புதிய சிறுகதை
அன்றோடு இருபத்தைந்து வருஷம் துவங்கியிருந்தது.
சித்ரலேகா டீச்சராக வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷங்களாகி விட்டது. இந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியவில்லை.

புதுச்சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளது கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ அந்த நாள் முக்கியமானதில்லை. யாரும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவளால் அந்த நாளை எப்படி மறக்க முடியும்.
வேலைக்கு ஆர்டர் வாங்கிக் கொண்டு முதல்நாள் சென்ற போதும் இப்படிப் புதுப்புடவையைத் தான் கட்டிக் கொண்டாள். வேலை கிடைத்தால் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாம்பழக்கலர் சேலை ஒன்றை வாங்கி வைத்திருந்தாள்.
இன்று அதே நிறத்தில் புதுச்சேலையை உடுத்தியிருந்தாள். காலம் மாறினால் விருப்பம் மாறிவிடுகிறதா என்ன.
அன்றைக்குத் தலையில் இப்படி நரைமயிர் தோன்றியிருக்கவில்லை. முகமும் உடலும் அவ்வளவு பொலிவாக இருந்தது. ஆனால் இப்போது முகம் விரிந்து போயிருக்கிறது. புருவங்கள் தடித்துக் கண்களின் அடியில் தொங்கு சதை பெரியதாகிவிட்டது. அதிலும் கண்ணாடி அணிந்த பிறகு அவள் முகத்தை அவளுக்கே பிடிக்கவில்லை.
பழைய புகைப்படங்களை எடுத்துப் பார்க்கும் போது அதில் எவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறோம் என்று ஆதங்கப்பட்டுக் கொள்வாள். இந்த மாற்றங்களைத் தவிர மனது பெரியதாக மாறிவிடவில்லை.
கல்லூரியில் படிக்கப் போவதற்கு முன்பாகவே அவள் டீச்சராகத் தான் வேலைக்குப் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளது சித்தி சித்தப்பா இருவரும் டீச்சர்கள். அவர்கள் பிள்ளைகளும் டீச்சர்கள். ஆகவே தானும் பிஎட் படித்து டீச்சராக வேண்டும் என்று தான் ஆசை கொண்டிருந்தாள்
இதற்காகவே பிஎட் படிக்கச் சேலம் சென்று விடுதியில் தங்கிப் படித்துவந்தாள். சி.கே.எம் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்து அவள் சேர்ந்த போது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போய்வருவதற்காகச் சைக்கிள் வாங்கிக் கொண்டாள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவள் சைக்கிளில் பள்ளிக்குப் போகவில்லை. அவளது கணவரே பைக்கில் கொண்டு போய்விட்டு வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகப் புது ஸ்கூட்டி ஒன்று வாங்கிக் கொண்டாள். அதில் தான் இப்போது பள்ளிக்கு போய் வருகிறாள்.
நேற்று தான் டிரைனிங் முடித்து வேலைக்கு ஆர்டர் வாங்கியது போலிருக்கிறது. காலம் கரைந்தோடி விட்டது. வேலைக்குச் சேர்ந்த நாட்களில் சித்ரலேகாவிற்குள் இருந்த தயக்கம் பயம் கவலை எதுவும் இப்போதில்லை. பள்ளிக்கூடம் இல்லாத நாட்கள் தான் வெறுமையாக இருந்தன. கற்றுக் கொடுப்பது எவ்வளவு ஆனந்தமானது என்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள்.
சிகேஎம் பள்ளியை தாமோதர முதலியார் அறக்கட்டளை நடத்தி வந்தது. அது இருபாலர் பள்ளி. தமிழ் வழிக் கல்வி பயிற்றுவித்தார்கள். பத்தாம் வகுப்பு வரையிருந்தது. ஐநூறு மாணவர்களுக்கும் மேலாகப் படித்தார்கள். பெரும்பாலும் சுற்றியிலுள்ள கிராமப்புறத்திலிருந்து வந்து படிக்கும் பிள்ளைகள். மற்ற பள்ளிகளைப் போல இங்கே அதிகக் கட்டணம் கிடையாது. ரிசல்ட் சதவீதமும் அதிகம்.
அவள் வேலைக்கு வந்து சேர்ந்த போது இரண்டே கட்டிடங்கள் தான் இருந்தன. விளையாட்டு மைதானமும் சிறியது. தற்போது புதிதாக நான்கு கட்டிடங்கள் உருவாகியிருக்கின்றன. மைதானத்தையும் பெரியது பண்ணி சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறார்கள். சைக்கிள் நிறுத்துமிடம், பிரேயர் ஹால் எல்லாமும் புதியதாகக் கட்டியதே. அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் கொடுத்த கொடையால் கம்ப்யூட்டர் பிளாக் புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது.
அவளுடன் வேலைக்கு வந்து சேர்ந்த டீச்சர்களில் இரண்டு பேர் மட்டுமே அங்கே பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் அரசு வேலை கிடைத்துப் போய்விட்டார்கள். சிலர் அதிகச் சம்பளம் கிடைக்கிறது என ஆங்கிலப் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் சித்ரலேகாவிற்கு அந்தப் பள்ளியைப் பிடித்துப் போய்விட்டது
வழக்கமாகக் காலை எட்டு முப்பதிற்குத் தான் அவள் பள்ளிக்குச் செல்வாள். இன்று ஏனோ எட்டுமணிக்கே போய்விடலாம் என்று தோன்றியது.
