வாழ்த்துகள்

நேற்று பாரதப்பிரதமர் மோடி அவர்கள் மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பொன் மாரியப்பனை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அதிலும் தமிழிலே உரையாடியது மிகுந்த பாராட்டிற்குரியது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகத் தூத்துக்குடியில் முடிதிருத்தகம் வைத்திருக்கும் பொன் மாரியப்பன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
தனது முடிதிருத்தகத்தில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்திருப்பதாகவும். வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில் அதை ஆர்வத்துடன் படிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அவரைப் பாராட்டி எனது இணையதளத்தில் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து பலரும் மாரியப்பனுடன் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். நேரில் சென்று வாழ்த்தைத் தெரிவித்தார்கள்.
சிறந்த புத்தக வாசிப்பாளருக்கான விருதுக்கும் அவரை நான் பரிந்துரை செய்திருந்தேன். பெரியார் திடலில் அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பொன் மாரியப்பன் மதுரைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்து என்னைச் சந்தித்தார் . நேரிலும் அவரது செயலை மனம் நிறைந்து பாராட்டினேன்.
மதுரை புத்தகக் கண்காட்சியில் இரண்டு பைகள் நிறையப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போய்த் தனது நூலகத்தை மிகப்பெரியதாக உருவாக்கினார்.
இலக்கியவாதிகள் பலருடனும் அவருக்கு நல்ல உறவு இருக்கிறது. தான் படித்த புத்தகங்கள் பற்றி அவர்களுக்கு தொடர்ந்து பாராட்டுக் கடிதம் எழுதி வருகிறார்
எனது நூல்கள் பற்றி அவர் எழுதிய விமர்சனங்கள் மிகச் செறிவானவை.
படித்த முக்கியமான நூல்கள் பற்றி அவர் எழுதியிருக்கிறார்
அவற்றைத் தொகுத்து சிறிய நூலாக வெளியிட வேண்டும்.
பொன் மாரியப்பன் தந்த உத்வேகம் காரணமாகத் தமிழகத்தின் வேறுவேறு ஊர்களில் சில நண்பர்கள் தங்கள் முடிதிருத்தகத்தில் நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அது குறித்த செய்திகள், புகைப்படங்களை எனக்கு அனுப்பித் தருகிறார்கள்.
தனது நற்செயலின் மூலம் புத்தக வாசிப்பிற்கான புதிய இயக்கத்தைப் பொன் மாரியப்பன் உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
தமிழக அரசு பொன் மாரியப்பனைக் கௌரவிக்க வேண்டும். அவரைப் போன்று சலூனில் நூலகம் அமைத்து புத்தக வாசிப்பை முன்னெடுப்பவர்களுக்கு இலவசமாக நூல்களைத் தந்து உதவ வேண்டும்.
••
Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: