இரண்டு திரைக்கதையாசிரியர்கள்.

 


ராபர்ட் டௌனி



உலகெங்கும் திரைப்படக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இன்று வரை பாடமாக படிக்கும் திரைக்கதைகளில் ஒன்று சைனா டவுன். இதை எழுதியவர் ராபர்ட் டௌனி. ரோமன் பொலன்ஸ்கில்யின் இயக்கிய இந்த  திரைப்படத்திற்காக ராபர்ட் டௌனி ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்


பாடமாக படிக்கும் அளவு அப்படி என்ன இருக்கிறது சைனாடவுனில் ? ஒரு துப்பறியும் நிபுணரிடம் ஒரு பெண் தனது கணவன் மீது சந்தேகப்படுவதாக சொல்லி அவரை கண்காணிக்க  சொல்கிறாள். அவனும் கண்காணிக்கிறான். அதன் முடிவில் வேறு ஒரு பெண்ணோடு அவருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கபடுகிறது.


 எதிர்பாராமல் அவர் யாரை பின்தொடர்ந்தாரே அந்த மனிதன் எதிர்பாராமல் கொலை செய்யப்படுகிறான். அப்போது தான் தெரிய வருகிறது. அவர் நினைத்தது போல இது வெறும் கள்ளஉறவு மட்டுமில்லை. அதன் பின்னால் தேசத்தையே உலுக்கிய பெரிய ஊழல் ஒன்று ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்.


இதன் திரைக்கதை மலைப்பாதையில் பயணம் செய்வது போன்று பத்து நிமிசங்களுக்கு ஒரு முறை எதிர்பாராத திருப்பம் கொண்டது. அது போலவே காட்சிகளும் உயரத்திலிருந்து பார்ப்பது போன்று விலகியும் நெருங்கியும் செல்கின்றன. அன்றாட சம்பவங்களின் பின்னால் நாம் அறியாத பெரிய உண்மைகள் புதையுண்டு இருக்க கூடும் என்ற நிஜத்தை வெளிப்படுத்துகிறது. அதை தன் திரைக்கதையின் வழியாக சிறப்பாக உருவாக்கியிருந்தார் ராபர்ட் டௌனி. ஜாக் நிக்கல்சன் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்


ராபர்ட் டௌனி எழுதிய திரைக்கதைகளில்  The Last Detail , Shampoo, Mission Impossible , Greystoke: The Legend of Tarzan, Lord of the Apes ,    போன்றவை முக்கியமானவை.


1970 களில் அமெரிக்க சினிமாவில் நுழைந்த ராபர்ட் டௌனி போனி அண்ட் கிளைட் திரைக்கதையை திருத்தி புதிய வடிவம் ஏற்படுத்தி தந்தார். போனி அண்ட் கிளைட் அதுவரையிருந்த ஹாலிவுட் திரைக்கதை வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. அதன் வெற்றி ராபர்ட் டௌனியை ஹாலிவுட்டிற்குள் அடையாளம் காட்டியது. வாரன் பெட்டி ஸ்பீல்பெர்க், லூகாஸ்,


மார்டின் ஸ்கார்சசி,ரோமன் பொலான்ஸ்கி என்று உலக புகழ் பெற்ற இயக்குனர்கள் அத்தனை பேரும் தங்களின் திரைக்கதையை திருத்தம் செய்து ஒழுங்கு படுத்துவதற்கு ராபர்ட் டெளினியை நாடுகிறார்கள். அவரை ஸ்கிரிப்ட் டாக்டர் என்று ஹாலிவுட் சினிமா அழைக்கிறது



கபோலாவின் காட்பாதர் படத்தின் திரைக்கதையை இவரே முழுமையாக வடிவமைத்து தந்தவர். படத்தின் திரைக்கதையை மரியா புசோவும் கபோலாவும்  இணைந்து எழுதிய போதும் அதன் வடிவத்தையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் கவனமாக திருத்தி தந்தவர் ராபர்ட் டௌனி.


டாம் குருஸின் நட்பு அவரை மிசன் இம்பாசிபிள் படத்திற்கான திரைக்கதையை எழுத வைத்தது. ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக டாம் குருûஸ எடுத்து சென்றது மிசன் இம்பாசிபிள்  திரைப்படமே. இதிலிருந்து ராபர்ட் டௌனி உச்ச நட்சத்திரங்களை உருவாக்கும் திரைக்கதை ஆசிரியர் என்று ஹாலிவுட்டின் முக்கிய நடிகர்கள் பலரும்  ராபர்ட் டௌனியின் திரைக்கதைக்காக போட்டி போட துவங்கினார்கள்.


இருபத்தைந்து ஆண்டுகாலமாக ஹாலிவுட் சினிமாவின் முக்கிய திரைக்கதை ஆசிரியராக அறியப்படும் ராபர்ட் டௌனி தனது அனுபவங்களை புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.


Chinatown and the Last Detail: Two Screenplays  – ராபர்ட் டௌனியின் மிக முக்கியமான திரைக்கதை நூலாகும். அதிலிருந்து ஒரு பகுதி.


1) திரைக்கதை அமைப்பில் வாய்ஸ் ஒவர் என்பது முக்கியமான உத்திகளில் ஒன்றாக ஏன் கருதப்படுகிறது ?



அது சூழலின் தீவிரத்தை வெளிப்படுத்தக்கூடியது. குறிப்பாக ஒரு நகரில் கதை நடக்கிறது என்றால் கதை நடக்கும் நகரை பற்றிய விபரங்கள் இயக்குனர் குரலில் விவரிக்கபடும் போது அது ஒரு புறச்சூழலை ஏற்படுத்திவிடுகிறது. இது போலவே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதிலும் பின்புலக்குரல் முக்கிய இடம் வகிக்கிறது. நான் எழுதும் திரைக்கதைகளில் இதை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். சன்செட் பொலிவார்டு படத்தில் பில்லி வைல்டர் மிக சரியாக பயன்படுத்தியிருப்பார்


2) திரைக்கதையை எப்படி எழுத துவங்குகிறீர்கள் ?


நான் ஒன்பது மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலை செய்யும் ஊழியன் கிடையாது. மாறாக நான் ஒருபடைப்பாளி. திரைக்கதையின் அடிப்படை வடிவத்தை மட்டுமே நான் முதலில் முடிவு  செய்வேன். அதன் வளர்ச்சியும் மாற்றங்களும் எனக்கே பல நேரங்களில் ஆச்சரிய மூட்டக்கூடியது.



ஒரு மீனவன் போல என்று சொல்லலாம். மீனவன் வலையை எடுத்துக் கொண்டு போய் ஏரியில் வீசுகிறான். பிறகு மீன்கள் கிடைக்கும்வரை காத்துக் கொண்டிருக்கிறான். வலையில் எத்தனை மீன்கள் விழுந்திருக்கின்றன. என்ன மீன்கள் அது என்று அவன் யோசிப்பதில்லை. மீன் நிறைந்தபிறகு வலையை இழுக்க துவங்குகிறான். நான் அப்படி தான் எழுத துவங்குகிறேன்.


படைப்பாளியான அடுத்த என்ன காட்சி என்ன திருப்பம் வரப்போகிறது என்ற சவாலும் வியப்புமே என்னை எழுத வைக்கிறது.


3) வாரன் பெட்டி, ஜாக் நிக்கல்சன் டாம்குரூஸ் என்று நடிகர்களை சார்ந்து அதிகம் திரைக்கதை எழுதுகிறீர்கள் அதற்கு என்ன காரணம் ?


முதலில் அவர்கள் நடிகர்கள். அது ஒரு படம் உருவாவதற்கு முக்கியமான காரணம். நடிகர்களின் ஆதரவு இல்லாமல் ஹாலிவுட்டில் ஒரு படத்தை உருவாக்க முடியாது. இன்னொன்று அவர்கள் எனது நல்ல நண்பர்கள். என்னை புரிந்து கொண்டவர்கள். அதனால் நான் விரும்பிய விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. நடிகர்களின் ஆதரவு இருக்கிறது என்ற ஒரு காரணம் தான் படத்தை நம் விருப்பபடி உருவாக்க முடிகிறது. இல்லாவிட்டால் பாதி வெளிவராமல் நின்று போய்விடும்.