ஒருமுறை அவளைத் தலைமை ஆசிரியர் பொறுப்பிற்குக் கூடச் சிபாரிசு செய்தார்கள். அவள் தான் அந்த வேலையை ஏற்க முடியாது என்று பள்ளி நிர்வாகியிடம் மறுத்துவிட்டாள். அதில் அவள் கணவருக்குக் கூடக் கோபம். தலைமை ஆசிரியராக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் வகுப்பு எடுக்க முடியாது. நிர்வாக வேலைகளைக் கவனிக்கவே நேரம் போதாது. அந்தப் பணி உயர்வு தனக்கு வேண்டாம் என்று சித்ரலேகா உறுதியாக இருந்தாள்
அவளது பள்ளியில் தான் அவள் மகள் ரோஷினியும் படித்தாள். அவளுக்கு வகுப்பு எடுக்கும் போது சித்ரலேகாவிற்கு என்னவோ போலிருந்தது. ஒரு போதும் மகளின் கண்களை ஏறிட்டு பார்க்க மாட்டாள். வகுப்பறையில் மகளிடம் பேச மாட்டாள். அவளது பரிட்சைப் பேப்பரைத் திருத்தும் போது கூடக் கூச்சமாகவே இருக்கும். தாயாக நடந்து கொள்வதா அல்லது கண்டிப்பான ஆசிரியராகப் பேப்பரை திருத்த வேண்டுமா என்று தடுமாறுவாள். சில நேரம் அவள் பரிட்சை பேப்பரில் செய்துள்ள தவறுகளைத் திருத்த கைகள் துடிக்கும். ஆனால் திருத்த மாட்டாள். உரிய மதிப்பெண்ணை மட்டுமே வழங்குவாள்.
தன் மகள் ஏன் படிப்பில் ஆர்வம் காட்டவேயில்லை. ஒரு வகுப்பில் கூட முதல்மாணவியாக வரவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்குள் இருந்தது.
சராசரியான மதிப்பெண் எடுத்து பொறியியல் கல்லூரி ஒன்றில் பணம் கொடுத்துச் சீட் வாங்கிப் படித்து இப்போது சென்னையில் வேலை செய்யத் துவங்கிவிட்ட மகளை இந்தக் காலையில் நினைத்துக் கொண்டாள். மகன் அரவிந்த் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் படிக்க வைத்தார்கள். அது கணவரின் விருப்பம். அவள் அதைத் தடுக்கவில்லை.
தன் வாழ்வின் அதிகபட்ச மணித்துளிகளை வகுப்பறைக்குள் தான் செலவழித்திருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.
படிக்கும் நாட்களிலும் சரி வேலை செய்யும் போதும் சரி வகுப்பறை என்பது அவளுக்குப் பிடித்தமான உலகம். ஆசிரியரின் செல்லப்பிள்ளையாகவே அவள் படித்தாள். வகுப்பில் சிலரின் பெயரைச் சொல்லி டீச்சர் பாராட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது. அப்படி அவள் பெயரை டீச்சர்கள் சொல்லிப் பாராட்டும் போது தரையில் கால்கள் நிற்காது. வானில் பறப்பது போலிருக்கும்.
அவள் டீச்சரான பிறகு மாணவிகளுக்குக் காய்ச்சல் என்ற தொட்டுப்பார்ப்பாள். அவர்களின் தலையைத் தடவிவிடுவாள். தண்ணீர் கொடுப்பாள். சில நேரம் மாணவிகளைத் தானே ஸ்கூட்டில் அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டு வருவதும் உண்டு.
பள்ளிக் கூடத்தில் அவளது பிரச்சனை மாணவர்கள் அல்ல. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள். அவர்கள் ஏன் இப்படிப் பொறாமையோடும் ஆத்திரத்தோடும் நடந்து கொள்கிறார்கள். வாய்க் கூசாமல் பொய் சொல்லுகிறார்கள். வம்பு பேசுகிறார்கள் என்று கவலையாக இருக்கும். இதற்காகவே அவள் யாருடனும் பழகமாட்டாள்.
ஸ்டாப் ரூமிற்குள் போவது என்றாலே அச்சமாக இருக்கும். இதற்காகவே அவள் ஸ்டாப் ரூமில் அவளது நாற்காலியை ஜன்னலை ஒட்டிப் போட்டிருந்தாள்..
அவளுக்கு ஏதாவது சிறு உதவி தேவை என்றால் கூட ஹெச்எம்மிடம் போய்த் தான் கேட்பாள். அவர் ரொம்பவும் தன்மையான மனிதர். அவளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்த பிரான்சிஸ் மற்றும் விளையாட்டு ஆசிரியராக வேலை செய்த சரவணன் இருவரும் நெருக்கமான நண்பர்கள். ஒன்றாகத் தான் சாப்பிடுவார்கள். தோளில் கைபோட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருந்தவரை சில நேரம் அவர்களுடன் பேசுவாள். வீட்டில் ஏதாவது செய்து எடுத்து வந்தால் அவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பாள். ஆனால் அவர்களும் வம்புப் பேச்சிற்கு உள்ளாகி பள்ளியை விட்டுப் போய்விட்டார்கள்.
வேலையை விட்டு போகும் போது பிரான்சிஸ் அவளிடம் சொன்னார்
“டீச்சர் உங்களை என் சிஸ்டர் மாதிரி நினைச்சி சொல்றேன். நல்ல ஸ்கூலா பாத்து போயிடுங்க. இங்கே மனுசன் வேலை செய்ய முடியாது“
அவளுக்கு அந்த ஸ்கூலை விட்டு போக விருப்பமில்லை. எங்கே போனாலும் இதே பொறாமையும் வம்புப் பேச்சும் புறணியும் போய்விடாது தானே.
