நடைத்துணை

புதிய சிறுகதை. ஏப்ரல் 19. 2026

அந்த மின்னஞ்சல் ஸ்பாமில் சென்று சேர்ந்திருந்தது.

தற்செயலாகவே நான் அதைப் படிக்க நேர்ந்தது

••

அன்பிற்குரிய பேராசிரியர் விமல் கற்கடம் அவர்களுக்கு,

மேதகு மன்னர் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் XXV ன் விசேச அழைப்பின் பெயரில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறோம்.

பெருமைக்குரிய எங்கள் மன்னர் மாசுபடாத இயற்கையில் நிதானமாக காலைநடை மேற்கொள்வதை விரும்புகிறவர். இந்த நடைப்பயணத்தில் தினமும் ஒரு புதியவருடன் நடக்க விரும்புகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தினம் ஒருவர் நடைத்துணையாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அப்படி நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

தாங்கள் எங்கள் மன்னருடன் நடப்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் தரப்படும். எங்கள் அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்கான விமானக் கட்டணம். தங்குமிடம். இதர வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம். நீங்கள் மன்னருடன் ஏப்ரல் 28 அன்று நடப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே பத்து நாட்கள் முன்னதாக வருகை தர வேண்டியிருக்கும்.

மன்னருடன் நடைத்துணையாகச் செல்வதற்கான சிறப்பு ஊதியமாக ஆறாயிரம் டாலர் வழங்கப்படும். இந்தக் கடிதம் மிகவும் அந்தரங்கமானது. ஆகவே இதனைப் பொதுவில் பகிரக் கூடாது. இந்த அழைப்பு குறித்து ஊடகங்களிலோ, தனிப்பட்ட வகையிலோ பகிரக் கூடாது. உங்கள் சம்மத்தை தெரிவித்தால் நாங்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். என மின்னஞ்சல் தெரிவித்தது. மெலிண்டா பெர்க் என்பவரின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பபட்டிருந்தது.

வழக்கமான மோசடி மின்னஞ்சல்களில் ஒன்றாகவே இதனைக் கருதினேன். சோழர்காலச் சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் குறித்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வருபவன் என்ற முறையில் அமெரிக்கப் பல்கலைகழக ஆய்வாளர்கள். இதழாளர்கள் பலருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. அத்தோடு புகழ்பெற்ற சில மியூசியங்களின் ஆலோசகராகவும் நான் பணியாற்றுவதால் சர்வதேச அளவில் அடிக்கடி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதுண்டு. இந்த மின்னஞ்சலினை யாரோ ஏமாற்றுவதற்காக எழுதியிருக்கிறார்கள் எனப் படித்த உடனே தெரிந்தது. ஆகவே அந்த மின்னஞ்சலை குப்பையில் போட்டு நீக்கினேன்.

ஆனால் மறுநாள் அந்த மின்னஞ்சலில் இருந்த மெலிண்டா அலைபேசியில் அழைத்து அதே விபரங்களைச் சொன்னார்.

“உங்கள் மன்னர் எங்கே வசிக்கிறார்….நடைத்துணை என்றால் என்ன. “ என்று கேட்டேன். “உங்கள் சம்மதம் பெற்றபிறகே நாங்கள் விபரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் உடனடியாக ஆயிரம் டாலர் உங்கள் வங்கி கணக்கில் நாங்கள் செலுத்த தயாராக இருக்கிறோம்“ என்றார். மெலிண்டா

“என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள். உங்களைப் பற்றிய பிற விபரங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும்“ என்றேன்.

“உங்கள் சம்மதம் பெற்ற பின்பே தகவலை பகிர்ந்து கொள்ள முடியும்“ எனக் கறாராகத் தெரிவித்தார்.

இரண்டு நாள் அவகாசத்தில் பதில் அளிப்பதாக அலைபேசியைத் துண்டித்தேன்

அந்த மின்னஞ்சலில் இருந்த தகவல்கள் உண்மை தானா என நண்பர்கள் மூலமும், இணைய வழியாகவும் ஆராய்ச்சி செய்தேன். அத்தோடு இது போன்ற மோசடி ஏதேனும் நடந்திருக்கிறதா என்பதைப் பற்றியும் இணையத்தில் தேடி ஆராய்ந்தேன். உதவிகரமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் தயக்கத்துடன் எனது சம்மத்தைத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.

