ஆங்கிலம் ஒரு மொழிமட்டுமல்ல. அது காலனியாதிக்கத்தின் அடையாளம் மற்றும் காலனியாக்குவதற்கான கருவி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த ஆங்கில மோகத்திற்கு எதிராக மிகுந்த கேலியும் விமர்சனமுமாக எழுதப்பட்ட ஜப்பானிய நாவல் I Am a Cat. இதை எழுதியவர் நட்சுமி சுசூகி (Natsume Sōseki). 1905 ஆண்டு ஜப்பானில் எழுதப்பட்ட இந்த நாவல் மெய்ஜி காலகட்டத்தில் மக்கள் எப்படி போலியானதொரு ஆங்கில மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை கேலி செய்கிறது. இதை எழுதிய நட்சுமி சுசூகி ஒரு ஆங்கிலப்பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயசரிதைத்தன்மை கொண்ட நாவல் என்று இதை வகைப்படுத்த முடியும். நாவலின் மையக்கதாபாத்திரம் சுசூகியின் சாயலையே கொண்டிருக்கிறான். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் உள்ள ஒரு பூனை அந்த ஆசிரியர் மற்றும் குடும்பதினர் எவ்வளவு போலியானதொரு வாழ்வை நடத்துகிறார்கள் என்பதை பகடி செய்வதே நாவலின் முதன்மை சரடு.
நாவல் முழுவதும் பூனையின் குரலில் விவரிக்கபடுகிறது. ஆங்கிலம் பிடிக்காத பூனையது. ஜப்பானில் பிறந்து ஜப்பானிய உணவை தின்றுவாழும் அந்த பூனை ஆங்கில ஆசிரியரின் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு எளிய ஜீரணசக்தி மட்டுமே உள்ள தனது எஜமான் பகட்டிற்காக ஆங்கில கனவான் போல வேஷம் போடுவது பிடிப்பதில்லை.
பூனை தனது ஜப்பானிய அடையாளம் பற்றி நிறைய யோசிக்கிறது. ஆங்கிலத்தை எதற்காக கொண்டாடுகிறார்கள் என்று எரிச்சல்படுகிறது. நல்ல வேளை தானொரு பூனையாக இருந்துவிட்டோம் இல்லாவிட்டால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுவிடும் என்று கேலி செய்கிறது.
பூனையின் நினைவுகளும் அது எதிர்கொள்ளும் சம்பவங்களுமே இந்த நாவலின் அடிப்படை. 600 பக்கங்களைக் கொண்ட நாவல் முழுவதுமே பூனையின் கண்ணோட்டத்திலிருந்தே விவரிக்கபடுகிறது. நாவலில் கதை என்று பெரிய சம்பவங்கள் அதிகமில்லை. மாறாக பூனையின் கூர்மையான அவதானிப்பு மற்றும் அது மனிதர்களின் நடவடிக்கை பற்றிய தனது அதிருப்தியை எதிரொலிப்பதிலுமே வெளிப்படுகிறது. குறிப்பாக உணவின் மீது ஜப்பானியர்கள் காட்டும் கவனம் மற்றும் சகமனிதர்களோடு உள்ள நெருக்கமற்ற உறவு இரண்டும் மிகவும் கேலி செய்யப்படுகின்றன.
திருடியும் ஒளிந்தும் சோம்பேறிதனமாக வாழ்வை நடத்துவதாக அறியப்பட்ட பூனை அந்த செயல்களை தன்னை விடவும் மிக ரகசியமாகவும் போலியான பாவனைகளோடும் செய்கின்றவன் மனிதனே என்பதை அடையாளம் காட்டுகிறது
நாவலில் வரும் ஆங்கில ஆசிரியர் மற்றும் அவரது குடும்பம் அவரை தேடிவரும் அறிவாளி நண்பன் அவனது தோழி ஆகிய எல்லா கதாபத்திரங்களும் உருவகமானவர்களே. அவர்களது பெயர்களும், மேற்கொள்ளும் அபத்தமான செயல்களும் கூட அதிகம் உருவகப்படுகின்றன. அந்த வீட்டில் யார் பூனை போல நடந்து கொள்கிறார்கள் என்பது மிக கேலியாக விவரிக்கபடுகிறது
ஜப்பானிய மொழியில் வாசிக்கும் போது சில குறிப்பிட்ட சொற்கள் நேரடியான அர்த்தம் தராமல் மறைமுகமான கேலித்தன்மையை வெளிப்படுத்த கூடியது. அது ஆங்கில மொழியாக்கத்தில் கிடைக்கவில்லை என்று விமர்சகர்கள் தெரிவித்த போதும் நாவல் முழுவதும் மெல்லிய நகைச்சுவை பீறிடுவதை வாசிக்கையில் உணர முடிகிறது.
பலநேரங்களில் மனிதர்களின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த பூனை வாழ்வு குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. அது போன்ற இடங்களில் தத்துவம் மற்றும் அதிநுட்பமான கருத்துகள் வெளியாகின்றன.
நாவலில் பூனை ஒரு எலியை கூட பிடிப்பதில்லை என்பது கவனிக்கபட வேண்டிய செய்தி. பௌத்த மதம் பூனையை விழிப்புணர்வின் குறியீட கருதுகிறது. இதனால் பௌத்த மத துறவிகள் பூனையை மடாலயங்களில் வளர்ப்பதற்கு அனுமதிக்கபட்டார்கள். அது போலவே பூனைக்கு ஒன்பது உயிர் இருப்பதாகவும் அதனால் பூனை சாவிலிருந்து தப்பித்துவிடக்கூடியது என்றும் பௌத்த சாரங்கள் கூறுகின்றன.
ஜப்பானின் முதல் நவீன நாவல் எனப்படும் ஐ ஆம் தி கேட் பூனையின் வழியாக மனிதர்களின் அபத்தமான வாழ்வையும் போலித்தனத்தையுமே விவரிக்கிறது. இதில் வரும் பூனை விழிப்புணர்வு பெற்ற ஒரு பௌத்த துறவிக்கு நிகராக உள்ளது. பல நேரங்களில் அது பூனையாக இருப்பதை பற்றி அதுவே யோசிக்கிறது. சில வேளைகளில் பூனையாக இருக்கவேண்டியதன் அபத்தத்தை அது துயரத்தோடு வெளிப்படுத்துகிறது.
பூனையின் முக்கிய பிரச்சனையாக இருப்பது அதன் தனிமை மற்றும் சுய அடையாளம். நாவலில் வரும் பூனைக்கு பெயர் இடப்படவில்லை. அது ஒரு பெயருக்காக காத்திருக்கிறது. தனது பெயர் பற்றி மனிதர்கள் பெரிதாக கவலைப்படுவதில்லை என்று பூனைக்கு தெரிந்திருக்கிறது.
அத்தோடு அந்த பூனை அதிகம் மனிதர்களோடு வாழ்ந்து பழக்கபட்டிருக்கவில்லை. ஆகவே அது மனிதர்களோடு தான் சேர்ந்து வாழ்வது குறித்த அதிருப்தியை நேரடியாகவே வெளிப்படுத்துகிறது. அத்தோடு பூனையாக இருப்பதால் வாழ்நாள் முழுவதையும் அது தனிமையில் கழிக்கவேண்டிய நிலையை தவிர்க்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறது
பூனையின் எஜமானாக உள்ள ஆங்கில ஆசிரியருக்கு எதிலும் பெரிய ஈடுபாடுகள் கிடையாது. அவர் தன்னை தேடிவரும் பழைய மாணவர்களுடன் அவ்வப்போது பேசிக் கொண்டேயிருக்கிறார். அந்த உரையாடல்களில் பாதி அர்த்தமற்றது. எதற்காக அவர்கள் இப்படி அபத்தமாக பேசிக் கொள்கிறார்கள் என்று எரிச்சல்படுகிறது பூனை. அத்தோடு அந்த வீட்டில் தன்னை சுவாரஸ்யப்படுத்தும் நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை என்று வருத்தபடுகிறது
நாவலின் முடிவில் பூனை வெறுமையை தாளமுடியாமல் மதுவை குடித்துவிட்டு ஒரு தண்ணீர் தொட்டியினுள் விழுந்துவிடுகிறது. பூனையின் வழியாக சொல்லப்பட்ட போதும் நாவல் முழுவதும் நவீன மனிதன் அடையாளம் இழந்து போனவனாகவும் அபத்தமானதொரு வாழ்வை நடத்துகின்றவனாகவுமிருப்பது வெளிப்படுத்தபடுகிறது
பலநேரங்களில் பூனையின் குரல் நுôற்றாண்டைக் கடந்து நமது சமகால வாழ்வின் மீதான தீவிர விமர்சனமாக உள்ளது என்பதே இதன் சிறப்பு.
