எல்லை கடந்து.

17 நிமிஷங்கள் ஓடக்கூடிய குறும்படம் Nefta Football Club’ 2018ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Yves Piat. சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்களாக உள்ள இரண்டு சிறுவர்களைப் பற்றியதே கதை. சகோதரர்களான அவர்கள் துனிசிய கிராமத்தில் வசிக்கிறார்கள். ஒருநாள் அல்ஜீரியாவின் எல்லையில் பாலைவனத்தின் நடுவில் கைவிடப்பட்ட கழுதை ஒன்றைக் காணுகிறார்கள். அந்தக் கழுதை போதை மருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவது.

கழுதையில் உள்ள மூட்டையில் கோகைன் போதை மருந்து உள்ளது. அப்துல்லா அந்தக் கழுதையைக் கண்டுபிடித்து இழுத்து வருகிறான். பெரியவன் அது போதை மருந்து எனக் கண்டறிகிறான். தம்பியிடம் அது துணிதுவைக்கும் சோப்பு தூள் என்று பொய் சொல்கிறான். அப்துல்லா அதை நம்பிவிடவே தங்கள் வண்டியில் அந்தக் கோகைன் பொட்டலங்களை எடுத்துச் செல்கிறார்கள். பெரியவன் அந்தப் போதை மருந்து பொட்டலங்களைத் தன் வீட்டில் ரகசியமாக ஒளித்து வைக்கிறான்.

போதை மருந்தை விற்பனை செய்வதற்கு ஒரு மெக்கானிக் உதவியை நாடுகிறான். எங்கே கிடைத்தது கோகைன் எனக் கேட்டதற்குக் குப்பையில் கிடந்து எடுத்ததாகச் சொல்கிறான். மற்ற பொட்டலங்களைத் தேடி அவர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஆனால் அங்கே அந்தக் கோகைன் பொட்டலங்களைக் காணவில்லை. முடிவு என்னவாகிறது என்பதை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

போதை மருந்து கடத்துகிறவர்கள் கழுதையை எப்படி ஹெட்ஃபோன் மூலம் இசைகேட்க வைத்து எல்லையைக் கடக்கப் பயன்படுத்துகிறார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம். இரண்டு சிறுவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அந்த நிலப்பரப்பும் அவர்கள் வீடு உள்ள கிராமத்தின் தெருக்களும் படத்திற்குத் தனியழகு தருகின்றன.

எட்டு நாட்களில் இந்தப் படத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார் இயக்குநர் Yves Piat.

தனது பள்ளிப் பருவத்திலிருந்தே இது போல ஒரு சம்பவத்தைத் தாங்கள் அடைந்ததாகவும் அந்த உந்துதலில் இந்தப் படத்தை உருவாக்கியதாகவும் இயக்குநர் கூறுகிறார்

கதை ஆரம்பத்திலிருந்தே அல்ஜீரிய கால்பந்து வீரரான ரியாத் மஹ்ரெஸைப் பற்றியும், எல்லைகளைக் கடந்து விளையாட்டினை சிறுவர்கள் நேசிப்பதைப் பற்றியும் பேசுகிறது. அதே எல்லை கடந்து கோகைன் போதை மருந்து கடத்தப்படுகிறது என்பதையும் படம் இடைவெட்டிச் சொல்வது தான் தனிச் சிறப்பு.  பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 65 விருதுகளைப் பெற்றுள்ளது இந்தக் குறும்படம்.

••

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: