கடந்த பத்து நாட்களாக புத்தகத் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் புத்தகங்கள் வாங்க திருவிழா கூட்டம் போல வந்து போவதை பார்த்துக் கொண்டேயிருந்தேன். எழுத்தாளன் சந்தோஷம் கொள்ளும் அற்புதமான தருணமது. இன்றைய சூழலில் யாரும் படிப்பதில்லை என்ற பொதுக்குற்றசாட்டுகளை பொய்யாக்கி மக்கள் ஆசையோடு புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். வாங்கிய எல்லாப் புத்தகங்களையும் உடனே படித்துவிடுவார்கள் என்று நான் நம்பமாட்டேன். அப்படி படிக்க வேண்டியது அவசியமும் இல்லை.
புத்தகங்கள் பிறந்த நாள் கேக்குகள் அல்ல. உடனே சாப்பிட்டு முடிக்க. ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு மனநிலையில் தான் படிக்க கையில் எடுக்கபடுகின்றன. எந்தப் புத்தகம் எப்போது யாரால் படிக்கப்படும் என்பது நாம் அறிந்து கொள்ளவே முடியாத புதிர்மை. நாம் விரும்பும் நேரத்தில் ஒரு புத்தகம் கையில் கிடைக்க வேண்டுமே என்பதற்காகவே வாங்கி சேகரிக்கிறோம். வாசிக்கபடாத புத்தகங்கள் நம்மை எப்போதும் மௌனமாக பார்த்துக் கொண்டேயிருக்கின்றன.
இந்த புத்தக கண்காட்சியில் நான் நாற்பத்தைந்து புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அதில் மூன்றை இந்த பத்து நாட்களிலே படித்து முடித்துவிட்டேன். மற்றவை மழைக்காலத்திற்காக எறும்புகள் சேர்க்கும் தானியம் போன்றவை. தொடர்ந்து வரும் நாட்களில் வாசித்து முடித்துவிடுவேன்.
இந்த ஆண்டு புதிதாக ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வேறுவேறு பதிப்பகங்களில் வெளியாகி இருந்தன. ஆனால் பெரிய ஏமாற்றம். ஒரிஜினல் வொர்க் எனப்படும் அசலான புத்தகங்கள் மிக மிக குறைவு.
பெரிதும் புத்தக வெளியீடு வணிகமாகி விட்டதன் நேரடி சாட்சியாக குவிந்திருந்தன பல நூறு புத்தகங்கள். அத்துடன் புத்தக அச்சிடுதலில் பத்திகளுக்கு நடுவில் அதிக இடைவெளியிட்டு, பெரிய எழுத்தில், மலிவான காகிதத்தில் அச்சிட்டு இருநூறு முந்நூறு பக்கம் மேல் உள்ள புத்தகம் போன்ற தோற்றம் தரச்செய்யும் மோசடி பல புத்தகங்களில் காண முடிந்தது.
பெரும்பான்மை மொழிபெயர்ப்பு புத்தகங்களில் மூல ஆசிரியரின் பெயரோ, அவரை பற்றிய சுய விபரங்களோ எதையும் காண முடியவில்லை. ஆங்கிலத்தில் அந்த நூலை மொழிபெயர்த்தவர் யார் என்ற விபரங்கள் இடம் பெறவில்லை. குறிப்பிட்ட சில புத்தகங்களை தவிர மற்றவை மூல நூலிற்கு செய்யப்பட்ட அவமரியாதைகளே.
உலக சினிமா மீது மக்கள் விருப்பம் கொண்டிருக்கிறார்கள் என்பதை மலிவான விற்பனை தந்திரமாக்கி குப்பையான பல புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தவறுதலாக எழுதப்பட்ட தகவல்கள், சம்பந்தமில்லாத புகைப்படங்கள் என்று ஏக குழப்பம். ஒரு புத்தகத்தில் டார்வின் புகைப்படத்தை போட்டு ஐப்பானிய இயக்குனர் நகிசா ஒசிமா என்று கட்டுரையை பார்த்தேன். யார் இதை எல்லாம் கவனிக்க போகிறார்கள் ? என்ற அலட்சியம் பீறிடுகிறது.