சில மணி நேரத்தில் நன்றிக் கடிதம் வந்தது.

அத்தோடு எனது வங்கி கணக்கு விபரம் கேட்டு எழுதியிருந்தார்கள். பாதுகாப்புக் காரணங்கள் கருதி எனது வங்கிக் கணக்கை தராமல் ஊரிலிருக்கும் சிற்றப்பாவின் வங்கிக் கணக்கினை அனுப்பி வைத்தேன். அதில் குறைவான பணமே இருந்தது. சிற்றப்பா அந்தக் கணக்கை எப்போதாவது தான் இயக்குகிறார். அன்று மாலை சிற்றப்பாவிடமிருந்து போன் வந்தது அவரது கணக்கிற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வந்திருக்கிறது என்று.

அது அவர்கள் அனுப்பிய பணம் என்று உறுதியாகத் தெரிந்தது. அதன்பிறகு அவர்களுக்கு நன்றி தெரிவித்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துக் கடிதம் எழுதினேன். அதன்பிறகு நடந்தவை நாள் வாரியாக டைரியில் குறித்து வைத்துக் கொண்டேன். வரலாற்றின் இடைவெளிகளை, புதிர்களை இத்தனை ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருந்த எனக்குச் சட்டெனச் சமகால வாழ்வின் அவிழ்க்கபடாத புதிர்கள். உண்மைகள் மீது நாட்டமும் வியப்பும் வரத் துவங்கியதற்கு இந்தப் பயணமே காரணம்

••

ஏப்ரல் 11

மன்னர் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் பற்றிச் சுருக்கமான குறிப்பு வந்திருந்தது அவரது புகைப்படம் அதில் இடம்பெறவில்லை. மன்னர் எங்கே வசிக்கிறார் என்ற விபரமும் குறிப்பிடப்படவில்லை. அவரது வயது 54. தத்துவம் பயின்றவர். இசை ரசிகர். இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். பதிமூன்று மொழிகள் தெரியும். குதிரையேற்றம் தெரியும். சீனக்காத்தாடிகள் செய்யக்கூடியவர். ஓவியர், என்றிருந்தது. எதற்காக இப்படித் தினமும் ஒரு நடைத்துணையைத் தேர்வு செய்கிறார் என்பதைப் பற்றி எந்தக் குறிப்புமில்லை.

இணையத்தில் தேடியவரை அப்படி ஒரு மன்னர் எந்த நாட்டிலும் இல்லை. ஒருவேளை புதுவகை மோசடி வலையாக இருக்குமோ என்று உள்ளூற அச்சமாகவே இருக்கிறது.

ஏப்ரல் 12

மன்னர்களின் காலம் தான் முடிந்துவிட்டது. இன்றும் மன்னர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை ரகசியமானது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் மன்னரும் அப்படி தான் வாழ்கிறார். மன்னர் எப்போது பொன்மஞ்சள் வண்ண உடைகள் மட்டுமே அணியக் கூடியவர் என்பதால் அவருடன் நடப்பவரும் பொன்மஞ்சள் உடையை அணிந்து கொள்ள வேண்டும். ஆகவே உங்களின் உடை அளவு மற்றும் சிறப்புக் காலணிகள் தயார் செய்வதற்கான விபரங்களை உடனே அனுப்பி வையுங்கள். என மெலிண்டாவிடமிருந்து மெயில் வந்திருந்தது. அத்தோடு பயிற்சி நாட்களில் அணிய வேண்டிய உடைகள். விருப்ப உணவுப்பட்டியல் கேட்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதகாலத்தில் எந்தெந்த நாளில் எத்தனை மணிக்கு தூங்கி எழுந்தீர்கள் என்ற விபரமும் கேட்டிருந்தார்கள். அது எதற்காக எனப் புரியவில்லை. இதற்குப் பதில் அனுப்பியதோடு மன்னருடன் நடக்கும் போது ஏதேனும் பேச வேண்டுமா. எது போன்ற விஷயங்களைப் பேச வேண்டும் என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். மெலிண்டாவிடமிருந்து பதில் வந்தது. மன்னர் மட்டுமே பேசுவார். நீங்கள் அவர் கேட்பவற்றிற்குப் பதில் சொன்னால் போதும் நீங்களா எதையும் அவருடன் பேசக் கூடாது. குறிப்பாக நடக்கும் போது காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு இசை கேட்பது மன்னருக்குப் பிடிக்காது. அவர் பேசுவதை ஆழ்ந்து நீங்கள் கேட்க வேண்டும். மற்றவை பயிற்சியின் போது விளக்கபடும் . என்றிருந்தது

ஏப்ரல் 13

மிலிண்டா இன்று விரிவான மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதில் மன்னருடன் நடப்பது என்பது அபூர்வமான சந்தர்ப்பம். ஆகவே நீங்கள் அந்த நடையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். மன்னருக்கும் உங்களுக்குமான இடைவெளி ஒரே சீராக இருக்க வேண்டும். நீங்கள் அவருக்கு இடது பக்கமாகவே எப்போதும் நடக்க வேண்டும். அவர் எடுத்து வைக்கும் அதே காலடி வேகம் தான் உங்களுக்கும் இருக்க வேண்டும். மன்னர் இயற்கையை நேசிக்கக் கூடியவர். ஆகவே அவர் பறவையின் குரல்கேட்டோ, மரக்கிளையின் அழகில் மயங்கியோ நின்றுவிடுவார். அது போன்ற நேரங்களில் நீங்கள் அவரை விட்டு விலகி ஒன்றரை அடி பின்னால் நிற்க வேண்டும். மன்னர் ரசிக்கும் விஷயத்தைப் பற்றி நீங்களாக எதையும் பேசக் கூடது. மன்னரின் மௌனம் முக்கியமானது. விளக்கமுடியாதது. ஆகவே அவராக எதையாவது சொல்லும்வரை காத்திருக்க வேண்டும். நீங்களும் மன்னரும் நடப்பதை டிரோன் கேமிரா மூலம் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருப்போம். அந்தப் பாதையில் உங்களைத் தவிர வேறு எவரும் நடமாடமாட்டார்கள். ஆகவே இரண்டு மேகங்களைப் போல நீங்கள் செல்ல வேண்டும். எதிர்பாராத விதமாக மழை பெய்ய நேர்ந்தாலோ, காற்றின் வேகம் அதிகமானாலோ மன்னரின் நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிடும். இன்னொரு நாள் உங்களுக்கு ஒதுக்க இயலாது என்பதால் நீங்கள் உடனே வீடு திரும்ப நேரிடும். மன்னருடன் நடக்காவிட்டாலும் உங்களுக்கான சிறப்பூதியம் நிச்சயமாக வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்

ஏப்ரல் 14

மிலிண்டாவின் மின்னஞ்சல் குறிப்பில் சில உணவுப்பெயர்களுடன் சில மாத்திரைகளும் இருந்தன. அவற்றை எப்படி எப்போது உட்கொள்ள வேண்டும் என்ற குறிப்பும் இருந்தது. அந்த உணவுப்பொருட்கள் டின்னில் அடைக்கபட்டவை. அவற்றையும் மாத்திரைகளையும் அவர்களே அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்கள். இவை எதற்காக உட்கொள்ளப்பட வேண்டும் என்ற குறிப்பில்லை

ஏப்ரல் 15

மன்னர் சில வேளைகளில் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேடிக்கையான நிகழ்ச்சிகளைச் சொல்லுவார். அதைக் கேட்டு நீங்கள் சிறியதாகச் சிரிக்க வேண்டும். அப்போது உங்கள் பற்கள் வெளியே தெரியக்கூடாது. அந்த நகைச்சுவைக்காக நீங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் காரணமில்லாமல் சிரிப்பது கூடவே கூடாது. அது அவமானமாகக் கருதப்படும்

ஏப்ரல் 16

உங்கள் பயணத்திற்கான விமான டிக்கெட், விமானநிலையத்திலிருந்து உங்களை அழைத்து வருபவர் விபரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ளன. இந்தப் பயணக் காலம் முழுவதும் நீங்கள் அலைபேசியை உபயோகிக்கக் கூடாது.

. விமான டிக்கெட்டில் நான் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரை நோக்கி நான் பயணம் செய்ய வேண்டும் என்பதும் நான் செல்ல வேண்டிய இடம் மான்லிச்சென் என்றும் தெரிய வந்தது. உடனே அங்கே ஏதேனும் மன்னர் வசிக்கிறாரா, கோட்டைகள் இருக்கிறதா என இணைய வழியாகத் தேடினேன். எதையும் கண்டறிய முடியவில்லை. எனது நூலகத்திலிருந்த புத்தகங்கள் மூலம் மான்லிச்சென் பற்றிய தகவல்களைப் படிக்கத் துவங்கினேன்.

ஏப்ரல் 17

இரவு விமானப்பயணம். பெர்ன் விமான நிலையம் வரை இரண்டு விமானங்கள் மாறிச் செல்ல வேண்டியிருந்தது. பெர்னில் கரோல் நெஸ்பிட் என்பவர் காரோடு வந்திருந்தார். போலந்து நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும். அவரது தோற்றம் அப்படி இருந்தது. அவர் எங்கே அழைத்துச் செல்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் எங்கள் காரை ஒரு பாதுகாப்பு வாகனம் பின்தொடர்வதைக் கண்டேன். நிச்சயம் அதுவும் மன்னரின் ஏற்பாடாகவே இருக்கக் கூடும் என்று தோன்றியது.

பயண வழியில் இருந்த இயற்கை காட்சிகளை ரசித்தபடியே இருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மனிதர் இது போல அழைத்து வரப்படுகிறார். உபசரிக்கபடுகிறார். ராஜவாழ்க்கை என்பது இது தான் போலும். பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது உடன் நடப்பவர்களைக் கண்டு கொண்டதேயில்லை. இன்று தன்னோடு நடப்பதற்காக ஒருவர் விமான டிக்கெட் கொடுத்து அழைக்கிறார். பணம் தருகிறார். வாழ்க்கை விநோதமானது

ஏப்ரல் 18

மூன்று பெரிய மாளிகைகள் கொண்ட பெரிய வளாகமது. இடதுபுறமிருந்த மாளிகை ஒன்றில் தங்க வைக்கபட்டேன். அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான அறைகள் இருந்தன. என்னைப் போலவே மன்னரின் அழைப்பில் வந்திருந்தவர்கள் வேறு வேறு அறைகளில் தங்கியிருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ள அனுமதியில்லை. நீண்ட பயணத்தின் காரணமாக அறைக்கு வந்தவுடன் உறங்கிவிட்டேன். இரவு ஏழு மணிக்கு கிறிஸ்டோபர் கார்ரே என்ற மருத்துவர் அறைக்கு வருகை தந்து உடல்நிலையைப் பரிசோதனை செய்தார். அறைக்குள்ளாக நடந்து காட்டச் சொன்னார். நடக்கும் போது கைகள் எவ்வளவு முன்னால் போகின்றன என்ற அளவை குறித்துக் கொண்டார். அங்கே தங்கியிருக்கும் நாட்களில் தினமும் இரவு ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஐந்து மாத்திரைகளைத் தந்து போனார். அன்றிரவு அறையில் தனித்திருந்த போது மிக அபத்தமான செயலில் நான் ஈடுபடுவதாகத் தோன்றியது. முன்பின் தெரியாத ஒருவருடன் அவர் பணம் கொடுக்கிறார் என்பதற்காக எதற்காக நடக்க வேண்டும். அதுவும் இத்தனை கட்டுபாடுகளுடன். மன்னர் எதற்காக என்னோடு நடக்க விரும்புகிறார். எங்கேயிருந்து எங்கே நடக்கப் போகிறோம். உண்மையில் இது ஒரு நாடகமா. அரச வாழ்க்கையில் இது போன்ற விசித்திரங்களைக் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையாகக் கண்முன்னே நடக்கும் என எண்ணியதேயில்லை. இந்தக் குழப்பங்களுக்கு இடையே. ஊரிலிருந்து புறப்பட்டு வந்து தங்கியபிறகு இவ்வளவு யோசனைகள் தேவையற்றது என்று மனதிலிருந்து இன்னொரு குரலும் ஒலித்தது

ஏப்ரல் 19

காலை ஐரீன் பால்மர் என்ற இளம்பெண் வந்திருந்தாள். செம்பட்டை முடி. ஆரஞ்சு வண்ண உடை அணிந்திருந்தாள்.

