பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு கோடை இரவில் Three Seasons என்ற வியட்நாமிய திரைப்படத்தை பார்த்தேன். எந்த ஆண்டு வெளியானது யார் முக்கிய நடிகர்கள் என்று எதுவும் தெரியவில்லை. டிவிடியின் முகப்பும் சீன மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. படம் துவங்கியதும் அறைக்குள் பசுமை பீறிடும் சைகோனின் நிலக்காட்சியும், அதிகாலையின் மென்னொளியும் பரவதுவங்கியது.
அகன்ற இலைகளில் தண்ணீர் ததும்ப கண்ணுக்கு எட்டியவரை தாமரை பூத்துக்கிடக்கும் பெரிய நீர்நிலை . நாட்டுபடகின் துடுப்புகளை வலித்தபடியே தாமரை மலர் பறிக்க வரும்இளம் பெண்கள். அவர்களின் மரபான பாடல், அதனோடுசேர்ந்து ஒலிக்கும் குழலிசை. மறக்கமுடியாத இசையது.
தாமரை நிரம்பிய ஏரியின் நடுவில் ஒரு பழைய வீடு. அதில் வசிக்கும் ஒரு கவிஞர். அவர் முகம் தெரிவதில்லை. ஆனால் பாடும் குரலை அவர் வீட்டிற்குள்ளிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறார். ஒலை தொப்பி அணிந்த பெண்கள் துடுப்பால் வெயிலை தள்ளியபடியே தாமரை பறிக்கிறார்கள். தொன்மையான மரபிசை கருவிகள் அதிர்கின்றன. தாமரை பூக்கள் ஊடே படகு தண்ணீரில் அன்னம் போல மெதுவாக நகர்கிறது. காற்றில் இலைகள் அசைகின்றன.
இசை உயர்வதும் அதிர்வதுமாக மாறுகிறது. பறித்த தாமரைகளை மூங்கில் கூடைகளில் போட்டு விற்பனைக்காக அருகாமை நகருக்கு கொண்டு செல்கிறார்கள். கின் ஆன் என்ற இளம் பெண் பறித்த மலர்களுடன் சைகோன் நோக்கி புறப்படுகிறாள். சைகோன் எனப்படும் ஹோசிமின் நகரம் எல்லா மாநகரங்களையும் போல பரபரப்பும் சுற்றுலா பயணிகளின் வருகையுமாக நாளை துவக்குகிறது.
வியட்நாம் யுத்ததில் ராணுவ வீரனாக பணியாற்றிய ஒரு அமெரிக்கன் தனது மகளை தேடிக் கொண்டு அந்த நகருக்கு வந்துசேர்கிறான். ஹார்வி கெட்டில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மகளை எங்கே போய் தேடுவது என்று புரியாமல் மதுவிடுதியில் தனது நீண்ட பகலை பியர் போத்தலுடன் கழிக்கிறான்.
நகரின் இன்னொரு இடத்தில் ரிக்ஷாகாரர்கள் வெயில் தாளமுடியாமல் முகத்தில் தண்ணீரை பிழித்து கொள்கிறார்கள். அங்கே ஹெய் என்ற ரிக்ஷாக்காரன் வெயிலை ஏறிட்டு பார்த்தபடியே கோடை எப்போது முடியும் என்று முணுமுணுத்துக் கொள்கிறான்.
தாமரை விற்பதற்காக நகருக்குள் வந்த கின் ஆனிடம் எவரும் மலர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் சாலையோரம் குவித்து போட்டு மலிவு விலையில் விற்கபடும் பிளாஸ்டிக் தாமரை மலர்களை ஆசையாக வாங்குகிறார்கள். அது ஏன் என்று அந்த இளம்பெண்ணிற்கு புரியவேயில்லை.
வுட்டி எனப்படும் பத்துவயது சிறுவன் தோளில் தொங்கும் ஒரு பெட்டியில் சிகரெட், சூயிங்கம் விற்கிறான். அவனை தட்டிப்பறிக்கும் சிறுவர்கள் மடக்குகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி ஒரு நட்சத்திர விடுதியின் வாசலில் நின்றபடியே போகின்ற வருகின்றவர்களிடம் சிகரெட் விற்பனை செய்கிறான்.