இந்த நாவலை முதலில் ஒரு சிறுகதையாக எழுத துவங்கினார் நட்சுமி சுசூகி. ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு அதை ஒரு முக்கிய நாவலாக உருமாற்றும்படியாக நேர்ந்தது. இன்று ஜப்பானிய மறுமலர்ச்சி காலகட்டத்தின் வாழ்வை பிரதிபலிக்கும் முதல் நாவல் என்று இலக்கிய விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த நாவலை ஒரு சோதனை முயற்சி என்று எளிதில் வகைப்பபடுத்த முடியாது. காரணம் இது போன்ற கதை சொல்லும் முறை ஜப்பானிய நாட்டார்கதைகளில் காணப்படுகிறது. பொதுவாக நாட்டார் கதைகள் அந்தந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களது நினைவு அடுக்குகளே. அவை பெரிதும் யதார்த்தம் தாண்டி மாயமும் அற்புதமும் சாகசமும் கொண்டதாகவே இருக்கின்றன. ஆகவே இந்த நாவல் ஒருவகையில் மரபான கதை சொல்லும் முறையை மீட்டெடுத்திருக்கிறது.
ஜப்பானின் நவீனநாவல் துவங்கும் போது அங்கு ஏற்பட்ட சமூக கலாச்சார மாற்றங்கள் குறித்த பகடியான விமர்சனங்களும் ஆழ்ந்த அவதானிப்பும் கொண்டதாகவே நாவல்கள் வெளியாக துவங்கின.
ஜப்பானின் முதல் நவீன நாவலாசிரியர் என்று கொண்டாடப்படுகின்றவர் நட்சுமே சுசூகி. இவர் மெய்ஜி காலகட்டத்தை சேர்ந்தவர். சிறுவயதிலே பெற்றோரை பிரிந்து வளர்க்கபட்ட அவருக்கு குடும்பம் என்ற அமைப்பின் மீது கடுமையான விமர்சனங்களிருந்தன. மெய்ஜி காலகட்டத்தில் ஜப்பானில் வழிவழியாக வந்த நிலப்பிரபுத்துவ மரபு மாறி ஜனநாயக கருத்துக்களும் மேற்கத்திய சிந்தனையின் தாக்கமும் அதிமாக துவங்கியிருந்தன.
ஜப்பானிய வரலாற்றில் மெய்ஜி காலகட்டம் சமூக சீர்திருத்தங்களுக்கான காலமாகும். ஜப்பானியனின் வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றங்கள் இந்த காலகட்டத்தில் ஏற்பட்டன. குறிப்பாக ஆங்கிலகலாச்சாரத்தின் தாக்கம் மேலோங்கியிருந்தது.
புதிய தலைமுறையொன்று ஆங்கிலகலாச்சாரம் மட்டுமே மிகவும் மேலோங்கியது என்று தங்களது மரபான பழக்கவழக்கங்களை கைவிடத்துவங்கியது. பௌத்த மதத்தை பற்றிய மறுபரிசீலனைகள் வரத்துவங்கின. பொருளாதார ரீதியாகவும் ஜப்பானில் புதிய மாற்றங்கள் உருவாகின. இந்த பாதிப்பு இலக்கியத்திலும் எதிரொலித்தது.
தன் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைக்க வேண்டும் என்ற சராசரி மத்தியதர வர்க்கத்து ஜப்பானியன் ஒவ்வொரும் ஆசைப்பட்டார்கள். அதை ஊக்கப்படுத்துவது போல அரசே கல்வி நிலையங்களில் ஆங்கில இலக்கியம் படிப்பதற்கும் ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதற்குமான ஏற்பாடுகளை செய்தன.
ஆங்கிலத்தின் மீதமான மித மிஞ்சிய மோகம் ஏற்பட்ட அந்த காலகட்டத்தில் நடசுமி சுசூகி கல்லுôரியில் ஆங்கில இலக்கியம் கற்று ஜப்பானிய அரசின் உதவித்தொகையோடு லண்டன் சென்று அங்கேயுள்ள ஆங்கில கல்லுôரிகளில் மூன்று வருடகாலம் தங்கி பயின்று வந்தவர். திரும்பி வந்து டோக்கியோ பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றினார். அந்த நாட்களில் அவருக்குள் ஆங்கில கலச்சாரம் மற்றும் அதன் மீதான மக்கள் மோகம் ஜப்பானின் செவ்வியல் மரபை, நுட்பமான பௌத்த கவிதையியலை புறக்கணிக்கிறது என்ற குற்றஉணர்வு ஏற்படத்துவங்கியது.
ஜப்பானின் பண்டைய இலக்கியங்களின் மீதும் சீனமொழியின் மீது ஆர்வம் கொண்டவராக படைப்பிலக்கியத்தில் ஈடுபடத்துவங்கினார். ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டார் நடசுமி சுசூகி . லண்டனில் ஆங்கிலம் படிப்பதற்காக அவர் தங்கியிருந்த மூன்று ஆண்டுகள் அவரது வாழ்வில் மிக மோசமான நாட்கள். பசியும் குளிரும் தனக்கு இஷ்டமில்லாத கலச்சாரமும் அவரை மிகுந்த வேதனை கொள்ள செய்தன.
தனியறை ஒன்றில் தங்கிக் கொண்டு கணப்பு அடுப்பின் முன்பாக அமர்ந்தபடியே விருப்பமான புத்தகங்களை படித்தபடியே வெளியே செல்லாமலே பலகாலம் வாழ்ந்து வந்தார். ஜப்பான் திரும்பி ஆங்கில பேராசிரியராகி கல்வி போதித்த போதும் கூட அவரால் லண்டன் ஏற்படுத்திய மனப்பாதிப்பிலிருந்து வெளிவரமுடியவேயில்லை.
சில காலம் மனச்சிதைவுற்ற நிலையில் வைத்தியம் செய்து கொண்டார். அத்தோடு அவரது மனைவி நரம்பு தளர்ச்சி மற்றும் மனக்கொந்தளிப்பு நோயால் அவதியுறவே அவரது வாழ்வு சிக்கல்களும் சிடுக்கும் நிரம்பியதாக அமைந்தது. இதனால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பாதிப்பு கொண்டவராகயிருந்தார்.
தனது சுய அடையாளத்தை இழந்து வெறுமையின் முன்பாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவனாகவே இன்றைய ஜப்பானிய இளைஞன் இருக்கிறான் என்று நட்சுமி அதிருப்தி கொண்டிருந்தார். அந்த எண்ணமே அவரது படைப்புகளிலும் திரும்ப திரும்ப வெளிப்பட்டது.
தனது காலகட்டத்தின் முக்கிய இலக்கியவாதியாக அறியப்பட்ட நட்சுமி சுசூகி வயிற்றுபுற்றுநோயால் பாதிக்கபட்டார். நோய்மையின் ஊடாகவும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த அவர் 1916 ஆண்டு இறந்தார். ஜப்பானிய இலக்கியத்தின் முன்னோடி என்று கௌரவிக்கபடும் நட்சுமி சுசூகியின் இந்த நாவலை யுனெஸ்கோ உலகின் சிறந்த நாவல்களின் ஒன்றாக அங்கீகாரம் செய்து சிறப்பித்தது. அதை தொடர்ந்து அவரது இலக்கிய சேவையை சிறப்பிக்கும் விதமாக ஜப்பானிய அரசு 1000 யென் நோட்டில் அவரது உருவத்தை வெளியிட்டு கௌரவித்தது.
பின்நவீனத்துவ நாவல்கள் கதைசொல்லும் முறையில் புதிய தேடுதல்களை உருவாக்கி வரும் இன்றைய சூழலில் இந்த நாவல் நுôறு வருசத்தின் முன்பாகவே கதைசொல்லலில் புதிய உத்தியை உருவாக்கியதால் மிகுந்த முக்கியத்துவமான நாவலாக அடையாளம் காணப்படுகிறது.
இவரை வாசிக்கையில் மிக நெருக்கமாக நினைவிற்கு வரும் எழுத்தாளர் நகுலன் மட்டுமே. நகுலன் பூனைகளை பற்றி எழுதியதை மட்டும் தனித்து ஒரு நுôலாக்கினால் அது மிகத் தனித்துவமானதாக இருக்க கூடும் என்றே தோன்றுகிறது. பூனைகள் தங்கள் நினைவை பகிர்ந்து கொள்ள துவங்கினால் கூட அதிகம் மௌனமாகவே இருக்கும் என்று ஒரு கிரேக்க பழமொழியிருக்கிறது. இந்த நாவல் பகிர்ந்து கொள்வதும் அது போன்றதொரு மௌனத்தையே.