••
அவள் பள்ளிக்குள் ஸ்கூட்டியில் நுழைந்தபோது எதிர்ப்பட்ட மாணவர்கள் குட்மார்னிங் சொன்னார்கள். அந்த வணக்கம் அவளைச் சந்தோஷப்படுத்தியது. அவள் மரத்தடியை ஒட்டி தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஸ்டாப ரூமிற்குள் சென்றாள்
வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷமாகிவிட்டதை யாரிடமாவது சொல்லலாமா என்று நினைத்தாள். பிறகு ஏன் சொல்ல வேண்டும் என்று நினைத்து தனது டிபன் பாக்ஸையும் நோட்டு புத்தகங்களையும் தனது மேஜை மீது வைத்தபடியே வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்த உற்சாகம் நிகரற்றது. எவ்வளவு ஆனந்தமாக விளையாடுகிறார்கள். துள்ளித் திரிகிறார்கள். காலம் விரைவில் இவற்றை அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்போகிறது. அதைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்.
சித்ரலேகா அன்றைக்கு என்ன பாடம் எடுக்க வேண்டும். வகுப்பறையில் என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் வீட்டிலே திட்டமிட்டுக் கொள்வாள்
தமிழ்பாடத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகளை வெறும் மனப்பாடம் செய்யாமல் மனதில் ஆழமாகப் பதியும் படி பாட வேண்டும் என்று நினைப்பாள். இதற்காக வகுப்பறையில் அவள் பாடுவதும் உண்டு. ஆனால் அதையும் ஒரு முறை புகார் செய்திருந்தார்கள். மரகதவள்ளி டீச்சர் தான் புகார் செய்தவள். அவள் வகுப்பிற்கு இடையூறாக இருக்கிறது என்று சொன்னாள்.
மரகதவள்ளி டீச்சர் வகுப்பறைக்கு வந்தாலே தலைவலி தைல வாசனை வரும். எந்நேரமும் தலைவலி என்று தைலம் தடவிக் கொண்டிருப்பவள். அவளுக்குச் சித்ரலேகா பாடியது பிடிக்கவில்லை. ஹெச்எம் அதன் பிறகு வகுப்பறையில் பாடக்கூடாது என்று உத்தரவிட்டார்.

சில நேரம் அவள் பாடம் நடத்தி முடித்தபிறகு மாணவர்களுடன் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பாள். சொந்த வாழ்வின் கஷ்டங்களைக் கூட மாணவர்கள் சொல்வதுண்டு.
ஒருமுறை மாணவி ஒருத்தியின் வீட்டுக்கஷ்டத்திற்காக ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து உதவினாள். அந்த மாணவியின் அம்மா சில நாட்களுக்குப் பிறகு மார்க்கெட்டில் அவளைச் சந்தித்துக் கைகூப்பி நன்றி சொன்னாள். அடுத்தச் சில வாரங்களுக்குப் பிறகு அந்த மாணவி தான் கடன் வாங்கிய ஐநூறு ரூபாயை திருப்பிக் கொடுத்தாள்.
அதைக் கவனித்துவிட்ட ஒரு டீச்சர் மாணவிகளிடம் அவள் பணம் பறிக்கிறாள் என்று ஒரு புகாரைச் சுமத்தினாள். இதற்கு விசாரணை எல்லாம் நடந்த்து. அந்த மாணவியை மட்டுமின்றி அவள் அம்மாவையும் அழைத்து விசாரணை செய்தார்கள். முடிவில் இது போல மாணவர்களுக்கு டீச்சர் கடன் கொடுத்து உதவி செய்யக்கூடாது என்று பொது உத்தரவு பிறப்பிக்கபட்டது.
ஒருவரின் கஷ்டத்தைக் கேள்விபட்டபிறகு எப்படி உதவி செய்யாமல் இருப்பது. ஆனால் இந்த உத்தரவிற்குப் பயந்து சித்ரலேகா சம்பந்தப்பட்ட மாணவரை தன் வீட்டிற்கு வரச்சொல்லி உதவி செய்வதை வழக்கமாக்க கொண்டிருந்தாள்.
அந்தப் பள்ளியில் வேலாயுதம் சார் அவரது மனைவி கோமளா இருவரையும் கண்டு மற்ற ஆசிரியர்கள் பயந்தார்கள். காரணம் எவரோடும் வம்பு சண்டையிட்டு பெரிதாக்கிவிடுவார்கள். வேலாயுதம் சாருக்கு ஊரின் பெரிய மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அதைவிடவும் பள்ளி நிர்வாகிகளே அவரைக் கண்டு பயந்தார்கள்.
ஆகவே வேலாயுதம் சாரோ, கோமளா டீச்சரோ பள்ளிக்கு வரவில்லை என்றால் கூட யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். வகுப்பறையிலும் அவர்கள் அக்கறையாகப் பாடம் நடத்துவதில்லை. அதுவும் வேலாயுதம் சார் வட்டி பிசினஸ் துவங்கிய பிறகு அவரது கவனம் முழுவதும் அதிலேயே போய்விட்டது
அவரது வகுப்பினையும் சேர்த்துச் சித்ரலேகா பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இத்தனை நெருக்கடிகள். பொறாமை, வம்பு வழக்குகள் இருந்தபோதும் மாணவர்கள் அவளைச் சந்தோஷப்படுத்தினார்கள். வகுப்பில் அவளுக்குப் பிடித்தமான சில மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்றாகப் படிப்பதைக் கண்டு அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். சிலருக்கு பேனா, ஸ்கூல் பேக் போன்றவற்றை வாங்கித் தந்திருக்கிறாள்.
படிக்கவே மாட்டார்கள் என்று கடைசி பெஞ்சில் ஒதுக்கி வைத்திருக்கிற மாணவர்கள் கூட அவளது அக்கறையால் படித்தார்கள். அது போல மாணவர்களை அவள் ஒருபோதும் மோசமாக திட்டவோ அடிக்கவோ மாட்டாள். வகுப்பில் கோபம் அதிகம் வந்தால் சாக்பீஸை உடைத்துப் போடுவாள். அவ்வளவு தான் அவளது கோபத்தின் வெளிப்பாடு.
ஒருமுறை அவளது திருமண நாளை ஒட்டிய ஞாயிற்றுகிழமையில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்துப் பிரியாணி செய்து கொடுத்தாள். அந்தப் பிள்ளைகள் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம். அவர்கள் எல்லோரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த நாளை அவளால் மறக்க முடியவேயில்லை
அவளிடம் படித்த மாணவிகள் வெளியே எங்கே அவளைச் சந்தித்தாலும் டீச்சர் டீச்சர் என்று அன்பை வெளிப்படுத்தினார்கள். ஒருமுறை பேருந்தில் சந்தித்த சாரதா என்ற மாணவி தன் கைக்குழந்தையை அவளிடம் கொடுத்து ஆசி கேட்டாள். மூக்கு ஒழுக குட்டிப்பெண்ணாகப் பள்ளிக்கு வந்த சாரதா வளர்ந்து படித்துத் திருமணமாகி கைக்குழந்தைக்குத் தாயாகிவிட்டாள் என்ற வியப்போமு அந்தக் குழந்தைக்கு ஆசி கொடுத்து அதன் கையில் ஒரு நூறு ரூபாயை திணித்துவிட்டாள்.
சாரதா நெகிழ்ச்சியோடு இருக்கட்டும் டீச்சர் இதெல்லாம் எதுக்கு என்று மறுத்தாள். அந்தக் குழந்தையை நீண்ட நேரம் சித்ரலேகா தன் மடியிலே வைத்துக் கொண்டுவந்தாள். பெற்றபிள்ளைகளை விடவும் மாணவர்கள் காட்டும் அன்பு உயர்வானது தான் போலும்.
இன்னொரு முறை அவள் தாலுகா அலுவலகத்தில் ஒரு வேலையாகப் போன போது அங்கே வேலைக்கு இருந்த அவளது மாணவி பத்மப்ரியா ஒடிவந்து கையைப் பிடித்துக் கொண்டு சேரில் அமர வைத்து டீ வாங்கிக் கொடுத்து ஐந்து நிமிசத்தில் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டதோடு தன்னோடு வேலை பார்க்கிறவர்களிடம் எல்லாம் எங்க டீச்சர் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தாள். இது தானே இந்த வேலையில் கிடைத்த பரிசு. மகிழ்ச்சி
கடந்தகாலத்தின் நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சித்ரலேகாவை விழிப்படையச் செய்வது போலப் பள்ளிக்கூட மணி அடித்தது. தன் வகுப்பறைக்குள் நுழையும் போது மாணவர்களிடம் தான் வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆனதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்
••
வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் அவளை அறியாமலே பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பாடம் நடத்த துவங்கிவிட்டாள். ஒரேயொரு மாணவி அவள் புதுச்சேலை கட்டியிருப்பதைக் கண்டுபிடித்துவிட்டவள் போலச் சக மாணவியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் ரகசியமாக அதைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.
அரைமணி நேரம் வகுப்பு எடுத்தபிறகு புத்தகத்தை மூடி மேஜையில் வைத்தபடி மாணவர்களைப் பார்த்து சிரித்தபடியே சொன்னாள்
“இன்னைக்கு ஒரு சந்தோஷமான நாள். என்ன சொல்லுங்க“
“உங்க கல்யாண நாளா டீச்சர்“
“இல்லை“
“ரிடயர்ட் ஆகப்போறீங்களா டீச்சர்“ என ஒரு மாணவன் கேலியாகக் கேட்டான்
“இல்லை“
“நீங்களே சொல்லுங்க டீச்சர்“ என்றாள் ஒரு மாணவி.
“இன்னைக்கோட நான் வேலைக்குச் சேர்ந்து 25 வருஷம் ஆகுது“
மாணவர்கள்“ ஹே“ என்று உற்சாகமாகச் சப்தமிட்டார்கள். ஒரு மாணவி எழுந்து நின்று சொன்னாள்
“டீச்சர் உங்க புதுப்புடவை நல்லா இருக்கு“
“ஸ்நேகா மாதிரி இருக்கீங்க டீச்சர்“ என்றான் ஒருவன்
இதைக்கேட்டு மற்ற மாணவர்கள் சப்தமாகச் சிரித்தார்கள். வகுப்பறையின் இறுக்கம் கலைந்து மெல்ல சிரிப்பும் வேடிக்கையும் பீறிடத்துவங்கியது.
“எப்போ ட்ரீட் தரப்போறீங்க டீச்சர்“ என்று ஒருவன் கேட்டான்
“சாக்லேட் கூடக் குடுக்கலை“ என்று ஒரு மாணவி ஆதங்கப்பட்டாள்
மாணவர்கள் உற்சாகமாகப் பேசுவது அவளை மகிழ்ச்சிப்படுத்தியது.
“என்ன ட்ரீட் வேணும்“ எனக்கேட்டர்ள்
“அசன் கடையில பரோட்டா. டீச்சர் நாம எல்லோரும் ஒண்ணா ஹோட்டல்ல போயி சாப்பிடுவோம். சூப்பரா இருக்கும்“
“எங்க வீட்ல பரோட்டா கடையில போய்ச் சாப்பிட விடமாட்டாங்கப்பா“ என்றாள் ஒரு மாணவி
“பரோட்டா. சுக்கா வறுவல். ஆம்லேட். சிக்கன் எல்லாம் வாங்கித் தரணும்“ என்று கேட்டான் ஒரு மாணவன்
இதுவரை அப்படி ஒருமுறை கூட மாணவர்களை ஒன்றாக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சாப்பிட வைத்தது இல்லையே. அந்த ஏக்கம் மாணவர்களிடம் இருந்த்து. அதைச் செய்தால் என்ன என்று சித்ரலேகா யோசித்தாள்.