4) உங்கள் திரைக்கதைகளுக்கு பின்னால் ஹிட்ச்காக்கின் ஆழமான பாதிப்பு இருக்கிறது. சில படங்களின் ஆதார திரைக்கதை வடிவம் ஹிட்ச்காக்கின் படங்களை போன்றே இருக்கிறது அதற்கு காரணம் என்ன?



ஹிட்ச்காக் ஹாலிவுட்டின் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியர். அவரது திரைக்கதை பாணியில் அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்ந்த சவால். அந்த வடிவம் எனக்கு நெருக்கமாக உள்ளது. அதை நான் துப்பறியும் படங்களிலிருந்து உருவி சமூக தளங்களில் நடைபெறும் கதைகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறேன். ஹிட்ச்காக் உருவாக்கும் மெலோடிராமா சினிமாவின் ஆதாரமான உணர்ச்சிகளில் ஒன்று அதை எவரும் தவிர்க்க இயலாது.



5) திரைக்கதையின் முக்கிய அம்சமாக எதை கருதுகிறீர்கள்?



கதாபாத்திரம் என்ன பிரச்சனையை சந்திக்கிறது அல்லது எதை கண்டு பயப்படுகிறது. அது எப்படி படத்தில் வெளிப்படுகிறது என்பதே முக்கிய அம்சம். நல்ல திரைக்கதைகள் திரும்ப திரும்ப எழுதப்பட்டவை. எனது திரைக்கதைகளை நான் பத்துக்கும் மேற்பட்ட முறைகள் திருத்தி எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதில் ஏற்படும் மாற்றங்கள் திரைக்கதையின் வளர்ச்சிக்கு உதவிகரமான இருந்துள்ளன.


****


பேடி சயாப்ஸ்கி



1950 களில் புகழ்பெற்ற ரேடியோ நாடக ஆசிரியராக அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவின் புதிய திரைக்கதை ஆசிரியராக பிரவேசித்தவர் பேடி சாய்ப்ஸ்கி. உக்ரேனிய யூதப்பெற்றோர்களின் மகனாக நீயுயார்க் நகரில் பிறந்த இவர் ராணுவ சேவையில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அந்த நாட்களில் கண்ணிவெடியில் சிக்கி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது அங்கிருந்த ஒய்வு நேரத்தில் எழுத துவங்கினார். ராணுவ சேவையிலிருந்து வெளி வந்த பிறகு தனது எழுத்துபணியில் ஆர்வம் காட்டத்துவங்கினார்.


அந்த நாட்களில் அமெரிக்காவின் ரேடியோ நிலையங்கள் மிகுந்த புகழ்பெற்று திகழ்ந்தன. குறிப்பாக சிபிஎஸ் ரேடியோ நிகழ்ச்சிகள் பல புதுமைகளை உருவாக்கின. அதில் ரேடியோ நாடகங்கள் எழுத துவங்கினார். அந்த நாடகங்கள் மிகுந்த பாராட்டை பெற்றன. அதன்தொடர்ச்சியாக டெலிவிஷன் நாடங்களை எழுத துவங்கினார். அந்த நாட்களில் டெலிவிஷன் அறிமுகமான நாட்கள் என்பதால் அவர் மீது அதீத கவனம் உருவானது.


சிறந்த திரைக்கதை  ஆசிரியருக்கான ஆஸ்கார் விருது பெற்ற பேடி சயாப்ஸ்கி திரைக்கதையில்  தனித்துவமான கதை சொல்லும் முறை கொண்டிருந்தார். குறிப்பாக அவரது திரைக்கதையில் கதாபாத்திரங்களின் சித்திரிப்பும் நிகழ்வுகள் ஒன்றோடு ஒன்று இணையும் விதமும் நுட்பமாக உருவாக்கபட்டிருந்தது.


25 படங்களுக்கும் அதிகமாக திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். அதில் Middle of the Night, The Bachelor Party, Marty, The Goddess, The Americanization of Emily , Paint Your Wagon   போன்றவை முக்கியமான படங்கள். இதில் மார்ட்டி படத்திற்காக முதலில் ஆஸ்கார் விருது பெற்றார். அதன் பிறகு தி ஹாஸ்பிடல், நெட்வொர்க் படங்களுக்காகவும் ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்.