அறையின் ஜன்னலை திறந்துவிட்டு வெளியே தெரியும் பனிமலை எப்படியிருக்கிறது என்று கேட்டாள். மிகவும் அழகாக இருக்கிறது என்றேன். நீங்கள் இன்று நாள் முழுவதும் அந்த மலையைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். இருண்டு அந்த மலை உங்கள் கண்ணிலிருந்து மறைந்தாலும் நீங்கள் இருக்கையை விட்டு எழுந்து கொள்ளக் கூடாது. உங்கள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக ஐந்து நிமிஷ நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி இன்றைய உங்கள் பயிற்சி இந்தப் பனிமலையை வேடிக்கை பார்ப்பது. என்றாள்

இது எதற்காக என ஐரீன் பால்மரைக் கேட்டேன். எதையும் நீங்கள் கேள்வி கேட்க கூடாது என்பது தான் உங்களுக்கான முதல்விதி. எதற்கும் பதில் சொல்லக் கூடாது என்பது தான் எங்களுக்கான கட்டளை என்று சிரித்தாள்.

பனிமலையை வேடிக்கை பார்ப்பதில் என்ன இருக்கிறது எனப்புரியவில்லை. ஆனாலும் ஜன்னல் வழியாகப் பனிமலையைப் பார்க்க துவங்கினேன். ஆச்சரியம் இசைகேட்பது போலக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பனிமலையின் மீது சூரிய வெளிச்சம் படர்வதையும் மலையைக் கடந்து செல்லும் பறவைகளையும் ஆர்வத்துடன் காணத் துவங்கினேன். மலை அசைகிறது. இயங்குகிறது. உருகுகிறது. அது மௌனத்தின் பிரம்மாண்ட வடிவம். பனியின் ஒற்றைக்கண் என ஏதேதோ மனதில் தோன்றியது.

நேரம் செல்லச் செல்ல வசீகரமான அழகுடன் இருந்த பனிமலை மெல்ல வேதனை தருவதாக மாறியது எதற்காகவே மனதில் ஆழமான வேதனை கசிந்தது. பெருமூச்சிட்டபடி மலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். காத்திருப்பு தான் அந்த மலையாக உருக் கொண்டிருக்கிறதோ. இடையில் எழுந்து சாப்பிட்டேன். இரண்டு முறை மூத்திரம் பெய்து திரும்பினேன்.

அசைவற்ற ஒன்றை நீண்ட நேரம் பார்க்கும் போது அது நம் அகத்தினுள் இடம்பெயர்ந்து நிரம்புகிறது என்பதை உணர்ந்தேன். மாலையானது. அதே பனிமலை வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டதாகத் தோன்றியது. மனதில் எதையோ இழந்தது போன்ற உணர்வு. இருள் நிரம்பியது. மலை மறைந்துவிட்டது. அறையில் விளக்குகளை எரிய விடவில்லை. நீண்ட நேரத்தின் பிறகு உடல் கனமானது போன்ற உணர்வுடன் எழுந்து அறையின் விளக்கை போட்டேன். மிகவும் அசதியாக இருந்தது. படுக்கையில் விழுந்தவுடன் உறங்கிப் போனேன்.

ஏப்ரல் 20

இன்றைக்குச் சிம்மர்மேன் என்ற வயதானவர் வந்திருந்தார். அவர் வெவ்வேறு வகையான பழங்களைக் காட்டி அதன் பெயர்கள் மற்றும் ருசியை அறிமுகம் செய்தார். இந்தப் பழங்கள் நீங்கள் நடந்து செல்லும் பாதையில் விழுந்து கிடக்கக் கூடியவை. ஒருவேளை மன்னர் இவற்றைக் கேட்டால் நீங்கள் பதில் அளிக்கவும் அதன் ருசியைப் பற்றிச் சொல்லவும் இந்தப் பயிற்சி அவசியம் என்றார்.

அன்று மதியம் வாகனம் ஒன்றில் மலையுச்சிக்கு அழைத்துப் போனார்கள். மேகக் கூட்டம் அலை அலையாகக் கடந்து போயின. நீண்டு வளைந்து செல்லும் பாதைகளில் ஆள் நடமாட்டமேயில்லை. மன்னர் போல உடை அணிந்த ஒருவர் உயரமான பாறையின் மீது நின்றிருந்தார். அவருடன் இணைந்து நடக்க வேண்டும் என்றார்கள். மன்னர் இவரைப் போலதான் இருப்பாரோ என்று நினைத்துக் கொண்டேன். ஐந்தரை மைல் தூர நடையது. வழியில் மன்னர் வேஷம் அணிந்தவர் ஒரு வார்த்தை பேசவில்லை. சில இடங்களில் நின்று மரத்திலிருந்து உதிர்ந்த பழங்களைச் சேகரித்தார். சில இடங்களில் காற்றில் ஏதோ எழுதினார். ஒரு இடத்தில் நின்று திரும்பி என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். அந்த நடையில் அவருக்கு இணையாக என்னால் நடக்க முடியவில்லை. ஒரு இடத்தில் வழியில் கிடந்த கல் காலில் இடறியது. இன்னொரு இடத்தில் மன்னரை இடிப்பது போல நடந்து கொண்டேன். வேறு ஒரு இடத்தில் மலையாடு ஒன்று நிற்பதை காண தலையைத் திருப்பிக் கொண்டேன்

ஏப்ரல் 21

எனது முழுநடைப்பயணமும் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை அறையில் இருந்த திரையில் ஒளிபரப்புச் செய்து காட்டியதோடு எந்த இடத்தில் என்ன தவறு செய்கிறேன் என்று விளக்கினார் இயன் ஜே மெக்நீல். அன்று மாலை அவருடன் மீண்டும் அதே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த முறை மன்னர் வேஷம் அணிந்தவரில்லை. மாறாக அவர் இருப்பது போலக் கற்பனை செய்து கொண்டு நடக்க வேண்டியிருந்தது. முதல் நாள் செய்த தவறுகளை நான் சரிசெய்துவிட்டேன். ஆனால் இன்றைக்குச் சில புதிய தவறுகள் சிலவற்றை என்னை அறியாமல் செய்திருந்தேன். இயன் ஜே மெக்நீல் அதைச் சுட்டிக்காட்டி மேம்படுத்த ஆலோசனைகள் சொன்னார்

ஒருவருடன் இணைந்து நடப்பது என்பது எளிதானதில்லை. அது இரண்டு இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கபடுவதைப் போன்றது என்பதை உணர்ந்து கொண்டேன்

ஏப்ரல் 22

இன்றைக்கு மீண்டும் நடைப்பயிற்சி. ஆனால் புதிய பாதையில் ,ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பேரழகில் நடப்பது என்பது வானில் மிதப்பது போலவேயிருந்தது. தனியே நடக்க நடக்க ஒரு எறும்பை போல உணரத் துவங்கினேன்

ஏப்ரல் 23

இன்று மருத்துவர் கிறிஸ்டோபர் கார்ரே அறைக்கு வந்திருந்தார். உடல்நிலையைப் பரிசோதனை செய்ததோடு வலது தோள்பட்டையில் உங்களுக்கு வலி இருக்கிறதா என்று கேட்டார். ஆமாம். அது பள்ளி வயதில் கால்பந்தாடும் போது ஏற்பட்ட முறிவு என்றேன். அந்த வலியை உங்கள் நடையின் போது உணருகிறீர்கள். அப்போது உங்கள் கண்களில் முகத்தில் மாற்றம் தெரிகிறது. மன்னருடன் நடக்கிறவர் தனது வலியை காட்டிக் கொள்ளக் கூடாது. என்றார். அந்த வலி திடீரென ஏற்படுகிறது என்றேன். அப்படி வலி உணரும் போது அதை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை சொன்னார்

ஏப்ரல் 24.

இரவில் யாரோ எனது அறைக்கதவை தட்டும் சப்தம் கேட்டது. கதவை திறந்து வெளியே வந்த போது ஒருவர் வெளிறிய முகத்துடன் நின்றிருந்தார். ஏதோஒரு மொழியில் அவர் பேசினார். அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. அந்த மனிதர் வலது புறமிருந்த படிக்கட்டினை நோக்கி வேகமாக நடந்து போவதை பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது எனப்புரியவில்லை

ஏப்ரல் 25

அறையைக் காலி செய்து புறப்பட வேண்டும். தயாராக இருங்கள் என்று ஐரீன் தெரிவித்தாள். எங்கே போகிறோம் என்று தெரியவில்லை

ஏப்ரல் 26

இந்த இடம் எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் தொலைவில் நூற்றுக்கண்ணான விளக்குள் எரியும் அரண்மனை ஒன்று கண்ணில் பட்டது. அதில் தான் மன்னர் வசிக்கிறார். அவர் எப்படியிருப்பார். எதற்காக இந்த மறைவிடத்தில் வசிக்கிறார் என்று புரியவில்லை. நிச்சயம் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் XXV என்பது அவரது உண்மையான பெயராக இருக்காது. அதுவும் ஒரு புனைவு என்றே தோன்றியது

ஏப்ரல் 27

மிஷேல் ஆஷ்பி டாசன் என்பவர் அறைக்கு வந்திருந்தார். அவர் நாளைய மன்னரின் நடையை ஒருங்கிணைப்பு செய்கிறவர். தன்னைப் போல ஒவ்வொரு நாளும் ஒருவர் நடையை ஒருங்கிணைப்பு செய்கிறார் என்றார்

பாதுகாப்பு காரணங்களுக்காக மன்னர் இங்கே மறைந்து வாழுகிறார். அவரைப் பற்றிய முழுமையான விபரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மன்னருக்கு நிரந்தர நடைத்துணை கிடையாது. இருப்பது அபாயகரமானது

நீங்களும் அவரைச் சந்தித்த நிகழ்வை உங்கள் வாழ்விலிருந்து நீக்கிவிட வேண்டும் என்றார்.

அத்தோடு இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சிக்காக எல்லாமும் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முழு மனநிறைவுடன் தூங்கி எழுந்து காலை தயாராக இருங்கள். ஐந்து முப்பது மணிக்கு உங்களை அழைத்துச் செல்ல வந்துவிடுவேன். நாம் கொஞ்சம் பயணம் செய்ய வேண்டும். அங்கே மன்னர் உங்களுடன் இணைந்து கொள்வார்.என்றார்.

எதற்காக இப்படி மன்னர் தினம் ஒரு புதியவருடன் நடக்கிறார் என்று அவரிடமும் கேட்டேன். அது மன்னரின் விருப்பம். அதைக் கேள்விகேட்க முடியாது. நிறைவேற்ற வேண்டியது எங்கள் கடமை என்றார். அன்று நாள் முழுவதும் விசேச விசேச உணவு வகைகளும் ஓயினும் ஷாம்பெயினும் இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டன. சிறப்பான இசையைக் கேட்க முடிந்தது. இரவு உறங்கச் சென்ற போது நானாக மன்னரின் உருவம் இப்படியிருக்கும் என்று கற்பனை செய்து கொண்டேன்.

ஏப்ரல் 28

காலை ஐந்தரை மணிக்கு மிஷேல் ஆஷ்பி அறைக்கு வந்திருந்தார். மன்னருடன் நடப்பதற்காகத் தயாரிக்கபட்ட விசேச உடைகளை அணிந்து கொள்ளச் செய்தார். விசேச காலணி, பொன் மஞ்சள் உடையுடன் என்னைக் கண்ணாடியில் பார்க்க விசித்திரமாக இருந்தது. காரில் ஏறிக் கொண்டேன். அவரே காரை ஒட்டினார். இன்னும் இருள் கலையவில்லை. மலைப்பாதை ஒன்றில் கார் பயணம் செய்தது. விடிகாலையின் ஒளி கசிய ஆரம்பித்த போது கொஞ்சம் கொஞ்சமாகக் கண்முன்னே பனிமலையும் அதன் பைன் மரங்கள் அடர்ந்த சுற்றுப்புறங்களும் தெரிய ஆரம்பித்தன. உயரமான கற்படுகை ஒன்றின் முன்னால் என்னை இறக்கிவிட்ட மிஷேல் மன்னர் அங்கேயிருக்கிறார் என்று தொலைவை காட்டினார். அங்கே ஒரு மஞ்சள் புள்ளி தென்பட்டது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்

மன்னர் பொன்மஞ்சள் உடை அணிந்திருந்தார். தலையில் கறுப்பு நிற தொப்பி. விசேச காலணி. ஐம்பத்தைந்து வயதுக்குள்ளிருக்கக் கூடும். அவரை நெருங்கிச் சென்றேன்.