பள்ளிமுடிந்தபிறகு அவர்களை அழைத்துக் கொண்டு போவதற்குப் பள்ளிக்கூடத்திடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும்.
அடுத்த வாரம் நாம அசன் கடைக்குப் போய்ச் சாப்பிடுவோம் என்றாள் சித்ரலேகா
அதைக்கேட்ட மறுநிமிஷம் கைதட்டுப் பறந்தது. மாணவர்கள் உற்சாகமாகச் சப்தமிட்டார்கள் வகுப்பு முடிந்து வராண்டாவில் நடந்து கொண்டிருந்தபோதும் மாணவர்கள் வெளிப்படுத்த கைதட்டினை நினைத்தபடியே நடந்தாள். ஸ்டாப் ரூமில் ஒருவரிடமும் தான் வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷம் ஆனதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவில்லை. அவர்களும் அவளைக் கண்டுகொள்ளவேயில்லை
••
அன்று மதியம் சாப்பிட்டு முடித்து மதிய வகுப்பிற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த போது ஹெச்எம் ஸ்ரீனிவாசன் அவளைத் தன்னுடைய அறைக்கு அழைத்து வாழ்த்து சொன்னார்
“இந்த ஸ்கூல்ல உங்களுக்குப் பின்னாடி தான் நானே வேலைக்குச் சேர்ந்தேன். உங்க கூடச் சேர்ந்ததுல கணேசன் சாரும் பவானி டீச்சரும் நீங்களும் தான் சீனியர். “
“எங்களுக்கு வேற போக்கிடம் கிடையாது சார் “என்று சொல்லி சிரித்தாள் சித்ரலேகா
“அப்படிச் சொல்லாதீங்க. மெஜஸ்டிக் ஸ்கூல் ஆரம்பிச்சப்ப கூட உங்களை வேலைக்குக் கூப்பிட்டாங்க. நீங்க தான் போகலை“
“எனக்கு இந்தப் பள்ளிக்கூடமே போதும்னு தோணுது சார்“
“உங்க சர்வீஸை பாராட்டு சின்னதா ஒரு டீபார்ட்டி தரலாம்னு நினைச்சேன். ஆனா நம்ம ஸ்கூலை பத்தி தான் தெரியுதே. எதைத் தொட்டாலும் பாலிடிக்ஸ்“.
“எனக்கு எதுக்குப் பாராட்டு பார்ட்டி. நீங்க கூப்பிட்டு பேசினதே போதும்“ என்று சித்ரலேகா தன் வகுப்பறைக்குக் கிளம்பினாள்
ஏழாம் வகுப்பினை கடந்த போது அந்த வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லை என்று தெரிந்தது. கோமளா டீச்சர் வகுப்பது. மாணவர்கள் உரத்து சப்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு மாணவி எதற்கோ அழுது கொண்டிருந்தாள். அந்த வகுப்பினை கடந்து போக முடியாமல் உள்ளே நுழைந்த சித்ரலேகா அழுது கொண்டிருக்கும் மாணவியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தாள்.

மீனா என்ற அந்த மாணவி தன்னை ஒரு மாணவன் மிக ஆபாசமாகத் திட்டியதாகச் சொல்லி அழுதாள்.
அந்த மாணவன் மீது வேறு சில மாணவிகளும் புகார் சொன்னார்கள்
வெடித்த உதடுகளை கொண்ட அந்த மாணவனை எழுப்பி விசாரித்தபோது அவன் முறைத்தபடியே சொன்னான்
“.நீங்க யாரு என்னைக் கேட்குறதுக்கு. நான் ஒண்ணும் உங்க கிளாஸ்ல படிக்கலை“
“இப்படிப் பேசுறது தப்பு“
“நான் அப்படித்தான் பேசுவேன். என்ன பண்ணுவே“ என்று அவளை முறைத்தான்.
அவளுக்குள் கோபம் பீறிட்டது. அந்தப் பையனிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்
“மீனா கிட்ட மன்னிப்பு கேளு“
“கேட்க முடியாது. என்ன பண்ணுவீங்க“
“அப்போ என் கூடவா, ஹெச்எம்மை பாப்போம்“
“வரமுடியாது“
“நீயா வரலைன்னா. பசங்களை விட்டு இழுத்துட்டு போக வேண்டியதாகியிருக்கும்“
“என் மேல கையை வைக்கசொல்லு. பல்லை உடைச்சிருவேன்“ என்று அந்தப் பையன் கோபத்துடன் சொன்னான்.
அந்தப் பையனை எப்படிக் கையாளுவது எனப்புரியாமல் சித்ரலேகா திகைத்தபடியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்
அப்போது கலைந்த தலையோடு கோமளா டீச்சர் வகுப்பறைக்குள் நுழைந்தாள். பாதித் தூக்கத்தில் எழுந்து வந்தவள் போலிருந்தது அவளது முகம். ஐந்தடிக்குள் உயரம். பளபளவென்னும் மின்னும் ஊதா நிற சேலை. மிகவும் டைட்டான ஜாக்கெட் அகலமான மூக்கு கண்ணாடி. கை நிறைய தங்க வளையல்கள் கழுத்தில் இரட்டைவடச் சங்கிலி. கால்களை சற்றே அகட்டி நகட்டக்கூடியவள். வகுப்பிற்குள் வந்து நின்றபோது அவளுக்கு பெருமூச்சு வாங்கியது.