உலகெங்கும் யூதர்கள் ஒடுக்கபடுவது தொடர்பான அரசியல் இயக்கங்களில் நேரடியாக பங்கு பெற துவங்கிய பேடி  தன் படைப்புகளில் அந்த குரல் ஒலிக்க வேண்டும் என்று விரும்பினார்.


 அத்தோடு ரஷ்யாவில் அவர் மேற்கொண்ட பயணம் அவரது பார்வையை மாற்றியமைத்தது. அதன் தொடர்ச்சியாக அவர்  எழுதிய பிராட்வே நாடகம் அவர் எதிர்பார்த்தது போல வெற்றிகரமாக அமையவில்லை. அந்த தோல்வி பேடியை மனச்சோர்விற்கு உள்ளாக்கியது புற்று நோயால் பாதிக்கபட்ட பேடி 1981 ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது திரைக்கதைகள் தொகுப்பாக வெளியாகி உள்ளது.


 ஹாலிவுட் திரைக்கதை அமைப்பாளர்களில் பேடியின் வகைமை என்று தனியான ஒரு பிரிவே இன்று உள்ளது. அந்த அளவு அவரது பாதிப்பு ஹாலிவுட் சினிமாவில் உள்ளது.


இவரது பேச்சலர் பார்ட்டி திரைப்படம் திருமணம் செய்து கொள்ள போகும் ஒரு நண்பனின் இரவு விருந்தில் கலந்து கொள்ளும் ஐந்து பேரின் வாழ்க்கை எப்படி ஒரே இரவில் மாறிப் போகிறது என்பதை விவரிக்கிறது. குறிப்பாக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்க்கை இன்பங்களை அனுபவிக்க நினைக்கும் எடி என்ற கதாபாத்திரமும், அவன் மீது பொறாமை கொள்ளும் சார்லி என்ற கணக்காளரையும் முதன்மையாக சித்தரிக்கிறது.


சார்லி எடியை தன் மாற்று பிம்பமாக கருதுகிறான். ஆனால் படத்தின் முடிவில் சார்லிக்கு திருமணம் செய்து கொண்டு ஒரு குடும்பத்தை உருவாக்குவதே வாழ்வின் முக்கியமான பணி என்பது புரிகிறது. அவன் எடியின் தனிமைக்காக பரிதாபபடுகிறான்


இது போலவே தி ஹாஸ்பிடல் என்ற படம் மத்தியவயதில் மனச்சோர்வின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போராடும் ஒரு மருத்துவரின் கதையை சொல்கிறது. டாக்டர் போக் மன்ஹாட்டனில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிகிறார். அவரது மனச்சோர்வு தற்கொலைக்கு தூண்டுகிறது. ஆனால் அது தற்செயலானது போல நடக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். 24 மணி நேரத்திற்கு நடக்கும் சிறுசிறு சம்பவங்கள் அவருக்கு வாழ்வின் மீதான உண்மையான அக்கறையை புரிய வைக்கின்றது.


Paddy Chayefsky’s Television Plays.  என்ற அவரது புத்தகம் திரைக்கதை எழுத விரும்புகின்றவர்கள் வாசிக்கபட வேண்டிய முக்கிய புத்தகமாகும்.



எப்படி திரைக்கதையை எழுத துவங்குகிறீர்கள் ?



முதலில் ஒரு சிறுகதை போல உரைநடையாகவே திரைக்கதையை எழுதிவிடுவேன். அதனால் கதை சார்ந்து மனதில் உள்ள விஷயங்கள் யாவும் அதில் முழுமையாக பதிவாகி விடுகின்றன. அதன் பிறகு அதிலிருந்து காட்சிகளை உருவாக்கி கொள்வேன். நாடகத்தில் பயிற்சி இருந்த காரணத்தால் திரைக்கதை எழுதும் போது கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் மோதல்களும் நிகழ்வுகளும் முக்கியமானவை என்பதை உணர்ந்து எழுத முடிகிறது


வசனங்களை எப்படி  கையாளுகிறீர்கள்?



