நெடுங்குருதி – 2

நவீன தமிழ் இலக்கியம் குறித்த உரையாடலை வளமைப்படுத்தவும், புதிய புத்தகங்களை முறையாக வாசித்து அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சிங்கப்பூரில் உள்ள வாசகர் வட்டம் என்ற அமைப்பில் மாதம் ஒரு புத்தகம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகின்றது.


இதில் தேர்வு செய்யப்பட்ட புத்தகம் குறித்து விரிவான கட்டுரைகள் வாசிக்கபடுகின்றன. அதன் தொடர்ச்சியாக விவாதங்களும் நடைபெறுகின்றன.


எனது நாவலான நெடுங்குருதி குறித்து வாசிக்கபட்ட கட்டுரைகள் இவை


***


எஸ் ராமகிருஷ்ணனின் `நெடுங்குருதி` –  ஜெயந்தி சங்கர்

**
ஊரையும் உணர்வையும் பாத்திரங்களாக்கும் வித்தை எஸ் ராவின் எழுத்துக்குப் பலம். மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும் `நெடுங்குருதி`யின் முக்கிய கதாபாத்திரம் வெம்மை என்றால் `உறுபசி`யில் காமம். நூலாசிரியருக்குப் பிடித்தமான வ்ய்யில் அவரின் எளிய நடையைத் தொடர்ந்து நிழலெனக் கூடவே வருகிறது. வெயில் மீதான எஸ் ராவின் காதல் உறுபசையில் வெளிப்படும் இடங்களெல்லாம் கதையோடு ஒட்டாமல் துருத்திக்கொண்டு நின்றிருக்கும்.


 


ஆனால், அதற்கு நேர்மாறாய் `நெடுங்குருதியில்` பின்னிப் பிணைந்து கிடக்கிறது. வெயில் மீது தன்க்கிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டை அனுபவித்து வெளிப்படுத்திடக் கிடைத்த பெரிய வாய்ப்பாக இந்நாவலை சிறிய வாய்ப்பாக வெயில் திரைப்பட விமர்சனத்தையும் (ஜனவர் 07 – உயிர்மை) மிகச்சரியாகப் பயன் படுத்திக் கொண்டுவிடுகிறார் என்பதை நாம் சுவாரஸியத்துடன் அவதானிக்க முடிகிறது.

இந்நாவலை படித்து முடிக்கும் வரையில் நமக்குள்ளும் வெம்மை படர்வதை உணர முடியும். வெய்யிலில்லாமல் வேம்பலை இல்லை. சரி, ஆனால் படித்து முடிக்கும் போது `வேம்பலை`யில்லாமல் பூமியில் வெயிலே இருக்காதோ என்ற பிரமை ஏற்பட்டு விடுமளவிற்கும் வேம்பலை என்றால் வெயில், வெயில் என்றால் வேம்பலை என்று தீர்மானித்து விடக் கூடிய மனநிலைக்கு நம்மை கொணர்ந்து விட எஸ் ராவால் முடிகிறது. வேம்பலையைப் பிரிந்த நாகு, வசந்த போன்ற பாத்திரங்களின் ஊர்பற்றிய உணர்வுகளுடன் நம்மால் எளிதில் பொருந்தி விட முடிகிறது. ஏனென்றால் ஒவ்வொருக்குள்ளும் ஏதோ ஒரு ஊர் பால் இத்தகைய ஒரு பற்றுதல் இருந்து தானே விடுகிறது.

கிராமம் பரிச்சயமில்லாத என்னைப் போன்றவர்களுக்கு நாவலின் துவக்கத்திலிருந்தே புதிய ஓர் உலகதிற்குள் பிரவேசிக்கும் அனுபவம் உண்டாகவே செய்யும். வெய்யில் உக்கரமேறிப் போன `வேம்பலை` என்ற கிராமம் தான் கதையின் முக்கியப் பாத்திரமும் முக்கியக் களமும். அதே நேரத்தில் இரவில் பிசுபிசுக்கும் இருளும், வெயிலுக்கு இணையான கதைஞரின் கவனத்தை ஆங்காங்கே பெற்று விடுகிறது. எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சுற்றி வராமல் நிகழ்வுகள் வேம்பலையைச் சுற்றியே வருகின்றன.