“பேராசிரியர் விமல் கற்கடம்…. உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் சோழர்காலக் கலை ஆய்வுகளைப் படித்திருக்கிறேன். கற்கடம் என்றால் நண்டு.. நான் சொல்வது சரிதானே“ என்று மன்னர் அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் கேட்டார்

“ஆமாம்“ என தலையசைத்தேன்

“நீங்கள் என்னோடு நடக்கும் 14602 வது ஆள். ஒவ்வொரு நாளும் ஒரு புது மனிதருடன் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் உலகை நோக்கி பயணிக்க முடியாது. ஆகவே உலகை என்னை நோக்கி வரவழைத்துக் கொள்கிறேன். ஒரு மனிதனை தெரிந்து கொள்வது ஒரு நட்சத்திரத்தைத் தெரிந்து கொள்வது போன்றதே என்று படித்திருக்கிறேன். “ என்றார் மன்னர்.

“உண்மை. உங்கள் அழைப்பிற்கு நன்றி“ என்றேன்.

நீண்டு வளைந்து செல்லும் மலைப்பாதையில் இருவரும் நடக்கத் துவங்கினோம். அவர்கள் கொடுத்த பயிற்சி போலவே நடந்து கொண்டேன். வழியில் ஒன்றிரண்டு இடங்களில் மன்னர் காற்றை அனுபவிப்பது போலக் கைகளை விரித்தபடி நின்று கொண்டார். ஒரு இடத்தில் கிழே உதிர்ந்து கிடந்த பழம் ஒன்றை கையில் எடுத்து வானிற்குப் பரிசளிப்பது போல வீசினார். தண்ணீரின் ரகசியத்தைக் கேட்பதைப் போல ஏரியின் முன்னால் நின்று கொண்டார். சில நேரம் உடன் பறந்து வரும் பறவையை லேசாக தலையை திருப்பிக் காணும் பறவையைப் போல என்னை நோக்கித் திரும்பினார். உலகின் மிக மகிழ்ச்சியான செயல் ஒன்றில் ஈடுபட்டிருப்பதைப் போல அவர் நடந்தார். ஈரக்காற்றை அனுபவித்தார்.

ஒன்றரை மணி நேர நடையில் என்னிடம் எதுவும் பேசவில்லை. நடைபயிற்சி முடியும் இடத்தில் அவருக்கான மஞ்சள் நிறக் கார் காத்திருந்தது. பாதுகாப்பு படையினர் இன்னொரு வாகனத்தில் காத்திருந்தார்கள்.

மன்னர் காரில் ஏறச் சென்ற போது ஒரு வண்ணத்துப்பூச்சி அவரை உரசிக் கொண்டு போனது. அதைப் பிடிக்க முயன்றவர் போலக் கைகளைக் காற்றில் வீசிய போது அவரது தொப்பிச் சரிந்து விழுந்தது. அதைப் பாதுகாவலர் குனிந்து எடுத்து நீட்டிய போது மன்னர் அதைப் பெறுவதற்காகக் கைகளை வேறு பக்கம் நீட்டுவதைக் கண்டேன். அப்போது தான் மன்னர் பார்வையற்றவர் என்பதை அறிந்து கொண்டேன். அதை அவர் காட்டிக் கொள்ளவேயில்லை. நான் உணரவுமில்லை. சட்டென இவ்வளவு நேரம் அவருடன் நடந்தது விசித்திரமான நிகழ்வாகியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கலைச்சிற்பங்களை விடவும் கண்முன்னே நடமாடும் மனிதர்கள் புதிரானவர்கள். எளிதில் விளக்க முடியாதவர்கள் என்று அப்போது தோன்றியது.

மன்னரின் கார் புறப்பட்டுச் சென்றது.

எனது வாகனம் வருவதற்காகக் காத்திருந்த போது பனிமலையில் சூரியன் பேரழகுமிக்க வெள்ளை நடனம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

•••

0Shares
0