எந்த புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்ற அடிப்படை தரவுகள் தொகுக்கபட்டு நாலைந்து உதவியாளர்கள் அமைக்கபட்ட ஒரு தகவல் உதவி மையம் புத்தக கண்காட்சியில் அடுத்த வருடமாவது கட்டாயம் அமைக்கபட வேண்டும். இல்லாவிட்டால் நாள் ஒன்றுக்கு நான் மட்டுமே ஐம்பது பேருக்கு இந்த ஆலோசனையை சொல்லி தாவு தீர்ந்துபோய்விட்டேன்.
அது போலவே பிரபலமான சில பதிப்பகங்கள் புத்தக கண்காட்சியில் ஆளுக்கு நாலைந்து கடைகளை பினாமி பதிப்பக பேரில் எடுத்து வைத்து கொண்டு கடை முழுவதும் தங்களது புத்தகங்களை நிரப்பியிருந்தது ஏமாற்றுதனம். அந்த புத்தக விற்பனை திணிப்பு தரும் எரிச்சல் அடுத்த புத்தக கடையை கூட பார்க்க முடியாமல் செய்துவிடுகிறது.
இன்றும் பெரியசாமி தூரனின் கலைக்களஞ்சியமோ, சிவனடியின் இந்திய சரித்திர களஞ்சியமோ, அ.லெ. நடராசன் மொழியாக்கம் செய்த முழுமையான ஆயிரத்தோரு இரவுகள் தொகுதிகளோ, சென்னை பல்கலைகழக தமிழ் ஆங்கில அகராதி, தமிழ் வளச்சி துறை வெளியிட்ட தமிழக வரலாறு இரண்டு தொகுதிகள், சம்பத்தின் இடைவெளி, அவரது சிறுகதைகள், ஷண்முக சுப்பையா கவிதைகள், போன்ற பல முக்கியமான புத்தகங்கள் பல ஆண்டுகள் மறுபதிப்பு காணமலே உள்ளன. அதை சீந்துவார் யாருமே இல்லை போலும்
ஒரு எழுத்தாளனை சந்திப்பதில் வாசகர் கொள்ளும் மகிழ்ச்சிக்கு இணையானதே வாசகனை சந்திக்கும் எழுத்தாளரின் மனநிலையும். நேரடியாக, மனம்விட்டு பேசிக் கொள்ளும் சில நிமிசங்கள் அற்புதமானவை. எவ்வளவு மாறுபட்ட ரசனையுடைய வாசகர்கள் படிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் உரையாடவும் ஏற்பட்ட இந்த சந்தர்ப்பத்திற்காக நான் வாசகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்
சற்று நிதானமாக அமர்ந்து பேசிக் கொள்ள அங்கே இடமில்லை. ஒரு தேநீரை சேர்ந்து அருந்தியபடியே வாசகர் எழுத்தாளர் என்ற இடைவெளியை அழித்து நெருக்கம் கொள்வதற்கான சூழல் அங்கேயில்லை. என் புத்தகங்களில் கையெழுத்து வாங்குபவர்களின் கண்கள் என்னோடு பேசத் துடிப்பதை நான் காண்கிறேன். ஆனால் தயக்கம், கூச்சம். கூட்ட நெரிசல் பேச்சை தடைசெய்துவிடுகிறது.
சில நேரங்களில் இயந்திரத்தனமாக கையெழுத்துபோட்டு தந்து கொண்டிருக்கிறேனே என்று என்மீதே எனக்கு கோபம் வந்தது. ஆனால் அதை தாண்டி முன்னறியாத சிலருடன் இணக்கமான, மனம் நிறைந்த அன்பை பகிர்ந்து கொள்ள உதவிய உரையாடல் சாத்தியமாகவே செய்தது. ஒரு வாசகர் என்னை எதிர்கொள்ளும் போது ஏற்படும் கூச்சத்தை விட அதிக கூச்சம் எனக்கும் உருவாகிவிடுகிறது. வேறு எந்த சூழலிலும் அப்படி நடப்பதேயில்லை. வாசகரின் கைகளை தொடும் போது நானும் உள்ளுற நடுக்கமே கொண்டிருந்தேன் என்பதே உண்மை
என்ன உறவு அது. ஒரு புத்தகம் இரண்டு மனிதர்களை ஒன்று சேர்கிறது என்பது எவ்வளவு விசித்திரம். அதை வாசகர் என்று பொது பெயரிட்டு அழைப்பதை ஏனோ மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. எல்லா எழுத்தாளர்களும் அடிப்படையில் வாசகர்களே.
புத்தகங்களை எழுதுவது ஒரு படகு செய்வது போன்றது என்றே எனக்கு எப்போதுமே தோன்றுகிறது. தண்ணீரில் விடப்படும் படகை தரையில் அமர்ந்து செய்யத் துவங்குகிறோம். படகு செய்வதற்கு ஆற்றை பற்றி அறிந்திருக்க வேண்டும். அதன் இயல்பும் மூர்க்கமும் புரிந்து கொண்டிருக்கபட வேண்டும். அத்துடன் சரியான மரம். சரியான வடிவாக்கம், சிறிய துளை விழுந்துவிடாத கவனம், அயராத உழைப்பு என்று தச்சன் படகு செய்யும் போது தன் முழு கவனத்தையும் அதில் செலுத்துகிறான்.
படகு தயார் ஆகிறது. ஆற்றில் படகை விடுகிறான். அதன் பிறகு அவன் கைகளை கட்டிக் கொண்டு மௌனமாக அதை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர அதோடு வேறு ஒரு பந்தமும் கொள்ள முடியாது. படகின் விதி அதன் கைகளில் தானிருக்கிறது.
படகில் யார் ஏறுகிறார்கள். எதற்காக போகிறார்கள் என்பது தச்சனுக்கு தொடர்பு இல்லாதது. அவனது வேலை ஆற்றை கடக்க உதவி செய்வது மட்டுமே.
ஆற்றின் வேகத்தை, சுழிப்பை எதிர் கொண்டு நிலைத்து நிற்கும் படகின் பலம் மட்டுமே அதை காப்பாற்றும். மற்றபடி அதை செய்தது மாபெரும் தச்சனாக இருந்தாலும் படகு ஒட்டையானால் தூக்கி எறியப்பட்டு விடும்.
மரத்தச்சன் தான் செய்த படகை தொலைவில் நின்று அவதானிக்கும் போது சந்தோஷம் கொள்வான். அது இரவு பகல் அறியாமல் தண்ணீரில் கிடக்கிறது. யார் யாருக்கோ உதவுகிறது. படகோட்டிகளாக உள்ள சிலருக்கு அது வாழ்வு அளிக்கிறது. படகின் இரண்டு துடுப்புகளை போலவே நமது கண்கள் புத்தகங்களை கடக்க உதவுகின்றன.
நேற்று அதே புத்தக கண்காட்சி நடந்த சாலை வழியில் கடந்து சென்றேன். திருவிழா முடிந்த இடத்தில் உதிர்ந்து கிடக்கும் சந்தோஷமும் சிரிப்பும் போல அந்த காலி மைதானத்தில் கடந்து போன மனிதர்களின் காலடிதடங்களும் அவர்களின் பேச்சொலியும், உற்சாகமும் உதிர்ந்து கிடப்பதை உணர்ந்தேன்
கூடுதல் பொறுப்புணர்வும், அக்கறையும், உற்சாகமும் உருவாக அடுத்து எழுத வேண்டிய நாவல், படைப்புகள் குறித்து மனது எழுச்சி கொள்கிறது. எழுத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு இதை விட வேறு எதுவும் உற்சாகம் தந்துவிட முடியாது.
ஜெயகாந்தன் தனது வாசகர்களை எப்போதுமே சகஹிருதயர்களே என்று அழைப்பார். அது மிக சரியானது என்று இப்போது புரிகிறது.
எனது வாசகர்கள் என்று எவருமில்லை. என் முன்னோடிகளை, சமகால எழுத்தாளர்களை வாசித்து மகிழ்ந்தவர்கள் என்னையும் வாசிக்கிறார்கள் என்பதே நான் அறிந்த உண்மை.
என் சகஹிருதயர்களான அவர்களுக்கு என் நிறைந்த நன்றிகள்
புதிய புத்தகம், எழுத்து, உரையாடல் என்று இந்த ஆண்டு பெரும் உற்சாகமாகவே துவங்கியுள்ளது. உங்களுக்கும் அப்படியே தொடர வாழ்த்துகள்.