குருதிக் கறையும், அதன் ருசியைக் கண்ட நிலமும், சதா முறுக்கேறித் திரியும் அதன் வாலிபர்களும் திடீரென்று காணாமல் போகும் ஆண்களை நினைத்துக் கண்ணீர் விடும் பெண்களும் என்று நெடுங்குருதியில் மக்கள் அலைந்தபடியிருக்கிறார்கள். கதையில் நெடுக படிந்திருப்பது வேம்பலையின் வெக்கையுடனான நிழல் மட்டுமல்ல, வேண்டாமென்று ஊரை விட்டு ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற நபர்களின் இழப்புகளும், தூரத்தே இருக்கும் போது ஊரின் பால் அவர்கள் கொள்ளும் ஏக்கமும் தான். ஏனென்றால், ஊரை தாம் வாழும் நிலமாகப் பார்க்காமல் உறவாகப் பார்க்கிறார்கள் அம்மக்கள். ஊரைத் தம் சொந்தமாகக் கருதும் அவர்களால் தம் ஊருடன் வெயிலுடன் கோபிக்கவும் கொஞ்சவும் முடிகிறது.

கத்தியை எடுத்துக் காட்டி வெயிலோடு சண்டைக்குக் கிளம்பிவிடும் அளவுக்கு வேம்பலையின் மக்களால் சூரியனையும் அது கக்கும் வெய்யிலையும் கூட தமதென்று எற்று இயைந்து விட முடிவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆசிரியர் சொல்வது போல பெரும்பாலும் `ஊர்ந்தும்` சிலவேளைகளில் `பாம்பென நெளிந்தும்` செல்லும் வெய்யிலைக் `குடித்து` ஆட்கள் வாழவும் கருவிலிருந்து சிசுக்கள் வளரவும் செய்கின்றனர். அவ்வாறு வெயிலைக் குடித்தபடியே வெம்மையேறியிருக்கும் இவர்கள் மழைக்குப் பிறகான காலையில் குளிர்மை கொண்டு புன்னகைத்தபடியே இருக்கிறார்கள்.

தம் வீட்டின் கால்நடைகளை தங்களின் பிள்ளைகளைப்போல் நேசித்திடும் வேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள், வழிபாடுகள் அனைத்துமே ஏன் பல்வேறு அமானுஷ்யங்களும் கூட நான் இதுவரை கேட்டிராதவையாகவே இருக்கின்றன. ஆசிரியர் மிகுந்த கலையுணர்வோடு சொன்னபோதிலும் கூட அம்மக்களின் வறுமையானது மனதை மிகவும் கனக்கத்தான் செய்துவிடுகிறது. பரதேசிகள் இருவரும் பசி மிகுந்த நேரத்தில் ஊரில் உணவு எதுவும் கிடைக்காது ஏமாற்றத்துடனும் கோபமாகவும் ஊரை விட்டுப் போகும் போது மனதைப் பிசைகிறது.

எறும்புகள் குறித்து ஆதிலட்சுமி நாகுவிடம் சொல்வதெல்லாம் அவனால் நம்ப முடிந்த அளவிற்கு நம்மாலும் ஒன்றிவிட முடிகிறது. குறீயீடுகளாக பறவைகளும் புழுக்களும் கதையோட்டத்திற்கு சுவாரஸியத்தை மட்டுமில்லாமல் பல்வேறு அனுமானங்களையும் விட்டுச் செல்கின்றன. ஆதிலட்சுமி, நீலா, வேணி, பக்கீர் போன்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் உலவுகின்றன. சிறுவயதில் நாகுவின் பெற்றோர் சண்டை போட்டுக் கொள்ளும் இடங்களும் நிகழ்வுகளும் கண்முன் நடப்பதைப் போலவே விரிகின்றன. ப்க்கீருக்கு என்னதான் ஆயிற்று என்று கடைசி வரை சொல்லாமல் ஊகங்களுக்கு விட்டு விடுகிறார் ஆசிரியர்.


 


பக்கீரின் மனைவி தன் கணவனுக்காகக் காத்திருக்காமல் வாழ்க்கையை நடைமுறையில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து விடுகிறாள்.ரத்தினாவதி கடைசி வரை நாகுவை நினைத்தபடியே வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடி, பாலியல் நோய் பீடித்து, இறுதியில் தற்கொலை செய்து கொள்வது பரிதாபமாக இருக்கிறது. குழந்தைமை மறுக்கப்பட்ட திருமால் சூழ்நிலையின் குழந்தையாகிவிடுவதும் இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. பவுலின் கடந்த காலம் திருமலுக்கு ஏற்படும் பாதிப்பை நமக்குள்ளும் விட்டுச் செல்லத் தவறவில்லை. இறையியல் படிப்பை மேற்கொண்ட திருமால் மற்றும் பவுல் ஆகியோரின் உள்மனப் போராட்டங்களும் நம்பகத்தன்மையோடு நகர்கின்றன.

கதையை ஆசிரியர் உண்மைக்கு மிக நெருங்கி சொல்வது மாதிரியும் அதே வேளையில் அதை விட்டு தூரத்திலிருந்து சொல்வது மாதிரியும் உணர முடிவது ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு நவீன கவிதைக் கொடுக்கும் உள்ளார்ந்த ஒரு லயம் மற்றும் அனுபவதிற்கிணையான ஓர் அனுபவத்தை கொடுத்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியலை கலை நேர்த்தியோடு சொல்வதால் இந்நாவல் தமிழின் முக்கிய நவீன நாவல் பட்டியலில் நிச்சயம் அதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நாவல் என்ற பொதுவான வடிவத்திலிருந்து கொஞ்சம் விலகி சில சோதனை முயற்சிகளில் ஈடுபடும் எஸ் ரா உறுபசியிலும் சரி, நெடுங்குருதியிலும் சரி நல்லதொரு வாசிப்பனுபவத்தினைக் கொடுத்து விட்டே செல்கிறார்.

pithcher plant, venus flytrap
போன்ற மாமிசமுண்ணும் செடிகளை (carnivores) நினைவு படுத்துகிறது தன் நாவால் சுழற்றிச் சுழற்றி தன்னுள் மக்களை இழுத்துக் கொள்ளும் வேம்பலை. ஊரின் மீதும், தன் அய்யாவின் மீதும் தனக்கிருக்கும் பற்றை வெளிப்படுத்திக்கொண்டு வசந்தா பேசிடும் வேளையில் அவளிடம்ஏய் வசந்தா, உங்கப்பா ஜாடையிலேயே, அவரப்போலவே கால்ல வடுவோட திருமால்னு உனக்கொரு அண்ணன் தூரத்துல வடக்க இருக்காண்டி“, என்று சொல்லிடத் தோன்றுகிறது. வேம்பலையை நோக்கிப் பயணப்படும் அவ்வேளையில் வசந்தா ஓரகத்தி பெற்றுடுத்த தன் கணவனின் குழந்தைக்கு ஆசையாக `நாகு` என்று தன் தந்தையின் பெயரைச் சூட்டுவதும் அதைத் தாமே வளர்க்கலாம் என்று சொல்லுவதும் இன்னொரு `நாகு` உருவாகப் போகிறான் என்று குறிப்பால் உணர்த்துவதைப் போலிருக்கிறது.


 


வேம்பலையைப் போலவே மேலும் மேலும் நாகுக்ககளை உருவாக்கும் தாகமானது ஆசிரியருக்கும் தீராது தொடர்ந்திடுமோ……


 


**


வேம்பலை ஒரு கற்பனையூர் சித்ரா


 


 


வேம்பலை ஒரு கற்பனையூர். ஆனால் வேம்பர்கள் கற்பனை மனிதர்கள் இல்லை. ஊரின் கதை. அதில் வாழ்ந்த மனிதர்களின் கதை. அந்த மனிதர்கள் வீரர்கள். நெஞ்சுரம் மிக்கவர்கள். அசாத்திய தைரியசாலிகள். ஆனால் இந்த குணங்கள் அவர்கள் அறம் வளர்க்காமல் மறம் வளர்க்க மட்டுமே உதவுகின்றது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற அப்பாவித்தனங்கள் கிடையாது. ஐந்து மிகப் பெரிய பாவங்களின் ஒன்றாக கருதப்படும் களவுத் தொழிலே இவர்களது தொழில். நெடுங்குருதியும் யதார்த்தம், அதியற்புதங்கள் நிறைந்த யதார்த்தம் இரண்டுக்கும் நடுவில் ஓடிகொண்டிருக்கிறது.


 


கள்ளர் பயம் என்பது வெறும் பொருளைத் தொலைத்து விட்டுத் தேடும் துயரமா? இல்லை வெறும் பொருள் போனால் பரவாயில்லை உயிர் போகும் பயமா? கள்ளர்கள் களவாடுவதோடு தங்கள் தொழிலை நிறுத்தி விடுவதில்லை. கொலை செய்யவும் அஞ்சாதவர்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மைதானே! திருடக் கொடுத்துவிட்டுப் பரிதவிப்பது வாழ்க்கையின் மிகப் பெரிய சோகங்களில் ஒன்று.


 


என்பிலதனை வெயில் போலக் காயுமே… என்ற கோடைக் காலத்தில் துவங்கும் கதை, ஆண்டாள் பாடிப் பரவசமாய் ஆண்டவனுடன் கலந்த மேன்மைமிக்க பனிக்காலத்தில் முடிகிறது. கோடையின் கொடுமை, சினம், வெம்மை, பஞ்சம், வறட்சி இவையெல்லாம் அடுத்தெடுத்து வரும் பருவங்களின் சுழற்சியில் மாறி குளுமை பரவுவது போல் வேம்பர்களின் வாழ்க்கை முறைகள், அவநம்பிக்கைகள், வேதனைகள்,கயமைகள் காலசுழற்சியில் மாறி வேறு ஊர்களுக்குச் சென்று வேறு விதமான வாழ்க்கை முறைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்வதைக் காலக்குறீயீடுகளாகக் காடுகிறாரா ஆசிரியர்?


 


கோடைக்காலம், காற்றடிக்காலம், மழைக்காலம், பனிக்காலம் என்ற நாலு காலம் தான் வேம்பர்களுக்கு! வானம் பார்த்த வறண்ட செம்மண்பூமியில் வசந்த காலம் ஏது? ஆங்கில துரைமார்களின் சட்டங்களை எதிர்த்தவர்களுக்கு அவர்கள் வகுத்த பருவகாலங்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லையே!


 


நாகு என்ற பதினோரு வயது சிற்வனின் பார்வையில் கதை தொடங்குகிறது. கதை ஒரு நூறு வருடங்களுக்குப் பின்னோக்கிப் பார்க்கிறது. ஆதிலட்சுமியக்கா சொல்லும் கதைகளை அப்படியே நம்பி விடும் அப்பவித்தனம். சென்னம்மாக் கிழவி பிடிச்சித் தின்னுருவா என்று மிரட்டுவதும், இன்னிக்கி ராத்திரி சென்னம்மா வானத்தில பறப்பா முழுச்சுக்கிட்டு இருந்தாப் பாரு என்று சொல்வதை நம்புகிறான்.


 


நாகு பறவைகளின் கூட்டத்தை ரசிப்பது பின்னாளில் ரத்தினாவதி மூலம் பிறந்த ஆண் குழந்தை திருமாலின் விசித்திர ரசனையை ஒத்திருக்கிறது. கல்யானை, மண்புழு, தவளைகளைத் தோழனாக்கிக் கொள்கிறான்.


 


கதை முழுவதும் யாரும் அவர்கள் வாழும் வாழ்க்கையில் நிறைவடையாமல் வாழ்கிறார்கள். சாகிறார்கள். களவாடிக் கொண்டு வந்த பணம் பொருள் எதுவுமே அவர்கள் வாழ்க்கைக்கு அடைப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. ஏழ்மை, பஞ்சம், பசி பட்டினியுடன் தான் வாழ்கிறார்கள். எப்போதும் ஏதோ ஒரு போராட்டம், பிடிபட்டு விடுவொமா என்ற பயம், நம்மை யாராவது காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம், நம்மை யாராவது காட்டிக் கொடுக்கும் முன்பாக நாம் முந்திக் கொண்டு விடலாமே என்ற நயவஞ்சகத்தனம் இவற்றோடு வாழ்கிறார்கள்.


 


இப்படிப்பட்ட பயங்களோடு சமூகத்தில் குற்றப்பரம்பரையாக அடையாளம் காணப்பட்டு வேறு விதமாக வாழ்க்கையைத் தொடர வாய்ப்புகள் கிடைத்தும் நீ யார் என்னை திருடக் கூடாது என்று சொல்லும் என்ற வீம்பு அதன் பின் தொடரும் வன்முறையில் நிகழும் நாகுவின் குரூரச்சாவு, உடலை விற்றுப் பிழைக்கும் ரத்தினாவதிக்கு நிகழும் வன் புணர்ச்சி, வலிகள் நிறைந்த வாழ்க்கை,


 


திருமாலின் நினைவாக அவன் பிள்ளையை பெற்று வளர்த்தல், உடலை விற்றுப் பிழைக்கும் தொழில் வேண்டாம் என்று விலகி கடை வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் அவளைத் துரத்தும் பழைய வாழ்க்கை, வாட்டும் காமம், அவளது கான்வெண்ட் படிக்க வேண்டும் என்ற நிறைவேறாதக் கனவு, அதை தன் பிள்ளைத் திருமால் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை இவையனைத்தும் ரத்தினாவதி வாழ்க்கையைச் சுற்றிப் பிணைந்து கிடக்கின்றன.


 


ஆனால் எதுவுமே நிறைவேறாமல், திருமணப் பந்தம் பாதியிலேயே முடிந்து,திருமாலுக்கும் நல்ல அம்மாவாக நடந்து கொள்ளாமல், ஆசைநாயகியாய் வாழும் வாழ்க்கையையும் தொடர முடியாமல் மேகவெட்டை நோய் வந்து தற்கொலை செய்து கொள்வது யதார்த்தத்தின் ஒரு பக்கம். மறுபக்கம் நாகு முறைப் படி மணந்த மனைவி மல்லிகா அவன் மகள் வசந்தாவின் கதை.


 


நடுவே வரும் வேம்பர்களின் கதை, வெஸ்லி துரையை துரத்தி துரத்திக் கொல்லும் வேம்பன், தேவானை சிங்கிஇவர்களின் கதை, பகீரின் மனைவி, மகள்கள், இப்படி மனிதர்கள் வருகிறார்கள். யாராலும் வெல்ல முடியாத விஷயங்கள் இவர்கள் மூலம் சொல்லாமல் சொல்லப் படுகின்றன. வேட்கைகள், உடலைச் சார்ந்த காம வேட்கைகள்,• உள்ளத்தைச் சுடும் காதல்கள், வாழ்தலுக்குரிய வேட்கைகள், கனவுகள் காண முடியாத கட்டில் வேண்டும் கேட்கும் பகீரின் மனைவி வேம்பலைக்கு ஒரு விசித்திரப் பரிசு கொடுக்கிறாள்.


 


குரங்குகள் கைகளை உயர்த்தி மணி அடிக்கும் மணிக்கூண்டு! இதன் மூலம் வேம்பலை தன் கைக்குள் அடங்கி விட்டதாக அவள் எண்ணுகிறாள்.


ஆனால் ஊர் மக்களுக்கு அவை ஒன்றும் சந்தோஷப்படுத்தவில்லை. மாறாக பயமுறுத்துகின்றன. ஊமை வேம்பு இரவு நேரங்களில் உம் உம் என்று சத்தமிடுவது, வாங்கி வந்த பசுமாட்டில் தெய்வத்தைக் காண்பது, காமதேனு என்பது,பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் வசந்தா, அவள் தோழி ஜெயக்கொடி இருவரும் ஒரே ஆளைக் காலிப்பதும், ஒருவனையேத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பதும் இப்படி சில சமயம் எதார்த்தத்தை மீறிய கதைகளோடு எதார்த்தப் புனைவுகளும் ராமகிருஷ்ணனை ஒரு சிறந்த கதை சொல்லியாக்குகிறது.


 


கதை முழுக்க பெண்கள், பெண்களைச் சுற்றி வரும் சோகங்கள், கண்ணீர் இப்படி பரிதாபத்துக்குரியப் பெண்கள் நிறைய பேர். ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்கள், அவர்கள் அதற்குத் தேடும் தீர்வுகள் இவற்றை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை. வசந்தா பார்த்துப் பேசி பழகியறியாத தந்தை, வாழாத அவரது ஊர் இதை நாடிச் செல்கிறாள். எந்த இடத்தில் இருந்தாலும் அவள் விரும்பிய ஒன்றுமே நடக்காத போது மீண்டும் பழைய சுழற்சிக்குச் செல்வதை விரும்புகிறாளோ என்று எண்ண வைக்கும் முடிவு!


**


 


 

0Shares
0