அவள் கடுத்த முகத்துடன் “இங்க என்ன பண்ணுறே. இது உன் கிளாசா“ என்று கேட்டாள்
“கிளாஸ்ல ஒரே கலாட்டாவா இருந்துச்சி. அதான் வந்தேன்“
“நான் என்ன செத்தா போயிட்டேன். என் கிளாஸ்ல என்னைக் கேட்காம வந்து என்கொயரி பண்ணிட்டு இருக்கே “
“இந்தப் பொண்ணு அழுதுகிட்டு இருந்துச்சி. நீங்க கிளாஸ்ல இல்லே அதான்“ என்று மீனாவை கையைக் காட்டினாள்
“அதை எல்லாம் நான் விசாரிச்சிகிடுவேன். நீ வெளியே போ“.
“அந்தப் பையன் ரொம்ப திமிரா பேசுறான். அவன் முதல்ல மன்னிப்பு கேட்கணும்“
“போன்னு சொன்னா.. போவியா.. என்ன ஒவரா பேசிகிட்டே போற. வெளியே போடீ “என்று சப்தமாகச் சொன்னாள்.
ஏன் இப்படி கத்துகிறாள் என குழப்பமானவளாக சித்ரலேகா சொன்னாள்.
“ஏன் இப்படிப் பேசுறீங்க. அப்படி நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்“
“ஊமை கோட்டான் மாதிரி இருந்துகிட்டு நீ என்னவெல்லாம் பண்ணிகிட்டு இருக்கேனு எனக்குத் தெரியாதா. யோக்கிய மயிரு மாதிரி பேச வந்துட்டா. “
“மரியாதையா பேசுங்க டீச்சர்“
“யாருக்கு என்ன மரியாதை கொடுக்கணும்னு எனக்குத் தெரியும். நீ வெளியே போ“.
“ஏன் கத்துறீங்க நான் வெளியே போக முடியாது “
“ இந்த ராங்கிதனத்தை எல்லாம் வேற இடத்துல வச்சிக்கோ.. தலைமயித்தை பிடிச்சி வெளியே தள்ளிருவேன் பாத்துக்கோ“ என்று கோமளா டீச்சர் கத்தினாள். அவளது உரத்த சப்தம் அடுத்த வகுப்பிற்குக் கேட்டிருக்கக் கூடும். அந்த வகுப்பில் இருந்த கணேசன் சார் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். ஆனால் அவர்கள் சண்டையில் தலையிடவில்லை.
சித்ரலேகா உறுதியான குரலில் சொன்னாள்
“நம்ம சண்டையைப் பிறகு வச்சிகிடுவோம். இந்தப் பையன் மீனாவை கெட்டவார்த்தையில பேசியிருக்கான். அவன் மன்னிப்பு கேட்கணும்“
“தேவையில்லாத விஷயத்துல நீ ஏன் தலையிடுறே. உன் கிளாஸ்ல உள்ள பசங்க எல்லாம் யோக்கியமா. “
“எது தேவையில்லாத விஷயம். அந்தப் பையன் என்னையே எவ்வளவு பேசினான் தெரியுமா“
“உன் பஞசாயத்தைக் கொண்டு கிட்டு ஹெச்எம்கிட்ட போ, நான் ,இப்போ கிளாஸ் எடுக்கவா, வேணாமா.. வெளியே கிளம்பு“
“அப்போ ஸ்கூல்ல என்ன தப்பு நடந்தாலும் கண்ணை மூடிகிட்டு நான் போயிட்டு இருக்கணுமா“
“போடீனு சொல்றேன். ஊர் நியாயம் பேசிகிட்டு இருக்கே“ என்று மிக மோசமாகத் திட்டத் துவங்கினாள் கோமளா
சித்ரலேகா காதை பொத்திக் கொண்டாள். அது கோமளாவின் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்க வேண்டும். அவள் சித்ரலேகாவின் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் நகர மறுக்கவே வேகமாகப் பிடித்துத் தள்ளினாள்.
சித்ரலேகா தடுமாறி கதவின் மீது விழுந்தாள். இடது தொடைப்பக்கம் அடிபட்டது. அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கதவைப்பிடித்தபடியே தரையில் உட்கார்ந்து கொண்டாள். அவளது செருப்பு விலகிப் போய் கிடந்தது. கை நடுங்குவதை மறைத்துக் கொண்டாள்.
“என்னடீ நாடகம் ஆடுறே“ என்று கோமளா டீச்சர் மோசமாகக் கத்திக் கொண்டிருந்தாள்.
அவளின் குரல் கேட்டு ஆசிரியர்கள் வகுப்பறையின் வெளியே ஒன்று திரண்டிருந்தார்கள். தலைமை ஆசிரியரும் வந்திருந்தார். இதற்குள் சி பிளாக்கில் இருந்து வந்து சேர்ந்த வேலாயுதம் சார் என்ன நடந்தது என்று எதையும் கேட்காமல் கண்டபடி சித்ரலேகாவை பேச ஆரம்பித்தார்.
“எதுவா இருந்தாலும் ஸ்கூல் முடிஞ்சபிறகு விசாரிச்சிகிடலாம்“ என்று அவரைச் சமாதானப்படுத்தினார் தலைமை ஆசிரியர்
சித்ரலேகா தன் இடத்தை விட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தாள்.
“டீச்சர் எழுந்து வாங்க. பேசிகிடலாம் “என்றார் ஸ்ரீனிவாசன்.
அவள் எழுந்து கொள்ளவேயில்லை
பள்ளி நிர்வாகி ராமசுப்ரமணியத்தை அழைத்துவருவதாக ஒரு ஆசிரியர் கிளம்பிச் சென்றிருந்தார். அந்த வகுப்பு மாணவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்தபடியே இருந்தார்கள்
அன்று பள்ளிக்கூடமே மூன்றரை மணியோடு முடிந்து போனதாகப் பெல் அடித்தார்கள். மாணவர்கள் போனபிறகு சித்ரலேகாவை சமாதானம் செய்யும் விதமாகத் தலைமை ஆசிரியர் “நீங்க எந்திரிச்சி என் ரூமூக்கு வாங்க. நான் விசாரிக்கிறேன் “என்றார்
“கோமளா டீச்சர் மன்னிப்பு கேட்குற வரைக்கும் இந்தக் கிளாஸை விட்டு வரமாட்டேன் “என்றாள் சித்ரலேகா
“மன்னிப்பு கேட்க முடியாது. உன்னாலே ஆனதை பாரு“ என்று வேலாயுதம் கத்திக் கொண்டிருந்தார். பள்ளி ஆசிரியர்கள் சமாதானம் பேசியும் அவள் எழுந்து கொள்ளவில்லை. அவளை என்ன செய்வது எனத் தெரியாமல் தலைமை ஆசிரியர் குழம்பிப் போயிருந்தார்
கோமளாவை அழைத்துக் கொண்டு வேலாயுதம் பைக்கில் கிளம்பிப் போனார். ஒருவேளை நிர்வாகி வீட்டிற்குத் தான் போகிறார்களோ என்னவோ.
ஏன் தனது இருபத்தைந்தாவது ஆண்டுத் துவக்க நாள் அன்று இப்படி நடக்க வேண்டும். இந்த வேலையை இன்றோடு விட்டுவிடலாமா. ஒரு டீச்சர் இப்படியா சண்டைபோடுவார். தன் மீது அவர்களுக்கு என்ன கோபம். தன்னை ஏன் வெறுக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். அவளுக்கு நினைக்க நினைக்க வருத்தமாகவும் குழப்பமாகவும் இருந்தது.
ஆசிரியரும் மாணவனும் இப்படி மோசமாக நடந்து கொள்வதைக் கண்டிக்காமல் விட்டால் பிறகு டீச்சர் வேலை செய்து என்ன தான் பயன். விருப்பமில்லாதவர்கள் ஏன் ஆசிரியர் பணிக்கு வர வேண்டும். அவளால் கோமளா டீச்சரையும் அந்த மாணவனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருவருமே தண்டிக்கபட வேண்டியவர்கள் என்று நினைத்துக் கொண்டாள்
மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து போனபிறகு பள்ளியெங்கும் நிசப்தம் நிரம்பத்துவங்கியிருந்தது.

வகுப்பறையின் கதவுகளை மூடுவதற்காக வந்த ப்யூன் கூட அவள் உட்கார்ந்திருந்த வகுப்பை விட்டுவிட்டு மற்ற வகுப்பறைகளை மூடிக் கொண்டு போனான். பள்ளி நிர்வாகிக்காகத் தலைமை ஆசிரியர் காத்துக் கொண்டிருந்தாள். மாணவர்கள் வெளியேறிப் போன பிறகு பள்ளி வேறுரூபம் கொண்டுவிடுகிறது. வேப்பமரத்தில் ஒரு காகம் உட்கார்ந்து தனியே கரைந்து கொண்டிருந்தது.
வழக்கமாக இந்த நேரம் அவள் வீட்டிற்குப் போயிருப்பாள். இத்தனை ஆண்டுகளில் இன்று தான் பள்ளி முடிந்த பிறகும் அவள் வகுப்பறையில் இருக்கிறாள். ஆண்டுவிழாவின் போது பள்ளியில் இரவு நேரம் இருந்திருக்கிறாள். அன்று ஒரே உற்சாகமாக இருக்கும். இன்று திருவிழா முடிந்து போன மைதானம் போல வெறுமையாக இருந்தது.
மாலை மயங்கி இருள் வரத்துவங்கிய போது அவள் இருந்த வகுப்பறையில் மின்விளக்குக் கிடையாது என்பதை முதன்முறையாக உணர்ந்தாள். அந்த வகுப்பறையில் மின்விசிறிக் கிடையாது. மின்விளக்குக் கிடையாது. இந்த இருட்டிற்குள் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது. யாரோ விளையாடி வீசி எறிந்துவிட்ட பொம்மையைப் போலத் தன்னை உணர்ந்தாள்.
திடீரெனப் பள்ளி சுருங்கி சிறிய நத்தைக்கூடு போலாகிவிட்டதாகத் தோன்றியது. தலைமை ஆசிரியர் அறையில் வெளிச்சம் தெரிந்தது. அவர் தனியே காத்திருந்தார். இருட்டில் வேப்பமரங்களின் சலசலப்பை கேட்க விநோதமாக இருந்த்து. பள்ளியை ஒரு போதும் அவள் இப்படிப் பார்த்ததில்லை.
ஒருவேளை பள்ளி நிர்வாகியை அழைத்துக் கொண்டுவராவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்தாள். யாரும் வராவிட்டாலும் இங்கேயே இரவு முழுவதும் தங்கிவிட வேண்டியது தான். வகுப்பறையில் ஒரு இரவைக் கழிப்பதை விட வேறு என்ன வேண்டியிருக்கிறது.
தன் வகுப்பறை என்பது ஒரு எல்லையா. அதைத் தாண்டி எதையும் தான் கண்டுகொள்ளக் கூடாதா. இது என்ன கட்டுபாடு.
யோசிக்க யோசிக்க அவளுக்கு வருத்தம் அதிகமாகிக் கொண்டே போனது. இப்படியான ஆசிரியர்களால் தான் மாணவர்கள் படிப்பை விட்டு பாதியில் நின்றுவிடுகிறார்கள்.
