தேடப்படும் மனிதர்

“தி லெஜண்ட் ஆஃப் மோலி ஜான்சன்” லியா பர்செல் இயக்கியபடம். 2021ல் வெளியாகியுள்ளது

ஆஸ்திரேலிய சினிமாவிற்கெனத் தனித்த அழகியல் இருக்கிறது. பூர்வகுடி மக்களின் வாழ்க்கை, பண்ணைக் குடியிருப்புகள். பிரிட்டிஷ் காலனிய ஒடுக்குமுறைகள். துரத்தப்பட்ட பூர்வகுடிகளின் அவலம், உறுதியான பெண்களின் செயல்பாடு, பழங்குடியின கலாச்சாரத்தின் தனித்துவம் போன்றவற்றைப் பல்வேறு விதங்களில் ஆஸ்திரேலிய சினிமா தொடர்ந்து விவரித்து வருகிறது.

The Drover’s Wife படத்தில் ஆல்பைன் பனிமலைத் தொடருக்கு மத்தியில் தனது நான்கு குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார் மோலி ஜான்சன். ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறான் அவளது கணவன் ஜோ. அவளுக்குத் துணை ஒரு துப்பாக்கியும் நாயும் மட்டுமே.

மலையுச்சியிலிருந்து கீழே எவர்டனுக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு 12 வயது மகன் டேனி உதவி செய்கிறான். வடகிழக்கு விக்டோரியாவில் அமைந்துள்ள சிறிய நகரம் எவர்ட்ன்.

ஒரு நாள் லண்டனிலிருந்து புதிதாக வந்துள்ள ராணுவ அதிகாரி நேட் கிளிண்டோஃப் மற்றும் அவரது மனைவி லூயிசா பயணவழியில் உணவு தேடி அவளது வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களைக் கண்டதும் துப்பாக்கியை உயர்த்தும் மோலியிடம் அன்பாக உரையாடி தங்களுக்கு உதவி வேண்டும் என்கிறார்கள். மோலி உதவி செய்வதாக ஒத்துக் கொள்கிறாள்.

அந்தச் சந்திப்பின் போது லூயிசா தான் கனவு கண்டது போல ஆஸ்திரேலிய வாழ்க்கை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறாள். அவர்கள் முகாமிற்குத் திரும்பிப் போகும் போது டேனி உடன் செல்லுகிறான்.

மோலியின் துணிச்சலைப் பற்றி அந்த வட்டாரத்தில் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். “அவள் மலைப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு எதைக் கண்டும் பயம் கிடையாது. எதையும் துணிச்சலுடன் சந்திக்கக் கூடியவள் “என்று ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. அது உண்மை என்பதை அடுத்து வரும் காட்சிகள் அடையாளப்படுத்துகின்றன.

ஒரு நாள் பூர்வகுடி மனிதரான யாடகா காவலர்களிடமிருந்து தப்பியோடி அவளது வீட்டில் அடைக்கலமாகிறான். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட அவனது கடந்தகாலத்தைப் பற்றி மோலி அறிந்திருக்கவில்லை. ஆனால் பசியோடு இருந்தவனுக்கு உணவளிக்கிறாள். கைவிலங்குகளை அகற்றிவிடுகிறாள்.

கர்ப்பிணியான அவளுக்குத் தேவையான சிறு உதவிகளைச் செய்து கொண்டு அந்த வீட்டில் மறைந்து வாழுகிறான் யாடகா. மோலியின் மகன் டேனியுடன் மிகுந்த நட்புடன் பழகுகிறான். டேனிக்கு ஈட்டி எறிய கற்றுத் தருகிறான். தான் சர்க்கஸில் வேலை செய்த நாட்களைப்பற்றிக் கதையாகச் சொல்கிறான். அவர்கள் மூவருக்கும் இடையில் நெருக்கம் உருவாகிறது.

இதற்கிடையில் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிப் போன மோலியின் கணவர் ஜோவைக் காணவில்லை என்று ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. அந்தத் தேடலின் நடுவே யாடகா கண்டறியப்படுகிறான். தப்பியோட முயலும் போது சுடப்படுகிறான். கொலைக்குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக மோலி குற்றம் சாட்டப்படுகிறாள். அவளுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது.

ஆல்பைன் பனிமலைத் தொடரில் தனியொரு பெண்ணாக மோலி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறாள். எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்கிறார் என்பதைப் படம் சிறப்பாக விவரிக்கிறது.

மோலிக்கும் யாடகாவிற்கும் இடையில் வெளிப்படுத்திக் கொள்ளாத நேசம் உருவாகிறது. அது காதலில்லை. நட்புமில்லை. புரிந்து கொள்ளல். யாடகாவை அவள் புரிந்து கொண்டிருக்கிறாள். அதன் அடையாளமாக அவளிடம் அடங்கிப் போகிறான். அவர்களின் உறவு படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது

மோலியின் மகன் டேனி அம்மாவிற்கு உற்றதுணையாக இருப்பதோடு ஆபத்தான சூழலில் தைரியமாகச் சண்டையிடுகிறான். அவன் யாடகாவை கட்டி அணைத்துக் கொள்ளும் காட்சியில் அவரையும் தந்தையைப் போலவே உணருகிறான்.

ராணுவ குடியிருப்பில் நடக்கும் கொண்டாட்டத்தில் அவர்கள் எவ்வளவு பூர்வகுடிகளை வெறுக்கிறார்கள். ஒடுக்க நினைக்கிறார்கள் என்பது காட்டப்படுகிறது

லூயிசா தனக்கு உதவி செய்த மோலியை மறுபடி காண வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவள் செய்த உதவிக்கு நன்றியாக எதையாவது செய்ய வேண்டும் என்று முயலுகிறாள். கடைசிக்காட்சியில் அவள் முன்னால் மோலி கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட நிற்கிறாள். அப்போது மோலியின் கண்களை நேர்கொள்ள முடியாமல் லூயிசா தவிக்கிறாள்.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது ராணுவம் பூர்வ குடிமக்களை எப்படி ஒடுக்கியது, அவர்களின் நிலத்தையும் உரிமைகளையும் எவ்வாறு பறித்துக் கொண்டது என்பதைப் படம் நேர்த்தியாக விவரிக்கிறது. ப்ளூ மவுண்டன்ஸின் பருவகால மாற்றங்களை ஒளிப்பதிவாளர் மார்க் வேர்ஹாமின் தனித்த அழகுடன் படமாக்கியிருக்கிறார். ஹென்றி லாசன் 1892ல் எழுதிய சிறுகதையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் நேசிப்பவர்களை பாதுகாக்க எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்பதே படம் எழுப்பும் கேள்வி. அது தான் வரலாற்றில் என்றோ நடந்த நிகழ்வினை இன்றைக்கும் நெருக்கமாக்குகிறது.

0Shares
0