்கிறான். படுக்க இடமில்லாமல் சாலையில் உறங்குபவர்கள் கூட மாலை நேரங்களை ரேடியோ கேட்டுக் கொண்டு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் யாவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


வேலை பணம் ஆசைகள் என்று மாயமானை துரத்தி திரியும் மத்திய தர வர்க்கம் எதையும் அடைய முடியாமலும் அடைந்ததை அனுபவிக்க முடியாமலும் திரிசங்கு போல மிதந்து கொண்டிருக்கிறார்கள். அவரசம் அவர்கள் வயதின் மென்மையை அழித்துவிடுகிறது. தோற்றத்தில் மட்டுமில்லாமல் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் சலிப்பு தொற்றிக் கொண்டுவிடுகிறது.


யோசிக்கையில் தோன்றுகிறது இது ஒரு தனிப்பட்ட பெண்ணின் வலி மட்டுமில்லை. ஒவ்வொரு நாளும் நுற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் இதே நெருக்கடிக்கு தான் ஆளாகிறார்கள். பணி சார்ந்த அவசரம் தவிர்க்க முடியாதது தான் ஆனால் எல்லா நேரங்களிலும் படபடப்பாகவும் நிம்மதியின்றியும் ஏன் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை.


வண்ணத்துபூச்சி ஒரு பூவிலிருந்து தேன் எடுப்பதற்காக எங்கெங்கோ சுற்றியலைகிறது. ஆனால் தேன் உள்ள பூ கண்டுவிட்டாலோ அதை சுற்றி வந்து உணர்கொம்புகளால் தேனை உறிஞ்சி அப்படியே கிறங்கி கிடக்கிறது. ஒரு துளி தேன் என்றாலும் அதன் சுவையை ருசிக்கும் வண்ணத்துப்பூச்சியின் லயப்பு ஏன் மனிதர்களுக்கு வருவதேயில்லை. பொறுமையோடு சிலந்தி தன் வலை பின்னுகிறது. அதனதன் வேகத்தில் விருட்சங்கள் வளர்க்கின்றன. இயற்கை எதற்கும் அவசரம் காட்டுவதேயில்லை.


முன்னொரு காலத்தில் ஒரு ஜென் துறவி காட்டிற்குள் நின்ற நிலையில் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் மீது பறவைகள் பறந்து வந்து தலையில் தோளில் உட்கார்ந்து கொண்டு பயமின்றி இளைப்பாறி சென்றன. இதனால் அந்த துறவியிடம் ஏதோ மாயமான சக்தியிருக்கிறது என்று நம்பி அவரிடம் சீடர்களாக சேர்வதற்கு பலரும் முயற்சி செய்தார்கள்.


ஒரு இளைஞன் அந்த துறவியிடம் சென்று மனிதர்களை கண்டால் பயந்து ஒடும் பறவைகள் உங்களிடம் மட்டும் எப்படி இவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன. இதற்கு காரணம் என்ன என்று கேட்டான். அவர் பதில் சொல்லாமல் புன்னகை மட்டுமே செய்தார். அங்கேயே இருந்து அவரை போல தானும் பறவைகளை வசியபடுத்த வேண்டியது தான் என்று முடிவு செய்த இளைஞன் அவரை போலவே நிற்க துவங்கினான்.


ஒரு பறவை கூட அவனை நெருங்கி வரவேயில்லை. அவன் தன்மீது இலைகளை போர்த்தி கொண்ட போதும் அவனை பறவைகள் நெருங்கவேயில்லை. சில வருசங்கள் அங்கேயே இருந்தும் அவனால் பறவைகளை தன் தோளில் அமர செய்ய முடியவில்லை.


ஒரு இரவு துறவியிடம் இதற்கான பதில் தெரியாவிட்டால் தான் அப்போதே ஆற்றில் குதித்து சாகப்போகிறேன் என்று சொன்னான். துறவி சிரித்தபடியே புயலில் சிக்கிய மரத்தை போல உன் மனது எப்போதும் மிக வேகமாக அசைந்தபடியே இருக்கிறது. உன்னிடம் உள்ள பதட்டம் மற்றும் பொறுமையின்மை தான் உன்னை பறவைகளை விட்டுவிலக்கி வைத்திருக்கிறது. கூழாங்கல்லை போல உள்ளுக்குள் ஈரத்தோடும் வெளியில் சலனமில்லாமலும் இருந்தால் பறவைகள் உன்னை தானே தேடி வரும் என்றார் என்பதோடு முடிகிறது இந்த ஜென்கதை..


பறவைகளை விடுங்கள். நமது வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள். உடன் பணியாற்றுகின்றவர்கள் என்று எவரோடும் நமக்கு இணக்கம் இல்லாமல் போன சூழல் இருப்பதற்காக காரணமும் இது தானில்லையா.


 


***
 


 

0Shares
0