திடீரென மழை துவங்குகிறது. நல்ல மிகுமழை. ரிக்ஷாகாரர்கள் சந்தோஷம் கொள்கிறார்கள். சிறுவன் வுட்டி மழைக்குள் உற்சாகமாக பந்து விளையாடுகிறான். அமெரிக்க ராணுவவீரன் மழையை ரசித்தபடியே மது அருந்துகிறான். மழைக்குள்ளாக வீடு போய் சேர தாமரை விற்கும் பெண் ஒடுகிறாள். மழைக்குள்ளாகவே லான் என்ற வேசை தனது வாடிக்கையாளர் ஒருவரை நட்சத்திர விடுதியில் சந்திக்கிறாள். மழை ஒய்கிறது.
இரவில் வீடு திரும்பும் அவள் ஹெய் என்ற அதே ரிக்ஷாகாரன் வண்டியில் ஏறுகிறான். மழைக்குள் தனது சிகரெட் பெட்டியை தொலைத்த சிறுவன் அதை மீட்பதற்காக தேடத் துவங்குகிறான். ராணுவ வீரன் கடந்த கால நினைவில் அமிழ்ந்தபடியே தன் மகளை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான்
வேசையை காதலிக்கும் ரிக்ஷாகாரன், விற்பனை பெட்டியை தொலைத்த சிறுவன். மகளை தேடும் ராணுவ வீரன். தொழுநோயாளியாக உள்ள கவிஞன். அவன் பாடலை பாடும் தாமரை பறிக்கும் பெண் என்று நான்கு கதை இழைகளை ஒன்றிணைத்து இந்த படம் உருவாக்கபட்டுள்ளது.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேறு வேறு கதைகள். மூன்று பருவ காலங்கள். ஒரு நகரம். ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளாமலே பாதிக்கிறார்கள். அது தான் மூன்று பருவகாலங்கள் என்ற படத்தின் ஆதார கதை. இந்த படத்தின் மழைக்காட்சிகள் மிக இயல்பாகவும் அற்புதமாகவும் படமாக்கபட்டிருக்கிறது.
கதையின் மைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் நிறங்களுடன் கூடிய கவித்துவமான தேர்ந்த ஒளிப்பதிவு, ஆகச்சிறந்த இசை, பருவகாலமாற்றங்களை காட்சிகளோடு இடைவெட்டி செல்லும் படத்தொகுப்பு. தனிமையும் காதலும் பிரிவுமாக பீறிடும் உணர்ச்சிகள் என்று சமகால உலக சினிமாவில் இந்த படம் மிக முக்கியமானது என்பதை அதன் ஒவ்வொரு காட்சிகளும் உறுதிபடுத்தியது.
தொடர்ந்து மூன்று இரவுகள் அதே படத்தை திரும்ப திரும்ப பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அதன் வியப்பு குறையவேயில்லை. இசை கேட்க துவங்கியதும் மனதில் தாமரை பூக்க துவங்குவதை உணர்ந்தேன். எளிமையான கதை. அதை படமாக்கிய விதத்தில் அற்புதமாக சாதித்திருக்கிறார்கள்.
படத்தை இயக்கிய Tony Bui பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. சில வாரங்கள் அவரது மற்றபடங்கள் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி அலைந்தேன். எதையும் காண முடியவில்லை. இணையத்தில் பின்வருடங்களில் தேடிய போது இது அவரது முதல்படம் , தன்னுடைய இருபத்திநாலாவது வயதில் இதை இயக்கியிருக்கிறார், இரண்டு வயதில் வியட்நாமிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் படித்து வளர்ந்து விட்டு தன்னுடைய இருபதாவது வயதில் நாடு திரும்பியிருக்கிறார். அதற்கு முன்பாக தன்னுடைய இரண்டு குறும்படங்களை இயக்கி அதற்கு உலக திரைப்பட விழாவில் விருது பெற்றவர் என்றும் தெரிய வந்த போது பெரும் வியப்பாக இருந்தது.
வியட்நாமிய சினிமா பற்றி அதற்கு முன்பு அதிகம் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்த ஒரு திரைப்படம் வியட்நாமிய சினிமாவை பற்றி ஆர்வம் கொள்ள முக்கிய தூண்டுதலாக இருந்தது. வியட்நாமிற்கு சினிமா லூமியர் காலத்திலே அறிமுகமான போதும் அது காலனிய நாடாக இருந்த காரணத்தால் சினிமா தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை.
