மறக்க முடியாத நாள்

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனையற்ற சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டது.

இந்தச் சரணடையும் முடிவிற்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை மிக விரிவாக Japan’s Longest Day என்ற திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 1967 ல் வெளியான திரைப்படமிது. யுத்த திரைப்படங்களில் இப்படம் தனித்துவமானது.

போட்ஸ்டாம் பிரகடனம் எனும் ஜப்பான் சரணடைதலுக்கான விதிமுறைகளை வரையறுக்கும் பிரகடனத்தை . ஜூலை 26, 1945 இல், அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் சீனா அதிபர் சியாங் கை-ஷேக் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டார்கள். ஒருவேளை இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து ஜப்பான் சரணடையவில்லை என்றால் அது முழுமையான அழிவைச் சந்திக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய இராணுவம் படுதோல்வி அடைந்து வந்த போதும் தனது கடற்தாக்குதலையும் வான்வெளி தாக்குதலையும் நிறுத்தவில்லை. போரின் முடிவு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்றே நம்பினார்கள்.

நேசப்படைகளால் ஜப்பானின் ஆயுதம் தாங்கிய கப்பல்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் ராணுவவீரர்கள் போர்முனையில் இறந்து போனார்கள். நிலைமை கைமீறிப்போனதை ராணுவ தலைமை உணர்ந்து கொண்டது.

இன்னொரு பக்கம். இதற்கு மேல் காத்திருந்து பயனில்லை. ரஷ்யா படையெடுத்து வந்து ஜப்பானைப் பிடித்துக் கொண்டுவிடும் என்று ஜப்பானிய அரசு பயந்தது. ஆகவே உடனடியாக நேசநாடுகளிடம் சரணடைந்துவிட வேண்டியது தான் என்று ஜப்பான் முடிவு எடுத்தது.

ஜப்பானின் வரலாற்றில் அந்த முடிவு ஒரு முக்கியமான திருப்புமுனை. . அரசின் முன்னால் நான்கு முக்கியச் சவால்கள் இருந்தன.

ஒன்று இந்த முடிவை ஜப்பானிய ராணுவம் எப்படி ஏற்றுக் கொள்ளப்போகிறது. இரண்டாவது இதில் மன்னரின் நிலைப்பாடு என்ன. மூன்றாவது ஒருவேளை ஜப்பான் சரணடைந்தால் போர்முனையிலிருக்கும் ராணுவவீரர்களின் கதி என்னவாகும். நான்காவது இந்தத் தோல்வியை ஜப்பானிய மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள். இந்த நான்கு கேள்விகளுக்குமான பதிலை தேடும்விதமாக படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு தேசம் எடுக்கும் ஒரு முடிவின் பின்னே எத்தனை அறியப்படாத கண்ணிகள் இருக்கின்றன. யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். எவ்வாறு பிரச்சனை கையாளப்படுகிறது என்பதை மிகவும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்

அரசின் கோணத்தில் இந்த நான்கு சவால்கள் இருந்தது போலவே இந்தச் சரணாகதியை விரும்பாத ராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் கோணத்தில் மன்னரைத் தடுத்து நிறுத்துவது எப்படி, திடீர் தாக்குதல் நடத்தி அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டால் என்னவாகும்., உண்மையான தேசப்பற்றுக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து தாங்களாகப் போரைத் தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்பது போன்ற முனைப்புகளும் இருந்தன. அதையும் படம் விவரிக்கிறது

நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து சரணடைதல் அறிவிக்கப்பட ஆறு நாட்கள் ஆனது. அந்த நேரத்தில், டோக்கியோ உட்பட ஜப்பானிய நகரங்களில் வழக்கமான குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடர்ந்தது ஆகஸ்ட் 15க்கு முன்பும் அன்றுமாக பகலிரவுகளே படத்தில் விவரிக்கப்படுகின்றன. யுத்த அமைச்சராகத் தொஷிரோ மிபுனே பிரமாதமாக நடித்திருக்கிறார். ராணுவ உயரதிகாரியாக அவர் நடந்து கொள்ளும் விதம் அபாரம். ராணுவ பெருமிதம் ஒரு பக்கம், ஏமாற்றம் மறுபக்கம். இரண்டிற்கும் நடுவில் அவர் இந்த முடிவினை கடைசி வரை எதிர்க்கிறார், .வீழ்ச்சியடைகிறார்

படத்தில் ஜப்பானிய மன்னர் ஹிரோஹிட்டோ சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவரது முகம் காட்டப்படுவதில்லை.