வகுப்பில் படிக்கும் மாணவர்களில் யார் எதிர்காலத்தில் என்ன ஆவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒருமுறை அவள் வகுப்பில் படித்த ஒரு மாணவி சாலை விபத்தில் இறந்துவிட்டாள். அவள் உடலை காணுவதற்காகப் பள்ளியே திரண்டு போயிருந்த்து. அந்த மாணவியின் உடலை பார்த்தபோது சித்ரலேகா அழுத அழுகைக்கு அளவேயில்லை.
இது எல்லாம் ஏன் இந்த இரவில் நினைவில் வருகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை தான் ஆசிரியர்களின் ஒரே துணை. நல்ல நினைவுகளின் சந்தோஷம் தான் மீண்டும் மீண்டும் பாடம் நடத்த வைக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.
பள்ளியை ஒட்டிய கட்டிடத்திலிருந்து வரும் வெளிச்சம் லேசாக ஊர்ந்து வராந்தா வரை வந்து கொண்டிருந்தது. எங்கோ கிணற்றுக்குள் இருப்பது போல உணர்ந்தாள். இரவுப்பூச்சிகள் எங்கிருந்தோ சப்தமிட்டுக் கொண்டிருந்தன. பள்ளியை ஒட்டிய வீட்டில் ஒடும் தொலைக்காட்சி பாடலின் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
அவளைத் தேடி அவளது கணவர் பள்ளிக்கு வந்திருந்தார். நடைச் சப்த்த்திலே அவர் வகுப்பறையை நோக்கி வருவது கேட்டது
“என்ன சித்ரா இது. சின்னபுள்ளையாட்டாம். உன்னை யாரு அவங்க கூடச் சண்டை போட சொன்னது. உனக்கு எதுக்கு வேண்டாத வேலை“
“அந்த டீச்சர் என்ன பேச்சு பேசுனாங்க தெரியுமா“
“எல்லாம் ஹெச்எம் சொன்னாரு.. யாரு எக்கேடு கெட்டா உனக்கென்ன. நீ ஏன் ஒவரா ரியாக்ட் ஆகுறே“.
அவரிடம் சித்ரலேகாவால் விளக்கம் சொல்ல முடியவில்லை. சப்தமாக அழுதாள்.
நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்து அவளை வகுப்பறையிலிருந்து எழுந்து கொள்ளச் செய்தார். அவர்கள் வராண்டாவில் நடந்து வரும்போது தலைமை ஆசிரியர் சித்ரலேகாவின் கணவரை தனியே அழைத்துக் கொண்டு போய் ஏதோ பேசினார். பிறகு சித்ரலேகா தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பள்ளியை பார்த்தாள்.
மிகவும் அந்நியமான ஒரு இடம் போலத் தோன்றியது.
வீடு வந்து சேரும்வரை அவள் ஒரு வார்த்தை பேசவில்லை.
அவளுக்காக அரவிந்த் ஹோட்டலில் இருந்து டிபன் வாங்கி வைத்திருந்தான். அதைச் சாப்பிடவும் மனதில்லை. அப்படியே போய்ப் படுத்துக் கொண்டாள்
சித்ரலேகாவின் கணவரிடம் இரவு பத்தரை மணிக்குத் தலைமை ஆசிரியர் போன் செய்து “பள்ளி நிர்வாகி காலை ஏழு மணிக்கு விசாரணைக்காக வரும்படி அழைப்பதாகச் சொன்னார். “
“அவ தூங்கிட்டா. நான் சொல்றேன்“ என்றார் சித்ரலேகாவின் கணவர்
“வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷம் ஆன அன்னைக்குப் போயி இப்படி நடந்துருச்சி. ஐ ஆம் சாரி“ என்றார் தலைமை ஆசிரியர்
சித்ரலேகாவின் கணவர் போனை துண்டித்தபிறகு அவள் உறங்குகிறாளா எனக் காண படுக்கை அறைக்குள் வந்தார்.
சித்ரலேகா உறக்கம் பிடிக்காமல் புரண்டுகொண்டிருந்தாள்
“நீ வேலைக்குச் சேர்ந்து இன்னைக்கோட இருபத்தைந்து வருஷம் ஆச்சா“ என்று கேட்டார்
மௌனமாகத் தலையாட்டினாள்
“அப்போ எந்த வருஷம் ரிடயர்ட்மெண்ட் “என்றபடியே அவள் ஒய்வு பெறும்போது கிடைக்கும் பணம் எவ்வளவு என்பதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.
தன் சந்தோஷம் ஒருவருக்கும் பெரிய விஷயமில்லையா. டீச்சர் வேலை என்பது வெறும் ஊதியத்திற்காகச் செய்யும் பணிதானா.
அவள் பதில் சொல்லாமல் இதையே நினைத்துக் கொண்டிருந்தாள்
யோசிக்க யோசிக்கச் சித்ரலேகாவிற்கு மேலும் மனத்துயர் அதிகமாகிக் கொண்டேயிருந்தது
சித்ரலேகாவின் கணவர் அவளது ரிடையர்ட்மெண்ட் பணத்தை எந்த வங்கியில் போட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும் எனக் கணக்கிட கால்குலேட்டரை தேடி வெளியே சென்றபோது அவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
இருபத்தைந்து வருஷம் பெரிய சுமை போல அவளை அழுத்தியது. அதிலிருந்து விடுபட விரும்பினாள். இடப்பக்கம் திரும்பி படுத்துக் கொண்டு நாளை எந்தப் பாடம் எடுக்க வேண்டும். வகுப்பில் என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கத் துவங்கினாள்
அது ஒன்று தான் அவளை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் ஒரே வழி
••