1990 வரை வியட்நாமிய சினிமா வெறும் மலினமான வணிகமுயற்சிகள் மட்டுமே. ஒன்றிரண்டு ஹாலிவுட் திரைப்படங்கள் வியட்நாமில் படமாக்கபட்ட போதும் வியட்நாமிய கலாச்சாரம், வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான பிரச்சனைகள் அந்த படங்களில் சித்திரிக்கபடவில்லை. ஆவணப்படங்கள், Water Returns to Bắc Hưng Hải, Girl on the River போன்ற ஒன்றிரண்டு கலைப்படங்கள் மட்டுமே வியட்நாமிய சினிமாவின் முகமாக உலகம் அறிந்திருந்தது.
அமெரிக்க சினிமாவிற்கு இன்றைக்கும் வியட்நாம் யுத்தம் ஒரு சாகச கதைகளமாகவே இருக்கிறது. இதில் பிரான்சிஸ் போர்ட் கபோலா தனது Apocalypse Now படம் விதிவிலக்கனாது. அப்படம் வியட்நாம் யுத்த பின்புலத்திலே இயக்கபட்ட போதும் அமெரிக்க ராணுவத்தின் அதிகார வேட்கைûயும் இரக்கமற்ற படுகொலைகளையும் அதிர்ச்சியாக வெளிப்படுத்தியது.
நவீன வியட்நாமிய சினிமாவின் முதல் அங்கீகாரமாக திரி சீசனஸ் படத்தையே குறிப்பிடுகிறார்கள். 1999ல் வெளியான இந்த படம் ஏழு உலக திரைபட விருதுகளை பெற்றிருக்கிறது. ஈரானை போலவே வியட்நாமிலும் திரைப்படம் தயாரிக்கபடுவதற்கு முன்பாக திரைக்கதை அரசின் அனுமதி பெறுவதற்காக சமர்பிக்கபட வேண்டும். கடுமையான தணிக்கை சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.
மூன்று பருவங்காலங்கள் படத்தின் திரைக்கதை அரசின் அனுமதி பெற்ற போதும் படத்தின் தயாரிப்பாளர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பதால் தணிக்கை துறையிலிருந்து இரண்டு அதிகாரிகள் படப்பிடிப்பு முழுவதும் கூடவே இருந்து படப்பிடிப்பை கண்காணித்தார்கள்.
படத்தில் தாமரை மொக்குகள் வாடிவிடுவது போல காட்டப்படுவது அரசினை விமர்சிப்பதாக தணிக்கை துறை கருதியது. மழையில் சிறுவன் பெட்டியை தொலைத்துவிடுவதை கம்யூனிச எதிர்ப்பு என்று கண்டித்து படமாக்க அனுமதிக்கபடவில்லை. அது போலவே படத்தின் ஒளிப்பதிவு பச்சை சிவப்பு என்று மாறுவதை தணிக்கை அனுமதிக்க மறுத்தது. அத்தனை போராட்டாங்களையும் எதிர் கொண்டே இப்படம் உருவாக்கபட்டது.
கிராமம் நகரம், வறுமை, செல்வம், வயோதிகம் இளமை, பறிகொடுத்தல் தேடுதல். இச்சை அமைதி என்று பல்வேறு இருநிலைகளை இந்த படம் சித்திரிக்கிறது. நகர்மயமாவதும், மாநகரங்களில் உருவாகி வரும் கலச்சார மாற்றங்களும் அமெரிக்க பயணிகளை குறிவைக்கும் சுற்றுலாக தந்திரங்களும், ஏழ்மையுடன் வாழப்பழகிய அடித்தட்டு மக்களுமாக படம் வியட்நாமின் சமகால வாழ்வினை நிஜமாக சித்தரித்துள்ளது.
இந்தப் படம் ஏற்படுத்திய உத்வேகத்தில் வியட்நாமிய திரைப்படங்கள் ஏதாவது விழாவில் திரையிடப்படுகிறதா என்று தேடியலைந்தேன். அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு வியட்நாம் படம் கூட காணகிடைக்கவில்லை. முடிவில் எனது அமெரிக்க நண்பர் ஒருவர் வியட்நாமிய படத்தின் டிவிடி ஒன்றினை வாங்கி வந்து தந்தார். அது Tran Anh Hung இயக்கிய The Scent of Green Papaya . . 1993 ம் ஆண்டில் கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதுபெற்ற இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கான சிறந்த அயல்மொழி திரைப்படமாக முதல்முறையாக வியட்நாமிலிருந்து தேர்வு பெற்றிருந்தது.