ஜப்பானியப் பிரதமர் தலைமையில் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டங்களும் அதில் நடக்கும் வாதபிரதிவாதங்களும் உண்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

முடிவை ஏற்றுக் கொள்ளச் செய்தால் மட்டுமே ஒப்பந்தம் தயாரிக்க முடியும். அந்த ஒப்பந்தம் ஒவ்வொரு சொல்லாக சரிபார்க்கப்பட்டு பின்பு தான் கையெழுத்திடப்படும். இதற்காக உதவியாளர்கள். எழுத்தர்கள் பகலிரவாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தி கொடுப்பவர்கள் கண் உறக்கமின்றி வேலை செய்கிறார்கள்.

வயதிலும் அனுபவத்திலும் மூத்த அமைச்சர்கள் இந்த முடிவினை ஏற்க மறுக்கிறார்கள். கடைசிவரை போரில் ஈடுபட்டு மரணமடைவோம் என்கிறார்கள். ஆனால் யுத்தம் தொடர்ந்தால் பொதுமக்களுக்குப் பெரிய பாதிப்பு வரும் என்பதால் இந்த முடிவை ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. மன்னர் சரணடையும் முடிவினை அறிவிக்கும் போது அவர்கள் தங்களை அறியாமல் கண்ணீர் விடுகிறார்கள். கதறி அழுகிறார்கள்.

மன்னர் ஹிரோஹிட்டோ நாட்டுமக்களிடம் இந்த முடிவினை ரேடியோ மூலம் அறிவிப்பது என முடிவு செய்கிறார்கள். இதற்கான சிறப்பு ஒலிப்பதிவு நடக்கிறது. ஜப்பான் சரணடைகிறது என்பதை மன்னர் வருத்தத்துடன் அறிவிக்கிறார். அவரது குரலை இசைத்தட்டில் பதிவு செய்து கொள்கிறார்கள். எப்போது இதை ரேடியோவில் ஒலிபரப்புச் செய்வது என்பது குறித்து அடுத்த பிரச்சனை உருவாகிறது. அதற்கான நாள் நேரம் முடிவு செய்யப்படுகிறது

இன்னொரு பக்கம் இந்த முடிவை அறிந்து கொண்ட ராணுவ அதிகாரிகளில் சிலர் ஒன்றுகூடி அரண்மனையைக் கைப்பற்றி மன்னரின் ஒலிபரப்பைத் தடுத்து நிறுத்த முனைகிறார்கள். இதற்கான அதிரடி தாக்குதல் துவங்குகிறது. அவர்களுடன் ராணுவம் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்தத் தாக்குதலை அறிந்து மன்னர் ஹிரோஹிட்டோ கவலை கொள்கிறார். அரண்மனை சூறையாடப்படுகிறது. மன்னரின் குரல் பதிவுள்ள இசைத்தட்டினை ராணுவ வீரர்களால் கண்டறிய முடியவில்லை.

சரணடையும் முடிவை எடுக்கக் காரணமாக இருந்த பிரதம மந்திரியின் வீட்டினை கிளர்ச்சியாளர்கள் தாக்குகிறார்கள். அந்த நேரம் பிரதம மந்திரி வீட்டில் இல்லாத காரணத்தால் உயிர் தப்புகிறார். கடற்படை அமைச்சர் தங்களால் கடைசிவரை போரிட முடியும் என்று உறுதியாகச் சொல்கிறார்.

இன்னொரு பக்கம் அமெரிக்கக் கடற்படைக்கு எதிராகக் கடைசி வான்வெளி தாக்குதலுக்கு விமானிகள் புறப்படுகிறார்கள். மக்கள் ஆரவாரத்துடன் அவர்களுக்கு விடை தந்து அனுப்பி வைக்கிறார்கள்.

கோழைத்தனமான அரசியல்வாதிகள் பேரரசரை வளைத்துவிட்டதாக நம்பி, கிளர்ச்சியாளர்களில் இருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஓலமிட்டபடியே செல்லும் அவர்களின் இறுதி நிமிஷங்கள் அதிர்ச்சியானவை. சரணடைவதை விட மொத்தமாகத் தற்கொலை செய்து கொள்வதே ராணுவ அதிகாரிகளின் ஒரே தீர்வு என்று சிலர் நம்புகிறார்கள். அட்சுகி விமானப்படைத் தளபதி மலேரியாவால் பாதிக்கப்படுகிறார், அவர் மரணம் வரை தான் போராடப் போவதாகச் சபதம் செய்கிறார். இப்படி ஆயிரம் குழப்பங்கள்.