வசனங்கள் மிக இயல்பாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக கதாபாத்திரம் ஒரு சூழலில் எப்படி பேசும் என்பதை நாம் உணர்ந்து எழுதாவிட்டால் அது மிகையாகிவிடும். எனது வசனங்கள் பெரிதும் உண்மை சார்ந்தவை. நான் அடிமனதிலிருந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய வசனங்களை எழுதியிருக்கிறேன்.


திரைக்கதையில் எது முதன்மையானது ?


கதை துவங்குவது தான். படத்தின்  ஆரம்ப காட்சிகள் மிக முக்கியம் என்று கருதுவேன். காரணம் அது தான் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் முறையாக அறிமுகப்படுத்தபட்டுவிட்டால் அவர்களே திரைக்கதையை நகர்த்தி கொண்டு போய்விடுவார்கள். ஆகவே ஆரம்ப காட்சிகள் மிக முக்கியமானவை. அவை மிக சுருக்கமாகவும் அதே நேரம் குழப்பமின்றியும் இருக்க வேண்டும்



கதாபாத்திரங்களுக்கு எப்படி பெயரிடுகிறீர்கள்?


அது வேடிக்கையான விஷயம். சில பெயர்கள் சில கதபாத்திரங்களுக்கு எப்போதுமே சூட்டப்படுகின்றன.உதாணரத்திற்கு கிறிஸ்டி என்ற பெயர் பல படங்களில் நர்ஸ்களுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. அந்த சம்பிரதாயத்தை ஏற்றுக் கொள்வது போல நானும் கிறிஸ்டி என்று பெயர் சூட்டியிருக்கிறேன். சில நேரம் பெயர்கள் கிடைக்காமல் பேஸ்பால் விளையாட்டு அறிவிப்பு பலகையிலிருந்து பல பெயர்களை கடன்வாங்கியிருக்கிறேன். சினிமா பார்க்க விரும்பும் மக்கள் முக்கிய கதாபாத்திரம் தவிர்த்த மற்ற பெயர்களை பெரிதாக கவனிப்பதில்லை. அவை எழுதுபவனின் பிரச்சனைகள் மட்டுமே



மூன்று அங்கங்கள் கொண்ட திரைக்கதை அமைப்பு அவசியமானது தானா?
கண்டிப்பாக  அவசியம். வெற்றிகரமாக ஒடிய அத்தனை படங்களும் இந்த அமைப்பிற்கு பொருந்தக்கூடியவை தான். இந்த அமைப்பு நாடகத்திலிருந்து உருவானது. சினிமா அதை நன்றாக வளர்த்து எடுத்திருக்கிறது. நான் மூன்று அங்கங்கள் கொண்ட திரைக்கதையே தான் எழுதுகிறேன்.


படத்தொகுப்பின் போது காட்சிகள் நீக்கபட்டுவிடக்கூடும். அந்த ஆதங்கம் உங்களுக்கு ஏற்படுகிறதா?


பெரும்பாலும் எழுதும் போது நானே ஒரு எடிட்டர் போல தான் செயல்படுகிறேன். திரைக்கதைக்கு அவசியமில்லாத எதையும் நான் எழுதுவதில்லை. படமாக்கபட்ட பிறகு படத்தொகுப்பில் முக்கிய காட்சிகள் எதுவும் பறிபோவதில்லை. ஆகவே எனக்கு அந்த ஆதங்கம் எதுவுமில்லை.


திரைக்கதை எப்படியிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?


கவிதை போல கச்சிதமாக அமைய வேண்டும். சரியான சொற்கள் சரியான இடத்தில் பயன்படுத்தபடுவது தான் கவிதையை உச்சமானதாக்குகிறது. திரைக்கதையிலும் அதுவே முக்கியமானது. அது போல நல்ல கவிதை படித்த உடனே மன எழுச்சி தரக்கூடியது. திரைக்கதையும் அப்படியிருக்க வேண்டும்.



நன்றி : The Craft of the Screenwriter. by John Brady.


 

0Shares
0