டிரான் ஆங் ஹங் இளந்தலைமுறை இயக்குனர்களில் மிக முக்கியமானவர். மிக குறைவான வசனங்கள் உள்ள இந்த திரைப்படம் ம்யூ என்ற வேலைக்கார சிறுமியின் வாழ்வினை விவரிக்கிறது. ம்யூ ஒரு வணிக குடும்பத்தில் வேலைக்காரியாக இருக்கிறாள். சமைப்பது. சுத்தம் செய்வது. வீட்டுவேலைகளை கவனிப்பது என்று நாள் முழுவதும் அவளுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கிறது. அந்த வீட்டின் எஜமானிக்கு அவள் மீது அதீதமான அன்பு. அதற்கு முக்கிய காரணம் அவள் வயதில் இருந்த அவர்களது மகள் தோ திடீரென இறந்துபோகிறாள். ஆகவே ம்யூவை அந்த எஜமானி தன் மகள் போலவே கருதுகிறாள்.
ம்யூவின் கண்களால் அந்த வீட்டின் நடைமுறைகளும் அவர்களது பொருளாதார வீழ்ச்சியும் சித்தரிக்கபடுகிறது. பிள்ளைகளில் ஒருவன் அப்பாவை மீறி நடந்து கொள்கிறான். எதிர்பாராத பொருளாதார சரிவு ஏற்படுகிறது. குடும்பம் நொடித்து போகிறது. வணிகர் இறந்து போகிறார். ம்யூவை அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகுட் ஹேயன் என்ற இளைஞன் தன் வீட்டில் பணியாற்ற அழைத்து போகிறான். அங்கோ அவள் வளர்ந்து அழகான பெண்ணாக இருப்பதால் ஹேயனை மயக்க திட்டமிடுவதாக அவனது முறைப்பெண் கோபபடுகிறாள்.
எல்லாவற்றையும் சகித்து கொண்டு தன் இயல்புமாறாமல் இருக்கிறாள் ம்யூ. அவளது அன்பு புரிந்து கொள்ளப்படாமலே போகிறது. வீடு சமையல் சுத்தம் செய்வதுஎன்று அன்றாட நடவடிக்கைகளின் வழியே ஒரு பெண்ணின் அந்தரங்கமான அன்பும், ஏக்கமும் நிராசைகளும் காட்சிபடுத்தபட்டுள்ளன. ம்யூவாக நடித்திருப்பது டிரான் ஆங் ஹங்கின் மனைவி. பத்து வயது ம்யூவாக வரும் சிறுமி மிக சிறப்பாக நடித்திருக்கிறாள்.
டிரான் ஆங் ஹங்கும் சிறுவயதில் வியட்நாமிலிருந்து வெளியேறியவர். பாரீஸில் வசிக்கும் டிராங்கின் முதல்படமிது. அவரது சொந்த வாழ்க்கையின் சாடைகள் அதிகம் கொண்ட இந்த படம் முழுமையாக பாரீஸில் அரங்கிற்குள்ளாகவே படமாக்கபட்டது. ஒரு காட்சி கூட வியட்நாமில் படமாக்கபடவில்லை. ஆனால் வியட்நாமிய குடும்பம் ஒன்றோடு சேர்ந்திருப்பது போன்ற நெருக்கத்தை தருமளவு மிக யதார்த்தமாகவும் நுட்பமாகவும் இந்த படம் உருவாக்கபட்டிருக்கிறது. இந்த படத்திலும் இசை சிறப்பாக பயன்படுத்தபட்டுள்ளது. ஒளிப்பதிவில் இந்த படம் தேர்ந்த அழகியலை உருவாக்கியிருக்கிறது.
டிரான் ஆங் ஹங் இன்றைய வியட்நாமிய சினிமாவின் தனித்துவமான இயக்குனராக கொண்டாடப்படுகிறார். பத்து வருசங்களில் மூன்று முக்கிய படங்களை இயக்கியிருக்கிறார். இந்த மூன்றையும் பார்த்திருக்கிறேன். சென்ற மாதம் இவரது சமீபத்திய படமான I Come With The Rain வெளியாகி உள்ளது. இந்த படம்அவரது மற்ற படங்களை போல் இல்லாமல் குற்றவுலகை பற்றியதாக உள்ளதாக விமர்சனங்கள் கூறுகின்றன.
டிரான் ஆங் ஹங்கின் படங்களில் தி சென்ட் ஆப் க்ரீன் பபாயாவை விடவும் Cyclo மற்றும் என்ற The Vertical Ray of the Sun படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன
ஹோசிமின் நகரில் ரிக்ஷா ஒட்டும் இளைஞன் லீவானை பற்றியது சைக்ளோ. ஒரு நாள் அவனது ரிக்ஷா சாலையோரம் நிறுத்தி வைக்கட்டிருந்த போது மாபியா கும்பல் ஒன்றால் கடத்தி கொண்டு போக படுகிறது. அதை மீட்பதற்காக லீவான் அலைந்து திரிகிறான். அவனை மாபியா கும்பல் தனது கடத்தல் வேலைகளுக்கு உதவி செய்தால் மட்டுமே ரிக்ஷாவை மீட்டு தருவதாக மிரட்டுகிறது. வழியில்லாமல் கடத்தல் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுகிறான். அவனை போலீஸ் தேட துவங்குகிறது.
லீவானை காப்பாற்ற வேண்டுமானால் அவனது அக்கா விபச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அச்சுறுத்தி லீவானின் அக்காவை விபச்சாரம் செய்ய வைக்கிறது. இதனால் அக்கா தம்பி இருவரது இயல்பான வாழ்வும் திசைமாறி போகிறது. வன்முறை ஒரு இளைஞனின் வாழ்வை எப்படி புரட்டி போடுகிறது என்பதை சைக்ளோ உக்கிரமாக வெளிப்படுத்துகிறது.
இந்த மூன்று படங்களிலும் டிரான் ஆங் ஹங்கின் முக்கிய குவியமாக இருப்பது சிதைவுறும் குடும்ப அமைப்பும் அதனால் உருவாகும் பிரச்சனைகளுமே. எதிர்பாரத காரணம் ஒன்றால் சிதைவு கொள்ளும் குடும்பம் அதிலிருந்து மீள முடிவதேயில்லை என்பதையே இப்படங்கள் தொடர்ந்து சுட்டி காட்டுகின்றன.
இன்னொரு பக்கம் போருக்கு பிந்திய வியட்நாமின் வாழ்க்கை வன்முறையும், நெருக்கடியும் பயமும் நிரம்பியதாக இருப்பதை அடையாளம் காட்டுகிறது. சைக்ளோ படத்தில் பயன்படுத்தபடும் எறிகுண்டு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் இன்றும் அமெரிக்காவின் ராணுவமிச்சம் வியட்நாமினுள் இருப்பதையே காட்டுகிறது. போதை மருந்து கடத்துவதும் போதை பொருட்களை உட்கொள்வதும் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாதபடி கலந்துவிட்ட உண்மையை இப்படம் விமர்சனத்துடன் வெளிப்படுத்துகிறது.
காட்சிகளின் இடைவெளியில் நிரம்பும் நிசப்தமும் நீண்ட காட்சிகளும், மிக அண்மை காட்சிகள் அதிகமில்லாத கதை சொல்லும் முறையும் பிரெஞ்ச் புதிய அலை திரைப்படங்களின் அழகியலை பின்பற்றும் காட்சிபடுத்துதலும் டிரான் ஆங் ஹங்கின் சிறப்புகள். குறிப்பாக கோதாரின் பாதிப்பில் உருவான இடைவெட்டுகள். வாய்ஸ் ஒவர் மற்றும் உருவகப்படுத்தும் முயற்சிகள் இவரிடம் அதிகம் காணப்படுகின்றன. வியட்நாம் பிரெஞ்சு காலனியாக இருந்ததால் அங்கே இன்றும் பிரெஞ்ச் கலாச்சார பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அதையே தனது படங்களின் ஆதார உணர்ச்சி வெளிப்பாடாக கொள்வதாக டிரான் ஆங் ஹங் கூறுகிறார்
இந்த படங்களின் தொடர்ச்சியாக புதிய தலை சினிமா வியட்நாமில் உருவாகி வருகிறது. குறிப்பாக ஆவணப்படங்களும் குறும்படங்களும், குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படங்களும் புதிய அழகியலோடு உருவாக்கப்படுகின்றன. அத்துடன் பெண் இயக்குனர்களின் வரவு புதிய சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது.
சமகால வியட்நாமிய பெண் இயக்குனரான Trinh Minh-Ha இயக்கிய, Surname Viet, Given Name Nam ஆவணப்படத்தை சில மாதங்கள் முன்பாக பார்த்தேன். பெண்ணிய நிலைப்பாட்டில் உருவான இந்த ஆவணப்படம் வியட்நாமிய பெண்களின் மீதான ஒடுக்குமுறையை அதன் கடந்த காலங்களிலிருந்து இன்று வரை கடுமையாக விமர்சனம் செய்கிறது. அமெரிக்காவில் படித்த டிரின் மின் ஹா டோக்கியோவில் பேராசிரியாக பணியாற்றுகிறார். இசைக்கலைஞர், ஒவியர், எழுத்தாளர், சினிமா இயக்குனர் என்று இவரது ஆளுமை தனித்துவமானது. கலாச்சார அரசியலுக்கான சாதனமே சினிமா என்று கூறும் இவர் பெண்ணியக்குரலின் வலிமையை தனது படங்களில் வெளிப்படுத்துகிறார்.
சமீபத்தில் The Buffalo Boy என்ற படத்தை பார்த்தேன். ஙண்ய்ட் சஞ்ன்ஹ்ங்ய்-யர் இயக்கிய இப்படம் எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்லும் ஒரு சிறுவனின் பார்வையில் அவனது பிறப்பின் பின்உள்ள உண்மையை வெளிப்படுத்துகிறது. மேய்ச்சலுக்கான புல்வெளி இல்லாமல் எங்கும் தண்ணீர் தேங்கிப்போய்விட்ட இடத்தில் எருமை மேய்க்கும் சிறுவனின் தகப்பன் இறந்து போய்விடுகிறான். அவனை புதைக்கமுடியவில்ûல் . வெள்ளம் வடியும் மட்டும் பத்திரமாக பாதுகாத்து வைக்க முடிவு செய்கிறார்கள். சாகும் தருணத்தில் சிறுவனின் தாய் பற்றிய உண்மையை சொல்கிறான் அவனது தகப்பன். தன்னுடைய தாயை தேடிச் செல்லும் சிறுவனும் அவனது மேய்ச்சல் எருமைகளின் அலைச்சலுமாக படம் நீள்கிறது.
வியட்நாமிய படங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிக தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் அதன் கதையம்சம் இன்றும் மிகை உணர்ச்சியும், அதீத நாடகமாக்கலும் கொண்டதாகவே இருக்கிறது. திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் உலக திரைப்படவிழாவை வியட்நாம் நடத்துகிறது. அமெரிக்க திரைப்பட நிறுவனங்கள் வியட்நாமிய சினிமாவில் முதலீடு செய்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதால் புதிய திரைப்படங்களுக்கான சாத்தியங்கள் அதிகம் உருவாகி வருகின்றன
கடந்த சில ஆண்டுகளில் முப்பதிற்கும் மேற்பட்ட வியட்நாமிய படங்களை பார்த்துவிட்டேன். ஆனாலும் என் மனதில் மூன்று பருவகாலங்கள் படம் அப்படியே இருக்கிறது. இன்றைக்கும் பின்னிரவின் தனிமையில் அறையில் அந்த படத்தினை மறுபடி பார்க்கையில் மனம் லயத்து போய்விடுகிறது. அப்படத்தின் பின்ணணி இசையை தனி குறுந்தகடாக வாங்கி வைத்திருக்கிறேன். அதை கேட்கும் போது காற்றில் தாமரை மலர்கள் பூக்க துவங்குகின்றன.
வியட்நாமிய படத்தை பற்றி நினைக்க துவங்கியதுமே தாமரை நினைவில் வந்துவிடுகிறது. பௌத்த மதம் வியட்நாம் கலாச்சாரத்தில் மிக ஆழமாக வேர்விட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் இன்றும் அந்த தாமரை மலர்கள் மீதான அக்கறை என்று தோன்றுகிறது. சமகால வியட்நாமிய படங்கள் இன்னும் இந்திய திரைப்பட விழாக்களில் முக்கிய கவனம் பெறவில்லை. ஆனால் டிவிடியின் வரவு அதை எளிதாக நாம் காணும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருகிறது.
தண்ணீரில் எழுதப்பட்ட சொற்களை கண்களால் வாசிக்க முடியாது என்று ஒரு வியட்நாமிய பழமொழியை வாசித்திருக்கிறேன். இந்த படங்கள் நேரடியாக ஏற்படுத்தும்அனுபவங்களை விடவும் நீண்ட நாட்களின் பின்பும் அது மனதில் ஏற்படுத்தும் உள்ளார்ந்த உத்வேகமும் எழுச்சியும் முக்கியமானது. அதற்காகவே மீண்டும் காண மனம் நாடுகிறது.
***