கிளர்ச்சியாளர்களில் ஒருவர் வானொலி நிலையத்திற்குச் சென்று, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒலிபரப்பைத் தடுத்த நிறுத்த முயலுகிறார். முடிவில் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தால் ஒடுக்கப்படுகிறார்கள். மன்னரின் உரை ரேடியோவில் ஒலிபரப்பாகிறது. படம் நிறைவு பெறுகிறது

75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த ஒரு விஷயத்தை இத்தனை பரபரப்புடன் ஆவலுடன் காணச் செய்கிறது என்பதே இப்படத்தின் சிறப்பம்சம்.

படத்தின் துவக்கத்தில் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கோப்புக் காட்சிகளின் வழியே காட்டப்படுகின்றன. இவ்வளவு அழிவிற்கும் உயிரிழப்புகளுக்குப் பின்பும் ஜப்பான் போரிடவே விரும்புகிறது என்பதையும் காட்டுகிறார்கள்.

ஜப்பானின் கோணத்தில் அதன் தேசப்பற்றை விவரிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ராணுவம் செய்த குரூரங்களும் கொலைகளும் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் மிக மோசமானவை. ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் ஜப்பானிய ராணுவத்தின் தாக்குதலால் பல லட்சம் மக்கள் மாண்டுபோனதைப் பற்றிப் படத்தில் சிறுகுறிப்போ, வருத்தமோ கூடக் கிடையாது.

இவ்வளவு கொந்தளிப்பான சூழலுக்கு நடுவிலும் படத்தில் மன்னர் ஹிரோஹிட்டோ நிதானமாக நடந்து கொள்கிறார். மென்மையான குரலில் நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார். அந்த உரை ஒலிப்பரப்பானதை நேரில் கேட்ட அகிரா குரசேவா தனது வாழ்க்கை வரலாற்றில் அதைப் பற்றி எழுதியிருக்கிறார். உண்மையில் ஜப்பானிய மக்கள் மன்னர் தாங்கள் இன்னமும் யுத்தம் செய்யப்போகிறோம். வெற்றிபெறப்போகிறோம் என்று அறிவிப்பார் என்றே நம்பினார்கள். அறிவிப்பு வெளியான போது குரல் சரியாக ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்பதால் ரேடியோவில் தெளிவாக கேட்க முடியவில்லை.

இரண்டு நாட்களுக்குள் எவ்வளவு நிகழ்வுகள். எத்தனை கதைகள்.  157 நிமிஷங்கள் ஓடக்கூடிய இத் திரைப்படம். டாக்குடிராமா போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. கிஹாச்சி ஒகமோட்டோ இதனை இயக்கியுள்ளார்.

முழுப் படத்திலும் ஒரேயொரு பெண் தான் வசனம் பேசுகிறார். அவர். பிரதம மந்திரி சுஸுகி வீட்டில் உள்ள வேலைக்காரி .ஒரு வரி வசனமது.

சில காட்சிகளில் பெண்கள் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். உணவளிக்கிறார்கள். பெண் கதாபாத்திரம் எனத் தனியே எவரும் கிடையாது. யுத்தம் என்பதே ஆண்களின் உலகம் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் தான். பாதிக்கப்படுகிறவர்கள் தான் பெண்கள்.

யுத்த காலத்திய ஜப்பானிய ராணுவத்தின் குழப்பமான மனநிலையினையும் வீரர்களிடம் வெளிப்பட்ட மூர்க்கத்தையும் படம் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது.

ஒரு துப்பறியும் படம் போல அடுத்து என்ன நடக்கும் என்ற பதைபதைப்பினை படம் உருவாக்குகிறது.

War Room படம் முழுவதும் ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. காட்சிக்கோணங்களும் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பானவை . அந்த அறையில் எவரும் தன்னுடைய முடிவுகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை.. மாறாக ஒத்துக் கொள்வதும் மறுப்பதும் என நாடகமாடுகிறார்கள். ஒவ்வொரு முடிவும் கட்டாயத்தாலே ஏற்கப்படுகிறது. அரசின் முக்கிய முடிவுகளுக்குப் பின்னால் எண்ணிக்கையற்ற சிக்கல்கள். தடைகள், சரிபார்த்தல்கள் இருக்கிறது என்பதை வியப்போடு அறிந்து கொள்கிறோம்.

நாலரை நிமிஷங்கள் கொண்ட மன்னரின் ரேடியோ உரை தெளிவற்ற குரலில் இன்றைக்கும் கேட்கக் கிடைக்கிறது. உணர்ச்சிப்பூர்வமான நாடகமாகப் படத்தைச் சித்தரிக்க வேண்டும் என்பதே இயக்குநரின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. அது நிறைவேறியிருக்கிறது

வரலாற்று நிகழ்வுகள் ஒரு நாளை நீண்டதாக்கிவிடுகின்றன. அப்படியான ஒரு நாளை துல்லியமாக மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்ற வகையில் இப்படம்  முக்கியமானதே..

0Shares
0